Friday, December 11, 2015

முற்போக்குத்தமிழ்த்தேசியம்

அடிப்படையிலே சுமந்திரனிலும் நாராயணனிலும் அவர்களின் பின்புலம்சார்ந்து எனக்கு ஒவ்வாமையுண்டென்றபோதிலுங்கூட, இன்றைக்கு முற்போக்குத்தமிழ்த்தேசியத்தின் முதன்மையான முட்டுக்கட்டைகள் சுமந்திரனோ நாராயணனோ அல்லவென்பதிலே தெளிவாயிருக்கின்றேன். இஃது எவ்வகையிலும் அவர்க்கான எதிர்ப்புக்குரல்களை மறுப்பதாகவோ இல்லாமலிருக்கவேண்டுமென்பதாகவோ சொல்வதல்ல. நிச்சயம் இருக்கவேண்டும். ஆனால், இவ்விருநிகழ்வுகளிலே நாராயணனுக்குக் காட்டியவகையிலே குறியீட்டுநீதியும் சுமந்திரனை அளவுக்கதிகமாகவே குறியீடாகக் கண்டுகொண்டு அநீதியும் நிகழ்ந்ததாகவே தனிப்படக் கருதுகிறேன்.

முற்போக்குத்தமிழ்த்தேசியத்துக்கு இப்போதைக்கு அவசியமாக வேண்டியவை:

1.ஒழுங்காக அடிப்படையமைப்பிலே காரணகாரியங்களை வைத்து வகுக்கப்பட்ட தமிழ்பேசுதேசியத்துக்கான முற்போக்குமுதுகெலும்புத்தத்துவம்

2. அதன் அடிப்படையிலே, நமது வீச்சும் ஆழமும் உணர்ந்த, சமூக, அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப, சூழலிய அமைவுகளைச் சீர்படுத்தி அல்-பழையன விலத்தி, நல்-புதியன புகுத்திக் கட்டியமைக்கப்பட்ட நடைமுறைக்கொவ்வும் செயற்றிட்டம்

3. அமைந்திருக்கும் சூழலுக்கமைய தத்துவத்தையும் செயற்றிட்டத்தையும் பரப்புதலுக்கான வலுத்த ஊடக அமைப்புகள்

4. சம்பந்தப்பட்ட மக்களிடையே போய்ச்சேர்ந்து, அவர்களின் அன்றாட நிலையிலும் பங்குகொள்ளும் வகையிலே தொடர்ந்து இயங்கவேண்டிய பங்குதாரர்கட்டமைப்பும் கூட்டுச்செயற்பாடும்

5. தொடர்ச்சியான தம்செயற்பாடுகளை விமர்சிக்கவும் கற்றுக்கொள்ளவும் மேம்படுத்தவுமான திறந்த, ஜனநாயக அமைவிலான பொறிமுறையும் எண்ணக்குதங்களும் எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளெழுந்துவரும் எதிர்க்கருத்துகளை எதிரிக்கருத்துகளாக எண்ணி அடித்தொழிக்காது மாற்றுக்கருத்துகளாக முன்வைத்து விவாதித்து, அப்புனலிலே மேழெழுந்து வருவதை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மையும்

6. முதன்மைநோக்கினையும் அடிப்படைமுதுகெலும்புத்தத்துவத்தினையும் மாற்றாவகைக்குச் செயற்றிட்டங்களையும் கட்டமைப்புகளை உருவாக்கி நிர்வகித்துப் பலப்படுத்துதனையும் கூறுகளாய்க் கொண்டமைந்த தக்கிக்கும்தன்மையும் அதற்கான வழிமுறைகளும்

7. இதற்கான பரந்துபட்ட தோழமைகளை இதுபோன்ற சமாந்திர குழாங்களிலே அடையாளம் கண்டுகொள்தலும் செயலடிப்படையிலே சேர்ந்தியங்குதலும்

8. தனியாள் தன் நாளாந்த வாழ்விலே தனக்கான சின்ன எல்லைக்குள்ளுக்கும் சிற்றளவிலே விடாது செயற்பட்டுக்கொண்டிருந்தலும்

9. எல்லாவற்றிலும்மேலாக, இதுவரை நாள் தமிழ்த்தேசியம் என்பதன்பேரிலே, இழந்தவர்களின் இருப்புகளை இந்நாளிலும் இனிவருநாளிலும் இலகுவாக்கலுக்காக இயன்றவரை செயற்படுதலும்
இவற்றைவிட்டுவிட்டு, சுமந்திரனையும் நாராயணனையும் தாக்குதல் மட்டுமே எல்லையென்று ஒடுங்கிவிட்டால், இச்சிறுசாககச்செயல்கள், ஸொரோவின் வாள்வீச்சு Z ஆகமட்டுமே மூன்று கோடுகளிலே பளிச்சிட்டு முடிந்துவிடும்.

முதிர்ச்சி என்பது எல்லைகளை உணர்ந்துகொள்தல்; முற்போக்கு என்பது கருத்திலே முயங்கிக் கட்டித்துவிடாது செயலிலே முயன்றிருந்தல். இவையிரண்டும் இல்லாமல், முற்போக்குத்தமிழ்பேசுதேசியம் என்பது சமூகவலைத்தளங்களில் சில இடுக்குமூலைகளுக்கப்பாலே எவ்விடத்திலும் சாத்தியமில்லை.

தன் நோக்கும் அதற்கான தத்துவப்போக்குமில்லாமல், வெறுமனே எதிரிகளின் செயற்பாடுகளுக்கான எதிர்வினைகளே தன் செயற்பாடுகளாக வரையறுக்கவிட்ட எப்போக்கும் தான் போய்ச்சேரவேண்டிய இலக்கைச் சேர்ந்தடைந்ததாக வரலாறு காட்டியதில்லை.

No comments: