Wednesday, November 28, 2007

ஓய்வு

Rest

அடிப்படைப்படம்: '07 செப்ரெம்பர்
உருமாற்றம்: '07 நவம்பர்

Wednesday, November 21, 2007

சற்றே சும்மா க/கிடவும் பிள்ளாய்

புலம் - 25

"America is about to enter a presidential election year. Although the outcome is of course impossible to predict at this stage, certain features of the campaign are easy to foresee. The candidates will inevitably differ on various domestic issues - health cre, abortion, gay marriage, taxes, education, immigration - and spirited debates are certain to erupt on a host of foreign policy questions as well........

Yet on one subject, we can be equally confident that the candidates will speak with one voice. In 2008, as in previous election years, serious candidates for the highest office in the land will go to cosiderable lengths to express their deep personal commitment to one foreign country - Israel-as well as their determination to maintain unyielding U.S. support for the Jewish state. Each candidate will emphasize that he or she fully appreciates the multitude of threats facing Israel and make it clear that, ig elescted, the United States will remain firmly committed to defending Israel's interests under any and all circumstances. None of the candidates is likely to criticize Israel in any significant way or suggest that the United Sates ought to pursue a more evenhanded policy in the region. Any who will probably fall by the wayside"

-John J. Mearsheimer and Stephen Walt, in the Introduction of their book, "The Israel Lobby and U.S. Foreign Policy"


வைகோ-கருணாநிதி இடையேயான சிக்கல் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் என்பது எனது கருத்து; அவர்களுக்குத் தம்மைத் தக்கித்து வைத்துக்கொள்ளத் தேவைப்படும் உள்நாட்டு அரசியல் ஈழத்தமிழர்களுக்கு அவசியமானதல்ல என்பதும் வெறும் அரசியற்பார்வையாளர் என்பதற்கப்பால், ஈழத்தின் பிரச்சனையையும் உள்ளே ஊறப்போட்டு, உள்ளூரசியலிலே வைகோ என்ன செய்யவேண்டும், கருணாநிதி என்ன செய்யவேண்டும் என்று மூக்கை நுழைத்துக் கருத்துச் சொல்லும் உரிமையும் தேவையும் ஈழத்தமிழர்களுக்கு இல்லை என்பதும் என் உறுதியான நம்பிக்கை. மேலும் நம்பிக்கை என்பதிலும்விட, அப்படித்தான் இருக்கவேண்டுமெனும் கட்டாயத்தேவையென்றே சொல்வேன். (எனக்குத் தனிப்பட்ட அளவிலே, ஜெயலலிதா + சோ + ராம் + சுசுவாமி + எஸ்வி சேகர் என்ற மந்தைவரிசையிலே எழுதப்படாத புரிந்துணர்வுடன் இயங்கும் கூட்டணி எக்காலகட்டத்திலும் ஈழத்தமிழர்களுக்குப் பயன் தராதென்ற முழு நம்பிக்கை.)

விடுதலைப்புலிகளின் எம்ஜிஆருடனான அருகாமையும் கருணாநிதியின் மற்றைய ஈழ இயக்கங்களுடனுமான (டெலோ குறிப்பாக) அருகாமையுங்கூட கருணாநிதியினை விடுதலைப்புலிகளுடன் முற்றிலும் நெருங்கவிடவில்லை என்பதிலும் ஓரளவுக்கு உண்மையுண்டு. ஆனாலும், ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னால், ஐபிகேஎப் காலத்திலே கருணாநிதியின் ஈழத்தமிழர் நிலைப்பாடு, விடுதலைப்புலிகளுடனுங்கூட அத்துணை மோசமாக இருக்கவில்லை என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும். (உலகத்தமிழினத்தலைவர் என்ற கோதாவிலே வம்புக்கு கருணாநிதி.எதிர்.பிரபாகரன் என்று நிறுத்தவும் சில உதிரிகள் கமல்.எதிர்.ரஜனி என்ற பாணியிலே நிறுத்தும் குரங்குத்தனத்தினை விட்டுவிடலாம்; அதைக் கருணாநிதியே கணக்கிலே எடுத்திருக்கமாட்டார்) இன்றைய நிலையிலே, ஈழம் தொடர்பான ஆதரவிலே ஆட்சியிலிருக்கும் கருணாநிதிக்கு இருக்கும் சிக்கல்கள், எதிரணியிலேயிருக்கும் வைகோவுக்கிருக்கும் சிக்கல்களை விட அதிகமானதுதான்; கருணாநிதிக்கு இழக்க ஆட்சியிருக்கின்றது; வைகோவுக்குத் தனிப்பட்டச் சிறைப்படவே வாய்ப்புண்டு. அதனால், ஆட்சியிலிருக்கும் கருணாநிதி, தமிழ்ச்செல்வன் இறப்புக்கு அவ்வசனவொழுக்கினை (கவிதை என்று எழுத ஒப்பமில்லை; அது கவிதையா இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகக்கூட முக்கியமற்ற விடயமிங்கே) எழுதியதும் தொடர்ந்து "தமிழிரத்தத்தொடர்பு" (இவ்விதமான உணர்ச்சிப்பேச்சுகள் தனிப்பட இப்போதெல்லாம் எனக்குப் புல்லரிக்கவோ ஹாப் அரிக்கவோ செய்வதில்லை என்றபோதுங்கூட) பற்றிப் பேசியதும் வைகோ தமிழ்ச்செல்வன் நினைவுப்பேரணியிலே கலந்ததிலும்விடப் பெரியவிடயமென்பதிலே எனக்கேதும் சந்தேகமில்லை.

[தனிப்பட்ட, வைகோவினைக் கருணாநிதியினைவிட எனக்குப் பிடிக்கும் என்பதினையும் இவ்விடத்திலே சொல்லிக்கொள்ளவேண்டும்; அவர் ஜெஜெ என்றவரிடத்திலே சேர்ந்திருப்பது பிடிக்கவில்லையென்றபோதுங்கூட, அஃது அவருடைய உள்ளூர் அரசியலென்பதினாலே, எனக்கேதும் சிக்கலில்லை; திருமாவளவன் தமிழகத்தின் தலித் நலனுக்கான எவரோடு கூட்டுச்சேரவேண்டுமென்று சொல்ல எனக்கு உரிமையோ அருகதையோ இல்லை என்பதிலுள்ள தெளிவே இங்குமுண்டு. வைகோவின் நிலையிலே கருணாநிதியிருந்திருப்பின், பதினெட்டு மாதகாலம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுக்காகச் சிறையிலே இருந்திருக்க ஆயத்தமாகவிருந்திருக்கமாட்டார் என்பதும் என் தனிப்பட்ட புரிதல்].

ஈழத்தமிழர்கள் (ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டென்பதாலே, என் கருத்தே இங்கே), தமிழ்நாட்டின் உள்ளூர் அரசியலிலே யார் என்ன செய்யவேண்டும் என்று வாயைத் திறக்காதிருத்தல் உத்தமம் என்று சொல்லமாட்டேன்; உத்தமத்திலும் உத்தமம் என்றே சொல்வேன். ஈழத்தமிழர்களுக்கு(ம் விடுதலைப்புலிகளுக்கும்) தமிழகத்தின் நலன்விரும்பிகள் ஆதரவினை இந்தியத்தேசியவாதப்பூதத்தினைக் கிளப்பிப் பயமுறுத்தும் பத்தி(ரிகை)யாளர்களையும் அரசியல்வாரிகளையும் அரசியல்வங்கரோத்துகளையும் மீறித் தரும்போது, இதுவரை நாள் ஈழத்தமிழர்களோ விடுதலைப்புலிகளோ என்ன செய்யவேண்டுமென்று சொல்லி நான் வாசிக்கவில்லை. அப்படியாக, "அரிவுரை" சொல்வதெல்லாம், இந்து ராம் அன் கோவும் அவற்றினையொத்த தமிழகத்திலேயே அடையாளமற்ற அரசியல் உதிரிகளுமேதான். இத்தகு பெருந்தன்மையான போக்கினை ஈழத்தமிழர்களிலே சிலர் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அவர்களின் குறைப்பார்வை, ஈழத்தமிழர்களை ஆதரிப்பதாலே (அல்லது தாம் ஆதரிக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதாலே), ஈழத்தமிழர் நலன்விழை தமிழக அரசியல்வாதிகள் "இதைச் செய்யவேண்டும், இதைச் செய்யக்கூடாது" என்று தமிழக உள்ளூர் அரசியலிலே மூக்கினை நுழைக்கும் நிலைக்கு உள்ளாக்குகின்றது. தமிழகத்தின் அரசியற்கூட்டணிகள், கூத்தணிகள், கூற்றணிகளைப் பற்றி ஈழத்தமிழர்களுக்கு, வெறும் தம் நலனைப் பிணைத்துக்கொண்டு காண் அரசியற்பார்வையாளர்களாக - 'புஷ் ஈராக்கிலே என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது' என்று சொல்வதுபோல- கருத்துகள் இருப்பதிலே தவறில்லை; ஆனால், அதற்குமேலே, "ஈழத்தமிழர் நாம் சொல்கிறோம், கருணாநிதி சரி/பிழை; வைகோ பிழை/சரி" என்று பேச உரிமையுமில்லை; நடைமுறைத்தக்கித்தலுக்கு, அப்படிப்பேசுவது நலனானதுமல்ல. ஈழத்தமிழர்கள் அல்லர், தமிழகத்துத்தேர்தல்களிலே வாக்குகளை இடுகின்றவர்கள் என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும்; அப்படியாக இட்டாலுங்கூட, தமிழகத்திலிருக்கும் தமிழர்கள் எண்ணிக்கையோடு பார்க்கும்போது, நாம் எதையும் எம் சொந்த விருப்புவெறுப்புக்கருத்துகளினாலே மட்டும் சாதித்துவிடமுடியாதென்பதையும் உணரவேண்டும். தமிழகத்தேர்தல்களிலே வாக்கிடுகின்றவர்கள், தமிழ்வலைப்பதிவுத்தமிழர்களல்ல; ஈழத்தமிழர்கள் (& அவர்களின் நலன்விரும்பிகள்) தன்னலன் பேணும் திட்டங்களை வெற்றி பெறச்செய்ய தம் நலன்களுக்கு எதிரானவர்களுக்குச் சமனான தொகையிலேயிருப்பது வலைப்பதிவுகளிலே மட்டுமே இன்றைய நிலையிலே சாத்தியப்படும்.

இன்றைய நிலையிலே, எமது முக்கியமான தேவை, தமிழகத்திலே எப்படியாக ஈழத்தமிழர்நலன்விழைசக்திகள் பலம் பெறுகின்றன என்பதிலேயிருக்கவேண்டுமேயொழிய, தமிழகத்தின் ஈழத்தமிழர்நலன்விழைசக்திகள் தமக்குள்ளே தமிழகத்தின் உள்ளூராட்சியிலே என்ன நிலைப்பாடுகள், எவ்விதமான கூட்டணிகள் கொண்டிருக்கவேண்டுமென்பதல்ல. சுசுவாமி, 'இந்து' ராம் போன்ற கொள்கையளவிலான ஈழ எதிர்ப்புசக்திகள் எப்படியாக தமிழக மக்களிடையேயும் இந்தியாவின் இலங்கை தொடர்பான செயலளவிலேயும் குரலிழந்து பலமிழந்து ஓரங்கட்டப்படவேண்டும் என்பது முக்கியமேயொழிய, கருணாநிதி/வைகோ/ராமதாஸ்/திருமாவளவன் எப்படியாகக் கூட்டணி தம் உள்ளூர் அரசியலுக்காகக் கொண்டிருக்கின்றார்கள் என்பதிலல்ல. சொல்லப்போனால், ஆளும் கட்சிகள் & எதிர்க்கட்சிகள் என்று இருபுறங்களிலும் ஈழத்தமிழர்கள்நலன்பேணுகின்றவர்கள் இருப்பதும் மேன்மையே; ஈழத்தமிழர்களின் நலன் ஒரு பக்கத்துக்குரலாகக் கூர்மைப்படுத்தப்படும் அவலம் குறைகின்றது. நெடுமாறன் கருணாநிதியினை ஆதரிக்காமல், சுப. வீரபாண்டியன் கருணாநிதியினை ஆதரித்தாலுங்கூட, ஈழத்தமிழர்கள் விடயத்திலே அவர்களிருவரும் காட்டும் குரலின் ஒத்திசைப்பிலே எவ்விதப்பிசிறுமிருப்பதில்லை.

கருத்தளவிலே என் விருப்பு வெறுப்புகள் தமிழக அரசியல் குறித்தும் அதன் கட்சிகள் குறித்தும் எதுவாகவுமிருக்கலாம்; மாயத்தேவர் & நாராயணசாமி எம்ஜிஆருடன் கூட்டுச்சேர்ந்திருக்கவேண்டுமா இல்லையா என்பதிலிருந்து, சிவாஜிகணேசன் தனிக்கட்சி தொடங்கியிருக்கத்தான் வேண்டுமா, திருமாவளவன்&ராமதாஸ் ஆகியோர் குஷ்புவினைத் தாக்கியிருக்கவேண்டுமா என்பவை ஊடாக, கனிமொழி, சல்மா அரசியலிலே இறங்கியிருக்கவேண்டுமா, திருமாவளவன் பார்ப்பனியசடங்குகளைச் செய்யவேண்டுமா, ரவிக்குமார் தொடர்ந்து பெரியாரைத் தாக்கத்தான் வேண்டுமா என்பதுவரை எனக்கு ஆயிரம் தனிப்பட்ட கருத்துகள் தமிழக அரசியல் குறித்து இருந்திருக்கின்றன; இருக்கின்றன. ஆனால், ஈழம் குறித்து வரும்போது, நான் அமெரிக்க "liberal, but not progressive" உயூதனாகிறேன் - "Anything, but Israel"; பாரதியும் டென்ஸியாவோ பிங்கும் சேரச்சொன்னால், "எலியைப் பிடிக்கக்கூடிய பூனை (எம்மைத் தாக்காதவரைக்கும்) எந்த நிறம் இருந்தாலும்-அவை யாவும் ஒரே தரமன்றோ இந்த நிறம் சிறிது என்றும்-இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ? வண்ணங்கள் வேறுபட்டால் -அதில் மானுடர் வேற்றுமையில்லை எண்ணங்கள் செய்கைகள் எல்லாம்-இங்கு யாவருக்கும் ஒன்றெனல் காணீர்." சண்டே லீடர் சொல்வதன்படி "ஏசியன் ரிபியூன்" ராஜசிங்கம் திருவிளையாடல்கள், பாரிஸ் தலித்மகாநாடு அமைப்பாளர்களில் ஒருவரான ஸ்டாலின்(ஞானம்)- இலங்கையரசு வனவிலங்கதிகாரியென்று கொடுத்த கடவுட்சீட்டுடன் இங்கிலாந்து போன கருணா உறவுக்குற்றச்சாட்டுகள், பேச்சுவார்த்தை நடக்கவேண்டும் என்று சொல்லும் விழாவிலேயே ஆயுதம் கையளிக்கும் அமெரிக்கத்தூதுவர், "“Brigadier” Thamilchelvan, The “Smiling” Face of LTTE" என்ற தலைப்புடன் வெளியான கட்டுரையை "Direct Hit" என்று தேவைக்கேற்ப உள்ளடக்கமும் சுருக்கி வெளியிடும் Frontline, கடந்த பதினைந்து மாதங்களில் 4082 விடுதலைப்புலிகளும் 1066 மக்களும் இறந்தார்கள் என்ற இந்திய உளவுத்தாபனம்சார் the South Asia Intelligence Review of the South Asia Terrorism Portal அறிவுக்குளத்தின் அற்புதக்கணக்கெடுப்பினை வெளியிடும் outlook, ஈழத்தமிழர்களின் கடவுட்சீட்டுகள் பற்றிய கருத்தின்மேலே கேள்வியெழுப்பினால், "எனது இந்தியா; எனது தேசம்" என்று தமது ஐந்தாம் உரிமைக்கு உருக்கொடுத்து, 180 பாகையிலே வாதத்தினைத் திருப்பும் இந்தியத்தமிழ்ப்பத்திரிகையாளர்கள் இப்படியானவர்கள்/வை பற்றிய செய்திகளை வாசிக்கும்போது, நான் தொடர்ச்சியாக, John J. Mearsheimer உம் Stephen Walt உம் எழுதிய "The Israel Lobby and U.S. Foreign Policy" நூலினை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்.

நாம் எம் நியாயங்களை எமக்கே நியாயமாகப்படும் வழிகளிலே செயற்பட்டுத் தக்கிப்பதுதான் முக்கியம்; ஈழத்தின் வடக்குக்கிழக்கிலே இனவிகிதாசாரம் திட்டமிட்டப்பட்டு மாற்றப்படும்வேளையிலே அதையே முன்னிலைப்படுத்தி ஆதாரமாக அமெரிக்காவுக்கான ஸ்ரீலங்காவின் தூதுவர் பொஸ்ரன்குளோப்புக்கு ஈழத்தின் கிழக்கிலே தமிழர்கள் உரிமைகொள்ளமுடியாதென்ற விதத்திலே ஆசிரியருக்கான கடிதம் வரையும்போது, கிண்ணியாவிலே, முஸ்லீம் குடியிருப்புகளிலேயிருப்பதாலே சாதி பற்றி எமக்குப் பாதிப்பில்லை என்று ஒருவர் சொன்னதாகத் 'தூ'வி, கீதையைப் பின்பற்றும் நெடுமாறனுக்கும் திருமாவளவனுக்கும் (sic), தம்மோபதேசம் செய்யும் சிங்களவர்களே மேல் என்று எழுதுகிற "பாரிஸவாதக்காரர்கள்" இருக்கும்போது, தமிழ்நாட்டின் உள்ளூர் அரசியலிலே வைகோ என்ன செய்யவேண்டும், கருணாநிதி என்ன செய்யவேண்டும் என்று பார்ப்பதோ, ஈழத்தவருக்குக் கூடுதலான ஆதரவு வழங்குவது வைகோவா, கலைஞரா என்று பட்டிமன்றம் வைப்பதோ ஈழத்தவருக்கான இப்பொழுதின் -மட்டுமல்ல, எப்பொழுதினதும்- முக்கிய வேலையல்ல; தேவையுமல்ல.

நூற்றாண்டின் முன்னான, ஆர்மீனியர்கள் மீதான துருக்கியக்கொடுமைகளையோ, துருக்கியகுர்திஷியர்களின் போராட்டங்களையோ பெருவிரல்நுனியிலே அமுக்கும் பேரரசுகளின் காலத்திலே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்; கருத்துகளையும் நடைமுறைகளையும் ஒன்று சேர முன்னெடுத்துக்கொண்டு செல்லக்கூடிய வசதியினைக் கொண்டிருக்கவில்லை; "ஆயுதம் தாங்காத பொதுமகனை/மகளைக் கொல்லாத எதுவுமே பயங்கரவாதமில்லை" என்ற எளிமையான சூத்திரத்தினை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதுபோலவே, எமக்கே நியாயமென்று படும் எளிமையான தீர்வுகளைச் சிக்கலான கொள்கை-நடைமுறைப்படுத்தல் நிலைகளுக்கிடையே எடுக்கவேண்டிய நிலையிலேயிருக்கின்றோம். இந்நிலையிலே, தம்மளவிலே பலமற்ற எரித்திரியாவோ, பாஸ்க்/கடலோனியவிடுதலையமைப்புகளோ ஈழவிடுதலையை ஆதரிக்கின்றன என்று மகிழ்ச்சியோடு பதிவுகளிடுவதாலோ, "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே; இருட்டினில் நீதி மறையட்டுமே; தன்னாலே வெளிவரும் தயங்காதே; தலைவர் தக்க பதிலளிப்பார்; கலங்காதே" என்று எம்ஜிஆர் படப்பாடலாகப் பதிவெழுதுவதாலோ, எமக்குள்ளே பழங்கதை பேசி, எம் உற்சாகத்தினைத் தட்டியெழுப்புவதற்கப்பால் எதுவுமே நடந்துவிடப்போவதில்லை. ஈழ விடுதலையை ஆதரிக்கக்கூடிய (குறைந்தபட்சம் எதிர்க்காத) இந்திய ஆங்கில ஊடகமொன்றினை ஏற்படுத்த உழைக்காத நாங்கள், கருணாநிதி-வைகோவின் உள்ளூர் அரசியல் பற்றிப் பேசுவதற்கு எதற்காக இத்துணை பொழுது வீணாக்கவேண்டும்?

சென்ற வாரம் நெவாடாவிலே அமெரிக்க ஜனநாயகக்கட்சி சார்பிலே அதிபருக்காகப் போட்டியிடத் தேர்ந்தெடுக்கக் கேட்டு நிற்கும் வேட்பாளர்கள் இடையே விவாதம்; ஒரு பாக்கிஸ்தானின் இன்றைய நிலை பற்றி ஒரு கேள்வி; "பாக்கிஸ்தானிலே அமெரிக்க அதிபர் எதை முக்கியமாகக் கருதவேண்டும்? மனித உரிமைகளையா? அமெரிக்க நலன்களையா?" இங்கே வேட்பாளர்கள் என்ன பதில்களைத் தந்தார்கள் என்பதல்ல நாம் பெறவேண்டிய பாடம்; எவ்விதத்திலே அமெரிக்கா(வும் இந்தியாவும் - பி. ராமன், ஹரிஹரன் "ஆய்வுக்கட்டு உரை"களைக் காண்க) நடக்கமுயல்கின்றதென்பதையே காட்டுகின்றது; இதே மனப்பாங்கிலேதான், குடியரசுக்கட்சி சார்பான நவ-பழமைவாதப்போக்குள்ள ரைஸும் போன ஆண்டு லெபனானிலே இஸ்ரேலின் வெற்றியின் பின்னால், "we have to talk (from the balance of power at this very moment) - the status quo; not from where we were two weeks back (in which time Lebanon militants seemed to be in better position)" என்ற பாணியிலே சொன்னார்; துருக்கியிலே ஆர்மீனியர்/குர்தீசியர் தொடர்பான செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்; தூதுவர் பிளேக், ஸ்ரீலங்கா அரசுக்கு ஆயுதம் கையளித்துப் பேச்சுவார்த்தைக்கும் இனிப்பினைக் கொடுக்கின்றார். இச்சூழலிலே ஈழத்தமிழராக நாம் ஆதரிப்பது, கொள்கையளவிலே, ஜனநாயகக்கட்சியையா, குடியரசுக்கட்சியையா என்பதல்ல கேள்வி; வெல்லும் கட்சி ஈழத்தமிழருக்கு, அவர்களின் இனவிகிதாசாரம் திட்டமிடப்பிழிந்து மாற்றப்படும் நிலையிலே, அவர்களுக்கு ஆதரவாக என்னத்தினைச் செய்யவைக்கமுடியுமென்பதையே காணவேண்டும். இதே நோக்குடனேதான் கனடாவிலோ, பிரிட்டனினோ நாம் நோக்கவேண்டும். ஹார்ப்பரை ஈழவேந்தன் சந்தித்தாலுஞ்சரி, தமிழ்ச்செல்வன் நினைவுவிழாவிலே லிபரல் டெமோகிரட்டிக் கட்சி பாஉ கலந்துகொண்டாலுஞ்சரி, வெல்வது நமது நலனும் நோக்காகவேயிருக்கவேண்டும். உலகம் சார, புலம்பெயர்ந்த தமிழர்களும் அவர்களின் வரும் சந்ததிகளும் தாம் வாழும் நாட்டிலே அவ்வூரரசியலிலே -ஈழநலனையும் ஒரு பகுதியாக இருத்தி,- பங்கேற்க வேண்டும். இத்தாலியர்களின் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இன்றைக்கும் இத்தாலிய அரசவையிலே மேலவையிலே சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதே நிலையை மனதிலேயிருத்தி, புலம்பெயர்ந்த தமிழர்களின் உலகலளாவிய அரசியல்வாதிகள்கூட்டமைப்பொன்று உருவாகி, அவரவர் நாட்டிலே ஈழத்தமிழர்களின் நலனையும் பேசும்வகையிலே ஆக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், நாம் தக்கிக்கமுடியாது. நிலைமை இப்படியாகவிருக்கும்போது, கருணாநிதி-வைகோவின் உள்ளூர் அரசியலைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமென்ன என்று எனக்குப் புரியவில்லை. தேவையற்ற பிரச்சனைகளை மட்டுமே இவை கொணரமுடியும்.

"சமாதான ஒப்பந்த"த்தின் பின்னால், கௌசல்யன், சந்திராநேரு, ஜோஸப் பரராஜசிங்கம், விக்கினேஸ்வரன், ரவிராஜ் கொல்லப்பட்டபோது கள்ளமோனத்தவமிருந்த பேருலகு, கதிர்காமர் இறந்தபோது "பயங்கரவாதம்" என்று ஓலமிட்டத்தைக் கண்ட எமக்கு, தமிழ்ச்செல்வனின் கொலலயைக்கூடக் கதிர்காமரின் இறப்பிலிருந்துதான் 'சமாதானகாலத்திலே' அரசியல்வாதிகள் கொல்லப்படத் தொடங்கியதாக வரலாறு எழுதும்போது ஆச்சரியமேற்படவில்லை. ஆனால், இதனை நாம் மட்டும் உணர்ந்தால் போதுமா? அல்லது, "தமிழ்ச்செல்வன் இறந்தார்; லபோ! லபோ!!" என்று அரற்றினால் மட்டும் போதுமா? ஒருவன் இயக்கத்த்துக்கென்று போனால் இறப்பினை எதிர்பார்த்தே போகிறான்; இறப்புகள் இல்லாமல், ஆறு தாண்டி அக்கரை போகலாமென்று நம்பியா போனார்கள்? கொண்ட நோக்கத்துக்காவல்லவா? அவ்விறப்பும் அந்நோக்கத்திற்கு ஓரளவுக்கு பயன்படுமென்றால், அதைப் பயன்படுத்துவதுதான் இறந்த போராளிக்கும் அவனின் நோக்குக்கும் செய்யப்படும் கைமாறு. அவ்வகையிலேதான் தமிழ்ச்செல்வனின் இறப்பினைப் பார்க்கவேண்டும். இணையத்திலே சிலர் விடுதலைப்புலிகள் சாதியமைப்பினைப் பேணுகின்றார்கள் என்பது தொடக்கம் தமிழ்நாட்டிலே ஈழத்தமிழாதரவு செத்துவிட்டது என்பதாக அமைக்கப்பட்ட கருத்தமைவுகள் உடைந்துபோக, இவ்விறப்பின் பின்னாலான வாதங்களும் பதில்வாதங்களும் உதவியிருக்கின்றன. அவ்வகையிலே தமிழ்ச்செல்வனின் இறப்பு அமுக்கப்பட்ட எமது குரலைக் கேட்க உதவியிருக்கின்றது. தமிழ்ச்செல்வன் மறந்து அழகிய தமிழ்மகன் விஜயுக்குக் கட் அவுட் வைக்கப்போகும்முன்னால், அதனை நாம் பயன்படுத்தவேண்டும். (கருணாநிதியின் 'கவிதை' அந்தளவிலே ஈழத்தமிழர் நினைவினைத் தமிழகத்திலே நீட்டப் பயன்பட்டிருக்கின்றது என்பதிலே மகிழ்ச்சியடையவேண்டும்; ஜெயலலிதா உச்சநீதிமன்றத்துக்குப் போனால், தன்னை நோக்கி மக்கள் எதிர்ப்பு திரும்பிவிடுமோ என்று அடங்கிக்கொண்டதையும் ஞாபகத்திலேயிருத்தவேண்டும்). இந்நிலையிலே, கருணாநிதி-வைகோ அரசியலிலே எமக்கென்ன கவலை வேண்டும்? "தமிழ்ச்செல்வனின் பின்னால், நடேசனை ஏன் நிறுத்தினீர்?" என்று கருணாநிதியோ, வைகோவோ விடுதலைப்புலிகளைப் பார்த்துக்கேட்டார்களா? ஆக, டிபிஎஸ் ஜெயராஜுக்கும் ப்ரொண்ட்லைனுக்கும் பிகே பாலச்சந்திரன்+ இந்துஸ்தான் டைம்ஸுக்குமட்டுமேதான் நடேசன் இந்தியாவிடம் கெஞ்சுவாரா மிஞ்சுவாரா என்ற கணிப்பெடுப்புகள் முக்கியமாகின்றன. இதுதான் நிலையென்றிருக்க, நாமேன், "வைகோ, நெடுமாறன் கைது பற்றிப் புலிகள் கருத்தினைத் தெரிவிக்கமறுத்துவிட்டார்கள்" என்ற இந்துவின் "முக்கியமான, ஆய்வுச்"செய்திக்குச் சேர்ந்தாடுவதுபோல, உதயன் தலையங்கத்தையும் கோகர்ணனின் தினக்குரல் கட்டுரையையும் போட்டு வறுத்தெடுத்துச் சொல்முத்துப் பொறுக்கவேண்டும்?

கொஸூவோவிலே ஒரு முன்னைய அல்பேனியவழிவந்த கெரில்லாப்போராளி ஆட்சிக்கு வருகின்றார்; பயங்கரவாதத்தினை எதிர்க்கும் ஏகாதிபத்தியங்களுக்கு எவ்வித எதிர்ப்புமிருப்பதாகத் தெரியவில்லை; சேர்பிய"க்கொலையாளிகள்" வரவில்லை என்பதைமட்டும் தெரிவித்துக்கொள்கின்றார்கள். சென்ற ஆண்டு, ஒரு விவரணம் (The Broklyn Connection) வந்தது; அமெரிக்கப்பிரஜையான கொஸவோ-அல்பேனியர் ஒருவர் எப்படியாக அமெரிக்கத்தேர்தலிலே நிற்பவர்கள் தொடக்கம் ஆயுதக்கடத்தற்காரர்கள்வரை உறவு வைத்திருந்து கொஸவோ-அல்பேனியர்களுக்காகப் போராடுகின்றார் என்பதை அவரை விவரணத்துக்காக எடுக்க அனுமதித்த விவரணம். அமெரிக்க அரசுக்கு இதுவரை அவர் பயங்கரவாதியாகத் தெரிந்தாரா என்று தெரியவில்லை. ஏகாதிபத்திய அரசியல் "நம் ஏகாதிபத்திய அதிபர் X நாட்டிலே எதை முக்கியமாகக் கருதவேண்டும்? மனித உரிமைகளையா? எம் ஏகாதிபத்திய நலன்களையா?" என்பதாக நடப்பது; இதிலே, கோக்கோகோலாவும் உள்ளாடைதயாரிக்கும் சிறுபிள்ளைகளும் மொன்ஸாண்டோ விதைகளும் கருத்தளவிலே எவ்விதமான தாக்கத்தினை ஏற்படுத்தினாலும், நடைமுறையிலே எத்துணை X நாட்டிலே ஏற்கனவே வேறேதோ கருத்தமைப்பிலே நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சிறுபான்மைக்கு மேலதிகத்தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றது என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். காலாசினிக்கோவ் நெத்திப்பொட்டிலே நிற்கும் நேரத்திலே, உபரி உற்பத்தியும் உள்ளூர் உற்பத்தியும் கொக்கோகோலாவுக்கு அண்டி வாரோல் வரைந்த ஓவியமும் பேசிப் பயனாகப்போவதில்லை. அதற்காக, கருத்தாக்கத்தினை விட்டுவிடவேண்டிய அவசியமில்லை. ஆனால், அதனைச் செயற்படுத்தும் தளமும் போக்கும் வேறாகவிருக்கவேண்டும். கடைசியிலே தக்கிப்பது, "Anything, but Israel" என்பதுதான். கருணாநிதியும் வைகோவும் ஸ்டாலினும் மார்க்ஸும் அவர்களின் உள்ளூர் அரசியலுக்காக, கவிதை எழுதினால் என்ன, கடதாசியிலே மலம் துடைத்து அனுப்பினாற்றான் நமக்கென்ன? வாயை நமக்குத் தேவையற்ற பிரச்சனையென்று மூடிக்கொண்டிருக்கவேண்டாமா? அல்லது "முட்டி முடுக்குது, மூத்திரம் பெஞ்சுதான் ஆகோணும்" என்றால், "இது நானாக என் கிணத்திலே வீட்டுத்துலாவைப் போட்டு அள்ளிக்குடிச்ச தண்ணியை வைத்து என்ரை உடம்புச்சிறுநீர்த்தொகுதி உற்பத்தியாக்கிய சொந்த மூத்திரம்" என்ற ஒரு கருத்தினையும் சேரச் சொல்லிவிட்டுப் பெய்யக்கூடாதா? எதுக்கு "ஈழத்தவர் கருணாநிதி பற்றிக் கருத்து, கந்தசாமி பற்றிக் கக்கூசு" என பாணியிலே இந்துவுக்குச் செய்தி அள்ளிக்கொடுக்கும் தேவை??

[இப்படியான சூழலிலே, இரயாகரன் போன்றவர்கள், புலிபாஸிஸ்ட் என்று திட்டினால், அவர்களுக்கு Umbreto Eco இன் "Eternal Fascism: Fourteen Ways of Looking at a Blackshirt" இனைச் சுட்டிக் காட்டி அவர்களையும் ஏதோவிதத்திலே பாஸிஸ்ட் ஆக்கிவிட்டுப்போகலாம். அட! மிஞ்சி மிஞ்சிப்போனது, பாலஸ்தீனர்களின் குரலுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகின்றவர்களைக்கூட, "Islamofascists" என்று திட்டுகின்றவர்களினை "American Fascists: The Christian Right and the War on America " என்று திட்டி நூல் வந்திருக்கின்றது. அந்தளவிலே சந்தோஷம் - நான் தனியன் அல்லன் என்று :-)]

தமிழக அரசியல் குறித்து ஓர் ஈழத்தமிழனின் மிகவும் சுயநலமான, சந்தர்ப்பவாதக் கருத்தாக இது தோன்றலாம்; ஆனால், கொஞ்சம் நிதானமாக வாசித்தால், அப்படியல்ல என்று புரிந்துகொள்ளப்படலாம்.

தொடர்புள்ள பதிவொன்று
வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா? - வசந்தன்

//yet to be edited//

புகார்வெளியில்

Out there

'07 Nov, 20 Tue., 20:15