சுசீலா தன்னுடைய இன்றைய வாழ்வாதாரத்துக்கு அல்லாடுவதற்குக் கிட்டின நிலையிலிருப்பதாக விரக்தியான குரலிலே கூறுவதையும் குரல் வளம் நொய்ந்துபோன நிலையிலேயிருப்பதையும் விழாக்களுக்கு அழைப்பவர்களெல்லாம் வாழ்நிலையைக் கண்டுகொள்ளாதிருப்பதையும் மறைமுகமாகச் சுட்டுவதையும் கேட்கமுடிந்தது. ரிக்ரொக்கிலே இன்னமும் இக்குரற்பதிவினைக் கேட்கமுடியுமென நம்புகிறேன்.
இச்செவ்வி குறித்து, சொன்னதை மாற்றிவிட்டார்களென்றோ சொல்லவந்தது அதுவல்லவென்றோ இவைபோன்ற வேறு கருத்துகளோ இனி வரக்கூடும். உண்மைபொய் ஒருபுறமிருக்கட்டும். பொய்யாயிருப்பின் மகிழ்ச்சி. பத்திரிகையாளர்கள் பரபரப்புக்குப்போட்டிருந்தால், மிகவும் குற்றமான விடயமுமாம். ஆனால், இச்செவ்வி உணர்த்தும்விடயமென்பது முக்கியமானது. புகழ் வெளிச்சம் திசை திரும்பி மங்கிப்போனால், பொருளாதாரநிலையிலே தக்கிக்க வைத்துக்கொள்ளாவிடின், வாழ்நிலை எத்துணை நிச்சயமற்றதாக எதிர்காலத்திலே ஆகக்கூடுமென்பதையே இது காட்டுகின்றது. அண்மையிலே தான் படமியக்கிய நிறுவனமான ஏவிஎம்மின் அலுவலகம் அருகிலேயே வீதியிலே வாழ்ந்து மறைந்த மாநகரக்காவல் இயக்குனர் தியாகராஜனின் வாழ்க்கையும் இதையே சுட்டுகிறது.
தற்கால நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என்போர் கல்வியறிவிலும் வாழ்க்கையைக் காணும்வகையிலும் தம் எதிர்காலத்தினைப் பற்றி மிகவும் கவனமாகக் கட்டமைக்கின்றவர்களாகவிருக்கின்றார்கள்; தமது வருமானத்தினை முழுக்கவு மேபடமெடுப்பதிலும் திரையுலகிலுமே கொட்டாமல், வேறு துறைகளிலும் பகிர்ந்து முதலீடு செய்கின்றவர்களாகவிருக்கின்றனர். ஹொலிவுட்டிலும் இதே தன்மையைக் காணலாம்; வில்லியம் ஷட்னர் பிரைஸ்லைன்.கொம், ரைன் ரெய்னோல்ட் மின்ற் மொபைல் என்று பலரைப் பார்க்கலாம். பழைய தமிழ்ப்பாடகர்களிலே ஏ.எம். ராஜாமட்டும் வாடகைவண்டிச்சேவை நிகழ்த்தும் (ஊபர் வகை) நிறுவனத்தை அக்காலகட்டத்திலேயே சமாந்திரமாக நடத்தியிருந்தார். மிகுதியான பலர் தம் துறைகளைத் தொழில்களாக மட்டுமில்லாமல், வாழ்வாகவும் எண்ணிக்கொண்டதாலும், வருமானத்தினை இப்போதிருக்கும் ஊதியப்பெறுதியிலே பெறாததாலும் கையிலே சேர்ந்த பணத்தை நிர்வகிக்குமளவுக்குக் கல்வியறிவோ பட்டறிவோ இல்லாமல், பிறரை நம்பிக்கையளித்ததாலும் கடைசிநேரத்திலே இந்திய மாநில அரசுகளின் கண்பார்வைக்காகக் காத்திருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது; இன்னமுமிருக்கின்றது.
இன்னொரு பக்கத்திலே, பழம்பாடகர்களை, நடிகர்களை அழைத்து நடுவர்களாகவோ சிறப்புவிருந்தினர்களாகவோ நிறுத்தி இருத்தி, "சார்!", “அம்மா” என்று கீச்சுக்குரலிலே கோணலாகவும் கொடுமையாகவும் முகச்சேட்டைகள் செய்யும் நிகழ்ச்சி நடத்துனர்களாலே இம்சைப்படுத்தும் காலிலே குனிந்து இளம்பாடகக்கற்றுக்குட்டிகளை நளினமாக ஒரு மூன்றுவிரற்றொடுகை வணக்கம் செய்யவைக்கும் தொலைக்காட்சிகள், அப்பழம்பாடகர்கள், நடிகர்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏதும் செய்கின்றவா என்ற கேள்விக்கான பதிலைச் சுசீலாவின் இச்செவ்வி ஓரளவு சுட்டியதெனலாம்.
இப்படியான பாடகர்களை, நடிகர்களைப் புலம்பெயர்நாடுகளுக்கும் வீடுகளுக்கும் கூப்பிட்டுக் கூடப் படமெடுத்துக்கொள்கின்றதை நண்பனொருவன் இன்னொரு குழுவிலே சுட்டியிருந்தான். எனக்கென்னவோ தன் வாழ்காலத்தின் அந்திமத்தைக் கண்காட்சிகளிலும் வியாபாரச்சந்தைகளிலும் கூட நிற்பதற்குப் பணம் பெற்ற புகழ்பெற்ற அப்பச்சே இந்தியர் ஜெரோனிமோதான் ஞாபகத்துக்கு வந்தார்.
சுசீலாவின் நிலை, செவ்வியிலே சொன்னவர் அவராயிருந்து, சொன்னதும் உண்மையாயிருப்பின், மிகவும் வேதனைக்குரியது; அவரின் பாடல்களை இனிமேலே கேட்கும்போது இச்செவ்வியிலே கேட்ட அவர்குரல்தான் முன்நின்று உறுத்தும்.
01/10/2022 தி 02:35கிநிநே
No comments:
Post a Comment