ஐயோசொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்
சும்மாவுக்காக ஒரு கவிதை
உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர்
நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும்போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர்
நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும்போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்
உலக மகா யுத்தம்
ஒரு கூரை மேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது
காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது
காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை
இந்த நகரத்தை எரிப்பது
இந்த நகரத்தை எரிப்பது
மிகச் சுலபம்
ஒரு தீப்பெட்டி போதும்
தீப்பெட்டி விலை மிக மலிவு
ரொட்டியின் விலையைவிட மிகமிக
ஒரு லிட்டர் கிரஸினும் வேண்டும்
அதுவும் கிடைக்கும்
அரசின் சீரிய வினியோகிப்பில்
ஓசைகள் குறைந்த நள்ளிரவில்
எங்கேனும் துவங்கலாம்
துணிவுள்ளவன் விழித்திருந்து
அனுமான் எரித்தான் லங்கையை
வாலில் தீ வைத்தபோது
வானைத் தொட்ட தீ தணிந்தது
எழுந்தது புது லங்கை
அழிந்தானா ராவணன்
போராடினான் நாட்கணக்கில்
மடிந்தான் குருதி வெள்ளத்தில்
இன்றும்
அனுமான்கள் உண்டு வாலின்றி
ராவணர்களும் உண்டு
தீயுண்டு நகரங்கள் உண்டு
தனியொருவன் எரித்தால் வன்முறை
அரசாங்கம் எரித்தால் போர்முறை
-ஆத்மாநாம் (1951-1984)
ஆத்மாநாம் படைப்புகள்
பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்
காலச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு; 2002 டிசெம்பர்
294 பக்கங்கள்