Friday, December 11, 2015

பேரா. மகாலிங்கம்

தன் மூதாதையினரின் பூமியான அளவெட்டியிலே இறுதியிலே ஓய்வான மலேசியாவிலே வளர்ந்து கொழும்பிலே கற்று, மேற்படிப்பின்பின்னே பேராதனையிலேயே பெரும்வாழ்க்கையைக் கண்டுவிட்ட ஒருவர் இத்துணை இனம், மொழி சார்ந்த கலவரபூமியிலும் தன்னை அறிவியலுக்கும் பொறியியலுக்கும் அப்பாலே அடையாளப்படுத்தாமலே வாழ்ந்துபோக எப்படியாக முடிந்தது என்பது பேராதனையிலே இருந்த காலத்திலும் சரி, பின்னாலும் சரி எப்போதேனும் தோன்றும் கேள்வியாகவேயிருந்தது. ஒரே பீடத்தின் ஒரே துறையிலேயே ஒரு மகாலிங்கமும் ஒரு சிவசேகரமும் குறைந்தது மூன்று தசாப்தங்கள் அருகருகேயிருந்தது வியப்பைத் தருவது.
பேரா மகாலிங்கம் அவர்கள் ஒரு கனவான் என்ற குறிப்பினைப் பார்க்கும்போதெல்லாம், அதனை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்திலே தனியுணர்வினையும் தான் வாழும் நாட்டிலே மொழி, இனம் சார்ந்த அடையாளம் குறித்த புறவயமான சிக்கல் தனியாட்களுக்கு உண்டு என்பதை உணர்ந்துகொண்டவருமேதானா என்ற கேள்வி இறந்த இந்நாளும் உறுத்தவே செய்கின்றது. 

83 கலவரத்தின்போது, ஹில்டா விடுதிக்கு முன்னாலேயிருந்த அவர் வீட்டுக்குத் தஞ்சத்துக்கு ஓடிய தமிழ்மாணவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று 84/85 ஆண்டுக்காலத்திலே பொறியியற்பீடத் தமிழ்மாணவர்களிடையே ஒரு பேச்சிருந்தது. எத்துணை உண்மையென்று அறியேன். ஆனால், அவர் குறித்த அறிமுகம் பேராதனையிலே எண்பத்திமூன்று முடிந்த கையோடு அப்படியாக அவரின் ஆய்வுகூடக்கட்டடத்திற்குள்ளே நுழையமுன்னே கிட்டியதாலே, சென்றவாண்டு அவரின் மனைவியின் இறப்புச்செய்தியைக் கேட்டபோதும் இன்று அவரின் இறப்புச்செய்தியைக் கேட்டபோதும், அவர் குறித்த முதற்படிவே முன்னெழுகின்றது. 

பொறியியற்பீடத்தின் நெடுநடைபாதையிலே புத்தகக்கட்டினை அணைத்துக்கொண்டு, நிமிர்ந்தபடி எவர் கண்ணிலும் தன் கண் பொருந்திக்காணாது ஆனால், முகத்திலே முறுவலுடன் நடக்கும் பேராசிரியர் ஞாபகத்துக்குப் பின்னாலேயே வருகின்றார். எண்பதின் பின்னிறுதியிலே மாணவனாகவும் தொண்ணூறிலே கற்கையுதவுனனாகவும் மார்க்கஸ் பெனார்ண்டோ விடுதியிலேயிருந்தபோது, மாலைகளிலே தன்வீட்டிலிருந்து அதேவிரைநடையோடு ஜேம்ஸ் பீரிஸ் விடுதிக்கும் மார்க்கஸ் விடுதிக்கும் இடையேயான மலைப்பாதையிலே உடற்பயிற்சிக்காக அவ்வயதிலும் அதே கண்ணைப்பார்க்காமலே பொதுவிலே புன்முறுவலைப் போகின்றவர்களுக்குச் சிந்தி நடக்கும் பேராசிரியரும் பின்னாலேயே வருகின்றார். இவ்விடத்திலே "யாழ்ப்பாணத்திலே பொறியியற்பீடம் கட்டிப் படிக்க விரும்புவதாலே, பேராதனையிலே இருந்து திரும்பிப்போக எண்ணுகிறோம்" என்று சிறுபிள்ளைத்தனமான வாதத்திற்கு, ஆதாரமான கருத்தினைக் கேட்கப்போய் வீட்டுக்கதவைத் தட்டியபோது, தூசுதட்டிக்கொண்டிருந்த கோலத்திலே தோன்றி, "தமிழியக்கங்கள் யாழ்ப்பாணத்திலேதான் படிக்கவேண்டுமென்று திரும்பிப்போகச் சொல்லினவா?" என்று அரசியல்வகுப்பு மீவத்துற பேராசிரியர் குடியிருப்பிலே எடுத்து, போன நாலைந்து பேரெம்மைக் "கதிகலங்க" வைத்த சிவசேகரம் சமாந்திர முரணாக அதே எந்திரவியற்பொறியியலின் இன்னொரு பேராசிரியராக நினைவுக்கு வருவார்.


இவ்வாண்டு இலங்கை சென்றிருந்தபோது, ஆளரவமேயற்ற ஒரு மந்தார மழை ஞாயிறுமாலையிலே நித்திலனுக்கும் சாகரி, ஜஸ்மிதாவுக்கும் அவர் பேரைச் சொல்லும் ரோல்ஸ் ரோய்ஸ் எந்திரத்தினைக் காட்டிப் படமெடுத்துக்கொண்டபோதும், புறா மேய்ந்த நீர்ப்பொய்கைக்குப் பின்னாலிருந்த அவரின் எந்திரவியல் ஆய்வுகூடக் கட்டிடத்தினைக் கடந்தபோதும் நான் காணாத எண்பத்துமூன்றின் பேராதனையிலே "பாதுகாப்புக்கு ஓடிவந்த மாணவர்களைத் தன் வீட்டினுள்ளே வரவிடாமற் தவிர்த்தவர்" என்ற ஆதாரமற்ற கதையாக வந்து சேர்ந்த அறிமுகமே ஏனோ தலைக்குள் வந்து தொலைந்தது.


ஆனால், கடந்த எட்டாண்டுகளாக ஒவ்வோராண்டும் கோடையிலே ஐந்து வார, "போக்குவரத்து: அறிமுகம்" பயிற்சிமுகாமுக்காக என்னிடம் வந்துசேரும் பாடசாலைமாணவர்களுக்கான பாலங்கள் குறித்த அறிமுக வகுப்பின்போது, நாற்பதுகளிலே அதிர்விலே உடைந்து நொருங்கிய வோஷிங்டன் மாநிலத்தின் தக்ககோமா பாலத்தினைப் பற்றிய விபரத்தினையும் அது குறித்த உயூரியூப் குறுவிவரணத்தினையும் காட்டும்போதெல்லாம், பேராசிரியர் மகாலிங்கத்தின் எந்திரவியல் ஆய்வுகூடத்திலே முதன்முதலிலே கண்ட வரைசட்டமிட்ட தக்ககோமா பாலம் எண்ணத்திலே வந்து நின்று அப்பல்கலைக்கழகத்துக்கும் அவரைப் போன்ற பேராசிரியர்களுக்கும் இன்றைக்கு என்போல்வார் தம் வாழ்வுகளைக் கொண்டு செல்ல வழிவகுத்ததுக்காக எத்துணை கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதை முப்பதாண்டுகளுக்கப்பாலும் சுட்டிக்காட்டுகின்றது.
-/,
நவம்பர் 3, 2015

* பிற்குறிப்பு: மேலே எழுதிய குறிப்பின் பின்னாலே, இன்று தி ஐலண்ட் சஞ்சிகையிலே Newton Wickramasuriya எழுதிய இக்குறிப்பினைக் காண நேர்ந்தது. மேலே கேள்விப்பட்ட பேரா. மகாலிங்கமும்1983 உம் பற்றிய குறிப்பு தவறோ என்று உணர்கின்ற மாதிரியான குறிப்பு இது. இதனையும் இங்கே பதிவு செய்தலே முறையெனக் கருதுகிறேன்-அதுகூட அவரின் சூழ்சமூகம் சார்ந்த ஒட்டாத மேல்நிலைப்பார்வையைச் சுட்டினாலுங்கூட /...During the disastrous 1983 riots, his wife and he were compelled to move next door, to the Hilda Obeysekera Hall, for security. This was an unforgettable but a very sad situation for them. When I rushed there, with my wife, to look into their welfare at that time, he narrated the sorry state of affairs at the Hilda Obeysekera Hall and how he had to join a queue with others to use the wash room and toilets which brought tears to our eyes.../ /...Emeritus Professor S. Mahalingam passed away in Alakollai, Alaveddy in Jaffna on November 3, 2015, at the age of 89, far away from his beloved Peradeniya and Kandy./

No comments: