மாதொருபாகனைச் சுற்றி இக்குறிப்பினைப் பத்து
நாட்களுக்கு முன்னாலே எழுதத்தொடங்கினேன். நாளுக்குநாள் ஆளுக்கு ஆள் திருப்பிய, திருப்பிக்கொண்டிருக்கும்
கொண்டையூவளைதிருப்பங்களினைப் பார்க்கும்போது, இஃது வெறுமனே ஒரு தனிக்குறிப்புக்கப்பால்,
பாகங்களாக எழுதக்கூடிய (இன்னொரு சர்ச்சைக்குரிய) வரலாற்றுப்புதினமாகவே தோன்றுகின்றது.
சொல்லப்போனால், மாதொருபாகனும் அதனை மையப்படுத்தியும் பெருமாள் முருகனைச் சுற்றியும்
சுழறும் சூறாவளியும் இற்றைத்தமிழ்நாட்டின் இயங்குநிலையின் குறுக்குவெட்டுப்படமென்றே
தோன்றுகிறது. அந்நிலையிலே எழுத்துலகத்தத்துவவிசாரமும் விசாரணையும்
காற்றுப்பட்ட பொரிந்த மரவள்ளிக்கிழங்கு மொரமொரப்பாய் பெருமாள் முருகனிலே நமுத்துபோய்,
அஞ்சலோட்டக்கைக்கம்பு சாருநிவேதிதாவின் எக்ஸைலுக்கு இலவசமாக எஸ்ஸஸ் விளம்பரம் தரத்தொடங்கமுன்னால்,
மாதொருபாகனை இன்னும் வாசிக்கவில்லை என்ற முற்குறிப்போடு இதை எழுதி முடித்துவிட முயற்சிக்கிறேன்.
மாதொருபாகனும் மதவேழங்களும்
தமிழர்களுக்குப்
படைப்புலகம் சார்ந்த சர்ச்சைகள் புதியனவல்ல; இராமலிங்க வள்ளலாரும் ஆறுமுகநாவலரும் கருத்துகளாலும்
படைப்புகளாலும் வாதாடியதுபோதாதென்று அவரவர் ஆதரவாளர்கூட வழக்காட நீதிமன்றம் ஏறினார்கள்.
சுஜாதாவின் கறுப்பு, சிவப்பு, வெளுப்பு (“இரத்தம் ஒரே நிறம்”) புதினம் தொடராக வருகையிலே
குறிப்பிட்ட சமூகத்தினரின் எதிர்ப்பிலே கைவிட்டப்படிருந்தது. சுந்தரராமசாமியின் “பிள்ளை
கொடுத்தான் விளை” கதையாக வந்தபின், ஒரு சமூகத்தின் கோபத்துக்கு முகம் கொடுக்கவேண்டியிருந்தது.
விமல் குழந்தைவேலுவின் “வெள்ளாவி”க்கும் மட்டக்கிளப்புப்பகுதியிலே சலவைத்தொழிலாளர்
சமூகத்திடமிருந்து கிளம்பியதாகச் சொல்லப்படும் எதிர்ப்பும் இவ்வகையானது. மாதொருபாகனைப் பதிப்பித்த ‘காலச்சுவடு’ பதிப்பகப்பத்திரிகையின்
அன்றைய ஆசிரியர் குழாமைச் சார்ந்தவர்களை இலக்குவைத்ததாகச் சொல்லப்படும் வேதசகாயகுமாரின்
“நாற்சார்மடம்” தமிழ் எழுத்துலகினை மையப்படுத்தி இணையத்திலே முதலிலே உலாவிய கையெழுத்துக்கண்டன
அறிக்கை எனலாம்.
எப்போதுமே சுற்றம்,
சூழல், சூழ்ச்சி பார்த்துப்படைக்காவிட்டால், படைப்பவரையோ நயப்பவரையோ சுட்டுப் பொசுக்குவதாகத்தான்
பாட்டும் படைப்பும் இருந்திருக்கின்றன. வாய்வழிக்கதைகளை வைத்துப்பார்த்தால், அம்பிகாபதியை
ஒரு பாடற்கணக்கிலே கொண்டதும் இலக்கியம்; பச்சோலைப்பந்தலைப் பற்றவைத்து நந்திவர்மனைக்
கொன்றதும் இலக்கியம்; அதே பெருமாள் முருகனையும் ஒரு வாய் –சில பற்களெனக் கௌவியிருக்கின்றது.
பொதுவாக, படைப்பினைச்
சார்ந்து எழும் விமர்சனம், படைப்பினைப் புனைவு என்று கொள்ளும் எல்லையைத் தாண்டும் கட்டத்திலே
படைப்பாளியின் மீதானதும் அவரின் கருத்துச்சுதந்திரத்தின்மீதானதுமான தனிப்பட்ட தாக்குதலாக
முடிந்துவிடுகின்றது. ஒரு படைப்புக்கு ஒரு குழுமத்திலிருந்து எதிர்ப்பு வருவதும் அதைப்
படைப்பாளி எதிர்கொள்வதும் எத்துணை கொளுந்துவிட்டு எரிகின்றதென்பதும் படைப்பாளிக்கும்
குழுமத்துக்கும் மட்டுமே இருக்கும் தனிப்பட்ட பலத்தினைப் பொறுத்தே அமைந்திருந்த காலம்
கடந்தது. இந்நிலையிலே சம்பந்தப்பட்ட இருபகுதியாட்களும் மூன்றாம் பொதுமனிதர்களை நடுவிலே
வைத்துப் பிரச்சனையை ஏதோவகையிலே தீர்த்துக்கொண்டு நகர்வது வழமையாயிருந்தது.
ஆனால், எழுத்தின்பின்னான
எதிர்வினை நுகர்வோர் தொகையும் அவர்தம் தேர்வுகளும், சாதி, மொழி, மத குழுமம் சார்ந்த
அமைப்புகளின் உருவாக்கமும் அவற்றின் பலமும், மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் விரைந்த
& பரந்த பரவுதலும் காரணங்களாகக் கூர்மைப்படுத்தப்பட்டது சமகாலம். இக்காலகட்டத்திலே
எழுத்துக்கப்பாலான இலக்கிய அரசியல், சாதிசமய அரசியல், விளம்பர அரசியல், வாசகர் அரசியல்
எல்லாமே தத்தமக்கான ஆதாயத்தினை முன்னிட்டு மூக்கை நுழைத்துவிடுகின்றன. இவ்வாறான பின்புலத்திலே
அடித்துக் கடைசியாக வரிசையிலே தள்ளப்பட்டிருப்பது, பெருமாள் முருகனின் மாதொருபாகன்.
சம்பந்தப்பட்ட
சமூகம் விரும்பியிருந்தால், மாதொருபாகன் சிக்கல் மிகவும் இலகுவாகத் தீர்க்கப்பட்டிருக்கலாம்.
நான்காண்டுகளுக்குப் பின்னாலே, நடுவண்ணாட்சி மாறி, ஆட்சிக்கு வந்தோரிலே செல்வாகுள்ள
மதக்கருத்தாளர்கள் சுட்டிக் காட்ட, இப்போதுதான் முருகனைப் பிடித்துக்கொண்ட சாதிசார்சமூகம்
மெய்யாகவே இப்பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கவேண்டுமென விரும்பியிருந்தால், ஒரு நாட்டாரியல்,
மானுடவியல், வரலாற்றியல் சார்ந்த அறிஞரிடம் நூலைக் கொடுத்து, அதன் தரவுகளை மெய்ப்புப்
பார்த்திருக்கவேண்டும். பெருமாள் முருகன் சொல்லியது சரியென ஆகியிருந்தால், தம்பக்க
மன்னிப்பினைக் கேட்டுவிட்டு, நூலை அனுமதித்திருக்கவேண்டும். பெருமாள் முருகன் தவறெனில்,
அவரிடம் நடுநிற்கும் சமாதானம்பேசிகளூடாகப் பேசி மன்னிப்பினைக் கேட்கச் செய்து நூலை
அகற்றும்வகையிலே செயற்பட்டிருக்கலாம் அல்லது சட்டத்தினூடாக அவதூறென்று நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
ஆனால், இங்கு இவற்றிலே எதுவுமே நிகழவில்லை.
மாற்றாக, முருகன்
கோவில் (இந்து ஆலயம் என்று வாசிக்கவும்) இனை இழிவுபடுத்திவிட்டார் என்ற அடிப்படையிலே
கட்சித்திராவிடம் தன்னைத்தானே தேய்த்த நிலையிலுங்கூட
இன்னும் சரியாகத் தமிழ்நாட்டிலே காலூன்ற முடியாத மதவெறியர்கள், தேய்ந்த கட்சித்திராவிடத்திலிருந்து
பல்லினை இளித்துக்கொண்டு முளைத்தெழும்பி நின்று பகிரங்கமாகவே தாண்டவமாடும் சாதியத்தைத்
தூண்டி எழுத்தை முடக்குகிறார்கள். நாட்டின் ஒழுங்கை நிலைநாட்டவேண்டியவர்கள் என்னவென்றால்
எழுத்தாளனிடம் “சரியானதும் பாதுகாப்பானதுமான தீர்வு, நீங்கள் வீட்டைத் துப்பரவு செய்துகொண்டு,
வேலையை வேறெங்காவது பார்த்துக்கொண்டு நகர்வதுதான்; எம்மால் பாதுகாப்பு வழங்கமுடியாது”
என்கிறார்கள்; பெருமாள் முருகனுக்கு அவரின் பதிப்பாளர் சட்டத்தினூடாகப் பாதுகாப்பைப்
பெற்றுக்கொடுக்கப் பிடித்திருக்கும் –பின்னாலிருந்து போட்டுத்தாக்கும் அதே மதக்கட்சி
சார்ந்த- வழக்குரைஞரே கையறுநிலையிலே அறிக்கை விடுகின்றார். (இம்மதக்கட்சி சார்ந்த வழக்குரைஞரைப்
பதிப்பாளர் பிடித்ததையிட்டுப் பலர் திட்டித்தீர்த்தாலும், பதிப்பாளருக்கு இப்படியொரு
மறைமுகமான கையூட்டூடாக எரியும் நெருப்பிலே தண்ணீரை ஊற்றி அணைத்துவிடலாம் என்ற எழுத்தாளரையும்
நூலையும் விற்பனைக்குத் தேவையான பரபரப்பு விளம்பரத்துக்கு மேலே காயவிடாது, வேண்டாத
எதிர்வினையை ஒழித்துவிடும் தந்திர எண்ணமிருந்திருக்கலாமோ என்றே தோன்றுகின்றது).
இத்தனைக்கும் பின்னால்,
பெருமாள் முருகனின் படைப்பானது திருவிழாக்கூட்டத்திலே காணாமற்போய் கண்டெடுக்கப்பட்ட
குழந்தையின் பத்தாம்நிமிடம்போல, கடைசியிலே
அநாதையாகி மையப்பொருளில்லாது போய்விட, கருத்துகளுக்கும் சண்டைகளுக்கும் நிறைய
நாயகநாயகிகள் சந்துக்குச் சந்து முகிழ்த்துவிட்டார்கள். ஆளுக்காள் தங்களின் பழைய கோபங்களையும்
தாபங்களையும் குரோதங்களையும் தீர்த்துக்கொள்ளவும், பழைய கூட்டணிகளைப் புதுப்பித்தோ
புதியகூட்டணிகளை அமைத்தோ காய்களை நகர்த்தவும் இரண்டாம் வெற்றிவாரமாக முயன்றுகொண்டிருக்கின்றார்கள்.
அவதானித்துப் பார்க்க,
ஒன்று தெரிகின்றது; தமிழ்நாட்டிலே இந்துத்துவாவைக் ‘கருத்தியற்றளத்திலே’ மனுவின் மேற்குடி
அளவாகக் கசியவிட்டு, மனுவின்படி இடைநிலையிருக்கக்கூடியவர்களின் சாதிய இருப்பினைக் காத்துக்கொள்ளும்
பயத்தினை முடுக்கித் தனக்கானதைச் சாதித்துக்கொள்கின்றது. கேவலம் கெட்ட நிலையிலே கொள்கை
சிதைந்துபோன கட்சித்திராவிடமும் சாதியத்தை ஒதுக்கிவிடமுடியாது கணிசமானவளவிலே தமிழ்த்தேசியமும்
பம்மிக்கொண்டிருக்கின்றன. மு. க. ஸ்டாலினின் அறிக்கை ஒன்றுதான் கடைசியிலேனும் வந்தது;
அதன் பின்னாலான அரசியற்காய்நகர்த்துகை எதுவென்றாலுங்கூட, அரசியல்வாதிகள் செல்வாக்கு
ஆழமாகப் பாயக்கூடிய நிலத்திலே, அரசியல்வாதிக்கு சாதி சார்ந்த எதிர்ப்பும் கிளப்பக்கூடும்
அபாயமிருக்கும்வகையிலே அவ்வறிக்கை பாராட்டப்படவேண்டியவிடயம்; இடதுசாரிக்கட்சிகள், பொதுவுடமைக்கட்சிகள்
இயல்பாகவே இந்துத்துவாவுக்கு எதிராகக் குரலெழுப்பக்கிட்டிய சந்தர்ப்பமாதலாலே. இதிலே
பெருமாள் முருகனுக்கு ஆதரவாகவிருப்பது எதிர்பார்க்கக்கூடியதே. (ஆனால், பெரும்பாலான
இடதுசாரிக்குழுக்களும் திராவிட, தமிழ்த்தேசியகுழுக்களுங்கூட, கிறீஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாதங்களை
இந்துத்துவாவினைக் கடிவதுபோல எதிர்கொள்ளத் தயங்கும் மறதி அரசியலைச் செய்து வருகின்றன.
இதே இடதுசாரிக்கட்சிகள் பத்தாண்டுக்குமுன்னாலே, தாம் வாழ்ந்த ஊர்களிலே இஸ்லாமியக்குழுக்களாலே
“பெண்நபி ஏன் இல்லை” என்று ‘மைலாஞ்சி’யிலே கேட்ட ரசூலும், ஓரளவுக்கு “இரண்டாம் ஜாமங்களின்
கதை”க்காக சல்மாவும் ஒதுக்கப்பட்டபோது குரல் எழுப்பினவா என்று தெரியவில்லை.
இணையத்திலே என்னவென்றால்,
இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிரான்ஸின் கேலிச்சித்திரப்பத்திரிகைத்தாக்குதலோடு இணைத்துப்பார்த்து
உலகமயமாக்கச் சர்வதேசமும் நாசமும் அறிந்த புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் ஆய்வும்
அறிக்கையும் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்துத்துவா – எதிர்_இந்துத்துவா போராளிகள்
பதிந்துகொண்டிருக்கும் கருத்துகள் நிலைப்பாடுகளிலே எதிரானபோதுங்கூட, அடிப்படைக்கருத்தளவிலே
ஒன்றானவை; இந்துத்துவாக்கும்பல், வன்மையாக பிரான்ஸின் கேலிச்சித்திரக்கொலைகளைக் கருத்துச்சுதந்திரத்தின்
அடிப்படையிலே இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கண்டிக்கப் பயன்படுத்தும் அதேவேளை, பெருமாள்
முருகனின் விடயத்திலே மேலோட்டமாக, “கருத்துச்சுதந்திரத்தை மதிக்கிறோம்; ஆனால், இந்து
ஆலயங்களை..” எனப் பேசிவிட்டோ கள்ளமௌனத்திலே எதுவுமே பேசாமலோ நகர்ந்துவிடுகின்றது; எதிர்_இந்துத்துவா
கும்பல், பிரான்ஸின் கேலிச்சித்திரக்கொலைகளுக்கு ஒப்புக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு,
உலக முஸ்லீம்களைப் புண்படுத்தும் மேற்கின் செயற்பாடுகளே பெருங்காரணம் என்பதை முதன்மைப்படுத்திவிட்டு,
பெருமாள் முருகனின் நிலைக்கு இந்துத்துவாவின் வெறித்தனமே காரணமென்று நீளப்பேசுகின்றது.
இரு கும்பல்களும் பிரச்சனையின் தார்ப்பரியத்தைப் பிரச்சனையூடாகக் காணாமல், தங்கள் அரசியல்வழிமட்டுமே
இரட்டைநிலை எடுத்து அறிக்கைவிடுவதாகத் தோன்றுகின்றது.
இந்நேரத்திலே இணையத்திலே
இந்துத்துவா எதிர்ப்புநிலையிலே பெருமாள் முருகனுக்கு ஆதரவளிக்கும் பிறமத அடிப்படைவாதிகள்,
அவர்களின் மதம்சாராத நண்பர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் சில ஆண்டுகளின் முன்னாலே
இணையத்திலே தனிப்பட்ட எங்கோ பயன்படுத்தப்பட்ட இரு தமிழ்வரிகள் தம் மதத்தினை ஏளனம் செய்கின்றதாகச்
சொல்லி இணையத்திலே தனிப்பட்ட தாக்குதல்களை ஆதாரமின்றித் தாக்கியதோடு மட்டுமல்லாமல்,
ஒரு திரட்டியினைச் சில நாடுகளிலே தடைசெய்யவும் தமது கையொப்பவேட்டைகளாலே செய்தவர்கள்
என்பதைச் சுட்டவேண்டும். இவர்களெல்லாம் பெருமாள் முருகனின் கருத்துச்சுதந்திரத்துக்காகக்
குரலை எழுப்புவது முரண்நகை.
வழக்கம்போல, ஜெயமோகன்,
சாருநிவேதிதா போன்ற தன்னொளிவட்டங்கள் வெள்ளம் வற்றி, ஆனால், நீரோட்டம் நிற்கமுன்னாலே
வந்து தம் ஓடங்களை “ஆஹா இன்ப நிலாவினிலே! ஓஹோ ஜெகமே ஆடிடுதே!” என்பதாக வலித்துப்போகின்றார்கள்;
இவற்றிலே ஒரு நுணலை இரு நாட்களின்முன்னாலே பெருமாள்முருகன் குறித்த கருத்துக்காக புத்தகக்கண்காட்சியிலே
போட்டுக்கழற்றினார்கள்; மற்றவர் பெருமாள் முருகன் பற்றி தானே தன் இணையப்பக்கத்திலே
போட்டு உடனடியே கழற்றினார், முன்னர் எம்ஜிஆர் பற்றின கட்டுரையைப் போட்டுக் கழற்றியதுபோல.
மூன்றாவது தன்னொளிவட்ட மதின்மேற்பூனை என்றைக்குமே எச்சரிக்கை நிறைந்த நீராமை. இனி ஒரு
பொல்லாப்பும் தனக்கு இராது என்ற பின்னாலேயே தலையை வெளியே எடுத்துக் கருத்துச் சொல்லும்;
காத்திருங்கள். 2009 இலே ஈழத்திலே கொல்லப்பட்ட தமிழர்களுக்கும் இதே பெருநீதியையே இவ்வொளிவட்டங்கள்
தத்துவங்களூடும் புத்தகங்களூடும் வழங்கினார்கள் என்பதை இவ்விடத்தே நினைவுகூர்வது சாலச்சிறப்பு;
சுடச்சுட சுட்டு எழுதி பரபரப்பான விற்பனையைக் கண்ட கிழக்கு பதிப்பகம், நக்கீரன் போன்றவற்றுக்கு
எதிர்நிலை அணுகுமுறைத்தந்திரம் இவர்களினது என்றாலுங்கூட, இரு சாராராரும் ஈழத்தமிழர்கள்
குறித்துக் கிஞ்சித்தும் இன்றுவரை எதுவிதக் கரிசனமும் நடைமுறையிலே விற்பனைக்கும் சுயமைதுனப்புத்திக்குமப்பால்
காட்டாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெருமாள் முருகனின் புத்தகம் குறித்தும் இதுபோலவே
இனியும் இவர்களும் இவர்களின் வட்டப்பரிதிக்குள் அடங்குகின்ற விசிறிக்குஞ்சுகளும் பதிப்பாளர்களும்
செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
இக்கும்பலைவிட
நேரடியே சாதியின் அடிப்படையிலே பெருமாள் முருகனைத் தாக்கும் உதிரிகள் எல்லா சமூகவலைத்தளங்களிலும்
குடற்புழுக்களாகத் தொங்கிக்கொண்டிருந்து மற்றவர்களின் சக்தியைத் தம் சகதிக்குள்ளே அமுக்கிக்
காலச்செய்துகொண்டிருக்கின்றார்கள். தமிழகம் என்றில்லை இந்தியா முழுவதுமே சாதிசார்ந்த
சங்கங்களின், கட்சிகளின் செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வெறுப்புக்குற்றங்கள் சட்டத்தின்முன்னாலே
கொணரப்படாதவரை, பெருமாள் முருகன்களுக்கு ஏதும் திடமான தீர்வு கிட்டப்போவதில்லை.
பெருமாள் முருகனுக்கு
ஆதரவாகத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கையொப்ப வேட்டைகளை
நடத்திக்கொண்டிருப்பதிலே எத்துணை பயனாகுமென்று தெரியவில்லை. இப்படியான இணையக்கையொப்பவேட்டையெல்லாம்
ஓரளவு அப்படைப்பாளிக்குத் தெம்பு என்பதற்கப்பால்
வேறேதுமில்லை. நிகழும் களத்திலே மாற்றத்தை ஏற்படுத்தாத கையொப்பவேட்டைகளால் என்ன பயன்?
இக்கையொப்பதாரிகளிலே சில புலம்பெயர்ந்தவர்களின் வரலாற்றினைத் தொண்ணூறுகளிலிருந்து அண்மைக்காலம்வரை
கிண்டிப்பார்த்தால், வரலாறும் கையொப்பவேட்டைகளும் அவர்களை இதே கருத்தினைச் சொல்லவிடாக்
குற்றங்களிலிருந்து விடுதலை செய்யாது என்று சொல்லலாம். ஆனால், அவற்றினை விடுத்துப்
பார்க்கும்போது, இவ்விடயத்தினைப் பொறுத்தமட்டிலே அவர்களின் குரல் நியாயமாகவே இருக்கின்றதென்பதை
மறுக்கமுடியாது.
பெருமாள் முருகனின்
நூலைக் கண்காட்சியிலே வெளியிடவிடாமல் அட்டகாசம் செய்தவர்களிலே பலரைக் கண்டித்து சட்டத்துறையின்
அடக்குமுறையினூடும் நிகழ்த்தப்பட்ட எழுத்தாளர்களின் அடையாள எதிர்ப்பு (இங்கும் தனிப்பட
அவர்களிலே ஒவ்வொருவருக்குமான அரசியல் இங்குச் சம்பந்தமில்லாததாலே விட்டுவிடலாம்) முக்கியமானது.
அதேநேரத்திலே, இதிலே பெரும்முரண்நகை என்னவென்றால், பாபசியின் காந்தி கண்ணதாசன் பிரபாகரன்
சம்பந்தப்பட்ட நூல்கள் புத்தகக்கண்காட்சியிலே விற்கக்கூடாது என்று 2009 / 2010 இலே
என்று கூறியபோது, அரசியற்றந்திரம் மிக்க கிழக்கு அந்நூல்களைத் தனது புத்தகநிலையத்திலே
பெற்றுக்கொள்ளலாமென்று கூறி காந்தி கண்ணதாசனுடனான நேரடி மோதலைத் தவிர்த்துவிட்டது;
எதிர்பார்க்கக்கூடியதுதான்; காசுக்குப் புணர்கின்றவனிடம், புணர்கின்றவளிடம் “முக்கலோடு
முனகு” என்று கேட்கலாம், ஆனால், “உள்ளன்போடு கூடிமுயங்கு” என்று கேட்க முடியாதுதானே?
ஆனால், இன்றைக்கு நின்று பெருமாள் முருகனின் குரலுக்காகப் பேசும் எத்தனை பேர், காந்தி
கண்ணதாசனின் கருத்துச்சுதந்திரத்துக்கு எதிரான பாபசியின் செயற்பாட்டுக்கு எதிராக அன்று
குரலைக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
ஒரு படைப்பாளியின்
நூலை வாங்காமல் விடுவதும், ஏன் வாங்கி அடையாளத்துக்காக எரிப்பதுங்கூட (அண்மையிலே இடதுசாரிப்பதிவர்
ஒருவர் ஜெயமோகனின் நூலை ஜெயமோகனின் கருத்தினைத் தான் ஒத்துக்கொள்ளாததை வெளிப்படுத்துவதற்காக
எரித்ததினைப் படமாகப் பேஸ்புக்கிலே இட்டிருந்தார்) மாற்றுக்கருத்தின் வெளிப்பாடுதான்.
அதிலே பிரச்சனையிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அதற்காக, அவர் அந்நூலையே வெளியிடமுடியாது
என்பதாகத் தடைசெய்வது எவ்விதத்திலும் ஏற்கமுடியாதது; ஒருவரின் கொடும்பாவியினை எரிப்பதை
ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால், ஒருவரையே அவரின் கருத்துக்காக எரிக்கும் ஸ்பானியவிசாரணை சேலம்
சூனியக்காரிகள் விசாரணை வகைச்செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளமுடியுமா? ஈழத்தமிழர் போராட்டத்தையே
தட்டையாகக் கொச்சைப்படுத்தும் “உலோகம்” நூலுக்காக, ஜெயமோகனை வேண்டியவளவு திட்டித் தீர்ப்பதென்பதும்
அவரின் நூலை வாங்காதுவிடுவதென்பது ஒன்று; அதற்காக அவரை அந்நூலையே வெளிவிடக்கூடாதென்று
சொல்ல, சொல்லியிருக்க முடியுமா?
பெருமாள் முருகனும்
தன் பங்குக்கு “ஊராரும் சதமல்ல; உற்றாரும் சதமல்ல” என்ற மாதிரியாக, “எழுதியதை எல்லாம்
திரும்ப எடுத்துவிடுகிறேன்; எரித்துவிடுகிறேன்; இனி ஒருபோதும் எழுதமாட்டேன்” என்று
விரக்தியின் விளிம்பிலே அறிக்கை விட்டுவிட்டு நகர்ந்துவிட்டார். ஒரு பொறுப்பான எழுத்தாளர்,
பேராசிரியர் அழுத்தமென்றாலுங்கூட, அவரின் படைப்பிலே நேர்மையும் உண்மையுமிருக்கும்நிலையிலே
ஆரம்பத்திலேயே அராஜகவாதிகளை எதிர்கொள்ளமுடியாது நொருங்கிப்போகத்தான் வேண்டுமா? நிச்சயமாக
அப்படியான சூழ்நிலையிலே உள்ளாகாமல், தூர இவற்றின் பாதிப்பேதுமின்றி வாழ்ந்துகொண்டு
சொல்வது இலகுவானதென உணர்கின்றபோதிலுங்கூட, ஒரு படைப்பாளி, தன் கருத்து, எழுத்துக்கு
அப்பாலும் சமூகத்திலே மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டுமென்று விழைகின்றவராக இருப்பாராகில்,
உறுதியாக இன்னமும் சில வாரங்கள் சாதிவெறியர்களைத் தாக்குப்பிடித்திருக்கவேண்டுமென்றே
தோன்றுகின்றது. சல்மான் ருஸ்திக்கும் தஸ்லிமா நஸ் ரீனுக்கும் அவர்களின் சொந்தப்பொருளாதாரநிலையிலும்விட
கருத்தளவிலான அரசியல் ஆதரவே நிலைக்கச்செய்தது என்று நம்புவதாலே, அப்படியான தன் ஆதரவுச்சக்திகளோடு
தன்னைப் பிணைத்துக்கொள்ள பெருமாள் முருகன் ஒரு கட்டத்திலே சண்டைக்காரர்களைச் சமாதானப்படுத்துவதற்குமப்பால்,
நிறைய நேரத்தினைச் செலவழித்திருக்கலாமென்றும் படுகிறது. அவரின் இக்கட்டான இந்நிலையினை
வைத்துக்கொண்டு திருச்செங்கோட்டிலிருந்து வேற்றிடத்துக்கு தொழிலைத் தேடிக்கொண்டு அவர்
குடும்பமாகப் புலம் பெயரவேண்டி வந்தாலுங்கூட, அது சிறப்பானதே.
இலவசமாக நூல் பிடிஎப்
கோப்பாக இணையத்திலே வந்தபின்னால், இத்தனையிலும் பெரிய விசித்திரமாக இருக்கின்ற விடயங்களாகத்
தோன்றுகின்றவை இவைதான். ஒன்று, இந்நிலைக்கு வந்தபின்னும், ஒரு திரைப்படப்பிரபல்யத்தை,
அரசியல்வாதியை இணையத்திலே கிண்டல் செய்ததற்கே சிறையிலே ஆளைக் கொண்டுபோய்ச் சிறையிலே
போட்டடிக்கும் தமிழகச்சட்டமும் ஒழுங்கும் நிலைநிறுத்தும் படை, இதிலே “வாழும் ஊரை மாற்றுங்கள்”
என்று எழுத்தாளருக்கு ஆலோசனை சொல்லும் அன்புநிலை; இவையெல்லாம் சாதி, மதம் என்பவற்றினை
முன்வைத்து நிகழ்கையிலே, எதுவிதமான அசைவுமின்றி, ஆங்கிலப்படப் பேய்வீடுகளுக்குப் பக்கத்துவீட்டிலே
பாதிக்கப்படாமலே வாழ்ந்திருக்கும் ஆட்களைப்போல இருக்கும் மாநில, மைய அரசுகள். இப்படியாக
“பழைய உலகை பழைய உலகே விட்டுப்போகிறேன். என்னைவிடு!” என்று உணர்ச்சியமயமாக அறிக்கைவிட்டுவிட்ட
பெருமாள் முருகன் (அவரின் உளநிலை புரிகின்றபோதுங்கூட), இனி எழுதவே மாட்டாரா? அல்லது,
ஏதோ உணர்ச்சியின்பால் அறிக்கைவிட்டுவிட்டேன் என்று மீண்டு வருவாரா? மீண்டு வருவாராகின்,
தான் கொண்ட கொள்கையின் அடிப்படையிலே கருத்துச்சுதந்திரத்தின் பேரிலே சொல்லிப் பின்னால்,
எதிர்கொள்ளமுடியாமல் அழுத்தத்தின் கீழே சோர்ந்து போய்ப் போகிறேன் என்று போய், மீளவும்
அழுத்தம் குறைய திரும்ப எழுதவென வருகின்ற ஒருவரின் எழுத்தின் நேர்மை வருங்காலத்திலே
எவ்வளவு கூர்மையாகவிருக்கும்? “இணையத்தினைவிட்டுப் போகிறேன்; திரும்பக் கேட்டதால்,
வந்துவிட்டேன்” என்று விடும் அறிக்கைகள்போல ஒரு பொறுப்பான எழுத்தாளர் சொல்லிவிடமுடியாது.
வாசகர் எவ்வாறு அவரைப் பார்ப்பார்? அழுத்தத்தின் கீழேதான் கலிலியோவும் படிந்தார் என்பதுபோல
சொல்லிவிட்டு அவரினை ஏற்றுக்கொள்வார்களா?
இச்சூழலிலே, பெருமாள்
முருகனின் நண்பர்களும் ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக அவருக்கு ஆதரவைத் தெரிவிப்பதும்
அவருக்கு அப்படியான ஆதரவு இருப்பதை அவருக்கு எதிராகவர்களுக்கு ஊடகங்கள். அரசு ஊடாகத்
தெரிவிப்பதும் முதன்மையாகின்றது; வெறுமனே, இரண்டு கையொப்பவேட்டையிலே அகப்பட்ட இரையோடும்
கண்காட்சி எதிர்ப்புக்காட்சியோடும் ஓரிரு சஞ்சிகைக்கட்டுரைகளோடும் இணையக்குறிப்புகளோடும்
முடிந்துவிட்டால், அடையாள எதிர்ப்பாகவே ஆகி அடுத்த பரபரப்போடு மறைந்துவிடும்.
No comments:
Post a Comment