கௌரவப்பட்டங்களிலுங்கூட, சிவாஜிக்கு, செவாலியர் விருது கொடுத்தாலுஞ்சரி, கௌரவ கலாநிதிப்பட்டம் கொடுத்தால், அவை நியாயமானவையும் அவற்றுக்கான ஏற்புடைத்தவையுங்கூட. சொல்லப்போனால், அவரினாலே அவ்விருது வழங்குவோருக்குத்தான் அவரையறிந்தோரிடையே பெருமை! இது பேச்சுக்கல்ல; உண்மை! முறையான ஏட்டுவழிச்சீரான கல்வியறிவுமட்டும் ஒரு துறையிலே ஒருவரை அத்துறையிலே (குறிப்பாக, கலைத்துறையிலே) ஆக்கிவிடமுடியாது. அந்நிலையிலே விழுப்புரம் சின்னையா மன்ராயர் கணேசமூர்த்தி போன்றோருக்குக் கொடுக்கப்படும் கௌரவ கலாநிதிப்பட்டம் அவராலே சிறப்படையும். இராதாகிருஷ்ணனைப் போல ஆய்ந்து பெறாமலே டாக்டர் அப்துல் கலாமென்று டாக்டரை முன்னுக்கு வைத்துக்கொண்டிருந்த இந்தியாவின் ஜனாதிபதிக்குக் கௌரவம், அக்கௌரவ டாக்டர் பட்டத்தாலே வரவில்லை; ஆனால், அவர் சார்ந்த தொழில்நிர்வாகத்தாலும் நாட்டுப்பற்றினை முன்னாலே போக்ரான் சொட்டச்சொட்ட, ஆகாயம் விரியத் துருத்த நிறுத்தியதாலும் வந்தது. பட்டறிவாலே கொத்தனார்கள் அற்புதமாகக் கட்டமுடியும். அதற்காக, கௌரவப்பட்டம் வழங்கினால், அதை நாம் நக்கல் செய்யமுடியாது; கொத்தனாருக்குக் கொடுக்கப்படுவது, ஆய்வுப்பட்டக்கலாநிதியோ முனைவரோ அல்ல; அதே நேரத்திலே அவரின் அவர்சார்ந்த துறைக்கான நெடுங்காலப்பங்களிப்பினைக் கௌரவப்படுத்தக் கொடுக்கும் கௌரவ கலாநிதியை மறுக்கவும்முடியாது; அதேநேரத்திலே பத்துப்படங்கள் நடித்தவருக்குக் சல்லாறு கதீஸூ பட்டம்கொடுப்பதும் அதை எடுப்பதும் அவர்தம் சில்லறைகள் அதை மாட்டுப்பொங்கல் எருதுமாதிரி மாட்டிவிட்டுக்கொண்டு திரிவதும் கொடுமையும் சிறுமையுமாம்!
ஒரு பட்டமென்பது
பெறுகின்றவர், கொடுப்பவர் யாவாரென்பதாலேயே அதற்கான இடத்தைச் சமூகத்திலே பெறுகின்றது.
கணிசமாக, நிதர்சனமாக யாழ்ப்பாணத்தின் குறித்த காலகட்டத்தை, வாழ்வினையெழுதிய, பதிப்பித்த
டொமினிக் ஜீவாவுக்கு உலகத்திலேயெங்குமேயில்லாப் புதினமாக, கௌரவ முதுமாணிப்பட்டத்தினைக்
கொடுத்த யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் அறியாமையை முழுதாகவே நக்கல் செய்யலாம் – இழிவுபடுத்துதலுக்காகக்
கோபம் கொள்ளாப்பொழுதிலே. அவ்வவகௌரவ முதுமாணிப்பட்டம் என்பது தமிழ்ச்சமூகத்தாலேயே யாழ்ப்பாணப்பல்கலைகழகத்திலே
அதை வழங்கமுனைந்தவரை எள்ளி நகையாடமட்டுமே அறுதியிலே பயனானது.
கௌரவ கலாநிதிப்பட்டங்களையும் காலமாய்க் கிடந்து காய்ந்து ஆய்ந்து தேய்ந்து
பெற்ற கலாநிதி|முனைவர்|பண்ட்ராகர் பட்டங்களையும் ஒன்றெனக் குழப்பிக்கொள்ளக்கூடாது. (காசுக்கு, காசிப் புத்தகக்கடைகளின் பின்புறத்திலே
எழுதிக்கொடுக்கும் முனைவர், முதுநிலைப்பட்டங்களும் கிட்டும் காலத்திலேதான் நாம் வாழ்கின்றோமென்பதையும்
கூடவே நாம் உணரவேண்டும். எப்பட்டம் எவர் கை கொடுப்பினும், அப்பட்டம் மெய்யப்பட்டம்
அறிதல் அறிவென்க!) அப்படியான
கௌரவ கலாநிதிப்பட்டங்களைப் பெற்றுக்கொள்வோரிலும் புனலோடாப்பெரியோர்கள்
பேருக்கு முன்னால்,
டாக்டர் கவிஞர் என்றெல்லாம் தாமே மாட்டி தம் உற்றார், உடன்பிறப்புகளையும் காவென்று கொண்டு
திரிவதில்லை. இப்படியான பட்டங்களை கோகுல கிருஷ்ணா ஶ்ரீனிவாஸ் உலகப்பல்கலைக்கழகத்தாலே தந்தாலுஞ்சரி, அதுதான் சரியென்று வேல்ஸ் இளவரசர் தன் பல்கலைக்கழகத்தாலே தந்தாலும் மாட்டிக்கொண்டு
திரியும்போதுதான் வெட்கமாகும்; பட்டமாயிருத்தல் அழகு; குஞ்சஞ்கூட
ஏதோவோர் அழகெச்சம்! ஆனால், வாலாயிருத்தல் அறுத்தலழகு! அண்மையிலே
யாழ்ப்பாணத்திலேயிருக்கும்
கல்லூரிகளிலேயே அதிபர்கள் சிலர் அடையாளமற்ற மத்திய அமெரிக்கப்பல்கலைக்கழகத்திலிருந்து
கலாநிதி வாங்கி (த் தலையிலே) மாட்டிக்கொண்டிருப்பதாகச்
செய்தியொன்றை ஓர்
இணையக்கருத்தரங்கிலே யாழ்ப்பாணத்திலிருந்தே குளிர்மையாய் ஒரு
பேராசிரியர் சொன்னார். இதையெல்லாம்
பொருட்படுத்தக்கூடாது. எத்தனையோ ஒற்றை அறைக்கடதாசிப்பல்கலைக்கழகங்களிலே கலாநிதிப்பட்டம்
வாங்கிக்கொண்டு மாட்டிக்கொண்டு திரியும் நியூயோர்க் பத் திரிக்கை ஆஸ்வாமிகளுமிருக்கின்றார்கள்.
சமயம்
கிடைக்கும்போதெல்லாம், இந்த நோயுற்ற 'டாக்டர்'-களை எழுதும் துக்கடா
மஞ்சட்பத்திரிகைக்கட்டுரைக்கு முன்னாலும்
பின்னாலும் மேலாலும் கீழாலும் போட்டுக்கொள்கிறார்கள். யாழ்ப்பாணத்துப்பாடசாலை
ஓரிரண்டிலே அதிபர்கள் வாங்கிப் பூண்டுகொண்டாலென்ன? பூண்டுதான் அணியமுன்னமே ஊருக்கு
மணத்து விடுகிறதே!
இன்னொரு பக்கம்,
தாமிருக்கும் துறைக்கும் தொழிலுக்கும் அப்பாலேயான இடங்களில், தளங்களில், தருணங்களில், சூழலில், தனிப்பட்ட உறவுகளி்ல், வட்டாரங்களில்
இப்படியான கலாநிதி, முனைவர், பேராசிரியர், சிற்றாசிரியர்,
முதுமுனைவார், இளமுலைபோர், டாக்குத்தர், எஞ்சினியர் என்றெல்லாம் ஒரு துறையின் சிறப்பாளுமையை
இன்னொரு துறைக்கு இடப்பிரதிசெய்து விலாசம், பிரகாசம் தேடுகின்றவர்களை, இடப்பெயர்ச்சி
செய்யச் சாமரம் வீசுகின்றவர்களின் களங்களைக் கண்டால், ஒதுங்கிக்கொள்ளத் தோன்றுகின்றது.
அப்படியாகப் பூ எறிகின்றவர்கள் நண்பர்களாகவிருப்பின், தனியே அவர்களுக்குச் சுட்டிக்
காட்டமுடிகின்றது; மற்றைய காட்டுவழிக்கட்டறுபுரவிகளை ஓடிக்களையென்று விட மட்டுமேதான்
முடியும். [இவ்வகையிலே அண்மையிலே சி.சிவசேகரத்தின் கவிதைகள்மீதான பகிர்வுகள் குறித்த
அறிவிப்பு மிகவும் எளிமையானதும் நிகழ்வுநாயகர், பங்குபற்றுவார் பெயர்களுக்கு மேலும்
கீழும் குளிர்ச்சட்டைகள் அணிவிக்காமல், பரிசுத்த நிர்வாணச்சிறப்போடிருந்தது மகிழ்ச்சிக்குரியது,
சம்பந்தப்பட்ட சிலரின் அரசியலுடன் முற்றாவொவ்வாமையென்றபோதுங்கூட].
இதற்கு எதிர்முனையிலே,
ஒருவர் சார்ந்த துறைகளைப் பற்றிப்பேசும்போது, கற்கைநிலைகளின், காலப்பட்டறிவுச்சேகரிப்புகள்
மீதான உழைப்பின் மேலே கட்டப்பட்ட, சம்பந்தப்பட்டார் உள்ளடக்காத துறைவிற்பனராலே சீர்தூக்கி,
அலசிப் பார்த்துப் பெறப்பட்ட தகுதிகளையும் உணராது, அறியாது, எல்லாமே ஒன்றுபோலப் “பட்டம்”
அளிப்பவரும் அழிப்பவரும் எரிச்சலையூட்டுகின்றார்கள். வில்லை எடுத்தோரெல்லாம் வில்லாதிவில்லரல்லர்!
முறையான கல்வியெல்லாம் சும்மா அட்டைக்கத்தியாலே
வெட்டிவீழ்த்திவிடலாமென எண்ணுமளவுக்கு வெறும் ஏட்டுச்சுரைக்காய்களுமல்ல!
இன்னோர் இலங்கைத்தமிழ்வகையினர்
உண்டு; வைத்தியக்கலாநிதி என்பதை இக்காலப்பயன்பாட்டிலே வைத்துக் குழப்பும் மாங்காய்ச்சொதியினர்
இவர். வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி என்போர் தொழில்சார்ந்த படிப்பினைக்
கொண்டு அதற்கான பட்டங்களைப் பெற்றவர்கள். கலாநிதி என்பவர் அவர் சார்ந்த துறையிலே அறுதிபட்டத்தினை
ஆய்வு சாரச் செய்து முடித்துப் பெற்றவர். அமெரிக்க எம்டி பட்டத்துடன் சேர பிஎச்டி பட்டமும்
என இணைப்பட்டம் பெறுகின்றவர்களிருக்கின்றார்கள்; இவர்களுக்கு வைத்தியர்-கலாநிதி என்பது
பொருந்தும்; ஆனால், தனியே எம்பிபிஸ் பட்டத்துடன் வைத்தியராகப் பணியாற்றுகின்றவர்களை
வைத்தியகலாநிதிகள் என்பது அவர்களையும் தமிழையும் மதிப்பிழக்கச் சொல்வதுபோலவென்றே படுகின்றது.
மருத்துவர் நண்பர்கள் அடிக்கவரவோ அல்லது டாக்குத்தர், டொக்டர் (தமிழ்நாட்டு கம்பித்தொல்லைக்காட்சியிலே
கரண்ட் அடிக்கத் தொங்கும் செம்ம மாஸ்பாய்ஸ், “டாக்டர்” என்று வாசித்துக் கொல்லவும்!!)
என்பதன் இலத்தீன்மூலத்துக்குப் போய் பாதிரியாராகவோ வேண்டாம். இது மொழியை நாம் எவ்வகையிலே
பிறழப் புழங்குகின்றோமென்பதைச் சுட்டவே சொல்கிறேன். பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும்
இதேபோன்ற ஒற்றைத்தட்டுச்சமநிலைப்படுத்தலிலேதான் இலங்கை|புலம்பெயர்குமுகாயங்களிடையே
இடம்பெயர்க்கப்பட்டுச் சுட்டுத்தள்ளப்படுகின்றார்கள் (திரும்ப, முன்னைய பந்தியினைப்
போய் வாசித்து வந்தால், நீங்களே முடுக்கின பொறுப்பாளி! விளக்கு எரியட்டும்!)
ஆக, முனைந்து
பெற்றாரெல்லாம் முனைவார்; கல்லாவால் பெற்றாரெல்லாம் கல்லாநிதி எனக் கொண்டு அமைதி அடைவீராக
J
சரி! இதுவரை
வந்ததுதான் வந்தவர்கள்,
வேல்ஸ் சிங்களமச்சான் ஆட்டத்தை
நேயர் விருப்பத்திலே ஐ!சரி! என்று கேட்டுவிட்டுப்போகலாம்!
https://www.youtube.com/watch?v=pJFaLDFQWjA
01/11/2022 செ
20:50 கிநிநே.
No comments:
Post a Comment