விடுதலைப்புலிகளின் எழுச்சிப்பாடல்களுக்குக் குரலாகவிருந்த ஈழத்தின் பாடகர் சாந்தன் மறைந்திருக்கின்றார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயிருந்த பகுதிகளிலே வாழ்ந்திராத நான், அவரைக் குறித்து 2003 இன் பின்னாலே இணையத்திலேதான் வாசித்தறிவேன்; அவரினைப் போன்ற சுகுமார், மேஜர் சிட்டு ஆகியோரையுங்கூட. பாடல்களை எவர் பாடியதெனப் பார்க்கும் வழக்கமில்லாததாலே, அவர் பாடியவை எவையெனவும் அறியேன்.
2009 இன் பின்னர் அவர்மீது டக்லஸ் தேவானந்தாவின் ஆதரவு மேடையிலும் பாடினார் என்று தமிழ்த்தேசியத்தின் ஒரு கூறு விமர்சித்தபோது, போராட்டத்துக்காகத் தன் இரு பிள்ளைகளைக் கொடுத்த ஒருவர் நொருங்கியிருக்கையிலே நெருக்கப்பட்டால், என்ன செய்யச்சொல்கின்றீர்கள் என்றுதான் கேட்கத் தோன்றியது. ஊரார் பிள்ளைகளுக்கு வந்தபோதெல்லாம் கவிதை புனைந்துவிட்டு, தம் பிள்ளைகட்கென்று வந்தபோது, அந்நியர் ஏடுகளுக்கு "அரசியலிலே பிறழ்ந்தவனுக்குக் கூற்றம் வரும்" என்பதுபோல நிறம் மாற்றிக்கொண்டு கட்டுரைகள் எழுதி அரசு ஆதரவு மேடைகளிலே ஏறி இணக்க அரசியலின் தேவை பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர்களுக்கிருந்த வாழ்க்கை சாந்தன் போன்றோருக்கு வாய்க்க அவர்கள் தேடிக்கொண்டிருந்ததில்லை என்றே தோன்றுகிறது. இவ்வெண்ணம், அவரை அறியாதபோதும் பிபிஸியிலே அவர் மனைவி சென்ற ஆண்டு கொடுத்த செவ்வியொன்றிலே உள்ளே நோகவும் குற்றவுணர்வு ஏற்படவும் கேட்க நேர்ந்தபோது தோன்றியது. இதுபோன்ற கணங்களிலே அரசியல் பேசாத ஆமையாக ஓட்டுள்ளே முடங்கிவிட மட்டுமே முடிகிறது.
அந்த மண் எங்களின் நொந்த மண்
அதன் எல்லைகள் மீறி யார் வராதவன்?
No comments:
Post a Comment