செம்புரட்சி முடிந்தபின்னால், லெனின் மொஸ்கோவுக்குள் நுழைந்தார்.
கைப்பற்றப்பட்டபின்னால், காஸ்ரோ ஹபானாவுக்குள்ளே நுழைந்தார்.
இடையிலுமில்லாத் தமிழ்த்தலைவர்களும் நடிகர்களும் இலக்கிய ஊதுபத்தியக்காரர்களும் இறுதியிலே நுழைந்தாற்றான் என்ன தவறு?
அவர்களுக்கு
நீங்கள் "தென்னையிலே தேள் கொட்டினால், பனையிலே நெறிகட்டச் செய்யவும்
செய்யும்" என்று உணர்ச்சியின்பால் நிரூபிக்க நின்றாட உரித்தும் அருகதையும்
புத்தியும் புகழும் அற்றார் என்பதை இவ்விடத்தே நினைவூட்டக் கடப்பாடுள்ளேன்.
மாட்டுக்காரவேலர்களும் மாற்றுக்கார்வேழர்களும் மாட்டிப்பூட்டிச்செய்த
மேதினி, காண்.
"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்று கடைசியிலே அறிக்கைவிட்டு "ஜனநாயகம் கெடாது, உணர்ச்சிவசப்படாது, சட்டம் முறியாது கடற்கரையிலே, முற்றவெளியிலே பட்டம் விடவேண்டும் பாலர்களே!" என்று ஏறு தழுவுதல் & ஆறு கடத்தல் தொடர்பாகக் கருத்துச் சொல்லப்போகும் அறிவுஜீவிகள்மட்டும் நாடு தழுவிய புத்தக்கண்காட்சி, பல்கலைக்கழகங்களுள்ளே உலகத்திரைப்படவிழாக்கள் இன்னும் முடியாததாலும் புகையிரதப்போக்குவரத்துத்தடைப்பட்டதாலும் வந்து சேரவில்லை. இது கணவனுக்காக மதுரையை எரித்த ஒரு குற்றமா? எதற்காக, குலைந்த கொண்டையும் தூக்கிய கையில் ஒற்றைச்சிலம்பும்? பழந்தீயைப் பாதத்தால் அணையுங்கள்! புத்தி சீவுதல் காளைக்கொம்புக்கு முக்கியமாச்சே!
புத்திக்கொம்புசீவிகள், தொடர்ச்சியாகவும் அவதானமாகவும் இயல்பான உணர்ச்சிகளை உசுப்பிவிடப்பட்ட உணர்வுமயப்படுதலுக்கு ஈடாக்கி விடுகின்றார்கள். பின்னால், தனியே முள், கல் விலக்கி, அகற்றிச் சுற்றிப்போட்டு எவரையும் உள்ளே வர விடாது பாதுகாப்பைப் பலப்படுத்துக்கொள்கின்றார்கள். அடுத்ததாக, தம் கல்வியும் வாசிப்பும் பேச்சுமே நீர்நிலையின் எல்லை என்று வகுத்துவிட்டு வகுப்பெடுத்தலுக்கு ஆயத்தமாகின்றார்கள். கடைசியிலே, எல்லைக்குள்ளே கைக்கும் கண்ணுக்கும் எட்டாத் தொலை நின்றுகொண்டு பதினேழாமாண்டுப்புரட்சியையும் அறுபத்தெட்டாமாண்டுப்புகுதலையும் அமைப்பு அடையாளங்களுக்குள்ளே அறிவுபூர்வமாக நீள விவாதித்தலும் விமர்சித்தலும்மட்டும் செயலென்று எள்ளி நகையாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
திரும்புமிடமெல்லாம் , எவ்வித எதிர்க்குணமுமின்றி எடுத்த எடுப்பிலேயே ஒத்தோடுதலையே சுகமான சிந்தனையில் இதமான கனவாகத் தீர்வாக மொழிகின்றார்கள்; மாற்றான எதையும் கூட்டத்திலே கூச்சலாகவும் மானுடத்துக்கு எதிரான குறுந்தூரவெறியோட்டமாகவும் இறுதியிலே தலை கொத்துண்டு மண் வீழ்ந்து வான்பார்த்து மடிந்துபோகப்போகும் வழியாகவும் சொல்லிவிட்டு, அடுத்த புத்தகக்கண்காட்சிக்கோ அகிலத்திரைப்படவிழாவுக்கோ காமத்தையும் கள்ளையும் கொண்டாடவோ யாம் பிறந்தோம் என்பதாகவோ முடித்துவிட்டுத் தங்களைப் புசிக்கும் மானுடத்தின் பெரும்பசித்த குஞ்சுகளாக மூன்று மொழிகளிலே மொழிபெயர்த்தும் காட்ட நிலை அமைத்தலை நிச்சயப்படுத்திவிட்டு நகர்ந்துவிடுகின்றார்கள்.
இடையறாது அறிதலையும் உணர்தலையும் நேர்மறைத்திசைகளிலே நிறுத்தித் தெருக்கூத்தாட்டிக் காட்டுவதிலேயே தம்மையே மையவிசைகளாக்க முனைகின்றனர். பாவனை என்பது கணிப்புடன் காய்நகர்த்துகின்றவர்களின் கச்சிதமான முகமூடியும் கருவியுமாம்.
அன்றைக்கும் இதைத்தான் செய்தார்கள்; இன்றைக்கும் இதைத்தான் செய்கின்றார்கள்.
உணர்தலின்றி அறிதலில்லை;
அறிதலின்றி உணர்தலில்லை.
No comments:
Post a Comment