உகந்தை முருகன் |
அக்குறிப்பின் பின்னாலான கருத்துகள், ஈழத்தமிழருக்கு மதமே வலி தீர்க்கும் மருந்தானது ( உளத்தை ஆற்றுப்படுத்த, மதம் என்ன கேரளா கஞ்சாவா, கன்னமாகக் கள்ளமின்றி இறக்கு-மதி செய்யப்பட?) என்பது முதல் இந்த மத வியாபாரத்திலே அவர்களுக்கும் வரும்படியிருக்கின்றது என்பதுபோலான வழிகளிலே எழுதப்பட்டிருந்தன.
ஆனால், ஈழத்தவரை இவ்வகையிலே பொதுமைப்படுத்த முடியாதென்று பார்த்தவகையிலே சொல்வேன்.
இந்து சமயம், சிவசேனை, லக்ஷ்மிநாராயணர், ஹனுமார், சாஸ்தா என்ற வடிவுகளிலே ஈழத்தின் மரபுவழியார்ந்த (இன்னமும் ஆறுமுகநாவலரின் வெள்ளாளசா(ரத்)தியம் ஆழச் செறிந்திருந்தாலும்) சைவத்தின் திருவுக்கு ஶ்ரீ சேர்க்கும் ஹிந்(திய)த்துவா மேலாதிக்கத்தையும், பறை என்ற பேரிலே தமிழகத்தின் "ரபான்" பறையினை நுழைத்து ஈழத்தின் பறை வடிவினைக் கெல்லிப் பெயர் பெயர்க்கும் இந்திய ஊடுருவலின் இன்னோர் ஒத்தோடு வடிவினையும் அமைப்பு+அரசியலிலே பிளந்திருந்தாலும் எதிர்க்கும் ஈழத்தவரையும் சுற்றிப்பார்த்தால், அதேயளவிலே காணலாம். இதைத் தொடர்ச்சியாக இணையத்திலே எழுதிக்கொண்டிருப்பவர்களைக் காணமுடியும்.
பொங்கல், காளிகோவில், திருகோணமலை |
இன்னொரு கோணத்திலே பார்த்தால், சாதாரணமாக அரசியலின் கூறாக சமயத்தினைக் காணாத ஈழத்தமிழரொருவருக்கு இப்படியான சமய (அதாவது தமிழகத்தின் பயன்படுபதத்தினைப் போட்டால், "மத") உள்நுழைப்பு, ஊருடுவல் பற்றிய அருட்டலும் விழிப்பும் ஏற்படவேண்டிய தேவை இருப்பதில்லை; பேசுமொழி, அதுசார் நிலம், தேசம், தேசியம் அளவிலான ஒடுக்குதலுக்கு உள்ளானதாலே மொழி நுழைப்பினைப் பற்றிய அருட்டலும் எச்சரிக்கை உணர்வும் கொண்டிருப்பவர்களுக்கு மதம் சார்ந்து இதுவரை நாள் இருந்ததில்லை.
கிளிநொச்சி |
இன்றைக்கு, தென்னாடுடைய சிவனே போற்றியிலிருந்து உணராமலே ஹிந்துத்துவாவின் ஷிவசேனாவுக்குள் இழுக்கப்பட்டிருக்கிறபோதிலே, முதலீட்டுச்சாமியார் கால்களிலே வீழ்கின்ற நிலையிலே அதை உள்நாட்டிலேயும் போன நாடுகளிலேயும் பெரும் மற்றைய மதம் சார்ந்த "அச்சுறுத்தலுக்கு" மாற்று அமைப்பாகவே தம்மை நிலைபடுத்தக் காண்கின்றார்கள் என்பேன். ஈழத்திலே, குறிப்பாகக் கிழக்கிலே, மொழிசார் நில & தேசியப்பிரச்சனை, மதம்சார் பாதுகாப்பைத் தனக்குக் கருவியாகக் கொள்ளும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அரசமரத்தை வெட்டுவதுமுதல், பழங்காலத்துச்சிவாலயங்களைத் தேடிக்கண்டு புனருருத்தாரணம் செய்வதுவரை தம்மிருப்பினை நிலைப்படுத்துவதற்கான தந்திரோபாயமாகவே கொள்ளப்படுகின்றதாகத் தெரிகிறது. திருகோணமலை, மூதூர் மாவட்டங்களிலே இதனைத் தெளிவாகக் காணலாம்.
சிவசேனை ஈழத்தின் கிழக்கிலேயே அழுத்திக் காலூன்றி வளர்வதாகத் தெரிகின்றது; வடக்கிலல்ல. ஈழத்தின் கிழக்கிலே தமிழர்கள் என்ற வடிவிலே ஒடுக்கப்படுவதற்கு எதிர்ப்பினைக் காட்டாமல், தமிழர்களே ஒடுக்குகின்றார்கள் என்ற வகையிலே பேசிக்கொண்டிருக்கும் தலித்திய, கிழக்குப்பிரிவினைவாத ஒத்தோடிகளும் ஶ்ரீலங்கா, அகண்ட்பாரத் அரசுகள்கூடச் சேர்ந்து மறைமுகமாக இப்படியான சிவசேனாக்களிலே வளர்ச்சிக்கு உரம்போட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்றால், மிகையல்ல.
அண்மையிலே, மட்டக்கிளப்பிலே தமிழர் நிலம் பறிபோவதுபற்றியும் தமிழ் அரசாங்க ஊழியர்மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் பற்றியும் யாழ்ப்பாணவெள்ளாளச்சைவமேலாதிக்கம் பற்றி மட்டுமே அறிக்கைவிட அமைக்கப்பட்ட ஶ்ரீலங்கா/இந்திய அரசுகளின் தேவ ஊழிய அமைப்புகள் வாய்களையே திறக்காமலிருப்பதுதான் இப்படியான சிவசேனாக்களைக் காலும் வேரும் ஊன்ற வைக்கின்றதென்பதைக் காணவேண்டும்.
கேதீஸ்வரம் |
புலம்பெயர்ந்த பொருளாதார வசதிகொண்ட ஈழத்தமிழரின் பணக்காரச்சாமியார்மோகம், சாயிபாபாவிலே அவர்கள் கொண்டிருந்த அந்தக்காலத்து மோகத்தின் தொடர்ச்சியாகவே கொள்ளவேண்டும். என்ன கார் கொண்டுபோய்க் கண்ட யோகர் சுவாமிகளிலிருந்து புட்டபர்த்தி விஜயம்+ வியாழன் பஜனை சாயிபாபா ஊடாக கணியுகப்பெருஞ்சல்லிச்சாமியார்ஜிகளுக்கு விரிந்திருக்கின்றது. அவ்வளவே! ஈழத்திலேகூட, சிவசேனைக்கு முன்னாலேயே, வாழ்தலுக்கான வழியைச் சொல்கிறேனென்று இரவிசங்கர் புகுந்துவிட்டார். ஆனால், நம் ஒத்தோடி அரசுப்போராளிகளுக்கு, அடிக்க அப்பாரத் மஹானிலும்விட, தமிழ்த்தேசியத்தைப் பேசிக்கொண்டிருந்த சச்சிதானந்தத்தின் போசகத்திலேயான சிவசேனா வசதியான ஒரு கல்லில் பல மாங்காய்கள். அவ்வளவுதான். இதிலே திட்டும், திட்டுவாங்கும் எல்லோருக்கும் இயக்கும் நாதனான நட்ட கல் அகண்ட இந்தியாதான் என்பதுதான் முரண்நகை.
இங்கு இன்னொரு முதன்மையான விடயத்தைக் குறிப்பிடவேண்டும். தமிழ்நாட்டிலேயே, ஹிந்துத்துவாவின் கோரத்துக்கு ஈடான அயோக்கியத்தன்மை பொருந்திய அரசியல் இஸ்லாம், பௌத்தம், அரசுசாராநிறுவனக்கிறீஸ்தவம் இவற்றின் அகோரங்களை இந்துத்துவாவை எதிர்க்கிறேன் பேர்வழி என்ற பேரிலே விமர்சனமின்றி ஆதரிக்கும் முற்போக்குக்கூட்டணிகளைப் பெருமளவிலே நாம் விமர்சிப்பதில்லை. அகண்ட பாரதத்திலே ஹிந்துத்துவாவின் அரசியற்பலத்தை எதிர்க்க எதிர்மத அடிப்படைவாதத்தை விமர்சிக்காமலிருப்பதுதான் இப்போதைக்குச் செய்யும் சரியான முடிவு என்பவர்கள், சிங்கத்துக்குப் பதில், கரடிகளைக் கட்டிக்கொள்கின்றார்களென்பேன்.
புதுக்குடியிருப்பு |
அ. மார்க்ஸ் போன்ற யோக்கியர்கள் இப்படியாள குளறுபடித்திரிபுவாதிகள். அடிப்படைவாத இஸ்லாத்தினை விமர்சனமின்றி ஆதரிக்கும் அ.யோக்கியர்களையும் அம்பேத்கார் பேரிலே கொடுமையான அரசியற்பௌத்தத்தினையும் ஆதரிக்கும் தலித்தியப்போராளிகளையும் முற்போக்கு நற்போக்கடிப்பாளர்களைச் சுட்டுகிறேன். விமர்சனமற்ற என் எதிரிக்கு எதிரி நண்பர் என்ற பேரிலே இந்த ஆதரிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. இப்படியான விமர்சனமறுமலட்டுத்தன்மை திராவிடக்குஞ்சுகளிலிருந்து தமிழ்த்தேசியக்குருமான்களைவரை பரவியிருப்பது இன்னமும் மோசமான நிலமை. இந்நிலமை ஈழத்தவரிலே அல்ல, தமிழ்நாட்டிலேதான். விரலை அங்கேயும் சுட்டவேண்டும். வெறுமனே, "சாதியம் = தமிழ்த்தேசியம்", "தமிழ்த்தேசியம் = இந்துத்துவா" என்ற வகையிலே சமனிலியான சமன்பாடுகளைப் போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ளும் தமிழ்நாட்டின் திராவிட, முற்போக்கு, தலித்திய அணிகள் தம்மைத்தாமே சிந்தனைப்புற்றுநோய்க்குச் சோதனை செய்து பார்க்கவேண்டும்.
இவ்விடத்திலே இதற்குச் சமாந்திரமான ஈழத்தவரின்மீது தமிழகத்தின் முற்போக்காளர்களாலே வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டினையும் மறுதலிக்கவேண்டும்.
ஜெயமோகனின் காலிலேயும் காலச்சுவடு, கிழக்கு கைகளிலும் மாலன் அரவணைப்புகளிலும் சாநிக்குச் சரக்கு வாங்கிக்கொடுப்பதிலும் முண்டியடித்துக்கொண்டிருக்கும் ஈழத்து/ஶ்ரீலங்காவின் சிகாமணிகளுக்கு எதிர்நிலையிலே குரலைக் கொடுத்துக்கொண்டிருக்கும் (புலம்பெயர்) ஈழத்தவரும் இருப்பதைத் தமிழகத்தின் முற்போக்காளர் என்று சொல்கின்றவர் மறந்தும் ஏன் சுட்டுவதில்லை?
சாதியமறுப்பு, மதமறுமணங்களை புரட்சிவிழாக்களும் புதுமைச்செய்திகளுமாக இன்னமும் வெளியிட்டுக்கொண்டிருக்கும் தமிழகத்தின் முற்போக்காளர்கள் விரைவிலே விமர்சனக்கரையேறவேண்டும்
எப்போதோ முடிக்க, பட்ட காரியம்;
இனியொரு பொல் ஆப்புமில்லை
- புல்லுமில்லை.
No comments:
Post a Comment