in the defense of Seeman & co. let me be the devil's advocate.
சீமானுடனான நம் அரசியலைவிட்டுவிட்டலாம். ஆனால், வாக்கிலே பதவியைப்
பிடித்துக்கொண்ட திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் எம்பி தம்பி கம்பி தும்பி
டம்பி எல்லாம் பொத்திக்கொண்டிருக்கின்றவேளையிலே பாண்டவரணி, பேண்டவரணி,
"அரசுதான் செயலாற்றவேண்டும்! நடிகர்களல்ல!" என்று பிருஷ்டத்தைமட்டும்
திறந்துகாட்டும் பொழுதிலே, முகத்தையேனும் காட்டும் சீமான், வைகோ போன்றோரைப்
பிடித்துக்கொள்வது சரியில்லை என்றே தோன்றுகின்றது.
தமிழ்த்தேசியத்துக்குக்
குரலைக் கொடுக்கின்றவர்களின் படங்களைமட்டுமே அட்டணையாக ஆக்கி,
ஈழத்தமிழர்களுக்காக மட்டும் கத்தும் இவர்கள் இப்போது
தமிழகத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்காமல் ஒளிந்துகொள்வது எங்கே என்று
புலம்பெயர்நாடுகளிலிருந்து தட்டச்சிலே மட்டும் மார்க்ஸியபானம், மனிதநேயம்,
சுமந்திரம் விற்கின்ற வாய்ப்பேச்சாளர்களிடலும்விட, சீமானோ வைகோவோ
குறைந்தளவு காட்சியிலேனும் நிற்கின்றார்கள். இதைத் தவிரவும், திருமுருகன்,
எழிலன் போன்றோரும் (இவர்களுடனான மற்றைய தமிழ்த்தேசியவாதிகளின்
உட்பிரச்சனைகளை இப்போதைக்குப் பேசவில்லை) காட்சியிலே நிற்கின்றார்கள்.
எதையுமே பேசாத,பேசவேண்டிய கடப்பாடுள்ள பேரரசியல்வாதிகள் வலுக்கட்டாயமாக
தன்னார்வர்களின் தொண்டுகளிலேயே தங்கள் படங்களை அதிகாரமாகப் பொதித்துப்
பொறித்தபின்னரே செயற்படவிடும்நிலையிலே, இந்நேரத்திலேனும் சீமானைப்
பிடித்துப் பிராண்டுவதைத் தவிர்க்கக்கூடாதோ எனத் தோன்றுகின்றது.
சீமான் உட்படத் தமிழ்த்தேசியம் (அனைத்துவகையும்) பேசுகின்றவர்களெல்லாம்
வெறுமனே முட்டாள்களாகவும் முற்றிலும் சுயநலமிகளாகவும் காட்டப்பட்டுக்
கொண்டிருக்கும்வேளையிலே வாக்கிலே பதவிக்கு வந்த தமிழ்நாட்டு
அரசியல்வாதிகளும் வெறுமனே தட்டச்சுச்செய்தே போராளிகளாகக்
காட்டிக்கொண்டிருக்கும் புலம்பெயர் தட்டச்சுமார்க்ஸிய சதிக்கருத்தாக்கம்
முற்போடும் பிற்போக்குவாதிகளும் சுலபமாகத் தப்பிப்போய்க்கொண்டிருப்பதாகவே
படுகின்றது. தமிழ்நாட்டின் தொலைக்காட்சிக்கும் சஞ்சிகைகளுக்கும்
"ஈழப்போராட்டத்திலே எனது ஸ்ரண்ட்" செவ்விகளும் தொடர்கட்டுரைகளும் விடும்
ஈழக்குஞ்சுகள் (புலம்பெயர்ந்த ரீபோமெற்றறட்) இந்நேரம் பார்த்து,
புலம்பெயர், ஈழம்வாழ்தமிழர்கள் தமிழ்நாட்டின் வெள்ளம் குறித்துக் கரிசனமும்
ஆதங்கமும் தெரிவித்து அணிலுதவிப்பாலம் இக்கரையிருந்து அக்கரைக்கு
அக்கறையிலே செய்யக் குரல் கொடுப்பதைப் பகிடி செய்யவோ அல்லது யாழ்ப்பாணம்,
வவுனியாவிலும் வெள்ளம் என்று திசைதிருப்பி அம்மழைக்குட்டையிலே
காக்காய்க்குளிப்புச் சிலிர்த்தாடுவது அவற்றின் புதுச்சாயத்தைக் கரைத்துக்
காட்டியிருக்கின்றது.
இதற்காக, சீமானுடனும் நாம் தமிழருடனும் அவர்களின் தூயதமிழ்த்தேசியத்துடனோடோ உடன்பாடு என்று கொள்ளத்தேவையில்லை.
பேயென்று நீங்கள் கருதினாலும், அதற்கான நீதியைக் கொடுங்கள்; குறிப்பாக, பிசாசுகள் சுலபமாகத் தப்பிப்போகின்ற வேளையிலே. 85 இன் துப்பாக்கியோடு போஸ்கொடுக்கும் சீமோனையும் 15 இன் தண்டோடு போஸ்
கொடுக்கும் சீமானைப் போலவே நிகழ்வுக்குச் சரி நியாயமின்றி எட்டிநின்று
விமர்சித்துவிட்டு யாரும் போனாலும், இதேபோலத்தான் எதிர்க்கேள்வி
எழுப்பத்தோன்றும்.
எண்ணினால், இத்தனியாள் அரசியலை குறைந்தளவு
வெள்ளநிலை சீரடைந்துவிடும்வரையிலேனும் விடுத்து,இப்போதைய தேவைகளைக் காணுதலே
முதன்மையாகத் தோன்றுகின்றது; செயற்படவேண்டிய பதவியிலிருக்கும்
அரசியல்வாதிகளினையும் அதிகாரிகளையும் கேள்வி கேட்பது வேறு, பதவியிலே
இருக்காத அரசியல் செய்கின்றவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று கேட்பது வேறு
(நடிகர்கள் அவர்கள் சங்கங்கள் உட்பட).
பட்டதைச் சொன்னேன். தவறெனில், சுட்டிக்காட்டுங்கள் (வெள்ளம் கட்டுக்கடங்கி, நிலமை சீரான பின்னால்).
-/.
டிசெம்பர் 4, 2015
No comments:
Post a Comment