Tuesday, September 10, 2024

Epsilon ε


Epsilon ε


மூச்சுவிட வெளிவந்தால் மூக்கணாங்கயிறு.
மாட்டுக்காரர் உலா; சூட்டுக்கோல்.
தோலுடன் நாசி பற்றிப் பொசுங்கும் நம்பிக்கை.

அவரவர் வட்டமெல்லாம்
அரைவட்டம் வெளுப்பு
அரைவட்டம் கறுப்பு
துணுக்கியும் காணாப் பழுப்பு.
வெளுத்த பிறைக்குள்ளே கறுத்தான் எதிரி
இருட்டுச்சுழிக்குள்ளே வெளுத்தான் எதிரி
ஆதியிலும் நீதி அப்படித்தான் இருந்தது
மீதியிலும் நீதி அதுவாய்த்தான் மிதக்குது

அறிந்தாரோ அந்நியரோ,
நிற்கும் விட்டப்பரிதிக்குள்ளொடுங்கு
பாதிவட்டத்தளநிறத்துப்புண்ணியர்
மட்டுமெம் இன்ப வட்டகையார்.
மிச்சத்தார், அரவமோ திரிகயிறோ
நெஞ்சுலர அஞ்சுவோம்; அகல்வோம்.
ஈடன் தோட்டத்தப்பிள்
எச்சிற்பட்டபின்னால்,
எவர் கண்டாரிங்கு
எல்லாத்தள வட்டமும் உள்ளடங்கும்
பெருங்கோளம்?

~8, ஜூலை '03 02:30 மநிநே.

https://kanam.blogspot.com/2005/01/epsilon.html

தளையுறாததும் தலைப்புறாததும் XI

தளையுறாததும் தலைப்புறாததும் XI


உட்புறம்,
நீரள்ளி நிறைக்க நிறைக்கவும்
நேர்கோட்டிலே நீந்தாதாம் நிறமீன்.
நளினவால் சுழற்றிக் கோணலாய்
வாழ்கூறு கெட்டழியும் போம் திசை.
வெளிப்புறம்,
கரை அணைக்க அணைக்க,
அரித்தோடும் அலை மணல்.
அள்ளிப்போட்ட கூடை கூடத்
தேயும் துகள்வெள்ளி வெள்ளத்துள்.
போட்டவன் பொழுது போனது தவிர
நோக்கத்துக் காக்கமாய், நீர்ப்புறம்
மச்சத்திசையும் நெடுங்கக்காணோம்;
மணற்சுவரும் நிலைக்கக்காணோம்.

~6, ஜுன் 2004 ஞாயிறு 11:54 மநிநே

https://kanam.blogspot.com/2005/01/xi.html

https://www.facebook.com/share/p/KfwZ4K4R9Db1Trsb/

Monday, September 09, 2024

அந்தகக்கவிக்கான அ(¨)வத்திரை

 


அந்தகக்கவிக்கான அ(¨)வத்திரை



அந்தகக்கவிக்கும் அரசனுக்கு மிடை அவிழ்
திரை தொங் கவை யென்றான வாழ்வறை;
எரியும் உலைகளும் எளிய மனிதரும் புரி
நூல் திரிந்து கீற்றாய்ப் பொசிந்து புகை பரவ,
உருட்டி உருட்டி உண்கி றேனென் உணவை;
எண்ணெய்த்தேச எரிகொள்ளிக்கிடை
பதுங்கிப் பருகுநீருக்கலை சிறுவர்
கண் தெரியும் பயத்தை, பசியை,
துரத்தித் தனக்குள் அமுக்கி,
எனக்குப் பிதுக்கும் படக்கருவி.
ஓலமும் உறுமலும் ஓருடல் கூறும்
அர்த்தநாரீஸ்வரம்; அறைச்சுவர்
அதிர்ந்து அனுங்கி அமுங்கும்;
அடக்கம்,
அடுத்த ஒப்பாரி வரை நிலைக்கும்.
அத்தனை ஆயுததாரிகளும்
பொய்யைப் மெல்லப் பிடியென்று
அள்ளித் தருகிறார் அவல்;
கிள்ளி மெல்ல மெல்ல,
இன்னும் விரியுமாம்
குசேலர் தேசத்தே கூற்றுவன் நாட்டியம்.
உள்ள முத்திரை,
முழுதாய்த் தோற்றுமோ திரை?
என்னைவிட எவரேனும் கண்டீரா,
எரிந்த தெரியாதா தென் றிலா
தெல்லாப் பிணங்களின் திறந்த கண்களும்
இஃதெதற்கென்று கேட்பதை?

தொடர்ந்து
தொலைந்த பருவப்பெண்களையும்
தொலையா நோய்க்கிருமியையுங்கூடப்
பின்னுக்கு வன்மையாய்த் தள்ளிப்
பொல்லாப்போரைத் துப்பு தென்
தொலைக்காட்சி.

ஜன்னலின் பின்னால்,
கண்ணிருண்டு காயும் வெறுவானம்;
கீழ் உதரம் கனத் தரக்கி யரக்கி நகரும் கயர்மேகம்.
இரவு பகலின்றி
இடைவிடாது பருகிக்கொண்டிருக்கின்றேன்
என்னுடைய நீரையும் நீருக்கலைவார் துயரையும்.

எப்பொழுதும்போல, இப்பொழுதும்
ஆயுதங்கள் மட்டும் அழுத்தமாய்
நெறிச்சாத்திரங்கள் போதிக்கிறன.

'03 மார்ச், 31 திங்கள் 04:54 மநிநே.

https://kanam.blogspot.com/2004/12/blog-post_110401352953252548.html

Sunday, September 08, 2024

Slacktivism



 Slacktivism🙃😉


சிவிகைகள் எம்மிடமுண்டு!
சிலைகளைக் கொண்டு வாரும்! –
தூக்க, தூக்கச்
சிலைகளைக் கொண்டு வாரும்!

சிலுவைகள் எம்மிடமுண்டு!
சிந்திப்பாரைக் கொண்டு வாரும்! –
அறைய, அறையச்
சிந்திப்பாரைக் கொண்டு வாரும்!

[சிவிகைகள் எம்மிடமுண்டு!
சிலைகளைக் கொண்டு வாரும்!]

போர்க்குணங்கள் எம்மிடமுண்டு!
போராடு காரணங்கள் எமக்குத் தாரும்!-
அடக்கி, அடக்கிப்
போராடு காரணங்கள் எமக்குத் தாரும்!

[சிவிகைகள் எம்மிடமுண்டு!
சிலைகளைக் கொண்டு வாரும்!]

மயக்கங்கள் எம்மிடமுண்டு!
மருத்துவங்கள் தெளியத் தாரும்!-
தீர, தீரா
மருத்துவங்கள் தெளியத் தாரும்!

[சிவிகைகள் எம்மிடமுண்டு!
சிலைகளைக் கொண்டு வாரும்!]

ஆடுகள் எம்மிடமுண்டு!
ஆட்டுவிக்கும் கோலைப் பாரும்!
காண், கண்
ஆட்டுவிக்கும் கோலைப் பாரும்!

[சிவிகைகள் எம்மிடமுண்டு!
சிலைகளைக் கொண்டு வாரும்!]

Youtube: https://youtu.be/e5Q6x2yqlHg
Suno: https://suno.com/song/9d7d7a3b-f045-4cf4-b6a9-a8adcf5ebe09

A Street Car Named Desire


 

A Streetcar Named Desire

"இன்றிரவுக்கேதுணவு?" என்றாள்.

"ஆசை" என்றான் அவன்.

"தினசரி
ஒன்றையே
தின்று தின்று
ஜீரணிக்க முடியவதில்லை"
-நிலம் நோக்கி அவள் சொன்னாள்.

சோடிய ஆவித் தெரு விளக்கு
மெல்லச் சிரித்திருக்கும்
ஒளி பரப்பி.
"என்ன செய்ய?
என்னிடம் எஞ்சியிருத்தல்
எல்லாம் இது ஒன்றே
இன்றைக்கு...
என் அன்பே,
என்ன செய்ய? - இந்நிலையில்
நான்
என்ன செய்ய?"
-துளி வியர்த்து துயர் பரப்புவான்.

தூரத்து நிலவொளி எறிக்கும்
அவள் வதனத்தில்.
வேதனைக்கிரகணம் மறைக்கும்
அவன் விழிகளை.

"ஏது செய்ய?
நிதம் தினம்
தின்னத் தின்ன
அடங்கலில்லை
பசி;
தின்றதும்,
ஆகிச் செரிதலில்லை.
ஆதலினால்,
இன்றிரவு எனக்கு வேண்டா
உன் மண்டிய ஆசை.
கொண்டு போ;
வேண்டிக் கிடப்பாருக்கு
விற்றேதும் வேறு பெற்று
வாங்கி வா
நாமுண்ண
பொருள் கொண்டு."
-நிலம் நோக்கிச் சோர்ந்தனள்,
அவலம் சேர் இளமாது.

வீதி விளக்கு,
தகித்தது.
விம்மியது அதன் ஆவி
வெடிப்புற்று
ஒளித்துமி தும்மி.
விரகம் அதனோடு
வெளிப் பரவி
வியாபித்தது.

அவன் துன்பமுற்றான்;
அவள் துவளல் கண்டு
காதல் மனம்,
கனத்து
நிலை
தொய்வுற்றான்.

"என்னிடத்தே
நீ விற்ற
உன் ஆசைகளை
எத்தெருவில்
எவளிடத்தில்
எவ்வண்ணம்
யான் விற்றுவைப்பேன்?
வேண்டுமானால்,
மீண்டும்
நீயே வாங்கி கொள்."

"விலை குறைத்து, பொருள் குறைத்து
விற்றதனை வாங்கி வைத்தல்
வியாபாரத்தே கண்டதுண்டோ?
வேண்டுமானால்,
வீதி மருங்கு விளக்கடியே
குவித்துக் கொட்டிவை;
வேண்டியோர்கள்,
கை அகழ்ந்து ஏந்திப் போகட்டும்;
செயல் நிகழ்த்த
இருப்புடையார்
இல்லம்
எங்கேனும்
தாமேனும்
வாழ்ந்திருக்கட்டும்
இன்பமாய்
எம் இள ஆசைகள்."

பழையன தொலைத்து
அடுத்த நாளைக்கு
புது ஆசைகள்
வாங்கிப் போனார்,
மனக்கடல்
இன்றைக்குக்
கைவிலக்கி
அவரவர் திசை
வழி கண்டு
இளம் காதலர்கள்.

விரயமான
வீதி நிலத்து ஆசைகளை
விளக்கு விழுங்கிற்று.
பிறர் மனத்தே
தேங்கிய ஆசைகளைத்
தின்றிருத்தல் மட்டுமே
அதன் தூணைத்
துணையாய்த்
தாங்கிக் கிடத்தலாயிற்று;
அதன் ஆவி
அவ்வப்போது ஓங்கி எரியும்,
மோகத்தால்,
முடியாத்தனத்தால்.

வீதி விளக்கடியில்
ஆசை மொட்டுக்கள் என்றும்
அநாதையானதில்லை.
காதலர்
தொலைத்துப்போன துயர் தொட்டு
விலக்கிப்போன வினாக்கள் வரையிட்டு
தான் தின்று
ஒளிக் கதிரூடே
பின் வரு
பெண் ஆண்,
துருத்து
மனத்தே
துளைத்திருக்கக்
காத்திருக்கும்
சாலையோரச் சோடிய விளக்கு.

சார்ல்ஸ்
வீதிக்கார் வரும்,
விளக்குத்தூண் விலக்கி,
நான் ஏறுவேன்....
................புதிதாய் எனக்கென்று
.......................சில கனவேந்தி
- இவ் வொருத்தன் தனி இரவுக்கு,
மேலும் சில,
என்றேனும் வரப்போகும்
அல்லது என்றைக்குமே
வராமலே போகக்கூடும்
என்றான
அவளுக்கு,
எனக்கியன்ற என் பங்குச் சேகரிப்பாய்.


98/12/14 23:25 CST

On the Facebook

https://kanam.blogspot.com/2004/12/street-car-named-desire.html

Einstein and Katherine Johnson repairing the time machine in 1950s

Einstein and Katherine Johnson repairing the time machine in 1950s

"Late in his life, in connection with his despair over weapons and wars, Einstein said that if he had to live it over again he would be a plumber. "

Robert Oppenheimer, On Albert Einstein, 

The New York Review, March 17, 1966 issue




This Post On Facebook

கூடல்















கூடல்

அழிவு கடித்தறுத்துப் புடுங்கப் புடுங்க
பாலையிலே பல் முளைத்துப்
பரந்து கொண்டே போகிறது
இந்தப்பக்கத்துப்புல்வெளி.
உரு இடுங்கிய இருள் யாமத்தில், மருளுட்பொருதி
உடை கழற்றி உச்சாடனம் செய்துருக் கொள்கிறது
உடற்காமம் தற்பொருளில்.
மூசிகவேட்டையின்போது வியர்த்துக்கொட்டுகிறது
வெளிச்சம்போக பதுங்கிக்கொள்கிறது பகற்பண்பு;
வேர் பிரிந்து வேறொரு தவனத்தில் விரையும் விரல்கள்
எனதா? உனதா? வேறாளினதா? அடையாள வேடிக்கை வேகும்.
தேடலுக்குத் தீவிரக்கால் முனைத்து முளைக்கும்
தேவை தான் தோன்றியாய் தெருவுமின்றி அலையும்
திகம்பரசாமியாய்த் திருவோடு தாங்கி.
வாசிப்பும் யாசிப்பும் தம்பேதம் உருகி
ஒன்றாய்ச் சொட்டும் உள்ளண்ணத்தில்
வெம்மை.
கொம்பும் சங்கிலியும் குலைந்து,
நெருப்பாய் நடுங்கிப் பிதற்றும்
கொள் களிப்பும் களைப்பும் இடம் தொலைந்து.
மூசும் மூர்க்கத்தை உரசிமோதும் உள்முனகல்
கூடும்; குறை சொல்லும்; பாடபேதமே பாவமாக்கும்;
பற்றுக்கொண்டு பற்றிக் கொண்டு பற்றியளிரும் உயிர்.
மேலே மெல்லப்பற்றும் தீ மேல் படர்ந்து அள்ளிக்கொள்ளும் ஆளை
அடுத்த கணம் கருகிச் சொருகும் விழி, சுருங்கும் வெளி, அவதியாய்
அதைத்தொடரும் அம்புதைத்து காலம் அகாலமாகி அறுந்துதொங்க.
வெள்ளம் மதகுடைய,
துள்ளிய கலம் துவளும், மெல்லக்குளிரும் மேனி
மிதப்பு பையப்பைய பிள்ளைநடையில் இறங்கும் படி
தள்ளாடிச் சரியும் தலை; குருதிபாய்பள்ளம் மூடும் மூளை
எல்லை எழுந்து முள்வேலி சுற்றும்; விரித்தாடை தோல் மூடித் துளிர்க்கும்.
காலைத்தேவைக்காய்த் தனைத் தேடிப் பொறுக்கி,
பொத்திப் பத்திரப்படும் பகற்பண்பின் மாண்பு.
பசுமை பொசுங்கும் புல்; வெளி வெடித்தாகும் பாளப்பாலை.
இனி, எல்லாத்திசையும் கள்ளமோனம் மட்டும்
கடல்நண்டாய்க் கால் கவடிக் குறளும்.

~2000_2002

facebook