தென்னிந்தியத்திரைப்பட இயக்குனர் பாலசந்தர் இறந்துவிட்டார்; சில மாதங்களுக்குமுன்னாலே அவரின் மகன்
கைலாசமும் இறந்தார். பெற்ற பிள்ளை தனக்குமுன்னாலே
போய்விடுவது துயரிலும் பெருந்துயர்.
பாலசந்தர் என்றொருவர் பற்றி அறிய வந்தது
"நூல்வேலி" படத்தினைப் பார்த்தபோதுதான். அவர் இயக்கிய "அவள்
ஒரு தொடர்கதை", "அரங்கேற்றம்" பற்றிப் பேசப்பட்டபோதெல்லாம், இன்றைய தொலைக்காட்சித்தொடர்களிலே
துயர்படும் பெண்நாயகிகளின் ஆரம்பகாலக்கறுப்புவெள்ளைப்படிகளாக
சுஜாதா, பிரமீளாபோன்றோரே பேசப்பட்டனரொழிய இயக்குநரைப் பற்றி எவரேனும் பேசியதாக
ஞாபகமில்லை. சொல்லப்போனால், அவ்வயதிலே இப்படங்களைப் பற்றிப் பேசியதையே பேசியவர்கள்
பதினெட்டுவயதுக்குக் குறைந்தவர்கள் கேட்காமலே பேசமுனைந்த அவலட்சணமேயிருந்தது. 'நூல்வேலி' பார்த்தபின்னரே, "சொல்லத்தான் நினைக்கிறேன்", "பாமாவிஜயம்", "எதிர்நீச்சல்" இப்படியான வகையறா ஆனந்தவிகடன் தொடர்நவீனங்களையும்
சென்னைநாடகசபாப்படப்பிடிப்புகளையும்
திரையிலும் லலிதா ஜுவர்லஸ் புண்ணியத்திலே
ரூபவாஹினியிலும் பார்க்கமுடிந்தது. 'எதிரொலி' பார்க்கவேதோன்றவில்லை. அந்நேரத்திலே பிடித்துக்கொண்டவை - "You
Don't Know!" கமலஹாசனைப்போல.
"மன்மதலீலை" பார்க்கும் திரையரங்கு பக்கமே ஒருவரும் போகவிடவில்லை.
அந்த வயதிலே எல்லோருக்கும் பிடித்த
'அபூர்வராகங்கள்' உம் ஶ்ரீதேவியைப்போல இன்றைக்கும்
ஒவ்வாமலேயிருக்கின்றது. தில்லுமுல்லு (அமோல்பாலேகரின் 'கோல்மால்'), நினைத்தாலே இனிக்கும் என்பன பிடித்துக்கொண்டதற்கு ரஜனிகாந்தும் ஜெயப்ரதாவும்
காரணமாவார்கள்.
ஆனால், தஞ்சாவூர் தலையாட்டிப்பொம்மைகளின் இயக்குனர் சிகரத்தின் "நூல்வேலி" பார்த்துவிட்டு, கடைசியிலே சரத்பாபு-சுஜாதா குடும்பம் சேர்ந்ததையிட்டு
மகிழ்ந்து, இரசாயனவியல் ரியூசனுக்குப் போனபோது, ஜான் வாத்தியார், "தவறிழைக்காத
சரிதாவைத் தற்கொலை செய்யவைத்து, 'தவறியவர்'களுக்கு மகிழ்ச்சித்தீர்வைக் கொடுத்த"
பாலச்சந்தரின் பழமைவாதப்பிற்போக்குத்தனத்தைப் பற்றி நக்கலாகச் சொன்ன
ஓரிரு வரிகளோடு பாலச்சந்தர் பற்றிய பிம்பம் உடைந்தது.
(பிறருக்கு எத்துணை விமர்சனமிருப்பினும், எதையும் மாற்றாக
எண்ண வைத்த ஜான் வாத்தியார்
இன்றைக்கும் எனக்கொரு முன்மாதிரிதான்.)
அதன்பின்னாலே, பார்க்கும்போது, பெண்விடுதலை, சமூகப்"புரட்சி" பற்றிப் பேசும் பாலசந்தரின்
சூத்திரங்கள், அக்னிசாட்சி (உளப்பிறழ்வுள்ள சரிதா = பெண்சுதந்திரப்பேச்சு), வறுமையின் நிறம்
சிவப்பு (அந்நேரத்திலே கவர்ந்த ஆதவன், இந்திரா
பார்த்தசாரதி நாயகர்கள் கமலகாசனைவிடச் (சவர)சுத்தமான மத்தியதட்டு
இண்டெலெக்ஸுவல் (ஃ, செமி_பூர்ஷுவா)
அம்பிகள்), சிந்துபைரவி (மீண்டுமொரு சுத்தமான ஆவின்பால் கலந்த மார்கழி ஸங்கீத
ஸீஸனுக்கான டெலிசீரியல்; "பேஷ் பேஷ் ப்லிம்
நன்னாருக்கு! என்னமா அந்தப் பொண்ணு
கஷ்டபடறாளே! தஞ்சாவூரு பொம்மை இன்னும் தலைய
தலையா ஆட்டுதோன்னா"), புதுப்புது அர்த்தங்கள் (அதே 'அக்னிசாட்சி' சரிதா
பாத்திரத்துக்கு எடை கொஞ்சம் குறைத்து
கீதா), வானமே எல்லை (கொடுமை)
கையிலே பிசுபிசுக்கும் 'கிளர்ச்சிப்பசை'யாகத்தான் ஒட்டின. தப்புத்தாளங்கள், நிழல் நிஜமாகின்றது, அவர்கள் என்பன
எழுபதுகளின் தாடிக்கார கவிதை எழுதும் ஜோல்னாப்பை புரட்சிவாலாக்களுக்கான “ரெவலூஸன்
லிமிட்டெட்” அல்லது “லிமிட்டெட் ரெவலூஸன்” படங்கள். பழைமை தரும் எல்லைக்குள்
பிறழாமல் புரட்சி செய்யும் “பைரோரெக்னிக்’ படங்கள். “தண்ணீர் தண்ணீர்” இற்கான
பெறுதியைக் கோமல் சுவாமிநாதனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அதிலுங்கூட,
நாடகத்துக்கும் படத்துக்குமான இடைவெளி எத்துணை விரிந்ததெனக் காணவேண்டும். 'டூயட்',
'ரயில் சிநேகம்' பார்க்கவேகிட்டவில்லை.
இத்துணை சமூக உணர்வோடும் அடுத்த
தயாரிப்பாளர்களுக்காக 'மாற்றான' திரைப்படங்கள் எடுத்தவர், பிறகு சொந்தமாக 'கவிதாலயா'விலே எடுத்த திரைப்படங்கள்,
'புது(க்)கவிதை'யிலே
ஆரம்பித்தன. ரஜனிகாந்த் நளினங்கள் பிடித்தகாலத்திலே பார்க்கப்பிடித்தன. "சிறப்பான சிப்பியிருக்கு 'முத்து'மிருக்கு" என்று
திறந்து பார்த்த 'அண்ணாமலை' வியாபாரி!
கமல்காஸும் பாலச்சந்தரும் முற்றாக வெறுத்துப்போக, அவர்கள்
உடைந்தார் உணர்வு பற்றிய ஒரு
சொட்டுக்கவலையுமின்றி எடுத்த "புன்னகைமன்னன்" காரணமானது. "சிலோன் விஜயேந்திரன் அப்படத்திலே
நடித்திருக்கவே வேண்டாம்; அதற்குமுன்னரே எரிந்து செத்திருக்கலாம்" என்று பிற்காலத்திலே
தோன்றியது; ஆனாலும், என்ன செய்வது? அவருக்கு
அது வாழ்க்கை; (தமிழகத்து எழுத்தெருதுகள், எருமைகள், எருக்களுக்கே அடுத்தாண்டு விஷ்ணுபுரத்துக்கு அச்சாரமாக விருது கொடுத்துத் தம்மை
நிலைநாட்டும் உத்தமரைவிடவும் அவரிருந்த சூழ்நிலையிலே விஜயேந்திரன் இருந்தார் என்று இப்போது தோன்றுகின்றது).
கடைசியாக, இராமேஸ்வர மீனவர்களுக்குப் பாக்குநீரணையிலே நிகழ்ந்தவற்றுக்கான இயக்குநர்களின் அடையாள எதிர்ப்புமேடையொன்றிலே ஓரமாக பேரூந்திலே
அழைத்து வரப்பட்ட ஆயிரத்தொரு துணைநடிகர்களிலே ஒருவரெனப் பாலசந்தர் அமர்ந்திருந்தார்/அமர்த்தப்பட்டிருந்தார்.
நடிகர்களை முன்னிலைப்படுத்திய தமிழ்ப்படவுலகிலே, இயக்குநர்களைப் பேசச் செய்தவர்களிலே நிமாய்
கோஷ், எஸ். பாலசந்தர் இவர்கள்
ஓரிரு படங்களோடு தொலைந்துபோன முன்னையவர்கள். பின்னாலே வந்தவர்களிலே ஶ்ரீதர், பாலசந்தர் குறிப்பிடத்தக்கவர்கள்தாம்; வழி சமைத்தவர்தாம். ஆனால்,
அவர்கள் எடுத்த படங்களெல்லாம் சமூகத்தினை
மேலோங்கச்செய்ய வழிபண்ணியவை என்பது பொய்யான/மயக்கமான
கூற்று; எம்ஜிஆரின் சமூக"சீர்சிருத்த"நாயகனையும் சௌகார் ஜானகியின் அழுகை
நாயகியையும் அடுத்த காலகட்டத்துக்கு மேம்படுத்தியவர்கள்
என்று வேண்டுமானால் கூறலாம்.
````````````````````````````````````````
இலக்கியம், திரைப்படம், விருது, அடையாளம் என்பதாலேயே
கட்டப்படும் நம் சமூகக்கட்டுமானத்திலே, இவை எவை
பற்றியும் எமக்குக் கவலையில்லை; பிறந்தநாளுக்கு ரஜனிகாந்துக்கு யாழ்ப்பாணத்திலே 'கேக்'கும் விஜய்-க்கு இசையமைத்துத் தீவிலிருந்து
வாழ்த்துப்பாட்டும் 'தல'க்குத் திருகோணமலையிலே
'கட் அவுட்' பாலாபிஷேகமும் செய்து
அனுமான் சாமி,ஐயப்ப சாமி,
வரலக்ஷ்மி பூசை, சன் டிவி
சாமி, ஜெயா டிவி மாமி
எல்லா ஜந்துக்களையும் 'ஆஸ்பிட்டல்', 'சார்', 'டாக்டர்', 'மச்சி'
உடன் சந்திக்குச் சந்தி உள்வாங்கிவிட்ட இலங்கைச்சமூகம்,
உதிர்ந்த உதிரம் காயமுன்னரேயே 'உலோகம்'
எழுதிய ஜெயமோகனுக்கு விருதளிப்பதாலோ 'புன்னகைமன்னன்' எடுத்த பாலசந்தருக்கு ஒப்பாரி
வைப்பதாலோ எதுவும் இழந்துவிடப்போவதில்லை; சரத், மைத்ரிபால,
மஹிந்த இவர்களிலே ஈழத்தமிழர்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டுமென்று கருத்துச்சொல்ல, புலம்பெயர்ந்தவர்களிலே
ஒட்டுக்குழுக்களும் ஓட்டுக்குழுக்களும் முத்தையா முரளிதரனும் சங்கரக்காரவும் இணைய வசதியுள்ள இலங்கைத்தமிழர்களுமே
தகுதியும் அருகதையுமுள்ளார் (இலங்கைவெள்ளநிவாரணத்துக்குமட்டுமே
மற்றைய புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வரவேண்டும்) என்ற
திமிர்த்தார்நிலையிலே
........பாலச்சந்தர் மரணத்துக்கும் "புன்னகைமன்னர்"களான தமிழ்த்தேசியவாதிகளே காரணம்
என்று இதுவரை ஏன் ஒரு
ரெடிமேற் மொட்டை|தாடி|முழுச்சவரப்பதிவுமே
"எம்மைத் துரோகிகளாக அறிவியுங்கள்" என்ற முன்னறைகூவல்களோடு எழுந்து
வரவில்லை என்று சிக்கற்சிகையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றேன்
No comments:
Post a Comment