Friday, December 11, 2015

தமிழினி மெல்லச் செத்தது

திருமாவளவன், டேவிற் ஐயா போலவே வாசித்ததிலும் கேள்விப்பட்டதிலுமே தெரிந்தவர் தமிழினி. 


பேஸ்புக்கிலே வேறொரு பெயரிலே ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னாலே அவர் போர் கொன்று குவித்ததுதான் அதிகம் என்பதாகவும் மக்களுக்குத் தேவையானது சமாதானம் என்பதாகவும் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிலே அவர் யாரென்றே தெரியாமல், இன்றைக்கும் அரசியலளவிலே ஒத்துப்போகமுடியாத (ஒரு கட்டத்திலே என்னைத் தன் நண்பர் பட்டியலிலிருந்து தடைசெய்த) கட்டித்த அரசியற்பார்வையுடனான எதிர்க்கருத்தினை எதிர்கொள்ளமுடியாது தடுத்துவிட்டுப்போகும் ஜெயன் தேவாவின் மனைவியார் என்ற புரிதலிலே அவர்போன்றே ஆரம்பம்முதலே அரசியல் அவருக்குண்டு என்பதாக அவருடனும் அ. ராமசாமியுடனும் வாக்குவாதப்பட்டேன். தொடர்ச்சியாக யேசு தேவனின் மகிமை பற்றி அவர் எழுதிக்கொண்டிருந்தபோது, இத்தனை நிகழ்ந்ததுக்குத் தேவன் என்னத்தைப் பண்ணினார் என்ற உணர்வேயிருந்தது. 


அந்நிலையிலே அவர் விடுதலைப்புலிகளின் மகளிரணி அரசியற்பொறுப்பாளாராக இருந்த தமிழினி என்றும் தெரியாது; அவருக்குப் புற்றுநோயிருந்தது பற்றியும் தெரியாது (தொடர்ச்சியாகப் புற்றுநோய் சம்பந்தமாகப் பதிவிட்டுக்கொண்டிருந்தார்). பிறகொரு தருணத்திலே அவர் இன்னாரென்று தெரிந்தபோது, எதற்கு அவரிலேற்பட்ட மாற்றமென்று புரியக்கூடியநிலையும் ஒரு வகையிலே ஏமாற்றமும் - நியாயமான போராட்டம் கடைசியிலே ஒரு முழுச்சுற்றுக்கு வந்து, போராடியவர்களை ஏமாற்றத்திலும் கையறுநிலையிலும் விட்டிருக்கின்றதே என்பதாலும் போராடியதே தவறு என்பதாகத் தோற்றங்காட்டச் செய்திருக்கின்றதே என்பதாலும்- ஜெயன் தேவா குறித்த இன்னொரு மரியாதைக்குரிய பார்வையும் உண்டானது.


தம்மை மையப்படுத்தித் தமிழ்க்கவி, சாத்திரி, கருணாகரன் போன்றோர் திரும்பிய நூற்றெண்பது பாகைச்சுற்றுக்குத் தமிழினி ஒருபோதும் போனதில்லை என்றே தோன்றியது- போராட்டம் குறித்துக் கடைசிக்காலத்திலே அவரின் அரசியல் நிலைப்பாட்டிலே எத்துணை மாற்றத்தினைக் காலமும் களமும் கொணர்ந்தபோதுங்கூட. அவருடைய நூல் வெளிவரவேண்டும்; அதுகூட, நாம் விரும்புகின்றதற்கு முழு எதிர்நிலையிலே போராட்டம் குறித்துச் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால், அதனைக் கருத்துநிலைக்கப்பால் தனியாளைக் குறிவைத்து விமர்சிக்கும் தகுதி ஒரு துப்பாக்கிக்குண்டைக்கூட அருகிலிருந்து பார்க்காமல், இன்னொரு நாட்டிலிருந்து ஈழமென்று விமர்சிக்கின்றவர்களுக்கு இருக்கமுடியாது. அதேநேரத்திலே ஒத்தோடி அரசியல் கொண்டவர்கள் இதனை எப்படியாக வைத்துத் தமது வாகனத்தை இன்னும் சில மைல்களுக்கு ஓட்டக்கூடும் என்பதினையும் அறிவேன். சாத்திரி இன்று காலையே தமிழினியின் இறப்பிற்கான காரணத்தைத் தமிழ்த்தேசியத்திலே திட்டித்தள்ளித் தன் அண்மைய அரசியல் நிலையை உறுதிப்படுத்திக்கொண்டார்.


ஆனால், செய்தோம் நாமென்று ஆர்ப்பாட்டச் சத்தமின்றியே இழந்து போன இப்படியானவர்களின் -டேவிற் ஐயா, தமிழினி- நினைவுகள் சுயவிமர்சனத்தினைச் செய்துகொள்ளவும் சத்தமின்றியே செய்துகொண்டிருக்கவும் அங்குசமாகக் குத்துவன. எத்தனையை எத்துணை இழந்தோமென உணரவைப்பன; குற்றவுணர்வுகளிலே நள்ளிரவுகளிலே குத்திக்கிழிப்பன. அதேநேரத்திலே, ஏதோவகையிலே நிகழ்வதை நேர்படுத்தவும் முடுக்குவன.iஇணையத்திலும் முப்பது, நாற்பதாண்டு காலமாக நானறிந்த நண்பர்கள் - அனைத்து வகை இயக்கங்களிலும் பொறுப்பிலும் போராளிகளாகவுமிருந்தவர்கள்- சிலர் இணையத்திலே சத்தமேயின்றி தம்மாலானதைத் தனிப்படவோ வேறுவகையிலோ (அதிலே எனக்கு ஒப்புதலோ இல்லையோ என்பது வேறுவிடயம் ) செய்துகொண்டிருக்கையிலே வெறும் பேச்சைமட்டுமே வைத்துக்கொண்டு தமிழ்த்தேசியம் பேசுகையிலே சங்கடமாகவும் குற்றமாகவுமிருக்கின்றன. துரோகிகள், தியாகிகள் பட்டங்களை இதனாலேயே எவரிலும் அவர்களின் இன்றைய நிலைப்பாடுகளை வைத்துக்கொண்டு சுமத்த முனைவதில்லை. அவ்வகையிலே தமிழினியின் அறுதிக்காலநிலைப்பாடு அவரின் போர் காட்டிய துன்பம், ஆயுதப்போராட்டம் முடிந்த வாய்க்காற்புள்ளி, பற்றிய நோய் கொண்டு என்னைப் போன்றவர்கள் எதிர்பாராததாய் முற்றிலும் அரசியல்சார நியாயம் தரக்கூடியதென ஏற்றுக்கொள்ளமுடியாததாயிருந்தாலுங்கூட
அவரும் அவரினைச் சார்ந்தாரும் தேசியம், போராட்டம் என்பதன்பேரிலே கொடுத்த விலையிலே நுண்பங்கினைக்கூடக் கொடுத்திலோர் என்னைப் போன்றோர். 


அறுதிக்காலத் தமிழினி குறித்த வேறுவிம்பத்தினைச் சிலருக்குக் கொடுத்துவிடுவோமோ என்ற பேரச்சம் உள்ளே அழுத்துவதாலே இக்குறிப்பினைக்கூட இவ்வவக்கணத்திலே எழுதியிருக்கவேண்டுமோ தெரியவில்லை. ஆனால், எழுதாதிருந்திருப்பின், இன்றிரவும் நேற்றையதைப்போலொரு குற்றமும் வருத்தமும் நிறைந்த அவஸ்தையுடனானதாகவே இருந்திருக்கும். தற்காலிகமாகவேனும் பெயரளவிலேயும் செய்தியிலும்மட்டுமே நானறிந்த தமிழினி அவர்களுக்கான -சில நண்பர்களிடையேமட்டுமான- இவ்வஞ்சலிக்குறிப்பு அவ்வவஸ்தையைக் குறைக்கட்டும். 



-/.
நவம்பர் 18, 2015

No comments: