Sunday, January 29, 2017

காட்சியும் காணோமும்


காட்சி: கானமற்றது


காலம்: படர்க்கையிலே கஷ்டகாலம்


களம்: இரணகளம்


போராட்டக்காரர் நகரங்கள் பரவி, கூடிக் குரலெழுப்புகின்றனர்.


"தடையை விலக்கு!
தடையை விலக்கு!" 


நாட்கள் நகர்வு; தொடரும் போராட்டம்.


மத்திய அரசுத்தலைவர்ஜி மாண்புமிகுமாநில அரசுத்தலைவர்களைத் தலைநகருக்கு அழைக்கிறார்; அணைக்கிறார்.


"அணைக்கிற மாதிரி அடிக்கவேண்டும். ஆறுமாதத்துக்குப் தடையை இடை நிறுத்தவேண்டும் மாண்புமிகு!"


மாண்புமிகு மாநிலத்தலை, "அவர்களே தடைக்கு இடைக்காலத்தடை கொண்டு வந்துவிட்டார்கள் மத்தியதலைஜீ!"


மத்தியதலைஜி, "பாதுகாப்புப்படையிலிருந்து பொறுக்கி கூட்டத்துள்ளே நாலு பின் லாடங்களைச் செருகிக் கனைக்கவும் கடாசி உதைக்கவும் விட வேண்டும் மாநிலமாண்பூ!"


மாநிலத்தலைமாண்பு, "அப்படியே முன்னுக்கு மூஞ்சியைப் படத்தும் செய்திக்கும் காட்டும் பிரபல விளம்பரநடிகர், பாடகர்களையும் கூப்பிட்டு நீங்களும் பின் லாடங்களின் ஆணிபிடுங்கிகளென்று கூப்பிட்டு மிரட்டலாம்ஜி. முன்னாடி பண்ணியிருக்கிறோம். அற்புதமாக வேலை செய்யும். ஆடியே ஆடியோ விடுவார்கள்ஜீ!"


மத்தியதலைஜி, "அப்படியே பாதுக்காப்புப்படையினருக்கும் துப்பினார்கள் என்ற பேரிலே அடித்து நொருக்கவும் சுபநேரம் குறித்துவிடுங்கள் மாண்புமிகு!"



"ஊடகக்காரர்களுக்கு ஊட்டச்சத்தும் வண்டிச்சத்தமும் கொடுத்தால், உள்நுழைந்த பின் லாடங்களை நிறுவி விடலாம்ஜீ...." - உற்சாகமாகிறார்.



"படங்களிலே பின் லாடங்களை வேண்டிய அசந்தர்ப்பங்களிலே உள்நுழைக்கும் வேலையை என் கட்சி போட்டோஸொப் இலாகாதொண்டர்கள் பார்த்துக்கொள்வார்கள். அவர்களிடம் வாங்கி உள்ளூர் ஊடகங்களுக்கு விநியோகிக்கும் தொண்டூழியத்தைமட்டும் மாநிலத்தலைமாண்புகள் தம் கட்சியூடாகச் செய்தாலே போதுமானது."


அதிகாலை மூன்றுமணியாகிவிட்டதால், ட்ரம்ப்ஜி கீச்சிடப்போகிறார். 

மாண்புமிகு ஆளுநர்கள், தத்தம் மாநிலங்களுக்குச் சென்றிறங்கையிலே நாட்டுக்குள்ளே "பயங்கரவாதிகள்" நுழைவதற்கான அரசுத்தடையை எதிர்த்துக் குழுமுகின்றவர்களை விமானநிலையங்களிலே எதிர்கொள்ளவேண்டியிருக்குமோ என்ற பதட்டத்தோடு வெள்ளைமாளிகையிலிருந்து வெளியேறுகின்றனர்.

Saturday, January 28, 2017

இயல்பாதலின் இயல்பு

தை 28, சனி 05:35 கிநிநே

இயற்கை & இயல்பு என்ற பெயரொட்டுப்பெரும்பதாகையின் கீழே எதுவிதமான விமர்சனமுமின்றி அறிவியலை முழுமையாகப் புறக்கணித்து மருத்துவம், விவசாயம், உணவு, வாழ்க்கைமுறைக்குப் பின்னோக்கிப் போதல் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. ஆய்தலின்றி வெறும் அரசியல், சமூகநீதி, பொருளாதார விருப்புவெறுப்பின், நம்பிக்கையின் அடிப்படையிலே அறிவியலை மறுதலிப்பதும் பழமையை இயற்கையென்ற பேரிலே ஆய்தலின்றி உவத்து ஆரத்தழுவி ஏற்றுக்கொள்வதும் மத அடிப்படைவாதத்தை ஒத்ததாகவே தோன்றுகின்றது.

அரசியல் & சமூகம் சார்ந்தளவிலே சீர்திருத்த, முற்போக்குக்கருத்துகளைக் கொண்டிருக்கும் நண்பர்களும் இவ்வழி புக்குதல் பயத்தினையே தோற்றுகின்றது.

முதலாளித்துவத்தின் கைப்பிடியாகவும் பெருநிறுவனங்களின் பிரதிநிதியாகவும் அறிவியலைக் கண்டுகொள்ளும் மாறாட்டமே இவ்வவநிலைக்கு எம்மைத் தள்ளுகின்றது எனப்படுகின்றது. நமக்குப் பரிச்சயமற்ற நிச்சயமற்ற அனைத்து எதிர்விளைவுகளையும் அறிவியலிலே போட்டுவிட்டு நகர்வது பிற்போக்கிலே நகர்வதன்றி வேறேதுமில்லை. உள்நுழையும் நுழைக்கப்படும் அறிவியலிலே, தொழில்நுட்பங்களிலே விற்பனையாகும் ஆன்மீகத்திலே, இரும்புப்பிடியாகவிருக்கும் சமூகக்கட்டுமானத்திலே எழுப்பும் கேள்விகளைப் போல நிச்சயமாகக் கேள்விகளையெழுப்பவே வேண்டும். ஆனால், "பழமை என்பதற்காக அனைத்தினையும் மறுக்கவும் வேண்டாம்; புதியன என்பதற்காக அனைத்தினையும் ஏற்கவும் வேண்டாம்" என்ற வழக்கினை மாற்றி, "பழமை என்பதற்காக அனைத்தினையும் அரவணைக்கவும் வேண்டாம்; புதியன என்பதற்காக அனைத்தினையும் தள்ளிவைக்கவும் வேண்டாம்" என்றே சொல்லவேண்டியிருக்கின்றது. தொடர்ச்சியாக, அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் அதிகாரத்தினதும் செல்வத்தினதும் கிடுக்கிப்பிடிகளாக எண்ணித் தள்ளிக்கொண்டேயிருப்பது, எம் பிரச்சனைகளைத் தீர்க்கப்போவதில்லை.

பெருவணிகர், அரசுகளின் பண்டத்திணிப்பின் மக்கள்நலன் சாராத விற்பனைக்கு விளைவான கெடுதலுக்கு நிகரானது அவற்றினை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு, அறிவியலை வெறும் உள்நோக்குள்ள சதித்திட்டங்களாகமட்டுமே கருதிக்கொண்டு ஆயாமலே தள்ளிவிடுவது.

இதிலே பெருமுரண்நகையென்னவென்றால், பெருநிறுவனங்களின் அழுத்தத்தின்பேரிலே பேரரசுகள் பண ஈட்டினைமட்டும் கருத்திலே கொண்டு, அறிவியலுக்குக் கடிவாளம்போடுகையிலே, அவ்வரசு, நிறுவங்களை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு, அறிவியலை அவற்றின் வெறும் தரகர்களாகவும் முகவர்களாகவும்மட்டுமே அடையாளம் கண்டுகொண்டு, இருக்கும் சமூகவமைப்பிலே, அதுசெயற்படும் வழிமுறையிலே கேள்விகளுள்ளவர்களும் அறிவியலை ஒதுக்கித்தள்ளுவது.

கற்காலத்துக்குத் திரும்பிப்போகும் வண்டிலுக்கு, இழுத்துச்செல்லும் ஒவ்வாத இரட்டைக்காளைகளாகப் பேரரசுகளும் அதன் எதிர்ப்பாளர்களும் ஆகியிருப்பது, முரண்விந்தை.

உணராதான் சோர்ந்தழிவெய்திடுவான்

தை 25 19:05 கிநிநே



நேற்றிரவுவரை ஈழத்திலே காணாமற்போனவர்களுக்காக உண்ணாவிரதம் வட ஈழத்திலே இருக்கின்றாரென்றது பற்றிய செய்தி நானறிய சமூகவலைத்தளங்களிலே வரவில்லை. அதன் பிறகுதான் வரத்தொடங்கியது.


இன்று சல்லிக்கட்டுக்கு ஆதவளித்தவர் இதற்கேன் ஆதரவளிக்கவில்லை என்பது முதல் தமிழ்நாட்டுச்சல்லிக்கட்டுக்கு நாம் ஆதரவளித்தோமே அவர்கள் இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தரவில்லையே பார்க்கவில்லையா என்பது போன்ற சில கருத்துகள் ஏற்கனவே பேஸ்புக்கிலே சிலராலே வெளிப்படுகின்றன,


இதன் உள்ளரசியல் புரிந்து கொள்ளமுடியாததல்ல.ஆண்டாண்டுக்குக் காட்சியாத்திரைபோய் குடுமிக்கும் கர்ணலுக்கும் வெகுமானத்தோடு கால்கழுவிக்கொண்டே இப்படியான கேள்வியைக் கேட்கின்றவர்கள் ஒரு பக்கமென்றால், சல்லிக்கட்டு மாணவர்களை உசுப்பிவிடுகின்றார்கள் என்று சொல்லிவிட்டுச் சாகும்வரை உண்ணாவிரதத்தை உசுப்பிக்கொண்டிருப்பவர்கள் மறுபக்கம். தமிழ்நாட்டுக்காக அங்கிராது உணர்ச்சிவசப்பட்ட தமிழ்த்தேசியத்தைச் சல்லிக்கட்டிலே வறுத்தெடுத்தவர்கள் ஈழத்தி... அதாவது ஶ்ரீலங்காவிலிருந்தும் உண்ணாவிரதம் பற்றி எக்கருத்தையும் தெரிவிக்கவில்லை; ஆனால், ஆசான்போல, எல்லாம் நடந்துமுடிந்தபின்னாலே, ஆறுதலாக காண்டாவனத்திலே புதிதாக வரிகள் புனைந்து ஆய்வுக்கட்டுரை வரைவார்களென நம்பலாம்.


இங்கே சல்லிக்கட்டுக்கும் காணாமற்போனோருக்கும் போட்டியை வைப்பதிலும் முரணை ஏற்படுத்துவதிலும் மிகவும் மும்முரமாக நிற்கின்றார்கள். இரண்டு புறங்களும் ஒத்த நிலைமைதாம் உண்டு. கடைசியிலே உண்ணாவிரதத்தைக் குழப்புவதிலும் இதே முடிவினையில்லாவிட்டாலுங்கூட, சத்தமின்றிக் கழுத்தைப் பிடித்து நெருக்கும் அழுத்தத்தைக் கொடுத்தலே நடக்கப்போகின்றது. தமிழ்நாட்டின் சல்லிகட்டிலும்விட, ஈழத்தின் காணாமற்போனோரின் பிரச்சனை நிலையின் தீவிரத்தன்மையையும் உள்ளத்துக்கு அண்மித்தவகையிலும் எந்த ஈழத்தவருக்கும் மிகவும் நெருக்கமானது. ஆனால், சல்லிக்கட்டினையும் இதனையும் போட்டிக்கு விடுகின்றவர்களின் அரசியல் மிகவும் தெளிவானது; இயன்றவரை பரந்துபட்ட தமிழ் சார்ந்த நெருக்கமாதலையும் ஒன்றுபடுதலையும் தடுத்தாட்கொல்தல்.


இரு நாட்களின் முன்னாலே சல்லிக்கட்டுப்போராட்டம் முடிக்கப்பட்ட விதமும் அதனை முடிக்க, தமிழக|இந்திய ஆட்சிக்கூட்டாளிகளும் அவர்களின் எண்ணெய்விடப்பட்ட சட்ட, ஒழுங்கு எந்திரங்களும் காட்டிய காரணங்களிலே மிகவும் வெளிப்படையானது, தமிழ்த்தேசியம். மெரினாக்கடற்கரையிலோ கடலிலோ மாணவர்களைத் தமிழக அரசு எந்திரம் அடித்து நொருக்கும்போது, தாங்கிய பதாகைகளிலே விழித்திருந்து கனவுகாணச் சொன்ன அப்துல் கலாம் முகம் தொங்கியபோதுங்கூட, பிரபாகரனின் படங்களையே பேரிந்திய -குறிப்பாக வடநாட்டு ஆங்கில -ஊடகங்கள் முன்னமே தெளிவாகத் தேர்ந்தெடுத்துப் பரப்பிக் காட்டின; ஆதரவு கொடுத்துப் பின்னால், ஒதுங்கிக்கொண்ட பிர|றபலங்களும் சுற்றிவளைத்துத் தமிழ்த்தேசியம் பேசும் சில அமைப்புகளையும் சேர்த்தே தாக்கின(ர்). இரண்டு நாட்களுக்கு முன்னாலான இந்த அலை தணிய முன்னாலே, பெருவிளைவினைக் காணவிடாத புகை மறையமுன்னாலே, காணமற்போன ஈழத்தமிழருக்கான சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்துக்கு ஆதரவு தராத தமிழக -ஈழத்தின்பால் கரிசனையுள்ள-மக்களை உரசிப்பார்ப்பது, உள்ளரசியல் இல்லாது வேறென்ன? இத்தனைக்கும் புலம்பெயர் ஈழத்தமிழருக்கே நேற்றிரவுதான் செய்தியை வாசித்து, இப்படியாக உண்ணாவிரதம் தொடங்கியிருப்பது தெரிகின்றது. தொடங்கியவர் யார், ஆதரவு தருகின்றவர் யார், முன்வைத்த கோரிக்கைகள் என்ன என்பனகூட இன்னும் முழுமையாக என் போன்ற புலம்பெயர்ந்த & சமுகவலைத்தளங்களிலே குந்தியிருக்கும் ஈழத்தமிழருக்கே தெரியவில்லை. இந்நிலையிலே, சிதறுண்டு இன்னும் சுதாகரித்துக்கொள்ளாத தமிழக இளைஞர்களைப் பார்த்து உண்ணாவிரதத்துக்கு ஆதரவாகப் போராடவில்லை என்று கேட்பது திட்டமிட்ட கள்ளத்தனமே!


அதிலும் இப்படியாகக் குற்றம் சாட்டும் சிலர், அண்மைக்காலத்திலே ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்துக் குளிர்காய்கின்றவர்கள் என்று அதே தமிழகத்தின் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களையும் உசுப்பிவிட்டுக்கொண்டிருக்கின்றவர்கள் என்று சக புலம்பெயர் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களையும் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தவர்களே! இன்னும் சிலர் நடப்புகளிலும் தேர்ந்தெடுத்து, சிலவற்றை ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் என்பதாகவும் மற்றையவற்றைப் பாசிசத்தை முன்னெடுக்கும் உணர்ச்சிமயப்பட்ட வெறித்தனமென்றும் என்பதாகவும் தம்நிலை சார்ந்து அடையாளப்படுத்தி, அட்டவணைவேறு வகுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.


இரு துயர்களிடையே நீரடித்துப் பிளக்கும் துல்லிய கணிப்போடு போட்டி வைத்துப் பார்த்து மக்களிடம் "ஒன்றைத் தேர்ந்தெடு, மற்றதை மறுதலி" என்று உணர்ச்சிசார்பயமுறுத்தல் செய்வது, "ஓர்ந்திடு சாத்திரப் போர்தனில், உணர்ந்தவன் வென்றிட, உணராதான்
சோர்ந்தழி வெய்திடுவான்" என்று சகுனி தருமனை அழைத்த சூதாட்டமின்றி வேறேன்ன?


ஒட்டவும் சதையில்லாது மிஞ்சின எலும்புக்குத்தான் எத்தனை கழுதைப்புலிகளும் அரிவாள்களும்!

Sunday, January 22, 2017

யாருக்காக அழுதான்?

2009 இலே சல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடத்துகின்றவர்கள் எங்கே போயிருந்தார்கள் என்று நம்மிலே இலங்கைத்தமிழர் சிலர் கருதுகின்றார்கள். வேறு சிலர், "எல்லாம் இழந்துபோயிருக்கும் போராளிகளுக்கு உதவாமல், சல்லிக்கட்டுக்கேன் குரல் கொடுக்கின்றீர்கள் தமிழ்த்தேசியவெறியர்களே?" என்கின்றார்கள். இன்னும் சில பரந்த இலங்கையராகத் தம்மைக் காண்பவர்கள், தனியார்மருத்துவக்கல்லூரி ஏற்படுவதைக் கண்டு குரல் கொடுக்காது இதற்காகக் குரல் கொடுப்பதேன் என்று பேசுகின்றார்கள். நான்காவது, "வாசலிலே வாடிய காளையைக் கண்டபோதெல்லாம் கண்ணீர் கொண்டேன்" குழுவினர்.

இம்நான்கு குழுக்களிலே, நான்காம் குழுவைப் பற்றி சொல்வதிலும்விட, விரலைவிட்டு எண்ணித் தொகையைச் சொல்வது சுலபம். ஆமாம்; பாணில்லாவிட்டால், கேக்கைத் தின்னலாமேதான்.

இரண்டாவது குழுமத்தினரைப் பற்றிச் சொல்லப் பெரிதாக ஏதுமில்லை. 2009 இற்கு முன்னாலிருந்த மிருகவேட்டைக்காரர் தடாலென்று நூற்றெண்பது பாகை திரும்பி, வியாசபஹவானாகி நொய்யவைத்த போராளிகளுக்காகவே புண்யபாரதம் படைப்பதும், தமிழ்த்தேசியமென்பதும் ஏறேறுவதென்பதும் வெறும் சாதியமே என்றும், கவட்டிடுக்கிலே சொறிவந்ததுக்குக் காரணமும் தமிழ்த்தேசியமே என்றும் தேய்க்கும் குறியானவர்களின் கடிக்கும் படைக்கும் மருந்தேது? மூன்று மொழிகளிலே நூல்களைப் பெயர்த்து, நான்கு வருகைதரு இலக்கிய அரசியல்வாதிகளை வருவேற்று, தொலைதூரமுடுக்கல்களிலே இலக்கியக்குழந்தைப்போராளிகளை வைத்து உங்கள் கனவு அரசியல் வைக்கோற்போர்களை நிகழ்த்துங்கள் என்றும் நொருங்கிய சாம்ராஜ்யங்களையோ உடைந்துபோன ஹம்டி டம்டி சிற்றரசுகளையோ களவுபோன ஆய்களையோ சூக்களையோ மீட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லலாம். அவர்களுக்கு வேண்டியதெல்லாம், உங்களுக்குச் சம்பந்தமேயில்லாமலிருக்கக்கூடிய "வலதுசாரி யாழ்ப்பாணசாதிச்சைவத்தை"த் திட்ட எதையாவது நீங்கள் செய்து கொண்டிருக்கவேண்டியதுதான். மகிழ்ச்சி! வாழ்த்து!

மூன்றாம் குழு, தொடர்ச்சியாக பாட்டாளிகள், விவசாயிகளின் உரிமைமீட்டலுக்கான பொதுவுடமைத்தேவனின் வருகைக்காக செந்திருநூல்கள் காலத்தாலே பழுப்பேறவும் திறக்காமலே உள்ளங்கை தாங்கி பட்டத்திருக்கை வைத்துக் காத்திருப்பவர்கள். அவர்கள் கோரிக்கைகள் நியாயமானவை - சிறுபான்மைச்சுயநிர்ணய உரிமை பற்றிப் பேச்சுரிமையில்லை என்பதாலே! பெரும்பான்மைப்பாட்டாளிச்சகோதரயாக்களின் அனைத்துப்பிரச்சனைகளும் அவர்களுக்குத் தெரியும்; ஆனால், இச்சிறுபான்மைச்சகோதரர்களின் எந்தப்பிரச்சனையாவது அந்தப்பக்கம் தெரியுமா என்று எமக்குத் தெரிகின்றதோ இல்லையோ இவர்களுக்காவது தெரிந்திருக்குமென்று நம்புகின்றேன். வரி, வாற்புலிகள் காட்டிலோ நாட்டிலோ நடமாடாது மென்வலு உற்பத்தி மட்டுமே அபமிருதமாக நிகழ்வதாலே, சிறுபான்மையினருக்குப் பிரச்சனையேதுமில்லை - தனியார் மருத்துவக்கல்லூரிப்பிரச்சனை தவிர்த்து. இது இன்னும் கனவுகள் மலர்ந்திடும் காலம். இன்பக்கவிதைகள் புனைந்திடும் நேரம். சல்லிக்கட்டிலே மொழி, பண்பாட்டு அரசியலறுத்து நபும்சகமாகப் பன்னாட்டுப்பேரமைப்பின் ஊடுருவலாகக் காட்டினால் மட்டும் எதிர்ப்பானது தணியக்கூடும்.
முதலாவது வகை ஈழத்தமிழர்கள் நெருங்கிய நண்பர்களும் அடங்கியவர்கள். அவர்களிடமிருந்து வருவது எதிர்ப்பல்ல, ஆனால், கடந்த காலத்தின் பாதிப்பாலே விளைந்த சோர்வும் நம்பிக்கையின்மையுமே என்றே எண்ணுகிறேன்.

"2009 இலே சல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடத்துகின்றவர்கள் எங்கே போயிருந்தார்கள்" என்று கேட்கும்போது, முழுமையான தமிழகத்தையும் தவறாக ஒற்றைச்சரத்திலே போட்டுக்கட்டியதாகத்தான் தோன்றுகின்றது.
இலங்கையிலே மாட்டுச்சவாரி அங்குமிங்கும் நிகழ்ந்து கொண்டிருந்ததாக வாசித்திருக்கின்றேன்; இவ்வாண்டும் ஓரிடத்திலே நடத்தப்பட்டதாக வாசித்தேன். அறிந்தவரையிலே சல்லிக்கட்டுக்கும் இலங்கைக்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாட்டின் இசைக்கருவி பறைக்கும் இலங்கையின் இசைக்கருவி பறைக்கும் இருக்கும் வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு இரண்டையும் குழப்பாமலிருக்கவேண்டியதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்; சல்லிக்கட்டு இலங்கையிலே நடத்தப்படுவதில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
சல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பெருநிலப்பரப்பிலே எல்லாராமில்லாதபோதும்,குறிப்பிடத்தக்கோராலே நிகழ்த்தப்படும் விளையாட்டுத்தான். ஆனால், இப்போது, சல்லிக்கட்டிலே அங்கே குரலெழுப்புகின்றவர்களிலே |பெரும்பான்மையானோர்| (முழுப்பேருமில்லைத்தான்) இலங்கையிலே நிகழ்ந்தவற்றிலே குரலெழுப்பியிருக்கின்றார்கள்; தம்மை எரியூட்டி மாய்த்தவர்களும் அங்கே இருந்திருக்கின்றார்கள். பொதுப்படையாக நாம் அவர்களைக் குற்றம் சொல்லிவிடமுடியாது. 

நீரணைக்கு அப்புறம் 2009 வாகரையிலும் வன்னியிலும் நிகழ்ந்தபோது கிஞ்சித்தும் கவலைப்படாது, Rabbit-Proof Fence இனைப் பார்த்து, 1930 களிலே பெற்றோரின் கைவசமின்றி வெள்ளைப்பண்பாட்டுக்குள்ளே திணிக்கப்பட்டு வதையுண்ட அவுஸ்ரேலிய பழங்குடிக்குழந்தைகள் இரண்டுக்காகச் சென்னையிலே அழுத அதே குழுத்தான் எல்லாம் முடிந்தபின்னால், அத்தனையையும் பழரசப்படுத்தி நூல்களாக எழுதிப்போடப் பதித்துப்போட்டும் வாசித்து உருகி போன வாரம்வரைக்கும் புத்தகக்கண்காட்சிக்குப் போய் மீண்டு வந்து இன்று கருத்துச் சொல்கின்றது என்பதை யார் மறக்கினும் சிலர் மறக்கோம். ஆனால், இவர்களைமட்டுமே வைத்துக்கொண்டு முழுத்தமிழகத்தையும் காண்பது முற்றிலும் தவறு. மேலே சொன்ன தமிழ்ப்படை அரிக்க அரிக்கச் சொறியும் இரண்டாம் குழுவுக்கும் இக்குழுவுக்கும் பெரிய வேறுபாடில்லை. ஆகவே, தமிழகத்தைப் பார்க்கையிலே அப்துல் ரவூப் முதல் முத்துக்குமார், செங்கொடி இவர்களிலிருந்துதான் சோர்வுறுக்கின்ற இலங்கைத்தமிழர் தொடங்கவேண்டுமேயொழிய சோகத்தைப் பிழிந்து இலக்கியரசமாக ஸ்ரோவிலே உறுஞ்சும் இந்த ஆன்மதரிசனர்களிலிருந்தல்ல.

இரண்டாவதும் மிக முக்கியமானதுமான விடயமானது, தமிழகத்திலிருந்து இலங்கையிலே நிகழ்ந்தவற்றுக்குக் குரலெழுப்பினார்களோ இல்லையோ, இதுபோன்ற அழுத்தம் சிறுபான்மைச்சமூகங்கள்மீது நிதி+அதிகாரபலமுள்ள பன்னாட்டு அமைப்புகள் தங்கள் வாழ்நெறியை அந்நாடுகளிலேயிருக்கும் ஆட்சியாளர் கூட்டோடு திணிக்கும் செயலாகத்தான் நாம் பார்க்கவேண்டும். இவ்விடத்திலே அச்சிறுபான்மையினரது -உள்முரண்பாடுகள் எவையிருப்பினுங்கூட- பண்பாடு, வழக்குமுறை என்பவற்றை எண்ணியும் பார்க்காது, கருத்தினைக் கேட்காது ஒற்றைத்திசையழுத்தமாக ஏற்றப்படுவது. அவ்வகையிலேதான் அமேசன் இந்தியர்-சுற்றுப்புறச்சூழல், இன்யூட் குடிகள்-திமிங்கலவேட்டை தொடர்பான சிக்கல்களைக் காணவேண்டும். அவ்வழியிலே, தமிழகத்தின் சல்லிக்கட்டினை வேண்டுமென்ற போராட்டம் தார்மீகவழியிலே உலகம் பரந்த இலங்கைத்தமிழராலே ஆதரிக்கப்படவேண்டியது என்று கருதுகின்றேன்.

மாற்றுக்கார்வேழர்கள்

செம்புரட்சி முடிந்தபின்னால், லெனின் மொஸ்கோவுக்குள் நுழைந்தார்.

கைப்பற்றப்பட்டபின்னால், காஸ்ரோ ஹபானாவுக்குள்ளே நுழைந்தார்.

இடையிலுமில்லாத் தமிழ்த்தலைவர்களும் நடிகர்களும் இலக்கிய ஊதுபத்தியக்காரர்களும் இறுதியிலே நுழைந்தாற்றான் என்ன தவறு? 

அவர்களுக்கு நீங்கள் "தென்னையிலே தேள் கொட்டினால், பனையிலே நெறிகட்டச் செய்யவும் செய்யும்" என்று உணர்ச்சியின்பால் நிரூபிக்க நின்றாட உரித்தும் அருகதையும் புத்தியும் புகழும் அற்றார் என்பதை இவ்விடத்தே நினைவூட்டக் கடப்பாடுள்ளேன். மாட்டுக்காரவேலர்களும் மாற்றுக்கார்வேழர்களும் மாட்டிப்பூட்டிச்செய்த மேதினி, காண்.

"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்று கடைசியிலே அறிக்கைவிட்டு "ஜனநாயகம் கெடாது, உணர்ச்சிவசப்படாது, சட்டம் முறியாது கடற்கரையிலே, முற்றவெளியிலே பட்டம் விடவேண்டும் பாலர்களே!" என்று ஏறு தழுவுதல் & ஆறு கடத்தல் தொடர்பாகக் கருத்துச் சொல்லப்போகும் அறிவுஜீவிகள்மட்டும் நாடு தழுவிய புத்தக்கண்காட்சி, பல்கலைக்கழகங்களுள்ளே உலகத்திரைப்படவிழாக்கள் இன்னும் முடியாததாலும் புகையிரதப்போக்குவரத்துத்தடைப்பட்டதாலும் வந்து சேரவில்லை. இது கணவனுக்காக மதுரையை எரித்த ஒரு குற்றமா? எதற்காக, குலைந்த கொண்டையும் தூக்கிய கையில் ஒற்றைச்சிலம்பும்? பழந்தீயைப் பாதத்தால் அணையுங்கள்! புத்தி சீவுதல் காளைக்கொம்புக்கு முக்கியமாச்சே!

புத்திக்கொம்புசீவிகள், தொடர்ச்சியாகவும் அவதானமாகவும் இயல்பான உணர்ச்சிகளை உசுப்பிவிடப்பட்ட உணர்வுமயப்படுதலுக்கு ஈடாக்கி விடுகின்றார்கள். பின்னால், தனியே முள், கல் விலக்கி, அகற்றிச் சுற்றிப்போட்டு எவரையும் உள்ளே வர விடாது பாதுகாப்பைப் பலப்படுத்துக்கொள்கின்றார்கள். அடுத்ததாக, தம் கல்வியும் வாசிப்பும் பேச்சுமே நீர்நிலையின் எல்லை என்று வகுத்துவிட்டு வகுப்பெடுத்தலுக்கு ஆயத்தமாகின்றார்கள். கடைசியிலே, எல்லைக்குள்ளே கைக்கும் கண்ணுக்கும் எட்டாத் தொலை நின்றுகொண்டு பதினேழாமாண்டுப்புரட்சியையும் அறுபத்தெட்டாமாண்டுப்புகுதலையும் அமைப்பு அடையாளங்களுக்குள்ளே அறிவுபூர்வமாக நீள விவாதித்தலும் விமர்சித்தலும்மட்டும் செயலென்று எள்ளி நகையாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

திரும்புமிடமெல்லாம் , எவ்வித எதிர்க்குணமுமின்றி எடுத்த எடுப்பிலேயே ஒத்தோடுதலையே சுகமான சிந்தனையில் இதமான கனவாகத் தீர்வாக மொழிகின்றார்கள்; மாற்றான எதையும் கூட்டத்திலே கூச்சலாகவும் மானுடத்துக்கு எதிரான குறுந்தூரவெறியோட்டமாகவும் இறுதியிலே தலை கொத்துண்டு மண் வீழ்ந்து வான்பார்த்து மடிந்துபோகப்போகும் வழியாகவும் சொல்லிவிட்டு, அடுத்த புத்தகக்கண்காட்சிக்கோ அகிலத்திரைப்படவிழாவுக்கோ காமத்தையும் கள்ளையும் கொண்டாடவோ யாம் பிறந்தோம் என்பதாகவோ முடித்துவிட்டுத் தங்களைப் புசிக்கும் மானுடத்தின் பெரும்பசித்த குஞ்சுகளாக மூன்று மொழிகளிலே மொழிபெயர்த்தும் காட்ட நிலை அமைத்தலை நிச்சயப்படுத்திவிட்டு நகர்ந்துவிடுகின்றார்கள்.

இடையறாது அறிதலையும் உணர்தலையும் நேர்மறைத்திசைகளிலே நிறுத்தித் தெருக்கூத்தாட்டிக் காட்டுவதிலேயே தம்மையே மையவிசைகளாக்க முனைகின்றனர். பாவனை என்பது கணிப்புடன் காய்நகர்த்துகின்றவர்களின் கச்சிதமான முகமூடியும் கருவியுமாம்.
அன்றைக்கும் இதைத்தான் செய்தார்கள்; இன்றைக்கும் இதைத்தான் செய்கின்றார்கள்.

உணர்தலின்றி அறிதலில்லை; 
அறிதலின்றி உணர்தலில்லை.