Wednesday, March 21, 2007

வெ வி....

வெங்கட்டின் வினாக்களுக்கு....

தொடர்விளையாட்டுகள், விதிகளுக்கமைய ஆடவேண்டியதாலும் பந்தயக்கோலை ஒழுங்காகப் பெற்றோமா கொடுத்தோமா என்பதிலே கவனத்தினை வைக்கவேண்டியதாலும் எனக்குச் சங்கடத்தினையும் பயத்தினையும் ஏற்படுத்துவன. வழக்கமாக, ஓராளுக்கு மேலே ஓட நிற்குமிடத்து கோலை வாங்காமல், அந்தப்புறம் கையைக் காட்டிவிட்டு கோல் ஆள் கைக்குப் போக முன்னால், நான் ஓடிவிடுவேன். இம்முறை வெங்கட் ஒருத்தனிடம் மட்டும் தந்திருக்கின்றார். சொந்த விதிகளுக்கு ஒருங்குகிறதோ ஒடுங்குகிறதோ என்பதை எந்நிலையிலும் தந்த வெங்கட்டின் நம்பிக்கைக்காகவும் ஆரம்பித்தவருக்காகவும் நான் திரும்பிப் பார்க்கப்போவதில்லை.

சுருங்கவும் விளங்கவும் சொல்லமுடிகிறதா என்று பார்க்கும் சுயமுயற்சி ;-)

1.அ. உங்களுக்கென நிலைத்துவிட்ட மதிப்பீடுகள் குறித்து சலிப்படைவதுண்டா?

மதிப்பீடுகள் எல்லாவற்றையும் ஒரேயடியாகப் பொதுவிலே பார்க்கமுடிவதில்லை. எனது செயற்பாடுகளின் விளைவாக, காலவோட்டத்தோடு பார்ப்போருக்குத் தோன்றிய பெரும்பாலான மதிப்பீடுகள், நன்றி/தன்னிலைவிளக்கம் என்பதிலே தொடங்கி சகித்துக்கொள்ளவும் பின், சலித்துக்கொள்ளவும் ஆகி, ஒரு கட்டத்திலே, "அட இப்படி ஒரு மதிப்பீட்டினாலேனும், என்னை எவரேனும் ஞாபகம் வைத்திருக்கட்டுமே" என்ற மங்கிப்போன நடிகர்கள் மனநிலைதான் மிஞ்சுகிறது.

மிகச் சில, மதிப்பீடுகள் பெரும்பான்மையோருக்கு எதுவுமே குறிப்பிட்ட என் பண்பு பற்றிய கருத்து இல்லாதபோது, சந்தர்ப்பச்சுதந்திரமின்மையையும் தோற்றப்பிழைகளையும் தம் வாய்ப்புகளாகக் கொண்டு, சிலரால் இருக்கும் சூழல், அரசியல் இவற்றின் பலவீனமான இடுக்குகளைச் சுண்டிவிட்டு வேண்டுமென்றே கட்டியெழுப்பப்படுகிறன. இவை கட்டமைக்கப்படும் விதம் குறித்தும் அமைப்பவர்களின் நுண்ணிய காய்நகர்த்தும் தந்திர உத்திகள் குறித்தும் சலிப்போ - சொல்லப்போனால், வெறுப்போகூட அடைவதில்லை. அவ்வப்போது, பந்தை அவர்கள் கையிலே கொடுத்துவிட்டு, துடுப்பை நான் எடுத்துக்கொள்ளலாமா என்ற உந்தல் மட்டுமே தோன்றுகிறது. ஆனால், இன்றைய நாளில், "எப்போதோ முடிந்த காரியம்; இதிலே நான் செய்வதற்கு ஏதுமில்லை" என்று இருப்பதுதான் சிறந்ததெனத் தோன்கிறது. இது சலிப்புணர்வல்ல. வேண்டுமானால், விடலைப்பருவம் கடந்துவிட்டதென்ற முதிர்ச்சியென்றே கொள்ளலாம் :-)

ஆ. பிறரால் உருவாக்கப்பட்டவை என்றபொழுதும் உங்களால் மாற்றிவிடமுடியுமென்றால் இவற்றில் எதனை மாற்ற எத்தனிப்பீர்கள்?

எதையும் நான் விரும்புவதாலே மாற்றவிடமுடியுமென நம்பவில்லை. உங்கள் கேள்வியும் அதையே உள்ளடக்கிக் கேட்கிறது. அதனால், "உப்புக்கடல் நீரும் சக்கரையாகலாம்" என்று நம்பிப் பதில்.

என் செயற்பாடுகளினாலே தோன்றிய மதிப்பீடுகளிலே, "எதிலும் எதிர்மறையானவற்றினையே காணுதல்" என்றிருக்கும் மதிப்பீட்டினை. சில மனிதர்களிடம் சில நேரங்களிலே மாற்ற முயற்சித்து வெற்றிகரமாகத் தோன்றுமிருக்கின்றேன்.

தோற்றப்பிழைகளாலே சிலராலே திட்டமிட்டுக் கட்டமைக்கப்படும் மதிப்பீடுகளிலே "ஆண் அதிகாரம்" என்றிருக்கும் மதிப்பீட்டினை. வாழ்க்கையின் வேறொரு கட்டமாகவிருந்தால், உருவாக்கப்படும் கருத்தமைப்பினைத் தகர்த்தலும் எதிர்க்கட்டமைத்தலும் என்று தன்னாளுமை செதுக்கிச் சொந்தச்சிரத்துக்குப் பின்னே சின்ன ஒளிவட்டம் துரித கதியிற் சுற்ற வைக்கும் பொழுதுபோக்கிலே ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அழுத்தம் ததும்பி வழியும் வாழ்கட்டநாளிலே, நிலவொளியில் கடைத்தெரு மரமிருக்கும் பெயரறியாப்பறவை சட்டையிலே 'சக்'கென்று எச்சமிட்டுப் பறந்துவிடுவதை எதிர்கொள்வதெப்படி என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்க முடியாது. செய்வினைகள் செயற்பாட்டுவினைகளாகவும் செயற்பாட்டுவினைகள் செய்வினைகளாகவும் திரிந்து தோன்றி அலையும் காலமும் களமும் எனது. இவர்களுக்கு வாய்ப்பான சூல்நிலையில், இம்மதிப்பீட்டினை மாற்ற எத்தனிப்பதும் புதைமணலிலே எகிறிக் குதிப்பதும் ஒன்றேதான். அதனால், நான் பெண்ணென்பதை நிரூபிக்கும்வரை இம்மதிப்பீட்டினைப் பலரிடத்திலே மாற்றுதல் சாத்தியப்படாதென்பதால், "அதிகாரத்துக்குப் பால் பேதமில்லை" என்ற மெய்நிலை மற்றோரினாலே புரிந்துகொள்ளப்படுமெனக் காத்திருக்கவேண்டியதுதான். புரிந்துகொள்ளாதுபோனாலுங்கூட, நாளாந்த வாழ்க்கையிலே இந்நிலையாற் பாதிப்பில்லாததாலே எனக்கேதும் குறைந்துவிடப்போவதில்லை.


2. தமிழ் இலக்கியத்தில் புதிதாக ஆர்வம் கொள்வதாகக் கூறிக்கொள்ளும் ஒருவருக்கு நீங்கள் ஐந்து புனைவுகளையும் ஐந்து புனைவிலிகளையும் பரிசளிப்பதாக இருந்தால் அவை என்னவாக இருக்கும்? அவற்றுக்கான இரண்டுவரி அறிமுகத்தையும் எழுதுவீர்கள் என்றால் மகிழ்வேன்.

சிந்துபாத் யாத்திரைகளாலே நாடு திரும்புவதுபோலத்தான், நான் தமிழ்ப்புத்தகங்கள் வாசிப்பது கடந்த பதினைந்தாண்டுகளாகவிருக்கின்றன. ஒரு மாதத்திலே "ஓசியிலே" அகப்படுவதையெல்லாம் வாசித்துவிட்டு, மீண்டும் வேதாளத்தைத் தேடி முருங்கைமரக்கானகமேகுவது. அதனால், தமிழிலே எனது பட்டியல், இற்றைப்படுத்தப்படாததாகவும் குறைவுற்றதாகவுமேயிருக்கும். தனியே புதினங்களை மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறேன். தமிழிலே அண்மையிலே வந்திருக்கும் பல நூல்களை வாசித்திருந்தால், அவற்றிலே சில இங்கே தந்திருக்கும் பட்டியலிலே இடப்பெயர்வுகள் செய்திருக்கலாம். (ஏழாண்டுகளுக்கு முன்னால், ஃபோரம் ஹப்பிலே விழுந்தவற்றிலிருந்து மாற்றமிருப்பதிலே ஒரு திருப்தி ;-))

இதை நினைவிலே கொண்டு கீழ்க்காணும் எனக்குப் பிடித்தவை சிலவற்றின் ( மற்றவர்களுக்கு அப்படியாகத்தான் பரிந்துரைக்க முடியும்) பட்டியல்.

புனைவு:

காகிதமலர்கள்: மத்தியதட்டு நகரவாழ்க்கையின் விடலைப்பருவத்தினைத் தமிழிலே இதைவிடச் சரியாக உணர்த்திய புதினமென்று எனக்கு வேறேதும் தோன்றவில்லை. எண்பதுகளிலே பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்துள்ளே போகும்போதெல்லாம் செல்லப்பா நினைவுக்கு வந்துகொண்டேயிருந்தான்.

புத்தம்வீடு: நா. பார்த்தசாரதியின் நாயகர்களிலும் சாண்டில்யன் நாயகிகளிலும் மயங்கி நின்ற நேரத்திலே வாசகர்வட்டநூல்களும் புத்தம்வீடும் இன்னொரு உலகத்தினைத் திறந்துவிட்டன. அழகநாயகி அம்மாளின் கவலைகள் வாசிக்கின்றபோதும் தடவிக்கொடுத்த புத்தம்வீடு, அதன் மாறுப்பட்ட மொழிக்காகவும் எடுத்துக்கொண்ட கருவுக்காகவும் பிடிக்கிறது.

உயிர்த்தேன்/நாளை மற்றுமொரு நாளே+குறத்திமுடுக்கு:

ஜானகிராமனின் புதினங்களிலே பிடித்துக்கொண்டது, உயிர்த்தேன். ஊர்+பாத்திரங்கள்(+நான் வாசித்த இடம்). பாத்திரங்களைக் குரலை எழுப்பிக் கருத்தாகச் சொல்லவைக்காமலே புரியவைக்கும் சிறப்பு அவருடையது. (அம்பை அவரின் சிண்டைப் பெண்களின் பெயரிலே பிடித்துக்கொண்டாலுங்கூட)

உயிர்த்தேனின் அளவுக்குப் புதினமென்று போட்டால், அதற்கு மாற்றாக ஏதேனும் கொடுப்பதானால், நாகராஜனின், 'நாளை மற்றுமொரு நாளே' இனையும் 'குறத்திமுடுக்கு' இனையும் சேர்த்துக்கொடுப்பேன். உயிர்த்தேனுக்கும் இவற்றுக்குமான சொல்தொனியின் பேதம் துருவங்களாயினுங்கூட. Amores Perros பார்த்துக்கொண்டிருக்கும்போதும் ஞாபகத்துக்கு வந்து தொலைப்பவர் நாகராஜன்

புதியதோர் உலகம் / கொரில்லா / பஞ்சமர் / சோளகர்தொட்டி / குருதிப்புனல்:

தனிப்பட எனக்கு, தமிழ்ப்புதினங்களிலே 'புதியதோர் உலகம்' திரைப்படங்களிலே, 'Ladri di biciclette.' மீண்டும் மீண்டும் ஏதோ எதிர்பார்ப்புகளோடு சில மாதங்களுக்கொரு முறையேனும் திறக்கப்படுகின்றன. என்றைக்கேனும் அவற்றின் முடிவுகளை அவை வேறாகத் தரலாமென உள்ளூர நம்பிக்கையோடிருக்கிறேனோ தெரியவில்லை. ஆனால், ஈழத்திலே என்றாவது ஒருநாள் மீண்டும் புதியதோர் உலகம் பதிக்கப்பட்டு வெளிவரும்போதுமட்டுமே அதனை எவருக்கேனும் பரிசாகக் கொடுக்கவிரும்புகிறேன். அதுவரை எவருக்கும் பரிசாகத் தர விரும்பவில்லை.

கொரில்லா, எழுத்துச்சட்டங்களையும் மரபுச்சட்டைகளையும் உடைத்த, தென்னமெரிக்க வடிவம், ஜெர்மன் தத்துவமென்று பாசாங்கில்லாத தமிழ்ப்புதினமென்று எனக்குப் படுவதனால், பரிசாக அளிக்க விரும்புகிறேன். ஆனால், பரிசாகப் பெறுகின்றவருக்கு, ஒரு நிபந்தனையோடு, அதன் மிகைநிரப்பியாக, Twins இலே ஆர்னோல்ட் ஸ்வாஸ்ஹனேகரைச் செய்து மிஞ்சியதிலே Danny diVito இனை உருட்டியெடுத்தது மாதிரியாக வந்த 'ம்' இனை வாசித்து நேரத்தை வீணாக்கக மாட்டேன் என்று அத்தாட்சியாக எழுதித் தந்தால்

பஞ்சமர், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக முதலிலே நான் வாசித்த நூல்; சாதிப்பாகுபாடு இலங்கையிலே இல்லையென்று உணர்வுகள் மயப்படுகின்றவர்களுக்காக. ஆனால், ஒடுக்கப்பட்டிருக்கும் பஞ்சம ஆண்களுக்கு நாயகத்துவம் பெருக்குவதற்காக, தம்மளவிலே ஒடுக்கப்பட்டிருந்த வேளாளப்பெண்களினைப் பொதுவிலே டானியல் அவ்வாண்களுக்காக அலைகின்றவர்களென்று காட்டியிருக்கத் தேவையில்லை என்ற சொந்தக் குறிப்புடன். (பரிசாகப் பெற்றுக்கொள்கிறவருக்கு இது பரிசா, பாரமா என்ற சந்தேகம் வரலாமென்றாலும் ;-))

சோளகர்தொட்டி, 'சாண்ட்விச் பாண்' இடையே உதிர்த்த முட்டை என்ன பாடுபடுமென்று உணர்த்துவதற்காகவும் அதன் மொழிக்காகவும். (இன்றைய மேல்மட்டக்கிளப்புமக்கள் ஞாபகத்துக்கு வருகின்றார்கள்). பத்து நாளிலே வீரப்பன் வதம் வடிக்கும் தமிழ்ப்'படை'ப்புலகிலே, சோளகர்தொட்டி பரிசாக, -கைப்பந்தாடக் கொடுத்தால், பயங்கரவாதம் ஒழிந்துவிடுமென்று கருதுகின்ற- தேசபக்தர்களுக்கும் -நக்ஸலைட்டுகளைத் தலையிலே போட்டுத் தட்டினால், நாட்டின் சுபீட்சம் ராம ராஜ்யம், லக்ஷ்மி கடாட்சமென்று நம்பிக்கொண்டிருக்கும்- நன்நம்பிக்கையாளர்களுக்கும் பரிசாக. கூடவே, முடிந்தால், பிலோ இருதயநாத், தியோடர் பாஸ்கரன் இணைப்புகளும்.

குருதிப்புனல், ஏசுவின் தோழர் வரைக்குமான இந்திரா பார்த்தசாரதி எனக்குள்ளே திறந்து வைத்த (சு)தந்திரபூமிக்காக. பின்னந்தலைக்குச் சம்மட்டியை முட்டுக்கொடுத்தபடி கத்திக்கும் நோகாது தட்டுக்கும் நோகாது அட்டை அரிவாளால் வெண்ணெய் வெட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் மரபுசார் மார்க்ஸிய கம்னாட்டியூஸ்லெஸ் எவரையாவது சந்தித்துப் பரிசாகக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால்.. முடிந்தால், குறைகளோடிருப்பினுங்கூட, கண்சிவந்தால் மண் சிவக்கும் ஒளியமும்

பாமாவின் ஏதாவது ஒரு புதினம் +ராஜ்கௌதமனின் ஏதாவது ஒரு புதினம்/ கோணங்கியின் ஏதாவது ஒரு புதினம் / ப. சிங்காரத்தின் ஏதாவது ஒரு புதினம்:

பாமாவின் ஒரு நூலுக்கும் மறு நூலுக்கும் சொல், செயல், பொருளிலே பெரிதாக வித்தியாசமிருப்பதில்லை என்றே எனது உணர்தல். ஆனால், அவரின் புதினங்களிலே பிடித்துக்கொண்டது, சாதி, பால் இரண்டு வகைகளிலும் ஒடுக்கப்பட்டிருந்தும் அவற்றினை அவர் எழுத்தாலே வெளிப்படுத்தியிருக்கும் விதம்; பாவனை செய்து தம்மைப் பெண்ணிய, தலித்திய எழுத்தாளர்களென்று நிறுவ முயல்வதை முதன்மைப்படுத்தும் முத்திரைப்படைப்பாளிலிருந்து அவர் விலகி நிதானத்துடன் நிகழ்மெய் பேசுவதை அவரின் புதினங்கள் உணர்த்துவதால். கூடவே, சகோதரர் ராஜ்கௌதமனின் புதினமொன்று, இவருக்கானதின் சமாந்திரமான பார்வையைத் தருவதற்காக.

அண்மைக்காலங்களிலே கோணங்கியின் ஒரு புதினத்துக்கும் இன்னொரு புதினத்துக்குமிடையே ஏதாவது வித்தியாசமிருக்கின்றதா என்று அவரே வந்து விளக்கம் சொன்னாலேதான் எனக்குப் புரியும். ஆனாலும், கட்டவிழ்த்து எந்த விமர்சனங்களுக்கும் அடங்காது, தனக்குப் பிடித்ததை மட்டும் தானெழுதி அலையும் இவ்வுயிரையும் உள்ளடக்கியதுதான், படைப்பாளி பேசுவதிலும்விட, முன்னுரையும் வெளியீட்டுவிழாக்களும் மூக்கை நுழைத்துக்கொண்டு முன்னுக்குப் பேசும் படிப்பாளிகளைக் கொண்ட தமிழ்ப்படைப்பூழூலகம் என்பதைப் புதிய வாசகர்கள் புரிந்து சுயநம்பிக்கை கொள்வதற்காக.

சிங்காரத்தின் புதினங்களிலே ஒன்று; காலத்தினாலே முந்திய காட்டாற்று ஓட்டத்துக்காகவும் கருத்துகளுக்காகவும் மேலும் ஒரு படைப்பாளியைவிட அவனை நானே கண்டுபிடித்தேன் எனத் தமிழ்ப்படைப்புலகு காட்டும் பம்மாத்துத்தனத்தினைச் சுட்ட ஒரு சந்தர்ப்பத்திற்காகவும்.


இவற்றோடு, நிச்சயமாக, ஜே. ஜே சில குறிப்புகள்: அதன் எள்ளலுக்காகவோ எழுத்துநடைக்காகவோ அல்ல; தமிழ் இழக்கியத்திலே புதிதாக ஆர்வம் கொண்டவர்களுக்கு, அதன் இயல்பு, சூழல், ஆட்கள், செயற்படுவழி மீதான ஒரு கையேடாகவும் காப்புறுதியாகவுமிருக்கட்டுமேயென்றுதான். இன்னும் ஐம்பதாண்டுகளுக்கு நம்பி அந்நூலைப் போகும் பாதை பற்றிப் புரிந்துகொள்ளக் கொடுக்கலாம்.

இடைக்குறிப்பு 1: 'இரத்த உறவு' நூலைப் பலர் பரிந்துரைத்தார்கள்; தனிப்பட்ட காரணத்தினால், தொடப் பயந்து தவிர்த்துக்கொண்டிருக்கிறேன்.

இடைக்குறிப்பு 2: ஜெயகாந்தனின் பழைய நூல்களை வேறொரு காலமாயிருந்தால், பட்டியலிலே சேர்த்திருப்பேன். ஆனால், நான் பரிசளிப்பதால், தன்னையே நக்கும் நாயின் மொழியிலே எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களுக்கு ஒரு சதமும் வரும்படியாகச் செலவழிக்க விரும்பவில்லை.

(பரிசளிக்க மறுத்திருக்கக்கூடிய புத்தகங்கள் எவையெனக் கேட்டிருந்தால், இப்பதிவு இன்னும் இரண்டு வாரங்களுக்கு வந்திருக்காது)


புனைவிலி:

i. புத்தகக்கடைகளிலே, புத்தகக்கண்காட்சிகளிலே பேரளவிலே விற்கப்படாத எந்தப்புத்தகமென்றாலும் சரி.

ii. தலைப்பிலேயே ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தை விரித்துச் சொல்லும் புத்தகங்களைத் தவிர்த்துக்கொள்ளவேன்; ("சிபிஎஸ்: உலகின் பயங்கர ஒளிபரப்பு இயக்கம்", "குந்துறே கந்ராசு: கதைஞரின் கடைஞர்") அவற்றுக்குப் பதிலாக, "XXXXXX சமைப்பதெப்படி?" புத்தகங்களை வாங்கியழிப்பேன். சமையற்கலைப்புத்தகங்கள் 'மேதினம்' பற்றியும் 'மேரிமாதா' பற்றியும் எழுதும் புத்தகங்களைவிடவும் இற்றைச்சமூகத்துக்குப் பயனுள்ளதாகச் சில ஆண்டுகளாக உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

அம்மா, மாமா சொன்ன பழையதை அப்படியே ஊற்றி தோசை சுடாமல், சொந்தமாகக் கூட்டுச் சேர்த்து எழுதப்பட்ட ஒரு நல்ல சமையற்கலைப்புத்தகம் = அடுத்தவர் நூலை ஒத்தியெழுதாமல் சொந்தமாக எழுதப்பட்ட ஒரு நல்ல புனைவிலக்கியம்.

iii. தேர்ந்தெடுத்த அடிக்கருத்தின் வகைப்பாட்டிலே தொடர்களாக வரும் எப்புத்தகத்தையும் தவிர்த்துக்கொள்வேன்
("மூன்று நாட்களிலே மூட்டை நசுக்குவதெப்படி?", "மூன்று நாட்களிலே கொசு அடிப்பதெப்படி?")

iv. வெகுசனப்பத்திரிகை, சஞ்சிகைகளிலே 'வரப்பெற்றோம்' என்றிருக்கும் புனைவிலிகளைத் தவிர்த்துக்கொள்வேன் (சொந்தச்செலவிலே விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும் புத்தகங்கள் குறித்து கொஞ்சம் உள்ளடக்கம் பார்த்து யோசிப்பேன்)

v. இன்னும் விரிவாகச் சொல்லலாம். வம்பாகப் போய்விடும்.


3. நிகழ்வையோ படைப்பையோ அதன் காலத்தோடு பொருத்தாமல், நிகழ்கால மதிப்பீடுகளுக்கு மாத்திரமே உட்படுத்தித் தீர்பெழுதுபவர்களைப் பற்றிய உங்கள் விமர்சனம்?

வருங்காலம் அவர்களையும் அவர்களின் விமர்சனங்களையும் பற்றி என்ன மதிப்பீடு எழுதுமெனப் புரிந்துகொள்ளாதவர்கள் அல்லது புரிந்துகொள்ள மறுப்பவர்கள்.

விமர்சனம் என்பது தனிப்பட்ட ஒற்றைப்பார்வையாக இருக்கமுடியாது; இதனாலேயே எனக்கு உள்ளடக்கம் வெறுப்புற்றும், உரைநடை பிடித்திருக்கும் விஷ்ணுபுரம், வேறொருவருக்கு உள்ளடக்கத்துக்காகப் பிடிப்புற்றும் உரைநடைக்காக வெறுப்புக்குமுள்ளாக வசதிப்படுகின்றது. ஒரே விமர்சகரே (நான் அறிமுகம்=விமர்சனம்=முன்னுரை=திறனாய்வு=வெளியீட்டுவிழாவுரை எல்லாவற்றையும் சமப்படுத்தி வீதிபோடுகின்றவரைச் சொல்லவில்லை) சாத்தியமான எல்லாக்கோணங்களிலும் பார்க்கவும் வாய்ப்பில்லை. அப்படி எவரும் முயற்சித்தால், அது தனக்கான அவரது வெறும் பயிற்சியாகவேயிருக்கும்.

அவ்வகையிலே, ஒருவர் நிகழ்காலத்தகுதிக்கு ஒரு நிகழ்வையோ ஒரு படைப்பையோ புனலிட்டுப்பார்ப்பதிலோ உரசிப்பார்ப்பதிலோ தவறிருப்பதாகத் தோன்றவில்லை; பல சமயங்களிலே, மறுவாசிப்பும் மறுகாட்சியும் புதிய பதில்களையும் வழிகளையும் அள்ளியும் தந்திருக்கின்றன. ஆனால், அவ்வாறு தராத வேளையிலே, அதற்கான காலத்தோடு அந்நேரத்திலே அது சரியான, தேவையான கருத்து நிலைப்பாடோடு வெளிப்பட்டிருக்கின்றதா எனப் பொருத்திப் பார்க்காமல், அதனை முற்றிலும் அதற்கான காலத்திலே பயனற்றதென ஒதுக்கித் தள்ளும் உரிமை விமர்சகருக்கில்லை. அது வெளியான காலகட்டத்திலே தூக்கிவீசப்பட்ட படைப்போ, நிகழ்வோ, நிகழ்காலத்திலே மதிக்கப்படமுடியுமானால், இப்போது தூக்கிவீசப்படும் படைப்புகளுக்கும் அவற்றின் காலத்திலே இருந்த மதிப்பினை ஏற்றுக்கொண்டே தீர்ப்பெழுதப்படவேண்டும். தூக்கியெறியப்படும் படைப்புக்கும் நிகழ்வுக்குங்கூட வரலாற்றின் அடிப்படையிலே ஆவணமாகவேனும் இடமிருக்கின்றது.

(இதுதான் பதிலென்றால், அக்கேள்வியைக் கேட்டிருக்கவே வேண்டாமென்று தோன்றினால், அதுவும் சரிதான் ;))


4. இலக்கியத்தைப்போலின்றி இலக்கணத்திற்குட்பட்ட இசை எப்படி இன்றளவும் நிலைத்திருக்கிறது?

எட்டாம் வகுப்பிலே ஆசிரியை "வரவீணா" சொல்லித்தர முயன்றதை "வரவேணாம்" என்று சரியாக இடம், ஏவல், பொருள் அறிந்து புரிந்து செயற்பட்ட என்னிடம் இசையின் இலக்கணம் பற்றிக் கேட்டால், "விதியே! விதியே!" என்றுதான் விதியிலே நம்பிக்கையிருந்திருந்தால், அரற்றமுடியும். அதற்கு வாய்ப்பில்லாததால்......

இலக்கியமோ இசையோ இலக்கணம் என்பது வரையறுக்கப்பட்டுத் தொடங்கியவையல்ல; எதிர்மாறாக, மொழியும் இசையும் பிறந்த பின்னாலேயே, இலகுப்படுத்தி, ஒழுங்குபடுத்தும் நோக்கத்துக்காக இலக்கணம் வகுக்கப்பட்டிருக்க முடியும். இலக்கியமோ, இசையோ சுகம் தேடி அடர்புல்வெளியைத் தேடியலையும் மாடென்றால், அதைக் கயிறுபோட்டு இழுத்துக்கொண்டோடும் மேய்ப்போன் இலக்கணமாகின்றான். மாட்டின் மூலம் புதிய புற்றரையும் அதற்கான தன் வழிப்பாதையையும் அறிந்து கொள்கின்றான். அதே நேரத்திலே தறிகெட்டு, தானும் தொலைந்து மாடும் தொலைந்து போகாமலிருக்கும் கட்டுப்பாட்டினையும் கொண்டிருக்கின்றான். புதிதாக அறிந்த வழிப்பாதை, தொடர்நடையிலே தடமாகும். காலப்போக்கிலே, புதுவெளிகள் கண்டு தடம் மாற, பழந்தடம் அழிந்தும் போகலாம்.

அதனால், இலக்கணத்துக்குட்பட்ட இசை நிலைத்திருப்பதாகச் சொல்வதோ இலக்கணத்துக்கு உட்பட்டிருந்த இலக்கியம் நிலைக்காது (பயன்பாட்டிலேயிருக்காமலே) போய்விட்டதாகவோ சொல்ல முடியாதென நினைக்கிறேன் (அதுசரி, வெண்பாவிலே அறிவியல் சொல்வது என்னவாச்சு? ;-)) காலத்தினாலே முந்திய இலக்கணத்தோடு ஒன்றிய இலக்கியத்துக்கு இருக்கும் வரவேற்பே அதே காலத்து இலக்கணத்தோடான இசைக்குமிருக்கின்றதென என் அறிவிற்கெட்டியவளவிலே தோன்றுகின்றது. கடந்த ஒரு நூற்றாண்டிலே அக்காலத்து இலக்கணத்தினை முறித்துக்கொண்டு புறப்பட்ட இசை வகைகளின் இலக்கணங்களும் அவற்றுக்கேயான புது இலக்கணங்களின் அடைப்படைகளாக ஆகியிருப்பதாகவும் பார்க்கின்றவளவிலே மேல்நாட்டிசையிலே எனக்குத் தோன்றுகின்றன.

இன்னொரு காரணத்தினாலேயும், இலக்கியத்தினைப் போலின்றி இசை இலக்கணத்துக்குட்பட்ட இசை இன்னும் நிலைத்திருப்பதாக ஒரு தோற்றப்பொய்மை இருக்கிறதோ தெரியவில்லை; இலக்கியம் சொற்களோடும் மொழியோடும் சம்பந்தப்பட்டது, ஆனால், இசைக்கு இவை அவசியமற்றவை - மெருகூட்ட வேண்டுமானால் உதவலாம். பொதுவிலே, மொழியும் சொற்களும் (அவற்றின் இலக்கணமும்) எல்லோரினாலும் இசையைவிட அதிகம் புரிந்துகொள்ளப்படவும் பயன்படவும் மாறுதலுக்குள்ளாகவும் வாய்ப்பிருக்கின்றன. அதன் விளைவாக, இத்தோற்றம் ஏற்படுகின்றதோ?

ஏற்கனவே சுட்டிய்யபடியே, எனக்கும் இசைக்கும் அவுரங்கசீப்புத்தூரம். தெரியாத விடயத்திலே தெளிவுபடுத்தி ரம்ஸ்ஃபெல்ட் மாதிரி, 'Known unknowns' கவிதை சொல்ல விரும்பவில்லை. எனக்கும் வேணாம் வில்லங்கம்; உனக்கும் வேணாம் வில்லங்கம். ஆளை விட்டுரு ராசா... உன் காலை விட்டுருறேன் :-)


5. விஜய்க்கு ஏற்ற ஜோடியான கதாநாயகி யார்?

முகமு/மூடியில்லாத விஜய்


=============================================
என் கேள்விகள் 'ஒரு குட்டித்தோட்டம்' அஞ்சலிக்கு
http://anjalisplace.blogspot.com/

1. எதிர்காலத்திலே எத்துறையிலே நீங்கள் ஈடுபடவேண்டுமென விரும்புகின்றீர்கள்? அதற்கு அம்மா, அப்பா என்ன சொல்கின்றார்கள்?

2. உங்கள் வகுப்பு நண்பர்கள் உங்களைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்? நீங்கள் அவர்களைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்?

3. தமிழ், நோர்வேஜியன் மொழிகள் இவை ஒவ்வொன்றிலும் உங்களுக்குப் பிடித்த விடயமென்ன? பிடிக்காததென ஏதாவதிருந்தால், அது என்ன?

4. உங்கள் பதிவுகளை நீங்கள் ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிடவோ அல்லது நோர்வேஜியன் மொழியிலே உங்கள் பதிவினைத் தொடங்கவோ ஆர்வம் உள்ளதா?

5. நோர்வேயின் குட்டிக்கதையொன்றைத் தமிழிலே சொல்லுங்கள்

(ஆறாவது மேலதிகக்கேள்வி: முடிந்தால், பதில் தரவும்:
உங்களிடம் கேட்கப்பட்டிருக்கவேண்டுமென நினைக்கும் கேள்வியெது? அதற்கான பதிலெது?)

Monday, March 12, 2007

வரையம் - 4


Self Portrait with a Trash Can


'07 மார்ச் 12 திங்கள் 11:50 கிநிநே.

கணம் - 489



பின்னிரவுக் குடிநீருக்குக்
கடக்கும் வேளையிற்
கட்டிலைப் பார்க்கிறேன்.

நடுமதிய வெயில் துவளுஞ் செடி
தூங்கும் இரவின்பின் என் கட்டில்

தளிரின் தலை நுனியில்
கனவில் முனை துளிர்
ஒரு பூ; சூரியகாந்தி;
தூங்கும் செடியின்
தூங்காக் கண்பூ திசை
திரும்பித் திரும்பி
வானம் விரித்ததாம்
கனவு.

பூவைப் பிய்த்துப்போட
கழுதைப்புலி அலையும்;
கழுகு தாழும் அலை எழும்;
எலி பல் நன்னச் 'ச்சச்'சிடும்.

ஓரடி ஏற்றத்தில் இரு படி
மாடி கடக்கும் மாவீரனாம்
பூவின் தோட்டக்காரன்; காண்,
மனிதசாத்தியத்தின் உச்சக்காரன்.

கனவுச்செடி,
கழுதைப்புலிக்கும்
கழுகு, எலிக்கும்
கவலைப்படாது
பூ
பல் பால் விரிய
விடியத் தூங்கும்
கை வீசி இங்கும்
கால் வீசி அங்கும்.

தோட்டக்காரன் தொலைவைத்
துளைத்துப் பார்த்தான்.
ஈரப்பலகணிக்கப்பால்
பால் பனியும் அழுத்தி இருள்
மரங்கீறு முகிலைக் கிழித்து
நில....................?

.

'06 மார்ச் 12 திங்கள் 02:21 கிநிநே.



-/சித்தார்த்த 'சே' குவேரா.