ஶ்ரீலங்கா அரசுத்தலைவர்
தேர்தலைப் பொறுத்தமட்டிலே கஜகும்பல்.எதிர்.மும்மூர்த்திகள்.எதிர்.கண்ணகியணி.எதிர்.அரசுத்துணைக்குழுக்கள்
என்று வடகிழக்குத்தமிழ்க்கட்சிகள் பெயர்களிலே “இந்த வேட்பாளருக்கு வாக்குப்போடு! /
எந்த வேட்பாளருக்கும் போடாதே! / இருக்கிற எல்லா வேட்பாளர்க்கும் புள்ளடிபோடு!” என நிகழும்
வெட்டுக்குத்துகளை, சதிதிட்டக்கருதுகோள்களை விட்டுவிடலாம். இவற்றின் தாக்கம் வாக்குவங்கியடிப்படையிலே
கணிசமானதானபோதுங்கூட, அதற்கப்பால் வடகிழக்குத்தமிழர்களுக்கும் ஓரளவு தமிழ்ப்பேசும்
முஸ்லீம்களுக்கிடையுமான வட்டத்துக்குள்ளேயே பேச்சும் விவாதமுமாக அடங்கிப்போவது. மலையகத்தமிழ்க்கட்சிகளின்,
முஸ்லீம் கட்சிகளின் கூட்டும் பிரிப்பும் அவ்வாறே இருக்கப்போகின்றது. ஆனால், மலையகத்தமிழ்க்கட்சிகள்,
முஸ்லீம் கட்சிகள் ஆட்சியாளருக்குக் கொடுக்கும் அழுத்தத்தை இப்போதைய அமைப்பிலே வடகிழக்கின்
எக்கட்சியுங்கூட ஏற்படுத்தமுடியாது என்பதுதான் நடைமுறை நிலை.
அதற்கப்பால், பெரும்பான்மைச்சிங்களவரோடு
ஊடாடிச் செயலாற்றுவதாகச் சொல்லப்படுகின்றவர்களிடமிருந்து வரும் கருத்துகள்தாம் இத்தேர்தலைப்
பொறுத்தமட்டிலும் எதிர்காலத்தைப் பொறுத்தமட்டிலும் தமிழ்ப்பேசும் மக்களின் நிலைப்பாடுகள்
சிங்களவருக்குப் புரியவைக்கப்படுவதிலே முக்கியமாகின்றன. ஆனால், இப்படியான ஆட்களின்,
அமைப்புகளின் குரல் எத்துணை செறிதாக, கூர்மையாக ஒலிக்கின்றது என்பது –ஆட்களில் அல்ல,
ஆனால், அவர்கள் அமைத்துக்கொண்ட ஒரு வழிக்கூட்டுகளில்- நம்பிக்கையைத் தரவில்லை. உதாரணத்துக்கு,
சாந்தி சச்சிதானந்தம் மையம்(1), ந. சுசீந்திரன் குரூப்(2), ரயாகரன் அண்ட் கோ (3) இவர்களின்
ஶ்ரீலங்கா அரசுத்தலைவர் தேர்தலுக்கான ஆட்சேர்ப்பு விஞ்ஞாபங்களைப் பார்க்கலாம்; இவற்றைப்
பார்க்கும்போது, இரண்டு வரிகள் ஞாபகம் வருகின்றதைத் தவிர்க்கமுடியவில்லை.
அ. இணையத்திலே
இன்னமும் கேட்கக்கூடியதாகவிருக்கும் பழைய புலிகளின் பாடல் வரியொன்று; “நம்புங்கள்;
நாளை தமிழீழம் மலரும்.”
ஆ. அமெரிக்கச்சந்துகளிலே
வாழிடமற்ற குடிகாரர்கள் தாங்கிநிற்கும் காகித அட்டையின் வாசகம்; “Spare me a
Dollar! Why lie? For Beer!”
சாந்தி சச்சிதானத்தின்
கட்டுரை, “தமிழ்மக்கள் மைத்ரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்கவேண்டும்” என்ற கருத்தை முன்வைத்துப்
பேசுகின்றது; அதிலே, அவரின் ஒரு கருத்து, “தமிழ்ப்பேசும்மக்களைவிடச் சிங்களமக்களே மிகவும்
பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்” என்று சொல்லவருகின்றாரோ என்றதுபோல, “வட பகுதியில் மட்டுமா
பயம்? தென்பகுதியிலும்தான். இங்கு தமிழில் எதனையும் எழுதித் தப்பிக்கொண்டு போகலாம்.
தமிழ் மக்களின் அபிப்பிராயம் ஒன்றும் தமது ஆட்சியைப் பாதிக்காது என்கின்ற ஆட்சியாளர்களின்
அலட்சியமே இதற்குக் காரணமாகும். ஆனால் ஆங்கிலத்திலோ சிங்களத்திலோ எழுதுபவர்களுக்கு
அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லையாகும்.” என விழுந்திருக்கின்றது; மனித உரிமைகள்
ஆய்வுமையத்தினை நடத்தும் ஒருவரிடமிருந்து இப்படியாக உண்மைக்குப் புறம்பானதாக வரும்
வாதத்தினை இங்கே பேசும்பொருள் அதுவல்லாததாலே விட்டுவிடலாம்; அண்மையிலே வந்த அல் ஜஸீராவின் Viewfinder Asia - News from Jaffna (4) இலே தாட்சாவின்
செவ்வியிலே பூடகமாகச் சொல்வதைச் சாந்தி சச்சிதானந்தம் காணாதவராகவிருப்பார் என்று எண்ணவில்லை.
முடிவாக, அவரும்
சுசீந்திரன் உள்ளடங்கிய வெளிநாட்டிலே வாழும் ஶ்ரீலங்கர்களின் அறிக்கையிலே வருவதுபோல,
“மைத்ரிபால வருவதாலே தமிழர்களுக்குப் பெருமாற்றம் வரும் என்று சொல்லமுடியாது; ஆனால்,
ஒரு ஜனநாயக வெளி ஏற்படக்கூடும். அதனைவைத்து, LLRC இன் தீர்வினையேனும் நடைமுறைப்படுத்தலாமா
என்று எதிர்பார்க்கவேண்டும்” என்பதாகவே முடிகின்றது.
சாந்தி சச்சிதானத்தின்
கட்டுரையோ வெளிநாட்டிலே வாழும் ஶ்ரீலங்கர்களின் கூட்டறிக்கையோ “நம்புங்கள் நாளை மலரும்
தமிழீழம்” என்ற கோஷமாக,”முழுச்சரணாகதி” தத்துவமாக, ‘மாற்றீடாக மைத்ரிபாலவை ஏற்றுப்
பார்க்கலாம்’ என்ற நம்பிக்கையில் மட்டுமே தொலைந்துவிடுகின்றது. குறைந்தது, "நாளை
மலரும் தமிழீழம்" என்பதேனும், சரியோ தவறோ அதற்கான சிந்திப்போடும் செயற்றிட்டத்தோடும்
நடைமுறை முன்னெடுப்போடும் சமாந்திர வெளிப்பாடாக, வெறும் "நம்புங்கள்" என்பதுக்கும்
அடுத்த நடவடிக்கைக்குப் பின்னாலேயே வந்தது.
பெரும்பான்மைசமூகத்திடம் தமிழ்ப்பேசும் மக்களின்
இன்றைய நிலையும் அவலமும் இவைதாம் என்று சொல்லப்படக்கூட எதுவிதமான முயற்சியும் எடுக்கப்படாததாகவே
தெரிகின்றது. சம்பந்தப்பட்டவர்களின் முயற்சி உளப்பூர்வமானதும் நேர்மையுடைத்ததுமே என்று
கொள்கின்றவர்களுக்குக்கூட, மைத்ரிபாலவுக்கான ஆதரவுக்கூட்டணியிலிருப்பவர்களின் சிறுபான்மையினமக்களின்
மீதான கடந்தகாலசெயற்பாடுகளின்மீதான அவர்களின் விளக்கத்தினையோ விமர்சனத்தினையோ எதிர்பார்க்காமல்,
தற்போதைய தேர்தற்காலச்செயற்பாடுகளிலுங்கூட அவர்கள் சிறுபான்மையினர் பற்றிப் பெரும்பான்மையினரிடத்திலே
என்ன பேசுகின்றார்கள் என்பதை விமர்சிக்காது, ஒற்றைப்பாதை ஆதரவினைக் கொடு என நிற்பதுதான்
உறுத்தலாகவிருக்கின்றது. மேலும், இவர்கள் தொடர்ச்சியாக தமிழ்ப்பேசும்மக்களிடம் சிங்கள
அரசியல்வாதிகளினது பெரும்பான்மையினருக்கான கருத்துகளையும் பாதிக்கபட்ட சிங்களமக்களினது
பதிந்த துயர்களையும் கொண்டு வந்து கொட்டும்போது,– கொல்லப்பட்ட, காணாமற்போன, குடியகற்றப்பட்ட
- தமிழ்ப்பேசும்மக்களின் பாதிப்புகளைச் சொல்லும் எத்தனை செய்தி, விவரணத்துண்டுகளைக்
கொண்டு சென்று சேர்த்திருக்கின்றார்கள்? சேர்க்கமுடியவில்லையா? இவர்களுடன் கூட்டாகக்
கையொப்பம் வைத்திருக்கும் சிங்களச்செயற்பாட்டாளர்களின் தேர்தலுக்கு முன்னான, அப்பாலான
தமிழ்ப்பேசும்மக்களின் சுயநிர்ணய உரிமை, குடியேற்றம், போரின்போது நிகழ்ந்த அழிவுகள்,
வன்முறைகள் தொடர்பான நிலைப்பாடுகள் என்னவென எங்குமே வெளிப்படையாக விமர்சிக்கப்படவில்லை.
ஆக, தேர்தலுக்கான ஒரு வசதிக்கூட்டாகவே ஆகி முடிந்துவிடுகின்றது. தேர்தலின்பின்னாலே,
மைத்ரிபாலவோ அவரினைத் தாங்கி நிற்கும் அரசியல்வாதிகளோ, அரசியற்கட்சிகளோ தமிழ்ப்பேசும்
மக்கள் குறித்து நூறுநாட்களுக்குள்ளே இதுவரைநாள் அரசின் செயற்பாடுகளிலிருந்து மாறாநிலைப்பாடுகளையே
கொண்டிருந்தால், ஜனநாயகவெளியினை ஏற்படுத்த முயல்கின்றவர்களின் செயற்பாடுகள் எவையாக
அமையும். இவற்றைப் பற்றியேதும் பேசவோ அவற்றுக்கான செயற்றிடங்களை முன்னிடவோ இவர்கள்
தயாராக இல்லாததுதான், இதை மைத்ரிபாலகூட்டணிக்கு வசதியான ஒரு தேர்தலுக்குமட்டுமேயான
வெறுங்கூட்டாக, “Spare me a Dollar! Why Lie? For Beer” என்பதாக முடித்துவிடுகின்றது.
இந்நிலையிலே மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணிக்கும் மைத்ரிபால ஶ்ரீசேனவின் கூட்டணிக்கும்
என்ன வேறுபாடு?
இராயகரன் கூட்டத்தார்
முன்னெடுக்கும் முன்னிலைச்சோசலிசக்கட்சியின் வேட்பாளர், துமிந்த நாகமுகவோ அக்கட்சியின்
தலைவர் குமார் குணரட்டினமோ இதுவரை நாள் தமிழ்ப்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றி
எதுவுமே பேசத் தயாராகவில்லை அல்லது அவர்கள் அமைக்கும் ஆட்சியிலே அதற்கான பேச்சே அவசியமில்லை
என்பதாகவே காலடியினை ஒரடியும் எடுத்துவைக்காமல் “இன ஒடுக்குமுறையை ஒழிக்க, பொருளாதார
ஒடுக்குமுறையை ஒழிப்பதே வழி” என்பதுபோல சூத்திரமாக முடித்துவிட்டுப்போய்விடுகின்றார்கள்.
அதற்குமேலே, எதையுமே பேசியிருப்பதாகத் தெரியவில்லை.
தனிப்பட்ட அளவிலே,
ஒன்று தமிழ்ப்பேசும் மக்கள் சார்பிலே அடையாளத்துகேனும் ஒரு வேட்பாளரை நிறுத்தியிருக்கவேண்டும்
(கொப்பேகடுவ, ஜேஆர் நிற்கையிலே குமார் பொன்னம்பலம் நின்றதுபோல); அல்லது, குறைந்தளவு
தமிழ்ப்பேசும்மக்கள்மீதான ஒடுக்குமுறையினைப் பற்றி, இங்கொன்று அங்கொன்று பேசாது, போரினை
நடக்கும்போதே அன்றைக்கும் எதிர்த்து இன்றைக்கும் தமிழ்ப்பேசும்மக்களின் சுயநிர்ணய உரிமையினை
ஏற்றுக்கொள்ளும் சிறிய இடதுசாரிக்கட்சிவேட்பாளர்களின் நேர்மைக்கு நன்றியாகவும் தமிழ்ப்பேசும்மக்களின்
கருத்து அரசியலைப் பொறுத்தளவிலே இதுதான் என்று உரைப்பதற்காக, ஶ்ரீதுங்க போன்றவர்களை
ஆதரித்திருக்கவேண்டும். வெளிநாடுகளிலே வாழும் ஶ்ரீலங்கர் குழு, இப்படியான இடதுசாரிகளிலே
கட்டும் பந்தயம் தோல்விக்கானதென்பதாலேயே மைத்ரிபாலவினை ஆதரிக்கின்றோம் என்று ஓர் அறிக்கையிலே
சொல்லியிருந்தாலும் (அறிக்கையின் பின்னைய வடிவத்திலே இக்குறிப்பினை என்னாலே காணமுடியவில்லை),
மைத்ரிபாலகூட்டணியிடம் “தமிழ்ப்பேசும் மக்கள் நிலை தொடர்பாக, மஹிந்த ராஜபக்ஷ கூட்டணியிலிருந்து
இப்படியாக நீங்கள் வேறுபடவேண்டும்” என்று உறுதிமொழி பெற்றுக்கொள்ளாத, செயற்றிட்டமற்ற,
முன்நிபந்தனையற்ற, வெறும் நம்பிக்கை அடிப்படையிலே வாக்கிடத் தமிழ்ப்பேசும்மக்களைக்
கேட்பதைவிட இஃது எத்துணையோ மேலானதாகும். இவ்விடத்திலே, மஹிந்த ராஜபக்ஷவின் (மைத்ரிபாலவின்)
அரசின் தமிழ்ப்பேசும்மக்கள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகளால், அவருக்கும் எதுவித பங்கமும்
வர என்னாட்சியிலும் விடேன்” என்ற கருத்தினை வெளியிட்டும் “ ஆட்சிக்கு
வந்தால், நிறைவேற்று ஆட்சித்தலைவர்நிலையினை நீக்குவேன்” என்பதை இன்னமும் திடமாகச் சொல்லாமலும்
"வடக்கிலிருந்து இராணுவத்தினை விலக்கமாட்டேன்" என்பதைத் திடமாகச் சொல்லியும்
(5) மைத்ரிபால ஶ்ரீசேன இருக்கின்றார் என்பதைக் குறிப்பிடவேண்டும்.
நான் சொல்வது,
இன்னாருக்குத்தான் தமிழ்ப்பேசும்மக்கள் வாக்கிடவேண்டும், வேண்டாம், எவருக்குமே வாக்கிடவே
வேண்டாம் என்று பட்டியலிடுவதற்காகவல்ல. தமிழ்ப்பேசும்மக்களை அரசியலளவிலே முன்நிபந்தனையிட்டு,
ஆட்சிக்குவரப்போகின்றவரை இறங்கிவரச்செய்யும் வாக்கினாலே அழுத்தமேற்படுத்தும் குழுவாக
மேம்படுத்தாமல், இதுவரைநாள் ஒடுக்கினார் மாறுவார் என்ற வெறும் நம்பிக்கையைமட்டுமே வைத்து
வாக்களியுங்கள் என்று கேட்கையிலே ஏற்றுக்கொள்கையிலே இன்னமும் தமிழ்ப்பேசும்மக்கள் தமக்கு
இருக்கும் பலத்தினைக்கூடச் சிதறடித்துக்கொண்டு சிறுமைப்படுகின்றோம் என்பதைச் சுட்டவே!.
“A known ghost
is neither better nor worse than an unknown devil as the ghost has already hurt
us and the devil has come out of the ghost.”
தேர்தல் விஞ்ஞாபத்துக்குக்கப்பால்,
தமிழ்ப்பேசும்மக்கள் ‘இவற்றினைச் செய்யவேண்டும்’ என்று முன்நிபந்தனையிட, அதற்கேற்ப
செயற்றிட்டத்தினை முன்வைக்கும் வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டுமல்லாமல், வெறுமனே “நம்புங்கள்;
நாளை மலரும் நமக்கான பாதை” என்ற ஆகாயக்கோட்டைகளையல்ல.
1.
சாந்தி
சச்சிதானந்தம்; ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களின் நிலைப்பாடும்; 05 ஜனவரி 2015 http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115163/language/ta-IN/article.aspx
2.
Defeat
the Rajapaksha Regime! : Joint Statement By Lankans Living Abroad; 02 january
2015 http://srilankabrief.org/2015/01/defeat-rajapaksha-regime-joint-statement-lankans-living-abroad/
4.
Viewfinder
Asia - News from Jaffna 30 செப்ரெம்பர் 2015 https://www.youtube.com/watch?v=fhJXG-jyxhs
5.
Colombo
Gazette; Maithripala to keep army in north; 5 January 2015 http://colombogazette.com/2015/01/05/maithripala-to-keep-army-in-north/
No comments:
Post a Comment