Friday, December 11, 2015

நொண்டும்நாய்க்கு உதைதல்

பேஸ்புக்கிலே ஒரு துண்டுவிழியம். ஒரு பிச்சைக்காரச்சாமியாரை மாடுதுரத்தும் படம் உள்ளடங்கியது. இதிலே நடக்கும் சாமியார் ஆர் எஸ் எஸ் காரரோ இல்லை மாட்டிறைச்சி உண்டவரைக் கொன்றவர்களை ஆதரிப்பவரோ என்று நமக்குத் தெரியாது. அந்நிலையிலே இந்தபடத்துக்கு "வாய் இல்லாத ஜீவனுக்கும் தெரிந்து விட்டது இவர்களைப்பற்றி" என்று போடுகின்றவருக்கும் மாட்டிறைச்சி உண்டதாகச் சொல்லிக் கொன்ற கொடியவர்களுக்கும் என்ன வேறுபாடு? இருவருமே ஒற்றைப்படையாகத்தான் போட்டடிக்கின்றார்கள். "ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்குக் குர்ரம்" என்ற ஏ-ரணத்தின்படி இதனைப் பகிர்ந்து சமத்துவம் பேசும் பகுத்தறிவுப்பெட்டகங்கள், பொதுவுடமைப்புளியோதரைகள் இன்னொரு கொடுமை.

இவர்களைப் போன்றவர்களே, நடந்து செல்லும் ஆடையற்ற ஆண்டியை மூன்று சீக்கியர்கள் போட்டடிக்கும் படத்தினைப் பகிர்ந்துகொண்ட ஆட்களும். (ஆடையற்று வீதியிலே நடக்கிறவரை அகௌரவமெனச் சொல்லும் சட்டத்தின்கீழே பிடிப்பது வேறு; வீதியிலே தர்ம அடி கொடுப்பது வேறு).
மற்றைய மதத்தினரின்/நிலைப்பாட்டுடையவர்களின் கருத்துகளை வெளியே சொல்லவிடாமல் அமுக்குவது எதிர்க்கப்படவேண்டியது; ஆனால், அதேநேரத்திலே அப்படியாக அமுக்குவதிலே சம்பந்தப்படாத மற்றைய மதத்தவர்களை/கருத்துள்ளவர்களைப் போட்டடடிப்பது என்பது கையாலாகாத்தனமானது; நாமும் அதேபோல பொறுப்பற்று மற்றவர்களின் கருத்துக்காக அவர்கள் அடிவாங்கவேண்டுமென்பதாகவோ அமுக்கப்படவேண்டுமென்பதாகவோ வன்முறை எண்ணம் கொண்டது. இதற்கு விருப்புவாக்கிடுவதும் அதேவழியைக் கொண்டதுதான். மூடத்தனமான கருத்துகளை விமர்சிப்பது என்பது வேறு, அதனைக் கொண்டிருக்கக்கூடாது என்பது வேறானதில்லையா? கடித்த வெறிநாய்க்கு அடிக்கமுடியாமல், படுத்திருக்கும் நொண்டிநாய்க்கு உதைக்கும் வீரம் என்ன இழவு பகுத்தறிவோ? பொதுவுடமையோ? நடுநிலைமையோ?

-/.
நவம்பர் 16, 2015

No comments: