உலகறிய ஆயிரம் கொலைகளை பின்நின்று நடத்திவிட்டு அகதிகளைக் காக்க
அவதாரமெடுகின்ற "முதியோர்கள்" இனை விடவா தன் இயலாமையிலே ஆத்திரத்தினைத்
தன்னாலான செருப்பெடுத்து அடித்த ஓர் இளைஞன் நாகரீகமற்ற
மோசக்காரனாகிவிடுகின்றான்? இதே இளைஞன் தன் கருத்தைக் கட்டுரையாக எழுதினால்,
இந்து ராமோ அவரின் ஒன்றாய்ப்பிறந்த & ஒன்றுவிட்ட உடான்ஸ்பிறப்புகளோ
தம் இந்துவிலோ ப்ரொண்ட்லைனிலோ அதிகம் வேண்டாம் அவ்விந்துவின் சொட்டிலே
பிழைக்கும் சம்ஸின் தமிழ் இந்துவிலோ வெளியிடுவார்களா? உடனடியாக, "The Tamil
Outfit" என்று எழுதி பயங்கரவாத முத்திரை
அடித்துக்குத்திவிட்டுப்போய்விடுவார்கள். அல்லது பார்ப்பனியகாந்'தீ'யம்
போதிப்பார்கள். இத்தனைநாள் இலங்காரத்னாவையும் சுப்பிரமணியசுவாமியின் நண்பர்
சந்திரகாசனையும் 'குமரன்' கணேசலிங்கத்தையும் இலங்கை-இந்திய அரசியலிலே
உழப்பார்த்துவிட்டோம். நாராயணன், நம்பியார் கும்பல்களையும் நாடுலாவக்
கண்டுவிட்டோம்.
அறம் தாங்கி பிரபாகரன் செய்தது சரியா தவறா என்பதை
நாம் விமர்சிக்கும்போது, இதே இராமின் தாளிகை, சஞ்சிகைகள் பலஸ்தீனிய
இன்பாட்டா சிறுவர்கள் இஸ்ரேலிய இராணுவத்துக்கும் குடியேற்றக்காரர்களுக்கும்
கல்லெறிவதை (இன்னமும் கத்தியாலே குத்துவதை விதந்தோத்தி எழுதவில்லை என்று
நம்புகிறேன்) மென்மைப்போக்குடனேயே போராட்டகுணமாக அணுகும் நிலையுடனேயே
காட்டுகின்றன என்பதையும் கவனத்திலே கொள்ளவேண்டும். இங்கே மட்டும்
இரட்டைக்குவளை மனப்பான்மை இந்துவின் உணவகம் போல அதற்கு வந்துவிடும். இதே
கௌரவ புத்திசீவி ஈழத்தமிழர்கள்தாம் செருப்பாலடிப்பது எம் கௌரவத்தினைக்
குறைப்பதாகக் கொண்டுவிடுகின்றோம். ஆனால், இதே ஆட்களே, பத்தாண்டுகளுக்கு
முன்னாலே கொலம்பியா பல்கலைக்கழகத்திலே சீன ஆதரவு திபெத்தினை ஆதரிக்கும்
ராமினைத் திபெத்திய அகதிகள் ஆர்ப்பாட்டம் செய்து எதிர்த்தபோது, அவர்
பின்னங்கதவாலே பத்திரமாகச் செல்ல அனுப்பப்பட்டதை ஆதரித்து இணையத்திலே
எழுதியிருந்ததை எழுதியவர்கள் மறந்தாலும் நான் மறக்கவில்லை.
அறம்
தாங்கி, பிரபாகரனின் செருப்பாலடித்த செயலை அஃது ஊடகபலம் ஆளும்
வர்க்கம்/சாதி/குழுமம் கையிலே கொண்ட தமிழ்நாடு, இந்தியா இவற்றிலே எத்துணை
தமிழர்களின் உளநோவினைக் கேலிச்சித்திரம்போல பிதுக்கிக் கோணலாகவும்
கொடூரமாகவும் காட்ட உதவும் என்பதாலே ஒத்துக்கொள்ளமுடியவில்லை. (ஏற்கனவே,
ஒரு முரளிதரன் காசி விசுவநாதன் என்ற பிபிசியின் தமிழ்ச்செய்தியாள
மஹானுபாவன் பிரபாகரன் பதியப்பட்ட ஆதரத்துடனான விழியத்திலே, "தமிழ்நாட்டின்
சொல்லைக் கேட்காமலே செய்ததாலே..." என்று சொல்வதை, "அம்மா நிறைவேத்தின
தீர்மானத்தை மதிக்கல" என்று சொன்னதாக எழுதி இரட்டை இலை ஆங்கிலத்திலே
ஓங்கிக்குத்திவிட்டார்). இந்த நீயாநானா சிறப்புவிருந்தினர் ஶ்ரீதர்
சுப்பிரமணியம் என்பவரும் ஹிந்துவும் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள்.
[மஹா உத்தமர் கேணி ஞானி (சிங்கள சினிமாவின் சாத்தியங்களைப் பேசிய
இவ்வறிஞருக்கு 2009 முழுக்க பயங்கரவாதமேதான் காரணம்), புதுச்சாதிமான்
ரவிக்குமார் (சிறுத்தையாகப் பேசுகிறாரா திமுகவாகப் பேசுகின்றாரா என்று
கட்டுரை முடிவிலேதான் மர்மம் கலைத்துக் கொஞ்சக்காலம்
வெளியிட்டுக்கொண்டிருந்தார்; என்ன இருந்தாலும், பெரியார் பற்றிக்
காலச்சுவட்டிலே தடம் பதித்த உத்தமராச்சே!), இந்துவிலே உழைக்கும் சமஸ்
(அன்னாரின் 2009 இற்குப் பின்னான அருட்பேருரைக்கட்டுரையை இனியும் யாம்
மறப்போமா?), பாதிநேரவியாபாரி & பகுதிநேர நிழலரசாங்கவிகடகவி
மனுஷ்யபுத்திரன் இவர்கள் என்ன சொல்வார்கள் என்று எதிர்பார்க்கலாமேதான்.
சின்னையா சாருவும் பெரியய்யா மோருவும் எப்போ அறிக்கைப்பத்தை ரீலீஸ்
ஆக்குவாங்களோ தெரியவில்லை தம்தகரடப்பாக்கருத்தை. நடுவைய்யா ராமு இன்னமும்
மதின்மேற்பூனை; கருத்தைத் தொகுத்துக்கொண்டேயிருப்பார் (அரசியல், சமூகவியல்
பேசும் நேரத்துக்கு இரண்டு தொகுப்புகள் போடலாம் சார்!!). அன்புச்சகோதரர்கள்
கோணங்கி, தமிழ்ச்செல்வன், முருகபூபதி, முத்தமிழ்களிலும் மும்முரம்;
கடினகவிதையோ தடவிச்செல்லும் கண்டன அறிக்கையோ, நடுக்காட்டுநாடகமோ நாலு மாசம்
கழித்து சாம்ராஜ் கண்ட பிரபாகரனின் செருப்பு ராஜ்யம் என்ற தலைப்பிலே
வரலாம். நல்ல காலத்துக்கு சோஜீ இன்னும் பஜ்ஜி சொஜ்ஜி தின்று இதையெல்லாம்
வாசிக்கும் நிலைக்கு மீண்டு வந்துவிட்டாரோ தெரியவில்லை. துக்ளக் துர்வாசர்
வண்ணநிலவனைக் கேட்டாச்சும் ஏதாச்சும் கருத்தினைப் பிரபாகரனின் பிய்ந்த
செருப்பினைப் பற்றிப் போடவேண்டும்.]
ஆனால், "அ. மார்க்ஸ் என்ற பழைய
பெருச்சா.. சே! பெரும்போராளி, பீ துடைத்தனுப்பிய இந்தியா ருடே" என்று
போராட்டப் பெருமிதம் பேசியவர்களெல்லாம் காலவோட்டத்திலே மையநீரோட்டமாசாய்க்
கலந்து காந்'தீயமும் கத்தரிக்காயும் கலந்த சாம்பாரை ஊற்றிப் பிசைந்து
"செருப்பாலடிப்பது இழிவு" என்று வர்ணம் தீட்டும் காலம் நமது.
வாஞ்சி சாதிவெறிகொண்டு ஆஷ்துரையைக் கொன்றால், தேசியவீரவாஞ்சி; "எடுடா
கொடுவாளை" என்ற பாரதிதாசன் பாடலை நினைவுநாள் மாறாது போட்டு,
தர்மாவேசமானால், சமூகவலைத்தள+நீயாநானா இணையச்சமூகப்போராளி. நாற்பதினாயிரம்
மக்கள் சாகும்போது, அந்தப்புறம் திரும்பிக்கொண்டு கருணாநிதியின்
தமிழ்மகாநாட்டிலே கணியம் பேசினால், தமிழறிஞர். ஆனால், எதுவும்
கைவசமில்லாது, இருந்த செருப்பாலே, ஒருவன் தர்மாவேசத்தோடு அடித்தால்,
"முதியோரை அடித்து என்ன பெருமையோ?" டால்ஸ்டாயிஸதாதாயிஸம்!! இதற்குள்ளே
"அந்தப்பிரபாகரன் என்ன பண்ணியிருப்பார்? இந்தப்பிரபாகரன் மாதிரியாகவா
பண்ணியிருப்பார்?" போன்ற படிச்ச மேட்டுக்குடி ஈழப்போராட்டப்பவிசுத்தனம்,
"What will Jesus do?" பாவனையிலே விழிசொருகி. எத்தனை நாட்கள்தாம் தலையை
இங்கும் வாலை அங்கும் காட்டுவீர்களோ? இதுவும் கடந்துபோம்!
தொடர்ச்சியாக, தமிழ்த்தேசியமென்றால், ஒரு பெட்டியைப் போட்டுக்கொள்வது.
அதற்குள்ளே சீட்டுகளிலே அதற்கான அவரவர் கிணற்றுத்தாவலுக்கெட்டிய
வரைவிலக்கணங்களாக, திராவிட எதிர்ப்பு, புலம்பெயர்பொழுதுபோக்கு, சாதியம்,
பெண்ணடிமைத்தனம், முதலாளித்துவம், ஆயுதக்கும்பல், ராஜீவ்கொலை, யாழ்முஸ்லீம்
வெளியேற்றம், பார்ப்பனியஎதிர்ப்பு, வெற்றுக்கூச்சல்,,,,, என்று
ஆசுகவிப்பட்டியல் எழுதிப் போட்டுக் குலுக்கி, தத்தமக்குவேண்டிய வகையிலே
எதிர்க்கவேண்டுமே என்று தேர்ந்தெடுத்து, பட்டம் கட்டி, வாலும் குஞ்சமும்
போட்டு ஏற்றும் வேளையிலே, தாங்கள் தாங்கள் சார்ந்த நிலைப்பாட்டிலே எத்துணை
அயோக்கியத்தனமும் இரட்டைநிலைப்பாடுகளும் கண்மூடித்தனமான மாற்றாநம்பிக்கை
& சகுன_நிர்க்குணங்களும் கொண்டிருக்கின்றோம் என்று சுயவிமர்சனத்துக்கு
முனைவதில்லை.
நீங்கள் சார்ந்த அத்தன கும்பல்களிலும்
கள்ளக்குணங்களும் வல்லமுகமூடிகளும் கொண்டவர்களிருப்பதுபோலத்தான்
தமிழ்த்தேசியத்திலும் இருப்பார்கள்; ஆனால், உங்க்ளைப் பொறுத்தமட்டிலே,
உங்கள் அம்மா மெஸ் சாம்பாருக்கும் ஒத்தோடும் கொத்துரொட்டிக்கும்
எப்பங்கமுமில்லை; எப்போதுமே சுத்தவசுத்தம் தவிர் நிர்க்குணசுவை
நிரம்பித்ததும்பும் தத்துவக்கொத்தவை. ஆக, பங்கப்பட்டிருப்பதெல்லாம்
அந்தப்பிரபாகரனின் துவக்குக்கும் இந்தப்பிரபாகரனின் செருப்புக்குமேதான்.
இவனாவது இந்தச்செருப்பைத் தூக்கினான்; நீங்கள் என்னதான் தூக்கினீர்கள்?
புத்தகவெளியீட்டு மேடையிலேயும் நீயா நானாவிலும் மைக்கையும் குரலையும். என்ன
சமூகசேவையோ? உங்கள் மூஞ்சி மேடைவெளிச்சத்திலே நாலுபேருக்குத்
தெரியுமென்றால் எல்லாம் நியாயமேதான். நாட்டுக்கு நல்லது சொல்வதும்
செய்வதுமான அந்த நாலுநாயகர்கள் நீங்கள்தாம் பாருங்கள்.
ஆனால்,
எழுத்துவன்முறையாளர்களுக்கு, கொல்லரசியலியந்திரம்
இயக்குவன்முறையாளர்களுக்கு ஒரு செருப்பாலடிக்கும் ஒரு சாதாரணமானவனை
விமர்சிக்க என்ன வக்கிருக்கின்றதென்று தூங்கப்போகும் நேரத்திலேனும்
அவர்களின் மனைவியரிடமும் கணவர்களிடமும் கேட்டுக்கொள்ளவேண்டும். நான்
கேட்பது மனச்சாட்சி என்று ஒன்று இணையத்திலே பத்திரமாக & பத்தியமாக
ஏற்றிக்காட்டும் 'பிம்'பத்துக்கும் அப்பாலே இருப்பவர்களிடமேதான்...
மற்றவர்கள் அலட்டியே கொள்ளாதீர்கள்... நேரடியாக, அடுத்த அகழ்வாராய்ச்சிக்கோ
புத்தகவெளியீட்டுக்கோ நீயாநானா சிறப்பு விருந்திற்கோ போய்க்
குந்திக்கொள்ளுங்கள்.
-/.
நவம்பர் 5, 2015
No comments:
Post a Comment