அமெரிக்காவிலே நன்றிநவிலல் நாளைச் சுற்றி வீடு, வீதி, கடைகளிலே வைக்கப்படும் அலங்காரவிளக்குகள் ஒளிசிமிட்டி, இயற்கை|செயற்கை நத்தார்மரங்களுடன் நின்று புத்தாண்டுநாளுக்கு ஒரு கிழமை கழித்து மீளப்பெட்டிக்குள்ளே போகும்.
பொதுவிலே முழுச்சுற்றுப்புறமெல்லாம் ஒளிப்பட்டிருக்கையிலே அதனோடு சேர்ந்துகொள்வது மகிழ்ச்சியான விடயமாகவும் குழுகாய உணர்வைத் தருவதாகவுமிருப்பதும் உண்மை. அதேநேரத்திலே வீடெனக் கட்டிக்கொண்டு குடிபுகுந்த ஆரம்ப காலத்திலே இவை வெறும் சடங்காகவே செய்த உணர்விருந்துகொண்டிருந்தது. அடுத்த தலைமுறை விழுதுகளை மகிழ்ச்சிப்படுத்தும் இழையாக இவற்றோடு ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும் அந்நியத்தன்மையை ஏற்றுக்கொள்ளவேண்டிய நெருடல்கூட இருந்ததுண்டு. குடியேறியாக, நன்றிநவிலல்நாளைப் பார்க்க முயல்கின்றபோதிலே, அதுபற்றிய அமெரிக்க ஆதிக்குடிகளின் பார்வை இன்னமும் சங்கடப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
சில ஆண்டுகளின் பின்னே, கார்த்திகை மாதத்தின் தமிழ்விளக்கீடும் மானம்பூவும் அமெரிக்க நன்றிநவிலல்நாளும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்திலே வருவதால், இரண்டுக்கும் சேர்த்து வீட்டுக்கு ஒளியேற்றுதாகக் கொண்டாகிவிட்டது. அதுபோல, புத்தாண்டுக்கொண்டாட்டம் கழிந்த இருகிழமைகளாலே தமிழ்க்குமுகாயவழி வரும் நன்றிநவிலல்நாளான தைப்பொங்கல் வருவதால், அதுவரைக்கும் அதே ஒளியைக் கொஞ்ச நேரத்துக்கேனும் இரவிலே ஏற்றிக்கொள்வதுண்டு (கடந்த ஈராண்டுகளிலே அதை முழுமையாகச் செய்ய முடியா உளநிலையிலே கோவிட் குழப்பம் செய்தபோதுங்கூட). இவ்வகையிலே வேர்கொண்ட உணர்வுக்குப் பங்கமில்லாது, புகுந்த நாட்டிலும் தமிழ் அமெரிக்கனாகப் பொருத்திக்கொள்ளமுடிகின்றது.
என்ன செய்வது? விழுதுகள் பலமாக வெளியே விழுத்தி நிலமூன்றித் தெரிந்தாலுங்கூட, நிலங்கீழே பார்வைபடாது ஆழவோடிக்கிடக்கும் வேர்கள்தாம் தொடர்ச்சியாக மரங்களைத் தாங்கிக்கொண்டும் நீரையும் பசளையும் கடத்திக்கொண்டும் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன; நிலத்துக்கு மேலாக வெளிவிரிந்த பச்சையமும் சூரியவொளியும் கரியமிலவாயுவும் மட்டும் மரத்தின் வாழ்வுக்குப் போதா!
காலம் அலையாய் அடித்துச் சேர்ந்தவிடத்தும் வாழ்ந்த வாழ்வின் தொடராய் நார்களைப் பிடித்தும் நாம் வாழ்ந்த வாழ்வின் தொடர்ச்சியெனப் பாவனை பண்ணப் பழக்கப்படுத்த, வாழ்வு பதட்டமின்றித் தொடர்கிறது.
தைப்பொங்கல் வாழ்த்து!
01/14/2022 வெ 00:36 கிநிநே.
No comments:
Post a Comment