Friday, January 14, 2022

அமெரிக்காவிலே நன்றிநவிலல் நாளைச் சுற்றி வீடு, வீதி, கடைகளிலே வைக்கப்படும் அலங்காரவிளக்குகள் ஒளிசிமிட்டி, இயற்கை|செயற்கை நத்தார்மரங்களுடன் நின்று புத்தாண்டுநாளுக்கு ஒரு கிழமை கழித்து மீளப்பெட்டிக்குள்ளே போகும்.

பொதுவிலே முழுச்சுற்றுப்புறமெல்லாம் ஒளிப்பட்டிருக்கையிலே அதனோடு சேர்ந்துகொள்வது மகிழ்ச்சியான விடயமாகவும் குழுகாய உணர்வைத் தருவதாகவுமிருப்பதும் உண்மை. அதேநேரத்திலே வீடெனக் கட்டிக்கொண்டு குடிபுகுந்த ஆரம்ப காலத்திலே இவை வெறும் சடங்காகவே செய்த உணர்விருந்துகொண்டிருந்தது. அடுத்த தலைமுறை விழுதுகளை மகிழ்ச்சிப்படுத்தும் இழையாக இவற்றோடு ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும் அந்நியத்தன்மையை ஏற்றுக்கொள்ளவேண்டிய நெருடல்கூட இருந்ததுண்டு. குடியேறியாக, நன்றிநவிலல்நாளைப் பார்க்க முயல்கின்றபோதிலே, அதுபற்றிய அமெரிக்க ஆதிக்குடிகளின் பார்வை இன்னமும் சங்கடப்படுத்திக்கொண்டிருக்கின்றது.

சில ஆண்டுகளின் பின்னே, கார்த்திகை மாதத்தின் தமிழ்விளக்கீடும் மானம்பூவும் அமெரிக்க நன்றிநவிலல்நாளும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்திலே வருவதால், இரண்டுக்கும் சேர்த்து வீட்டுக்கு ஒளியேற்றுதாகக் கொண்டாகிவிட்டது. அதுபோல, புத்தாண்டுக்கொண்டாட்டம் கழிந்த இருகிழமைகளாலே தமிழ்க்குமுகாயவழி வரும் நன்றிநவிலல்நாளான தைப்பொங்கல் வருவதால், அதுவரைக்கும் அதே ஒளியைக் கொஞ்ச நேரத்துக்கேனும் இரவிலே ஏற்றிக்கொள்வதுண்டு (கடந்த ஈராண்டுகளிலே அதை முழுமையாகச் செய்ய முடியா உளநிலையிலே கோவிட் குழப்பம் செய்தபோதுங்கூட). இவ்வகையிலே வேர்கொண்ட உணர்வுக்குப் பங்கமில்லாது, புகுந்த நாட்டிலும் தமிழ் அமெரிக்கனாகப் பொருத்திக்கொள்ளமுடிகின்றது. 
  
என்ன செய்வது? விழுதுகள் பலமாக வெளியே விழுத்தி நிலமூன்றித் தெரிந்தாலுங்கூட, நிலங்கீழே பார்வைபடாது ஆழவோடிக்கிடக்கும் வேர்கள்தாம் தொடர்ச்சியாக மரங்களைத் தாங்கிக்கொண்டும் நீரையும் பசளையும் கடத்திக்கொண்டும் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன; நிலத்துக்கு மேலாக வெளிவிரிந்த பச்சையமும் சூரியவொளியும் கரியமிலவாயுவும் மட்டும் மரத்தின் வாழ்வுக்குப் போதா!

காலம் அலையாய் அடித்துச் சேர்ந்தவிடத்தும் வாழ்ந்த வாழ்வின் தொடராய் நார்களைப் பிடித்தும் நாம் வாழ்ந்த வாழ்வின் தொடர்ச்சியெனப் பாவனை பண்ணப் பழக்கப்படுத்த, வாழ்வு பதட்டமின்றித் தொடர்கிறது.

தைப்பொங்கல் வாழ்த்து!

01/14/2022 வெ 00:36 கிநிநே.

Tuesday, January 11, 2022

பட்டங்களும் குஞ்சங்களும் வால்களும்


 பட்டங்களும் குஞ்சங்களும் வால்களும் நியாயமானவையே, பொடியனைப் பிரெஞ்சுத்தொலைக்காட்சிவரைக்கும் கயிறு தூக்கிக்காட்டாதவரை! ஆனால், கௌரவப்பொட்டலங்களையும் பாண்டவப்பட்டங்களையும் ஆட்டுக்குள்ளே மாட்டைக் கலந்து மந்தையை மொந்தையாக்குவதுபோல நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது.

 

கௌரவப்பட்டங்களிலுங்கூட, சிவாஜிக்கு, செவாலியர் விருது கொடுத்தாலுஞ்சரி, கௌரவ கலாநிதிப்பட்டம் கொடுத்தால், அவை நியாயமானவையும் அவற்றுக்கான ஏற்புடைத்தவையுங்கூட.  சொல்லப்போனால், அவரினாலே அவ்விருது வழங்குவோருக்குத்தான்  அவரையறிந்தோரிடையே பெருமை! இது பேச்சுக்கல்ல; உண்மை! முறையான ஏட்டுவழிச்சீரான கல்வியறிவுமட்டும் ஒரு துறையிலே ஒருவரை அத்துறையிலே (குறிப்பாக, கலைத்துறையிலே) ஆக்கிவிடமுடியாது. அந்நிலையிலே விழுப்புரம் சின்னையா மன்ராயர் கணேசமூர்த்தி போன்றோருக்குக் கொடுக்கப்படும் கௌரவ கலாநிதிப்பட்டம் அவராலே சிறப்படையும். இராதாகிருஷ்ணனைப் போல ஆய்ந்து பெறாமலே டாக்டர் அப்துல் கலாமென்று டாக்டரை முன்னுக்கு வைத்துக்கொண்டிருந்த இந்தியாவின் ஜனாதிபதிக்குக் கௌரவம், அக்கௌரவ டாக்டர் பட்டத்தாலே வரவில்லை; ஆனால், அவர் சார்ந்த தொழில்நிர்வாகத்தாலும் நாட்டுப்பற்றினை முன்னாலே போக்ரான் சொட்டச்சொட்ட, ஆகாயம் விரியத் துருத்த நிறுத்தியதாலும் வந்தது.  பட்டறிவாலே கொத்தனார்கள் அற்புதமாகக் கட்டமுடியும். அதற்காக, கௌரவப்பட்டம் வழங்கினால், அதை நாம் நக்கல் செய்யமுடியாது; கொத்தனாருக்குக் கொடுக்கப்படுவது, ஆய்வுப்பட்டக்கலாநிதியோ முனைவரோ அல்ல; அதே நேரத்திலே அவரின் அவர்சார்ந்த துறைக்கான நெடுங்காலப்பங்களிப்பினைக் கௌரவப்படுத்தக் கொடுக்கும் கௌரவ கலாநிதியை மறுக்கவும்முடியாது;  அதேநேரத்திலே பத்துப்படங்கள் நடித்தவருக்குக் சல்லாறு கதீஸூ பட்டம்கொடுப்பதும் அதை எடுப்பதும் அவர்தம் சில்லறைகள் அதை மாட்டுப்பொங்கல் எருதுமாதிரி மாட்டிவிட்டுக்கொண்டு திரிவதும் கொடுமையும் சிறுமையுமாம்! 

 

ஒரு பட்டமென்பது பெறுகின்றவர், கொடுப்பவர் யாவாரென்பதாலேயே அதற்கான இடத்தைச் சமூகத்திலே பெறுகின்றது. கணிசமாக, நிதர்சனமாக யாழ்ப்பாணத்தின் குறித்த காலகட்டத்தை, வாழ்வினையெழுதிய, பதிப்பித்த டொமினிக் ஜீவாவுக்கு உலகத்திலேயெங்குமேயில்லாப் புதினமாக, கௌரவ முதுமாணிப்பட்டத்தினைக் கொடுத்த யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் அறியாமையை முழுதாகவே நக்கல் செய்யலாம் – இழிவுபடுத்துதலுக்காகக் கோபம் கொள்ளாப்பொழுதிலே. அவ்வவகௌரவ முதுமாணிப்பட்டம் என்பது தமிழ்ச்சமூகத்தாலேயே யாழ்ப்பாணப்பல்கலைகழகத்திலே அதை வழங்கமுனைந்தவரை எள்ளி நகையாடமட்டுமே அறுதியிலே பயனானது.

 

 கௌரவ கலாநிதிப்பட்டங்களையும் காலமாய்க் கிடந்து காய்ந்து ஆய்ந்து தேய்ந்து பெற்ற கலாநிதி|முனைவர்|பண்ட்ராகர் பட்டங்களையும் ஒன்றெனக் குழப்பிக்கொள்ளக்கூடாது. (காசுக்கு, காசிப் புத்தகக்கடைகளின் பின்புறத்திலே எழுதிக்கொடுக்கும் முனைவர், முதுநிலைப்பட்டங்களும் கிட்டும் காலத்திலேதான் நாம் வாழ்கின்றோமென்பதையும் கூடவே நாம் உணரவேண்டும். எப்பட்டம் எவர் கை கொடுப்பினும், அப்பட்டம் மெய்யப்பட்டம் அறிதல் அறிவென்க!) அப்படியான கௌரவ கலாநிதிப்பட்டங்களைப் பெற்றுக்கொள்வோரிலும் புனலோடாப்பெரியோர்கள் பேருக்கு முன்னால், டாக்டர் கவிஞர் என்றெல்லாம் தாமே மாட்டி தம் உற்றார், உடன்பிறப்புகளையும் காவென்று கொண்டு திரிவதில்லை. இப்படியான பட்டங்களை கோகுல கிருஷ்ணா ஶ்ரீனிவாஸ் உலகப்பல்கலைக்கழகத்தாலே தந்தாலுஞ்சரி, அதுதான் சரியென்று வேல்ஸ் இளவரசர் தன் பல்கலைக்கழகத்தாலே தந்தாலும் மாட்டிக்கொண்டு திரியும்போதுதான் வெட்கமாகும்; பட்டமாயிருத்தல் அழகு; குஞ்சஞ்கூட ஏதோவோர் அழகெச்சம்! ஆனால், வாலாயிருத்தல் அறுத்தலழகு!  அண்மையிலே யாழ்ப்பாணத்திலேயிருக்கும் கல்லூரிகளிலேயே அதிபர்கள் சிலர் அடையாளமற்ற மத்திய அமெரிக்கப்பல்கலைக்கழகத்திலிருந்து கலாநிதி வாங்கி (த் தலையிலே) மாட்டிக்கொண்டிருப்பதாகச் செய்தியொன்றை ஓர் இணையக்கருத்தரங்கிலே யாழ்ப்பாணத்திலிருந்தே குளிர்மையாய் ஒரு பேராசிரியர் சொன்னார்இதையெல்லாம் பொருட்படுத்தக்கூடாது. எத்தனையோ ஒற்றை அறைக்கடதாசிப்பல்கலைக்கழகங்களிலே  கலாநிதிப்பட்டம் வாங்கிக்கொண்டு மாட்டிக்கொண்டு திரியும் நியூயோர்க் பத் திரிக்கை ஆஸ்வாமிகளுமிருக்கின்றார்கள்.  சமயம் கிடைக்கும்போதெல்லாம், இந்த நோயுற்ற 'டாக்டர்'-களை எழுதும் துக்கடா மஞ்சட்பத்திரிகைக்கட்டுரைக்கு முன்னாலும் பின்னாலும் மேலாலும் கீழாலும் போட்டுக்கொள்கிறார்கள். யாழ்ப்பாணத்துப்பாடசாலை ஓரிரண்டிலே அதிபர்கள் வாங்கிப் பூண்டுகொண்டாலென்ன? பூண்டுதான் அணியமுன்னமே ஊருக்கு மணத்து விடுகிறதே!

 

இன்னொரு பக்கம், தாமிருக்கும் துறைக்கும் தொழிலுக்கும் அப்பாலேயான இடங்களில், தளங்களில், தருணங்களில், சூழலில், தனிப்பட்ட உறவுகளி்ல், வட்டாரங்களில் இப்படியான கலாநிதி, முனைவர், பேராசிரியர், சிற்றாசிரியர், முதுமுனைவார், இளமுலைபோர், டாக்குத்தர், எஞ்சினியர் என்றெல்லாம் ஒரு துறையின் சிறப்பாளுமையை இன்னொரு துறைக்கு இடப்பிரதிசெய்து விலாசம், பிரகாசம் தேடுகின்றவர்களை, இடப்பெயர்ச்சி செய்யச் சாமரம் வீசுகின்றவர்களின் களங்களைக் கண்டால், ஒதுங்கிக்கொள்ளத் தோன்றுகின்றது. அப்படியாகப் பூ எறிகின்றவர்கள் நண்பர்களாகவிருப்பின், தனியே அவர்களுக்குச் சுட்டிக் காட்டமுடிகின்றது; மற்றைய காட்டுவழிக்கட்டறுபுரவிகளை ஓடிக்களையென்று விட மட்டுமேதான் முடியும். [இவ்வகையிலே அண்மையிலே சி.சிவசேகரத்தின் கவிதைகள்மீதான பகிர்வுகள் குறித்த அறிவிப்பு மிகவும் எளிமையானதும் நிகழ்வுநாயகர், பங்குபற்றுவார் பெயர்களுக்கு மேலும் கீழும் குளிர்ச்சட்டைகள் அணிவிக்காமல், பரிசுத்த நிர்வாணச்சிறப்போடிருந்தது மகிழ்ச்சிக்குரியது, சம்பந்தப்பட்ட சிலரின் அரசியலுடன் முற்றாவொவ்வாமையென்றபோதுங்கூட].

 

இதற்கு எதிர்முனையிலே, ஒருவர் சார்ந்த துறைகளைப் பற்றிப்பேசும்போது, கற்கைநிலைகளின், காலப்பட்டறிவுச்சேகரிப்புகள் மீதான உழைப்பின் மேலே கட்டப்பட்ட, சம்பந்தப்பட்டார் உள்ளடக்காத துறைவிற்பனராலே சீர்தூக்கி, அலசிப் பார்த்துப் பெறப்பட்ட தகுதிகளையும் உணராது, அறியாது, எல்லாமே ஒன்றுபோலப் “பட்டம்” அளிப்பவரும் அழிப்பவரும் எரிச்சலையூட்டுகின்றார்கள். வில்லை எடுத்தோரெல்லாம் வில்லாதிவில்லரல்லர்! முறையான கல்வியெல்லாம்  சும்மா அட்டைக்கத்தியாலே வெட்டிவீழ்த்திவிடலாமென எண்ணுமளவுக்கு வெறும் ஏட்டுச்சுரைக்காய்களுமல்ல!  

 

இன்னோர் இலங்கைத்தமிழ்வகையினர் உண்டு; வைத்தியக்கலாநிதி என்பதை இக்காலப்பயன்பாட்டிலே வைத்துக் குழப்பும் மாங்காய்ச்சொதியினர் இவர். வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி என்போர் தொழில்சார்ந்த படிப்பினைக் கொண்டு அதற்கான பட்டங்களைப் பெற்றவர்கள். கலாநிதி என்பவர் அவர் சார்ந்த துறையிலே அறுதிபட்டத்தினை ஆய்வு சாரச் செய்து முடித்துப் பெற்றவர். அமெரிக்க எம்டி பட்டத்துடன் சேர பிஎச்டி பட்டமும் என இணைப்பட்டம் பெறுகின்றவர்களிருக்கின்றார்கள்; இவர்களுக்கு வைத்தியர்-கலாநிதி என்பது பொருந்தும்; ஆனால், தனியே எம்பிபிஸ் பட்டத்துடன் வைத்தியராகப் பணியாற்றுகின்றவர்களை வைத்தியகலாநிதிகள் என்பது அவர்களையும் தமிழையும் மதிப்பிழக்கச் சொல்வதுபோலவென்றே படுகின்றது. மருத்துவர் நண்பர்கள் அடிக்கவரவோ அல்லது டாக்குத்தர், டொக்டர் (தமிழ்நாட்டு கம்பித்தொல்லைக்காட்சியிலே கரண்ட் அடிக்கத் தொங்கும் செம்ம மாஸ்பாய்ஸ், “டாக்டர்” என்று வாசித்துக் கொல்லவும்!!) என்பதன் இலத்தீன்மூலத்துக்குப் போய் பாதிரியாராகவோ வேண்டாம். இது மொழியை நாம் எவ்வகையிலே பிறழப் புழங்குகின்றோமென்பதைச் சுட்டவே சொல்கிறேன். பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் இதேபோன்ற ஒற்றைத்தட்டுச்சமநிலைப்படுத்தலிலேதான் இலங்கை|புலம்பெயர்குமுகாயங்களிடையே இடம்பெயர்க்கப்பட்டுச் சுட்டுத்தள்ளப்படுகின்றார்கள் (திரும்ப, முன்னைய பந்தியினைப் போய் வாசித்து வந்தால், நீங்களே முடுக்கின பொறுப்பாளி! விளக்கு எரியட்டும்!)

 

ஆக, முனைந்து பெற்றாரெல்லாம் முனைவார்; கல்லாவால் பெற்றாரெல்லாம் கல்லாநிதி எனக் கொண்டு அமைதி அடைவீராக J

  

சரி! இதுவரை வந்ததுதான் வந்தவர்கள், வேல்ஸ் சிங்களமச்சான் ஆட்டத்தை நேயர் விருப்பத்திலே ஐ!சரி! என்று கேட்டுவிட்டுப்போகலாம்!

https://www.youtube.com/watch?v=pJFaLDFQWjA

 

01/11/2022 செ 20:50 கிநிநே.

Monday, January 10, 2022

ஒளி சாய்ந்துபோனால்....

 இளையராஜா, ரஹ்மான், ஜேசுதாஸ் இவர்களின் பிறந்தநாட்களைப் பூரித்துக்கொண்டாடும் பதிவுகளைக் கண்ட பின்னர் பி. சுசீலாவினது என்று சொல்லி வந்த இச்செவ்வியையும் நேற்று காணநேர்ந்தது. இப்போது அதனை எவரும் கேட்கமுடியாமல், தனிப்பார்வைக்காக மட்டும் மாற்றிவிட்டார்கள்.

சுசீலா தன்னுடைய இன்றைய வாழ்வாதாரத்துக்கு அல்லாடுவதற்குக் கிட்டின நிலையிலிருப்பதாக விரக்தியான குரலிலே கூறுவதையும் குரல் வளம் நொய்ந்துபோன நிலையிலேயிருப்பதையும் விழாக்களுக்கு அழைப்பவர்களெல்லாம் வாழ்நிலையைக் கண்டுகொள்ளாதிருப்பதையும் மறைமுகமாகச் சுட்டுவதையும் கேட்கமுடிந்தது. ரிக்ரொக்கிலே இன்னமும் இக்குரற்பதிவினைக் கேட்கமுடியுமென நம்புகிறேன்.

இச்செவ்வி குறித்து, சொன்னதை மாற்றிவிட்டார்களென்றோ சொல்லவந்தது அதுவல்லவென்றோ இவைபோன்ற வேறு கருத்துகளோ இனி வரக்கூடும். உண்மைபொய் ஒருபுறமிருக்கட்டும். பொய்யாயிருப்பின் மகிழ்ச்சி. பத்திரிகையாளர்கள் பரபரப்புக்குப்போட்டிருந்தால், மிகவும் குற்றமான விடயமுமாம்.  ஆனால், இச்செவ்வி உணர்த்தும்விடயமென்பது முக்கியமானது. புகழ் வெளிச்சம் திசை திரும்பி மங்கிப்போனால், பொருளாதாரநிலையிலே தக்கிக்க வைத்துக்கொள்ளாவிடின், வாழ்நிலை எத்துணை நிச்சயமற்றதாக எதிர்காலத்திலே ஆகக்கூடுமென்பதையே இது காட்டுகின்றது. அண்மையிலே தான் படமியக்கிய நிறுவனமான ஏவிஎம்மின் அலுவலகம் அருகிலேயே வீதியிலே வாழ்ந்து மறைந்த மாநகரக்காவல் இயக்குனர் தியாகராஜனின் வாழ்க்கையும் இதையே சுட்டுகிறது.

தற்கால நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என்போர் கல்வியறிவிலும் வாழ்க்கையைக் காணும்வகையிலும் தம் எதிர்காலத்தினைப் பற்றி மிகவும் கவனமாகக் கட்டமைக்கின்றவர்களாகவிருக்கின்றார்கள்; தமது வருமானத்தினை முழுக்கவு மேபடமெடுப்பதிலும் திரையுலகிலுமே கொட்டாமல், வேறு துறைகளிலும் பகிர்ந்து முதலீடு செய்கின்றவர்களாகவிருக்கின்றனர். ஹொலிவுட்டிலும் இதே தன்மையைக் காணலாம்; வில்லியம் ஷட்னர் பிரைஸ்லைன்.கொம், ரைன் ரெய்னோல்ட் மின்ற் மொபைல் என்று பலரைப் பார்க்கலாம். பழைய தமிழ்ப்பாடகர்களிலே ஏ.எம். ராஜாமட்டும் வாடகைவண்டிச்சேவை நிகழ்த்தும் (ஊபர் வகை) நிறுவனத்தை  அக்காலகட்டத்திலேயே சமாந்திரமாக நடத்தியிருந்தார். மிகுதியான பலர் தம் துறைகளைத் தொழில்களாக மட்டுமில்லாமல், வாழ்வாகவும் எண்ணிக்கொண்டதாலும், வருமானத்தினை இப்போதிருக்கும் ஊதியப்பெறுதியிலே பெறாததாலும் கையிலே சேர்ந்த பணத்தை நிர்வகிக்குமளவுக்குக் கல்வியறிவோ பட்டறிவோ இல்லாமல், பிறரை நம்பிக்கையளித்ததாலும் கடைசிநேரத்திலே இந்திய மாநில அரசுகளின் கண்பார்வைக்காகக் காத்திருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது; இன்னமுமிருக்கின்றது.

இன்னொரு பக்கத்திலே, பழம்பாடகர்களை, நடிகர்களை அழைத்து நடுவர்களாகவோ சிறப்புவிருந்தினர்களாகவோ நிறுத்தி இருத்தி, "சார்!", “அம்மா” என்று கீச்சுக்குரலிலே கோணலாகவும் கொடுமையாகவும் முகச்சேட்டைகள் செய்யும் நிகழ்ச்சி நடத்துனர்களாலே இம்சைப்படுத்தும் காலிலே குனிந்து இளம்பாடகக்கற்றுக்குட்டிகளை நளினமாக ஒரு மூன்றுவிரற்றொடுகை வணக்கம் செய்யவைக்கும் தொலைக்காட்சிகள், அப்பழம்பாடகர்கள், நடிகர்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏதும் செய்கின்றவா என்ற கேள்விக்கான பதிலைச் சுசீலாவின் இச்செவ்வி ஓரளவு சுட்டியதெனலாம்.

இப்படியான பாடகர்களை, நடிகர்களைப் புலம்பெயர்நாடுகளுக்கும் வீடுகளுக்கும் கூப்பிட்டுக் கூடப் படமெடுத்துக்கொள்கின்றதை நண்பனொருவன் இன்னொரு குழுவிலே சுட்டியிருந்தான். எனக்கென்னவோ தன் வாழ்காலத்தின் அந்திமத்தைக் கண்காட்சிகளிலும் வியாபாரச்சந்தைகளிலும் கூட நிற்பதற்குப் பணம் பெற்ற புகழ்பெற்ற அப்பச்சே இந்தியர் ஜெரோனிமோதான் ஞாபகத்துக்கு வந்தார்.

சுசீலாவின் நிலை, செவ்வியிலே சொன்னவர் அவராயிருந்து, சொன்னதும் உண்மையாயிருப்பின், மிகவும் வேதனைக்குரியது; அவரின் பாடல்களை இனிமேலே கேட்கும்போது இச்செவ்வியிலே கேட்ட அவர்குரல்தான் முன்நின்று உறுத்தும். 

01/10/2022 தி 02:35கிநிநே

சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)

ஹொலிவுட் நடிகர் சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) 01/06/2022 இலே தொண்ணூற்றுநான்காம் அகவையிலே காலமாகியிருக்கின்றார். நாற்பதுகளிலே போல் உரோபிசன் (Paul Robeson), ஐம்பதுகளிலே ஹரி பெலொபாண்டே (Harry Belafonte), என்ற வரிசையிலே வெள்ளைத்தோலர்களின் அருகிலே பத்தோடு பதினொன்றாய் நின்று எடுபிடி வேலைசெய்யும் (Gone with the Wind இன் மாமி, போக், பிரிஸி போன்ற) கறுப்பினப்பாத்திரங்களுக்கு மாறாக, தோல் நிறம் சார்ந்த சமூகப்பிரச்சனைகளை அக்காலகட்டத்தின் எல்லையை மீறியோ மீற முயன்றோ பேசமுயன்ற ஹொலிவுட் படங்களின் நடிகராய் அறுபதுகளிலே சிட்னி பொய்ரியேய் வருகிறார். ஒப்பீட்டளவிலே உரோபிசனுக்கிருந்த வசதியும் உயர்கல்விபெறும் வாய்ப்பும் கரிபியன்பின்புலத்தைக் கொண்ட நண்பர்களான பின்னைய இருவருக்குமிருக்கவில்லை. ஆயினும், ஐம்பதுகளிலே நியூ யோர்க்கின் வட அமெரிக்கக்கறுப்பர்நாடக அமைப்பினூடாகத் தம்மை வெளிக்காட்டி ஹொலிவுட்டினுள்ளே நுழைந்தவர்கள். இவர்கள் திறந்துவைத்த கதவு ||ஓரளவுக்கு|| வெள்ளையருக்குமப்பால் அனைத்துத்தோலர்களையும் உள்ளடக்கும் வெளியினை ஏற்படுத்தித் தந்திருக்கின்றதெனலாம். அதற்கு அறுபதுகளிலே மார்டின் உலூதர் கிங்-இளையவர் முன் நின்று போராடிய குடிசார் உரிமைக்கான அமைப்பு மட்டுமல்ல, ஊடகங்களாலே பேச மறுக்கப்படும் ஆயுதம் தாங்கிய கறுப்புச்சிறுத்தைகள் போன்ற அமைப்புகளும் காரணமாகின்றன! அதேவேளையிலே கிங்கோடு வன்முறையறு போராட்டங்களிலே தம் திரைச்செல்வாக்கினையும் முதலாய்ப் போட்டுக் கலந்துகொண்டவர்களிலே பெலொபாண்டேயும் பொய்ரியேயும் அடங்குவார்.


பார்த்த பொய்ரியேயின் படங்களிலே குறிப்பிடத்தக்கவையெனக் கருதுகின்றவை, The Defiant Ones, Lilies of the Field, A Raisin in the Sun, Guess Who's Coming to Dinner, To Sir, with Love, In the Heat of the Night. They Called Me Mr. Tibbs படம் அவரின் In the Heat of the Night படத்தின் பாத்திர வெற்றியை முதலிட்டுக் காசு காண வந்த படமாகவே தோன்றியது. தொண்ணூறுகளிலே வந்த Sneakers, The Jackal இரண்டும் அக்காலகட்ட நட்சத்திரப்பட்டாளங்களோடு இரண்டாம் நிலைப்பாத்திரமாக அவர் வந்துபோகும் நகைச்சுவை, விறுவிறுப்புப்படங்கள். அவரின் அறுபதுகளிலே வந்த படங்களின் சமூகம் சார்ந்த பிரச்சனைகளைப் பேசும் தேவை அவற்றிலிருக்கவில்லை அல்லது அவற்றுக்கிருக்கவில்லை.


The Defiant Ones: சிறையிலிருந்து தப்பும் கறுப்பு-வெள்ளைக்கைதிகளூடாக ஐம்பதுகளின் பிற்பகுதியின் அமெரிக்கக்கறுப்புவெள்ளை நிலவரத்தைப் பேசும்படம். நடிகை ஜேமி லீ கேர்டிசின் தந்தை ரொனி கேர்டிசுடன் இணையராக பொய்ரியேய் தோன்றிய படம். ஒட்டாத சமாந்திர வெளிகளிலே அருகருகே வாழ்கின்றவர்களை வெளியினைப் பகிர்ந்தாகவேண்டிய வெட்டுத்துண்டுகளுள்ளே இருக்க நெருக்கினால், அவர்களும் சமூகமும் எப்படியாக எதிர்கொள்ளுமென்பதைச் சமூகப்பரிசோதனை செய்யும் படம். பின்னாலே, இதே நிலைமுரணை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிப் பேசும் பல படங்கள் வந்தன. எடி மேர்பி- டான் ஆர்க்ரோய்ட் நடித்த Trading Places, இரிச்சர்ட் ப்ரையர்- ஜீன் வைல்டர் நடித்த Silver Streak மற்றும் See No Evil, Hear No Evil உள்ளிட்ட சில படங்கள் இப்படியான சூழலை உருவாக்கின நகைச்சுவைப்படங்கள். இதுபோன்ற முரண்பாடுடையோரைச் சூழ்நிலையமுக்கத்தாலே வெளியைப் பங்கிடும் நிலையை உருவாக்கிச் சமூகச்சிக்கல்களைப் பேசும் போர்க்காலப்படங்கள் அமெரிக்காவுக்கு அப்பாலும் அண்மைக்காலத்திலே விரிந்திருக்கின்றது; பொஸ்னியச்சிக்கலை முன்னிட்ட No Man’s Land ஓரெடுத்துக்காட்டு.


Lilies of the Field: கறுப்பர்-வெள்ளையர் பிரச்சனை மையங்கொண்ட அமெரிக்கதென்பகுதியிலிருந்து முற்றும் தள்ளி, அமெரிக்க மேற்கிலே நாட்டுக்குக் குடிபெயர்ந்து ஆங்கிலம் கொஞ்சமே தெரிந்த ஹங்கேரியன், ஜெர்மனிய மொழிகளைப் பேசும் கத்தோலிக்கக் குரு-அம்மைகட்கிடையேயும் அவர்களுக்குத் தேவாலயம் அமைப்பதிலே வேலைசெய்யும் ஆங்கிலம் பேசும் ஓர் அமெரிக்கக்கறுப்பருக்குமிடையேயான பயங்களையும் ஒருவர் மற்றோரிலே தங்கியிருக்கவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட தேவையினையும் அதன்பாற்பட்டுப் பழகையிலே மெதுவாக ஏற்படும் புரிதலையும் பேசும் படம். அறுபதுகளிலே நிகழ்காலச் சிக்கலை ஒரு வகையிலே கேள்வி கேட்கும்விதமாக, குடிவரும் நாட்டின் மொழி தெரியாத புதுவெள்ளையினத் திருநிலைப்படுத்தப்பட்ட பெண்களுக்கும் அந்நாட்டின் மொழியினைப் பேசும் குடிமகனான ஒரு கறுப்பாணுக்குமிடையே தோன்றக்கூடிய முரண்களினைக் காட்டி, ஒடுக்குமுறைக்கான பிரச்சனைகளிலேயும் இருக்கக்கூடிய அடுக்குகளைச் சுட்டும் படம்.


A Raisin In the Sun: குடிசார் உரிமைப்போராட்டகாலத்துக் கறுப்பு-வெள்ளையின முரண்களை நேரடியாகப் பேசாது, கறுப்பினக்குடும்பத்தின் உள்ளேயான பொருளாதார, பால்நிலைசார்சிக்கல்களைப் பேசும் படம். மிகவும் மெதுவாக ஊரும் காட்சிகள்.


Guess Who's Coming to Dinner: அறுபதுகளிலே ஓரு வெண்பெண்ணும் வைத்தியனான கறுப்பாணும் விரும்புதல் அவளின் குடும்பத்திலே பெற்றோராலே எப்படியாக எடுத்துக்கொள்ளப்படுகின்றதென்பதைப் பேசும் படம். பெண்ணின் பெற்றோராக வரும் ஸ்பென்சர் ட்ரேசியும் கத்ரீன் ஹெப்ரோனும் திரைக்கு அப்பாலும் காதலராகவிருந்த உச்சநிலை நடிகர்கள். இப்படம் மிகவும் அழுத்தமாக அமெரிக்காவிலே ஆண் – பெண் உறவிலே தோலுக்குக் கீழும் நிறத்தின் ஆழூடுருவலைப் பேசியது. அமெரிக்க ஜனநாயகக்கட்சியின் பூட்டாஜிஜின் வாக்குகளைத் தீர்மானிக்கப்படும் அலகாக ஒருபாலுறவென்பதைக் காண்கையிலே, இன்னமும் எவரோடு எவர் உறவினை ஏற்படுத்தலாம் என்பதற்கான போராட்டம் தொடர்வதைக் காட்டுகின்றது; அவ்வகையிலே, இப்படத்தின் கருவுக்கு உரு மாறினாலும் படம் நிகழ்காலத்துக்குப் பொருந்துவதைக் காட்டுகின்றது. இப்படத்தின் பிற்கால வடிவமாகவே தொண்ணூறின் இடென்சில் வோஷிங்டன், சரிதா சௌத்ரி நடித்த மீரா நாயரின் Mississippi Masala இனைச் சொல்லலாம். இன்றுங்கூட, பல்லாண்டுகளாக ஒரு கர்நாடக சங்கீதக்காரரின் மகள் ஓரு வெள்ளையரை மணம் செய்திருப்பதைப் பெருமிதமாக ஏற்றுக்கொள்ளும் சமூகம் இன்னொரு கர்நாடக சங்கீதக்காரரின் மகள் கறுப்பரை விரும்புவதைச் சமூகவலைகளிலே பதைபதைத்துப் பார்க்கும் தட்பவெட்பத்திலே நாம் Guess Who's Coming to Dinner! The Big Sick!


To Sir, with Love: இக்காலகட்டத்திலும், அமெரிக்க நகர்ப்பாடசாலைகள் பொதுவாக கறுப்பினமாணவர்களாலே நிரம்பியவை. அங்கிருக்கும் சிக்கல்கள், பொருளாதாரநிலையிலே ஓரளவு சமாளித்துக்கொள்ளும் மாணவர்கள் ஓரளவு இனம் சாராது கலந்த புறநகர்ப்பாடசாலைகளுக்கோ தனியார் பாடசாலைகட்கோ இருப்பதில்லை. அறுபதுகளிலே இந்நிலை இன்னமும் மோசமானதென்பதைச் சுட்டித் தெரியவேண்டிய அவசியமில்லை. இப்படியான ஒருநிலையிலே இருக்கக்கூடிய இங்கிலாந்தின் நகர்ப்புறப்பாடசாலைக்கு வரும் ஒரு கறுப்பாசிரியர் எவ்வகையிலே மாணவராலே நேசிக்கப்படுமளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்துகின்றார் என்பததே படம். ஒரே வேறுபாடென்பது, இம்மாணவர்களிலே ஓரிருவர் தவிர்த்து ஏனையோர் வெண்மாணவர்கள்; ஆசிரியர் புலம்பெயர்ந்த கறுப்பர். இதே வகையான ‘மோசமான நிலையிலிருந்து எல்லாமே சுபமாகி எல்லோருமே இறுதியிலே இன்புற்றார்’ படங்கள் இப்போதும் ஆண்டுக்கு இரண்டாவது வருகின்றபோதுங்கூட, உண்மையான ஐம்பதுகளின் ஆசிரியரொருவரின் வாழ்க்கையை ஒற்றிய இப்படம் அதுவந்த காலகட்டத்தினை வைத்துப் பார்க்கையிலே ஒரு முன்மாதிரியான தூண்டலாகவிருந்திருக்கவேண்டும். சமூகமேம்படுத்தலுக்கான கொள்கையோடும் வரையறுத்துக்கொண்ட குறிக்கோளோடும் செயற்றிட்டத்தோடும் சில ஆசிரியர்களேனும் பாடசாலைகளை நோக்கி நகர்ந்த காலமாக அஃதிருந்திருக்கவேண்டும். எழுபதின் Conrack படத்தின் Jon Voight – ஆஞ்சலிகா ஜுலியின் தந்தை- ஆசிரியர் பாத்திரம் இதுபோன்ற உண்மையான (ஆனால், வெள்ளையின) ஆசிரியர் ஒருவர் தென் கரோலினத்தீவுப்பகுதிக்கு ஆசிரியராகப் போய்ச் செய்யும் சேவையைக் காட்டும் பாத்திரமே! ஆனால், கறுப்பின மாணவர்கள் எதிர்கொண்ட|கொள்ளும் (இன்னமும் கொள்ளும் சிக்கல்கள் வெறும் பொருளாதாரம், குடும்பக்கட்டுமானம், குடும்பத்துள்ளான பால்சார்படிநிலை இவற்றினைமட்டுமே கொண்டவையல்ல) நிறம்சார்விரிப்பொன்றாலும் சிக்குண்ட நிலையைக் கையாள அவர்களின் நிறம் சார்ந்த சமூகத்திலிருந்தே வரும் ஓராசிரியரே மாணாக்கராலே அடையாளம் ஒத்துக்கண்கொள்ளப்படத் தேவைப்படுகின்றார். இங்கிலாந்தின் நிலை பற்றி அறியாதபோதுங்கூட, அமெரிக்கப்பாடசாலைகளினையும் அவற்றின் வரலாற்றினையும் புரிந்துகொள்ளும் வகையிலேயே இப்படத்தினையும் பொருந்த உள்வாங்கமுடிந்தது. இப்படத்திலே இங்கிலாந்து (இலண்டன்) நகரப்பாடசாலைக்கு வரும் பொய்ரியேயின் ஆசிரியர் பாத்திரம் கறுப்பராக இருந்தாலும், பிரிட்டிஷ் கயானாவிலிருந்து வருகின்றவர். ஆசிரியராயிருந்தலென்பது பாதி போதிக்கும் தொழில்; மீதி பெற்றோராய்ப் பாவனை பண்ணும் தொழில். சில ஆசிரியர்கள் சில மாணவர்களைத் தாமும் ஆசிரியர்களாகப் போதிக்காமலே புரிய வைக்கின்றார்கள். அப்படியானோராலேயே அத்தொழில் இன்னமும் நேரம் கட்டாமலும் நினைவு தப்பாமலும் நகர்கின்றது.


In the Heat of the Night: பொய்ரியேயின் படங்களிலே மிகவும் பிரபலமான படமெனலாம்; அறுபதுகளிலே அமெரிக்க நிறப்பாகுபாடு மிக்க தெற்குக்கு அமெரிக்க வடக்கின் பிடடெல்பியாவிலிருந்து நகர்காவற்றுறையின் துப்பறிவாளனாகப்போகும் வேர்ஜில் திப்ஸ் என்பவரினை மையப்படுத்திய படம். நகர்காவற்றுறை நிர்வாகியாக வரும் வெள்ளைநிற Rod Steiger கடமையுணர்வுகொண்ட ஆனால், இன்னுமும் ‘வெள்ளை’யுள்ளம் கொண்டவர். இப்படியாகக் கறுப்பு-வெள்ளை என்று நிறம் பிரித்து ஆளைப் போடமுடியாத பாத்திரங்களிலான படங்கள். ‘Virgil! It is a funny name! What do they call you up there in Philadelphia?” என்று கேட்கும்போது அவர் சொல்லும், “They call me Mister Tibbs!” என்பதே படத்தின் சாரம். வெள்ளைநிறப்பெண்கள் கறுப்பு ஆண்களைக் குறித்துக் குற்றம் சும்மாவே சுமத்தக்கூடிய பழங்காலத்தின் அவலத்தைச் சுட்டின To Kill a Mockingbird கதை படமாக வெளிவந்து ஐந்தாண்டுகளிலே இப்படம் ஒரு கறுப்பரை வெள்ளையர் கொலை செய்யப்பட்டிருப்பது குறித்துத் துப்பறிகின்றவராகக் காட்டி வந்திருப்பது, அறுபதுகள் எத்தகைய விரைசுழல்மாற்றங்களை ஏற்படுத்திய காலமெனக் காட்டுகின்றது. படம் கூடுதலாகவே ஓர் கொலையைத் துப்பறியும் கருவோடும் செல்வதாலே, அதன் வெற்றி பொருளீட்டலிலும் நிச்சயப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். இதே கருவோடு தொடர்ச்சியாக இன்னும் இரு படங்களும் பின்னாலே, மிக அருமையான, ஆனால், ‘நல்லவர்கள்-கெட்டவர்கள்’ என்ற இருவகைமாந்தரேயுள்ளார் என்ற வகைப்பட்ட தொலைக்காட்சித்தொடரும் வந்தன. எண்பதின் இத்தொலைக்காட்சித்தொடரிலே பொய்ரியேய் நடிக்கவில்லையென்றாலுங்கூட, தொடர் சிறப்பாக அமைந்திருந்தது. இப்படங்களின் பொய்ரியேயின் திப்ஸ் பாத்திரத்தினையும் Beverly Hills Cop படங்களின் எடி மேர்பியின் அக்செல் பொலி பாத்திரத்தினையும் பார்க்கும்போது, வர்த்தக ஊடகங்களும் நிறுவனங்களும் எவ்விதமாக மாற்றத்தை உள்வாங்கிச் சிக்கல்களையே சிரிப்பாக்கிச் சிதைத்தும் காசாக்கிப் போகச் செய்யக்கூடியதெனத் தெரியும்.