தமிழகத்திலிருந்து அமெரிக்கத்தலைவர்களைவிமர்சிக்கும் பிரபல எழுத்தாளக்கொம்பரெல்லாம் மிகவும் கவனமாக 2009 இலே ஸ்ரீலங்கா அரசின் பங்காளிகளான இந்திய அரசியல்வாதிகளின் செயற்பாடுகளையோ 2011 இலே மலையாளிகளின் செயற்பாட்டையோ பற்றிப் பேசுவதில்லை என்பது பேஸ்புக் "விரும்பும்" வாசகர்களாலே கவனிக்கப்படுவதேயில்லை என்பதைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்றளவிலே இக்குறிப்பு.
தமிழ் எழுத்தினை வாசிக்காமலே விட்டுப்போன வெறுப்புக்கு நிகழ்நிலையை மாற்றத் துரும்பெடுக்கவும் வக்கிலாது வாசித்தும் எழுதியும் என்ன கிழித்தோமென்ற விட்டுப்போன உளநிலை முதன்மையான காரணம்; அடுத்த காரணம், இத்தகு/காத் தமிழகப்பிரபல எழுத்தாளர்களின் கண்ணுக்குப் புள்ளியாகமட்டுமே தொலைவானிலே தெரியக்கூடிய சின்னக்கருடனைக்கூடக் கண்டவுடனே இச்சையின்றித் தூண்டப்படும் கோழிக்குஞ்சுப்பதுங்குதனம்; ஆனால், இவ்வெழுத்தாளர்கள் மறுபக்கத்திலே எதிர்கொள்ளத் தேவையற்ற குழுமங்களின் நெறிகளையும் விழுமியங்களையும் மட்டுமே கவனமாகத் தேர்ந்தெடுத்து “சமூக அக்கறையுடன் விசிறும் இரு வரிகளும் ஓரிரு பதிவுகளும்" பின்னர் தேர்ச்சியாகத் தொகுக்கப்பட்டு வர்த்தகவழிமுறைகள், விளம்பரத்தந்திரங்களோடு விற்பனைக்கு வந்துவிடுகின்றன. இவர்கள், களத்திலே இறங்கி நடந்து குரலெழுப்பும் ஓர் எளியமனிதனைவிட, -அதிகம் வேண்டாம், இவர்கள் நோகாமலே காற்றிலே சாடும் ஒருவேளை உணவைத் துறந்த அரசியல்வாதிகளினைவிடக்கூட- அதிக சமூக அக்கறைகொண்ட தார்மீகப்போராளிகளாக, அத்தகு நோகாமல் நுங்கு தின்னும் அமைப்பின் வசதியிலே தன் சமூக அக்கறையையும் “விருப்புவாக்குகளாலே/ இரட்டைச்சொற்கிளவிகளிலே” வெளியாக்கித் முழுமை காணும் வாசகரிடையே ஏற்றப்பட்டுவிடுகின்றார்கள்.
பெரும்பாலான தமிழக+ சில இலங்கை எழுத்தாளர்களுக்கும் அவர்களுடைய ||தமிழக||வாசகர்களுக்கும் இடையேயான உறவு எப்போதுமே அடியொட்டி ஆண்டவன்_ஆண்டாள் உளநிலையிலோ நாதன்_நாயகி உளநிலையிலோ நிகழ்வதானது. இப்படியான நிலை தற்போது, இலங்கையடியான தமிழ்வாசகர்களுக்கும் பரம்பிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையிலே, எளியகூற்றொன்றுகூட, இப்படியான எழுத்தாளர்கள் பேஸ்புக்கிலோ எழுத்தாளர்_வாசகக்கலந்துரையாடலிலோ உதிர்க்கப்படும்போது, “விரும்பப்பட்டு” “வேதவாக்காகி” விடுகின்றது; பங்கிடப்படுகின்றது.
இந்தியதிரைப்படநாயகர்கள், கிரிக்கெட்விளையாட்டுவீரர்கள் போன்றோருக்கும் அவர்களின் விசிறிகளுக்கும் இடையே இருக்கும் உறவுநிலைபோன்று தோன்றினாலுங்கூட, இங்கே நெருக்கம் மற்றைய இருவட்டங்களைவிட அதிகமானது. இதற்கு மூன்று காரணங்கள்; ஒன்று, எழுத்தாளர் : அவர்களுடன் தோளுரசக்கூடிய வாசகர்கள் விகிதம் மற்றைய இரு வட்டங்களிலேயிருப்பதைவிட அதிகமானது; இரண்டாவது, இங்கே அணுகக்கூடிய, உரையாடக்கூடிய வாய்ப்புகளும் – கண்காட்சி, கூட்டங்கள், இணையச்சமூக இணைவு- மற்றைய இருவட்டங்களைவிட அதிகமானது; மூன்றாவது, மற்றைய இரு வட்டங்களைப்போலல்லாது, இவ்வட்டத்திலே எழுத்தாளன்|வாசகன் என்ற வெளுப்பு|கறுப்பு இருநிலை தெளிவற்றுத் தேய்ந்து சாம்பற்களம் விரிந்திருக்கின்றது. வாசகன் தானும் இலகுவாக எதுவிதமான “சிறப்புத்தகுதியும் தேர்வுமின்றி” எழுத்தாளநிலையை, தொடர்ந்து எதையாவது “எழுதுவதாலும்” அதற்கு வாசகனைநாடும் எழுத்தாளனிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதாலும் அதன் விளைவாக சக வாசக-எழுத்தாளர்களிடத்தே நிலை உயர்த்தப்படுவதாலும் பெற்றுக்கொள்கிறான்.
இவற்றை அறிந்து விமர்சனமின்றி, அப்படியான எழுத்தாளர்களை “ஆமா சார், கரெக்டா சொன்னீங்க” என்று வழிபடும் வாசக உபாசகர்களிலிருந்து எட்டி நிற்க விரும்புகிறேன். ஏனெனில், இப்படியாக ஐந்தாண்டுகளின் முன்னாலே கண்ட வாசக உபாசகர்கள், இப்படியான எழுத்தாள,பதிப்பாள,விமர்சகத்தொடுமுளைகளைக் கொழுகொம்புகளாக்கி “வளர்ந்து”, இன்று அதேவழியிலே தாமும் “சமூக அக்கறையுடன் விசிறும் இரு வரிகளும் ஓரிரு பதிவுகளும்" தொகுத்துப் ‘பிரபல’ பதிவராகிப் பின் பதிப்பவர்களாகி, அடுத்துவரப்போகும் பிரபலங்களின் “விருப்பு”வாக்குகளாலே நிறைந்துகொண்டிருக்கின்றார்கள். இங்கே உதாரணங்களுக்கு எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்வதிலேதும் தயக்கமோ அச்சமோ இல்லை; ஆனால், அவற்றைத் தொடரும் வாதங்களிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கத் தெம்பில்லை.
வாசிக்கும் புத்தகங்களும் பார்க்கும் திரைப்படங்களும் –பூமியின் வான் வெளியைக் கடந்துகொண்டிருக்கும் வால்வெள்ளியின் நேரத்துடனான இருப்புப்புள்ளிநிலை போல தொடர்ந்து அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்காது- ஒருவனின் உள்ளாடைகள்போல அவனுக்குரியதேயான அந்தரங்கமானவை என்ற நினைப்பு இன்னமும் இருக்கின்றவன் என்றளவிலே இப்படித்தான் என்னாலே தமிழ் எழுத்தினையும் எழுத்தாளர்களையும் வாசகவட்டங்களியும் விருப்புவாக்குகளினையும் பார்க்கமுடிகின்றதோ தெரியவில்லை.