Friday, December 11, 2015

எமது நீற்றுப்பூசணிக்காய்

தமிழினியை வைத்துப் புலம்பெயர்ந்த போலித்தமிழ்த்தேசியவாதிகள் என்று சொல்லியே தம்மை மனித உரிமைப்போராளிகளாகக் காட்டப் புறப்பட்டவர்களெல்லாம் இத்தனை நாள் தமிழினியைப் பற்றி எதற்காகப் பேசாதிருந்தார்களோ தெரியவில்லை. உங்கள் அரசு, உங்கள் ஒத்தோட்டம். போய் இலக்கியச்சந்திப்பும் ராஜபக்சவோடு படம்பிடிப்பும் என்று நின்றிருந்த உங்களுக்கு அப்போதெல்லாம் இது தெரியவில்லையாக்கும். இப்போதுதான், மசிர் சிலிர்த்துக்கொண்டு மனிதநேயம் தமிழினி பேரைக்காணும்போதெல்லாம் பெருகி ஓடுகிறதோ? 


கிளிநொச்சி-பளை புதுவிதானை கருணாகரனும் மச்சான் சந்திரகுமாரும் இத்தனை நாளும் குருடுகளாக இருந்தார்களா? பிள்ளையானைப் பிடித்ததன் நிலையை இல்லையென்று நிறுவத்துடிக்கும் ஆலோசர் ஸ்டாலின் ஞானம் தமிழினிக்கு உருகி கருணாகரனின் துண்டுப்பந்தியைப் பகிர்கிறார். தமிழினிக்கு உருகும் இந்தாளுக்கு ரிஆர்ஓ பிரேமினியை தமிழ்மக்கள்விடுதலைப்புலிகள் வன்புணர்ந்து கொன்றதைப் பற்றி எதுவும் சொல்லத் தோன்றாது ஏன்? இனியொரு நாவலன் பந்தியை வெட்டி அரூப புலம்பெயர்போலித் தமிழ்த்தேசியவாதிகளோடு காற்றிலே பந்தாடுகின்றார். த. ஜெயபாலனின் தாயகத்திலிருந்து விமர்சனத்தோடு தமிழினி குறித்துப் பகிரும் பௌஸர் இதுவரை ஒருநாள் அஷ்ரப் குறித்தும் அவர்காலத்து முஸ்லீம் காங்கிரஸ் குறித்தும் மட்டக்கிளப்பிலே காத்தான்குடிக்கொலைக்கீடாக முஸ்லீம் ஊர்காவற்படைகள் செய்வதை குறித்தும் விமர்சிப்பதில்லை. இதைவிட மோசமானவர்கள் தமிழினி குறித்து அழும் வேறு சில ஒத்தோடிகள்; தங்கவேலாயுதம் மாஸ்ரரின் நினைவுக்கூட்டப்புத்தகவெளியீடு குறித்து அவசரமாகப் பதிவிட்டுக் கத்தியதும் முன்னாலே தமிழ்த்தேசியவாதிகள் கிணற்றிலே நஞ்சூட்டியதாகச் சொல்லிவிட்டுக் கடைசியிலே அவர்களுக்குத் தகவல் தந்தவரே நஞ்சூட்டியதாகக் குற்றம் சாட்டப்பின்னாலே மன்னிப்புக்கூடக் கேட்காமலே ஒளிந்ததும் போன்ற சில்லறைத்தனமான காரியங்களிலே ஈடுபடுகின்றவர்கள். சாத்திரியார் எல்லாவற்றையும்விட மேல்; எப்பவுமே சமயம் மாறுகிறவன்தான் தலைமுறைதலைமுறையாகச் சமயத்திலே இருக்கிறவனைவிடத் தன்ரை புதுச்சமயத்தை மற்றவன் தலையிலை திணிப்பான். அந்தக்கதை இந்தாளின்ரை. 


இப்படியான சைனீஸ் ஃபவ்ஃபே வகையறாகூட்டம், ஓரிடத்திலே "தமிழினியின் தாயார் கச்சான் விற்றுக் கஷ்டப்பட்டார், சுற்றவரக் கல்வீடிருந்தும் அவர்கள் குடிசையிலே வாழ்ந்தார்கள்" என்றும் "புலம்பெயர்ந்த தமிழ்தேசியவாதிகள் கவனிக்கவில்லை" என்றும் முதலைக்கண்ணீர் விட்ட கையுடனேயே ஜெயன் தேவா இலண்டனிலிருந்து மணந்தவர் என்பதையும் சொல்லவேண்டும்; தமிழினியின் தங்கை ஸ்கண்டிநேவியன்நாடொன்றிலே இருக்கின்றார் என்பது ஃபேஸ்புக்கிலும் தமிழினியின் மரண அறிவித்தலிலுமே தெரிகின்றது. தமிழினியோடு தொடர்பிலிருந்த ஒருவர் அவருக்கு இந்தியா கொண்டு செல்லவும் மருத்துவவசதிக்கும் உதவி செய்யப்புலம்பெயர்ந்த சிலர் முயன்றனர் என்று ஓரிடத்திலே பின்னூட்டத்திலே சொல்லியிருந்தார். இதெல்லாம், இவர்களுக்கு முக்கியமில்லை - தமிழினி இறக்கும் நிலையிலே என்ன உளநிலையிலே இருந்தார் என்று அறியாத வலதுசாரித்தமிழ்த்தேசியவாதிகளைப் போல. ஆக, தமிழ்த்தேசியத்தை அடிக்க எங்கே ஒரு வாய்ப்பு தமக்குக் கிட்டும் என்பதுதான் முக்கியம்.


குறைந்தளவு தமிழ்த்தேசியம் என்பதையேனும் ஒருகூட்டுக்குள்ளே அடைக்காமல் அதனிலும் வேறுபாடுகள் இடதிலிருந்து வலதிலிருந்து என்றேனும் குறைந்தளவு பிரித்தறிந்து பேசமுடியாது, தமிழினி என்ற பேரைவைத்துக்கொண்டு கலெக்சன் வியாபாரம் பண்ணத்தானே நீங்களும் திரிகின்றீர்கள்? அடுத்தவனைத் தவறு என்பதாலே நீங்கள் எப்படி நியாயவாதிகள் ஆகின்றீர்கள் என்பதைச் சொல்லுங்கள்.


ஜெயன் தேவா ஃபேஸ்புக்கில் என்னைத் தடைசெய்திருந்தபோதுங்கூட, இவர்கள் எல்லோரையும் பார்க்கும்போது, அந்தாளின் அரசியல் ஒவ்வாதபோதுங்கூட, மனுசன் என்பேன்.


கொஞ்சமாவது, இரு புறத்தாருக்கும் சொல்வதுபோலக் கரிசனையும் மரியாதையுமிருந்தால், செத்த தமிழினியைத் துரியோதனன் சபையிலே நிறுத்திவைத்துத் துச்சாதனனாகவும் பீமனாகவும் மல்லுக்கட்டாமல் ஒதுங்குங்கள் பார்க்கலாம்.
-/.
ஒக்ரோபர் 22, 2015

No comments: