Thursday, September 15, 2011

தேசியம்/சாதியம்/ ஈயுமியம்

எல்லாத்தமிழ்த்தேசியர்களுக்காவும் நான் பேசமுடியாதென்பதை முற்சொல்லிக்கொண்டு: தமிழ்த்தேசியமென்பது, தமிழென்ற அடையாளத்தைவைத்து ஒடுக்கும் அதைவிடப்பெரிதான இந்திய, சிங்களத்தேசியங்களை எதிர்கொள்வது என்பதாக |மட்டுமே| காண்பதும் செயற்படுவதும் அவலத்துக்குரியதும் கண்டிப்புக்குரியதுமாகும். அதனுள்ளான சாதிசார்ந்த அடையாளங்களைக் களைவதும் ஒடுக்குமுறையை எதிர்ப்பதிலும் தன்னைவிடச் சிறிதான மொழி/இனஞ்சார் அடையாளங்களை ஒடுக்காமலிருப்பதிலும் அங்கீகரிப்பதிலும் வகிபாகம் கொண்டுள்ளது. இத்தகுவுளநிலையில்லாதபொழுதிலே தமிழ்த்தேசியமோ எத்தேசியமோ வெற்றிகொள்ளமுடியாது; சொல்லப்போனால், தன்னை நியாயப்படுத்தும் காரணங்களையும் அவற்றுக்கான ஏரணங்களையும் இழந்துபோகின்றது; பிரித்தானியாவிலே பாக்கி என்று மொத்தமாகத் திட்டிப்புடைக்கப்படும்போது, நான் தமிழனென்றோ, இந்தியனென்றோகூட அடையாளப்படுத்தி விலகுவது அர்த்தமற்றது. எத்தேசியமோ இனவிடுதலையோ மனித உரிமையின் அடிப்படையிலேயே அதனை ஒடுக்குவோருக்குச் சமனாகக் கொள்ளும் தேவையின்பாற்பட்டோ எழவேண்டுமேயொழிய 'நான் இன்னார்' என்று தானொடுக்க எழக்கூடாது. சாதி ஒடுக்குமுறையை எதிர்க்காத தமிழ்த்தேசியம் வெற்றிபெறவாய்ப்பேயில்லை. அதேநேரத்திலே, தமிழ்த்தேசியத்தைத் திட்டமிட்டே சாதியமே என்று சாத்தியப்படுத்த நேர்கோட்டை வட்டமென மீளமீளச் சொல்வதாலே மட்டும் நிறுவத்துடிக்கும் வல்லுநர்களின் மறைகாரணங்களையும் நோக்குகளையும் சுட்டிக்காட்டுவதும் அவசியமானதாகிறது.



/இன்று தமிழ்நாட்டில் கோலோச்சும் தொலைக்காட்சி ’சேனல்’ எதுவும் பிராமணர்களின் வசம் இல்லை. அவர்கள் அவற்றின் ஆசிரியப் பொறுப்பிலும்கூட இல்லை. எனவே இந்த ஊடகத் தீண்டாமைக்கு அவர்களை யாரும் குற்றம் சொல்ல முடியாது. அச்சு ஊடகத்தை எடுத்துக்கொண்டால் நிலைமை இன்னும் மோசம்...இந்து நாளேடு மட்டும்தான். இதுகுறித்து அதுவொரு தலையங்கத்தை வெளியிட்டிருக்கிறது.அதற்காக இந்து நாளேட்டின் ஆசிரியருக்கு நாம் நன்றி சொல்வோம்/

http://nirappirikai.blogspot.com/2011/09/blog-post.html?spref=tw

என்று பாதிப்பொய்யை முன்வைக்கும், பெரியாரைக் காலச்சுவட்டிலே கிழித்தெறிந்த ரவிக்குமாரினைப் பஞ்சமருக்கெதிரான ஒடுக்குமுறைக்கெதிராக மட்டும் குரல் கொடுக்கிறார் என்பதற்காகமட்டும் ஏற்றுக்கொள்ளமுடியாது. தமிழ்த்தேசியம் என்பதிலே நம்பிக்கையுள்ள நிலையிலே இங்கே அவரை நான் இக்கூற்றுகளுக்காகக் கண்டிக்கிறேன்; இதைக்கூட, தமிழ்த்தேசியர்கள் சாதியத்தை ஏற்றுக்கொண்டார்களெனத் திசைதிருப்பவேண்டாம்.



தொல். திருமாவளவன் குறித்து, அருள் எழில் ஒரு குறிப்பிட்டிருந்தார்:

http://www.facebook.com/note.php?note_id=287206397963453

/...இன்றைக்கு திருமாவளவன் தலித்தே என்றாலும் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவதையும்../

தமிழ்நாட்டிலே திருமாவளவன், தலித் என்பதற்காகவேமட்டுமே தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டாரா என்றெனக்குத் தெரியாது; கடைசியாக செங்கொடியின் இறுதிச்சடங்குகளின்போது, இதர தமிழ்த்தேசியர்களுடனேயே இருந்ததை -இணையமூடு- கண்டேன்; பேசியதைக் கேட்டேன். (சீமான் தேவர்களைக் கொண்டாடுவதும் நெடுமாறன் சாதிமான்களைக் கொண்டாடுவதும் நிகழ்கின்றதென்கிறார்கள்; உண்மையானால், கண்டித்தே ஆகவேண்டிய நிலைப்பாடுகள் அவை) ஆனால், 2009 இலே ஈழத்தமிழருக்காக உண்ணாவிரதமிருந்த திருமாவளவன், அன்னை சோனியா அடிப்பொடியாகி, கருணாநிதிக்கு ரவிக்குமார் சகிதம் கைகட்டி நின்று, 2010 இலே அண்ணல் ராஜபக்சேயினைச் சென்று கூழைச்சிரிப்புடன் சந்தித்துவந்து, 2011 இலே சென்னையிலே ஸ்ரீலங்கா தூதரகம் முன்றலிலே ஸ்ரீலங்கா அரசினைக் கொல்லரசென்று ஆர்ப்பாட்டம் நடத்தும்போது, அவரை எங்கே தமிழ்த்தேசியர்கள் நிலையான இடம்கொடுத்து வைப்பதென்பதை அவரின் ஆதரவாளர்களே சொல்லட்டும். இவை எல்லாவற்றினையும் தமிழ்த்தேசியர்களின் சாதியமென்று திசைதிருப்பமுடியாது.



இதே சுழிப்புத்தான் இலங்கையிலும் சிறிலங்கா அரசுசார்தமிழ்க்குழுக்களாலே உலகம்பூராகத் திட்டமிடப்பட்டு நிறுத்தப்படுவது; சாதிப்பிரச்சனையை முன்வைப்பது தமிழ்த்தேசியர்களே என்றவகையிலே. சாதி என்ற அமைப்புநிலையிலே ஒடுக்கப்படுவது, எவ்வகையிலும் கண்டிக்கப்படவேண்டியது; இதைத் தமிழ்த்தேசியர்கள் செய்தால் அது கண்டிக்கப்படவேண்டியதுதான்; ஆனால், தமிழ்த்தேசிய அமைப்புகளேதான் இதைச் செய்வதாக ஆதாரமின்றியும் திசைதிருப்பும் நோக்கிலும் நிறுத்துவதுமட்டுமே மற்றவர்களின் நோக்கமென்றால், அஃது எவருக்கும் அச்சப்படாமலும் அடங்காமலும் எதிர்க்கப்படவேண்டியதாகும். அதேநேரத்திலே தமிழ்த்தேசியத்துள்ளே சாதியமென்பதற்கான இடம் அறவேயில்லை என்பதைத் தமிழ்த்தேசியர்களென்று தம்மைத்தாமே அடையாளப்படுத்துகின்றவர்கள் வெளிப்படையாக, ஆணித்தரமாக, தெளிவாக அறிவித்துக்கொள்வது மிக மிக அவசியம்.