+ -
இன்னொரு கிரகோரியன் ஆண்டு கழிகிறது; ஆண்டுக்கூட்டலும் கழித்தலும் பெருக்கலும் பிரித்தலும் வாழ்த்துப்பரிமாற்றங்களின் அடைப்புக்குறிகளிடையே ஒலி, ஒளி, எழுத்தென்று சொல்லிப் பரவுகின்றன. ஆண்டுக்கணக்கீடு வேறெதற்கு உதவக்கூடும்? கட்டம்போட்டு நேரச்சட்டத்துள்ளே வெற்றி தோல்விகளையும் வரவு செலவுகளையும் சரிபார்த்துக்கொண்டு, வரப்போகும் சட்டத்துக்குள்ளே காலடி வைப்பதற்கான முன்னேற்பாடுகளுக்கு தயார்படுத்திக்கொள்கிறோம்; பலரோடு சேர்ந்து மகிழ்ச்சியடையும்போதும் உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ளும்போதும், நம்பிக்கை அதிகரிப்பதுபோல உணர்கிறோமோ என்னவோ தெரியவில்லை. ஆனால், ஆண்டாண்டாக எடுக்கப்படும் உறுதிமொழிகளை வாழ்த்துகளை எதிர்பார்ப்புகளைக் கவனிக்கும்போது, Grounddog day திரைப்படத்திலே பில் முர்ரே திரும்பத் திரும்ப அதேநாளிலேயே எழுகிற சலிப்புணர்வுதான் வருகின்றது.
ஆனால், பொதுவாக, டிசெம்பர் 31 இலிருந்து ஜனவரி 01 தொடங்கும் கணத்தினை ஓர் அந்தரிப்பான கணமாகவே உணர்கிறேன்; கூட வந்த எதையோ இழக்கிறோம் என்ற உணர்வுக்கும் சுற்றியிருப்பவர்கள் கௌவிப்பிடித்துக்கொள்ளும் உற்சாகத்திற்கும் இடையிலே தொங்கித் தவிப்பதால், இவ்வுணர்வு ஏற்படுகிறதோ தெரியவில்லை. அதனால், கூட்டல் கழித்தல்களைப் பார்த்துக்கொள்ளும்விதமாக, 'புத்தாண்டி'ன் நள்ளிரவு கழியும் கணங்களிலே சிலவற்றினை தனியே எனக்கெனக் கைப்பற்றிக்கொள்கிறேன்.
இவ்வாண்டிலே மகிழ்ச்சியை ஏற்படுத்தியவை ஒரு புறமிருக்க, கழிந்தவற்றிலே தனிப்பட மிகவும் வருத்தமேற்படுத்திய செய்தி, சூறாவளி கதரினா விளைவான நிதிமீள்பங்கீட்டுப்பிடுங்கலிலே துலேன் பல்கலைக்கழகம் தன் நூற்றாண்டு கடந்த குடிசார்பொறியியல், இயந்திரப்பொறியியற்றுறைகளை இழுத்து மூடத் தீர்மானித்திருப்பது. ;-(
'05, டிசெம்பர். 31 சனி 22:30 கிநிநே.