Saturday, September 03, 2016

அரசியல்

போராட்டம் பேரிலே
புத்தகங்கள் போடுகின்றவர்களைப்
புத்தகங்கள் பேரிலே
போராட்டத்தைப் பேசுகின்றவர்கள்
பொருதுகிறனர்.

பழைய மிருகத்தைப்
புதிய மிருகம் புசித்துவிடுகிறது.

அடையாளத்தை
அடையாளம் வெல்லுகிறது.
அதிகாரத்தை
அதிகாரம் வெல்கிறது.
அரசியலை
அரசியல் வெல்கிறது.
அதிகார அடையாள அரசியலை
அதிகார அடையாள அரசியல் வெல்கிறது.

அமரும்
அனைவரும் அனைவரையும்
அவரவரிடத்தில்
அமர்த்திக்கொள்கின்றனர்.

புத்தகங்கள் பேரிலே
போராட்டத்தைப் பேசுகின்றவர்களை
போராட்டம் பேரிலே
புத்தகங்கள் போடுகின்றவர்கள்
பொருதுகிறனர்

புதியமிருகம்
பழையமிருகமாகிறது.

மிருகங்கள் பசி கொள்வன;
பசிப்பன புசிப்பன.

பசித்தார் புசித்தார்
பார்வையால் ஆனவை
கட்டப்படு பொய்யும்
கட்டித்த மெய்யும்.

காலம் கனத்து
டாலியின் தொங்கு
கடிகாரமாய்க்
கணம் சொட்டி
உருகி ஓடுகிறது
ஓயாத நிலம் பரந்து
காணா எல்லைவரை.