ஆற்றைக் கடப்பாருக்காய் அப்பத்துடன் காத்திருப்பேன்
- அன்றலர்ந்த அரைத்துண்டு அப்பம்
உடன் தேங்கு துளி பருகுநீரும் வரளும் வெயில்.
அக்கரையிருந்து அவர் வருவார்; ஆறு பிரிய
அலை ஒழுக, மச்சம் மருண்டு வழி விழி அலைய,
வண்டல் விரல் வேர் விழுத்தி வருவார் தலை
ஒளிய ஒளி காலும் முகபாவம்,
முதிர்ந்திழிந்து கணம் குழவி முறுவல் படர்ந்தொழிந்து
களை பெருகிக் களைத்திளைத்து அழிய எழில் துளிர்போடும்.
அவர் வருவார்; முகம் சோர்ந்து கை நீண்டு
தொங்குமெனைக் காண்பார்; அப்பம் கேட்பார்.
வேர்வைக்கை பொத்தி வைத்த துண்டு வைப்பேன் பாதம்.
தொட்டெடுப்பார். தட்டுத்தட்டாய்ப் பெருகும் ரொட்டி.
ஒன்றுண்பார்; மீதி உன்னதென்பார்;
தாகத்துக்கொரு துளி தாவென்பார்; நானளிக்க
நனைத்து நா தடவ நீர் ஊறும் கலயம்.
வழி பார்த்து மேல் நடப்பார்; வாழ்த்தியிருப்பேன்,
"வழங்கினை வாழி நீ! வளர்த்தனை வாழி நீ!!"
என்னிடத்தை எப்போது எவரெடுத்து ஒப்பென
உம்மிடத்தே தந்தாரென்றெண்ணியெண்ணி
மாய்வேன்; எதுவுங் காணாராய் எட்டிப் போவார்
துல்லியமாய்த் தொட்டு வைத்த பொட்டாய்
தொலைதூர முற்று வைப்பார்.
எனதான
அரைத்துண்டு அப்பமும் சொட்டு அத்துளி நீரும்
மட்டுமே இப்போதும்
சப்ப ஒட்டும் நான்.
'06 அக்., 25 புதன் 16:30 கிநிநே.
கணம்~
-/சித்தார்த்த 'சே' குவேரா.