Showing posts with label புரட்சி. Show all posts
Showing posts with label புரட்சி. Show all posts

Friday, October 05, 2007

மாசிலா, இரயாகரன், தமிழச்சி இன்னார் பிறர் & புரட்சி

கரைவு - 13

ஆடியவன் காலும் பாடியவன் நாவும் எவ்வளவுதான் கோணலென்றாலும், நிற்காது. யாராவது 'தக்கிட'த் தொடங்கினால் துமித்து நுனி விரலையாவது அடிக்க வைக்கப் பார்க்கிறது. நீட்டி முழக்க நேரம் வாய்ப்பிலை. அதனால், சிலருக்குச் சில கேள்விகள்


இரயாகரன்:

"மாதிரி வகையாறுகளுக்கு நாம் பொழுது போக்காக பதிலளிக்க எமக்கு நேரம் கிடையாது. இதனால் இது போன்றவற்றை நாம் அனுமதிக்க முடியாது" என்று சொல்லி அசுரன் (& உங்கள்) இற்கான எனது (புலிப்பாசிசபினாமிமாபியா) பின்னூட்டத்தைத் தவிர்த்திருக்கின்றீர்கள்;

1. இப்படிச் சொல்லும் உங்களுக்கும் ட்ரொட்ஸ்கியைக் கலைத்துக் கொன்ற ஸ்டாலினுக்கும் இராயகரன்/விஜிதரனின் வாய்களை மூட எண்ணியவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

2. இதே மனப்பான்மையோடு நான்கூட 2002~2005 இலே உங்களின் மடல்களை வைத்துச் செயற்பட்டிருக்கமுடியாதா?

3. உங்களின் கருத்துகளை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களெல்லாம் புலிப்பினாமிபாசிஸ்டுகள் என்கிற உங்களின் போபியாவுக்கும் இந்து இராம், அவருடைய சகலை, சம்பந்திகளின் போபியாவுக்கும் என்ன வித்தியாசம்?

4. இராஜீவ் காந்தி கொலை, ஈழத்தின் அரங்கிலே தியாகிகள்-துரோகிகள் இவர்கள் கட்டமைப்புகள், புலிகளின் மீறல்கள் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்கு என்ன தெரியும்?

5. நீங்கள் சொன்னதையே /..../ என்று அசுரன் பின்னூட்டமாக உங்கள் பதிவுக்கு இடுவதைப் போல, நானுமிட்டால், அதை மாதிரி வகையறாக்கள் என்று சொல்லமாட்டீர்களென்று நம்பலாமா?

6. மக்கள் புரட்சி... என்பதிலே பு என்பதை எழுத அருளரின் லங்காராணிமுடிவு ஞாபகத்துக்கு வந்து என்னுள் முரண் சிரிப்பது எதற்காக என்று எனக்குப் புரியவில்லை. உங்களுக்கேனும் புரிகிறதா என்று கேட்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணம்_வைத்தியசாலையிலே உளமருத்துவராகவிருந்த தயா சோமசுந்தரம் நேற்று பிரசுரித்த கட்டுரையிலே (Collective trauma in northern Sri Lanka: a qualitative psychosocial-ecological study) சொல்லப்படும் மக்களுக்குப் போய், தரகுமுதலாளித்துவத்தினைப் பற்றி இன்றைய நிலையிலே சொல்லி, முழு அகிலப்புரட்சிமுட்டைப்பொரியல் போடலாமென்று மெய்யாகவே நம்புகின்றீர்களா?

7. நான் உங்களின் பாசிசப்புலிப்பினாமிமாபியாபோபியாவிலேயிருந்து தப்பி, மக்கள்புரட்சிக்காரனாக (அமெரிக்க ஏகாதிபத்திய இருப்புக்கும் பங்கம் வராமல்) மாறிப் போராட என்ன செய்யவேணும்? ஏகாதிபத்திய ஐரோப்பிய ஒன்றியத்திலேயிருக்கும் உங்களுக்குக் கட்டாயம் தெரியுமென்ற நம்பிக்கையிலேயே கேட்கிறேன். ஓய்வு நேரத்திலே காண்ட், அல் தூஸர், பூக்கோ, இந்ரா நூயி, வோல் மார்ட் எல்லாரைப் பற்றியும் எல்லாத்தைப் பற்றியும் இடையறாது கூகுல் செய்து, இந்து ராம் போன்ற இடதுசாரிகளை மேடையேற்றிப் பேசும் பெரும் சுதந்திரப்பல்கலைக்கழக நூலகங்களிலே வாசித்துச் செயற்படத் தயாராகவிருக்கிறேன் என்பதையும் முன்னேற்பாடாக அறியத் தருகிறேன்.

(பிகு: இதற்குப் பதில் சொல்லி புரட்சி நேரத்தை நீங்கள் செலவழிக்கத்தேவையில்லை. அதனாலே, என் கணித்திரையிலேயே கேள்விகள் துகள்மின்னாய்த் தெறித்துவிட்டுப்போகட்டும்)


ஸ்ரீரங்கன்:

யோகன் போன்ற இழிபிறவிகளுக்குத் தமிழச்சியின் பதிவுப்பின்னூட்டத்திலே திட்டியிருக்கின்றீர்கள்.

1. தமிழச்சியின் இடுகைத்தலைப்பினைச் சரியாகப் பார்த்தீர்களா? உங்களைப் போன்றவர்கள் கொஞ்சம் நிதானமாக என்ன எது என்று பார்த்து வாசிப்பீர்களென்று நான் எதிர்பார்ப்பது தவறா?


தமிழச்சி:
பரிஸிலே தமிழ்வகுப்பொன்றிலே நடந்த சிக்கலைப் பற்றி எழுதியிருந்தீர்கள்

1. இவ்விடுகையிலே தமிழீழவிடுதலைப்புலிகளை நீங்கள் விமர்சித்திருப்பதாக (எழுதும்போதோ, இப்போதோ) கருதுகின்றீர்களா? தமிழ்ச்சோலை என்று நீங்கள் விடுதலைப்புலிகள் என்ற அர்த்தத்திலேயே சொன்னீர்கள்?

2. பரீஸிலே உங்களைத் தொலைபேசியிலே திட்டியவர் ஈழத்தமிழர்தான் என்று நிச்சயமா? (நிச்சயமாக, அப்படியாகத் திட்டக்கூடிய தறுதலை ஈழத்தமிழர்கள் நிறையப்பேர் பரீஸிலே மட்டுமல்ல, பாரெல்லாம் பரந்திருக்கின்றார்கள் என்பதிலே எனக்கேதும் மறுப்பில்லை. தமிழ்ப்பித்தன் என்ற பதிவுப்பேர்வழியே இதற்குச் சிறப்பான எடுத்துக்காட்டு. புலிகளை ஆதரிக்கும் ஒரு பகுதியிலே இருக்கும் வெள்ளாளத்திமிர், பெட்டையெண்டால் தூசணத்தை வச்சே அமுக்கலாமெண்ட ஆணாதிக்கத்திமிர் (தமிழ்மணத்திலிருந்து வேலையே செய்யாமல் காலையாட்டிக்கொண்டிருந்துவிட்டு, பெண்களின் உழைப்பினை உறுஞ்சிக்கொண்டு, கலைத்துவிடும் என் ஆணாதிக்கத்திமிரிலும்விட இதெல்லாம் குறைவுதான் என்றபோதிலுங்கூட :-)) கொண்ட பதினைந்து ஈழத்தமிழரையாவது நான் உடனடியாகப் பட்டியலிடுவேன். அதனால், ஈழத்தமிழர் உதெல்லாம் செய்யமாட்டாரென்பதல்ல இங்கே நான் சொல்ல வருவதென்பதைப் புரிந்திருப்பீர்களென நம்புகிறேன்)

3. ஈழத்தின் சாதிக்கட்டமைப்புக்கும் தமிழ்நாட்டின் சாதிக்கட்டமைப்புக்குமான புரிதலோடுதான் துண்டுப்பிரசுரக்"கலகத்தை" நீங்களும் மாசிலாவும் மேற்கொண்டீர்கள்? இந்தக்கோயில் கோதாரியிலெல்லாம் எனக்கொன்றும் பிடிப்பில்லை. புலம்பெயர்ந்த பெரும்பான்மையான ஈழத்தமிழ்ச்சமுதாயத்தின் இந்த "பண்பாடு" காவும் மந்தைத்தனத்திலே எனக்கும் உடன்பாடில்லை. ஆனால், பெரியாரின் தமிழ்நாட்டுக்கான (இந்தியாவுக்கான) தேவையின் புரிதலோடுமட்டும், வேறான அமைப்பினைக் கொண்ட ஈழத்தமிழ்ச்சமுதாயத்திற்கு நீங்கள் துண்டுப்பிரசுரம் கொடுத்தால், உங்கள் பிரசுரத்திலே நீங்கள் சொல்லாத புலிகள் குறித்து(ம் தமது அரிப்புக்குச் சேர்த்துச்) சத்தியக்கடதாசி வாசிக்கச் சிலருக்கு உதவும். ஆனால், உங்கள் "கலகம்" எத்துணை வெற்றி பெற்றதென்பதினை நீங்கள் அதன் பின்னாலே அறிந்துகொண்டீர்களா? (உந்தப்புலம்பெயர் ஆரம்பரக்கூத்துகள் அப்படியாச்சும் நின்றால், மிக்க மகிழ்ச்சியே)
(கலகம் என்பதை "" உள்ளே போட்டிருப்பதற்கு மன்னிக்கவும்; இப்படியான செயற்பாடுகளுக்கெல்லாம் 'கலகம்', 'புரட்சி' என்று அடை(மொழி) போட்டு மென்று கொண்டால், பத்தாம் வகுப்பிலே, நான் நண்பனுக்காகக் கொண்டுபோய்க் கொடுத்த கொப்பித்தாள் லவ்லெட்டரும் அந்நேரத்துஈழச்சமூகத்திலே ஒரு கலகமே; 81 இலே பள்ளிக்கூடச்சுவரிலே கரித்துண்டாலே, "ஏப்ரல் 29 பாராளுமன்றத்திறப்பினைப் பகிஸ்கரிப்போம்" என்று எழுதியதும் புரட்சியே. 'பார்லே பீர் சாப்டுவதே பாரியபூகம்பக்கலகம்' என்பதாகக் காட்டிக்கொள்ளும் சூழலிலே மட்டுமே இது கலகமாக எடுபடும்)


சத்தியக்கடதாசிக்காரர்கள்:

1. பரீஸிலே தமிழச்சி துண்டுப்பிரசுரம் விநியோகித்ததிலே புலிகள் குறித்த உங்கள் விமர்சனமும் பதிவிலே வந்திருக்கின்றதே; இதுதான் தமிழச்சியின் கருத்துமா? உங்கள் கருத்துமட்டுமா?

2. பரீசின் பெரியாரியப்போராளிக்குழுவிலே நீங்களும் அடக்கமா?

3. ஈழத்தின் அ. முத்துலிங்கத்தின் சிறுகதைத்தொகுதிக்கு மாலன் அணிந்துரைப்பதற்கும் ஈழத்தின் தலித் சிறுகதைகளுக்கு மார்க்ஸ் முன்னுரை எழுதுவதற்கும் என்ன வித்தியாசம்? (நிச்சயமாக, உள்ளூர்விபரங்களை நன்கு நேரடியாக அனுபவித்து அறிந்தவர்கள் முன்னுரை எழுதுவதுதான் முறை;-) என்றாலும்....)


கூல் (Hoole):

மனிதநேயவிருதினைப் பெற்றிருக்கின்றீர்கள்; அஞ்சாமலே செயற்படுவதற்கு வாழ்த்துகள். எல்லாப்புறத்துக்கெடுதல்களையும் உங்களுக்கு விரும்பியவரை, இயன்றவரை வெளிக்கொணர்ந்திருக்கின்றீர்கள். நன்றி.
ஆனால்,

1."IPKF was victim of vile LTTE propaganda" என்று சொல்லியிருக்கின்றீர்களென இந்துஸ்தான் டைம்ஸ் பி. கே. பாலச்சந்திரன் சொல்லியிருக்கின்றாரே? இது நகைச்சுவையா? நாகச்சுவையா? [இம்மண்ணுண்ணிப்பாம்புக்கூற்று, இந்திய+ஸ்ரீலங்கா ஊடகங்களிலே என்னென்ன விதங்களாக மலைப்பாம்புக்கூற்றுகளாக உருமாறி வரப்போகின்றது என்று பொறுத்திருந்து பார்த்து இரசிப்போம்.]


மாசிலா:

ஈழத்து அகதிகளாலே பரீஸிலே புதுவைத்தமிழர்களுக்கு இழுக்கு வந்துவிட்டதாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இனி, ஈழத்தமிழர்-புதுவைத்தமிழர் என்று பிரித்துச் சொல்லவேண்டுமென்றும் சொல்லியிருக்கின்றீர்கள். அதிலே சிக்கலில்லை. பல இடங்களிலே அப்படியான தேவையுள்ளதே.

1. புதுவையிலே பிரெஞ்சு குடிமைகளாக இருந்ததாலே பரீஸிலே உங்களுக்கு அதிதி அந்தஸ்து வந்திருப்பதாகவும் ஈழத்தமிழர்கள் அகதித்தமிழர்களென்று வந்திருப்பதாகவும் கருதிக் கொண்டு எழுதும் உங்களுக்கு,

அ. பெரியாரைப் பற்றிப் பேச அருகதையிருப்பதாக நினைக்கின்றீர்களா?

ஆ. தமிழச்சியின் (நீங்கள் உடன் தொத்திக்கொண்ட) பெரியாரிஸ்டுக்கலகத்தினை ஆதரித்துப் பதிவு போட்ட, சத்தியக்கடதாசிக்காரர்கள் (ஷோபா சக்தி, சுகன் என்று நினைக்கிறேன்) இவர்களும் இதே அகதிகளாகத்தான் வந்தார்கள். அவர்களும் உங்களிடம் சான்றிதழ் பெற்றபின்னாலேதான் பரீசிலே உலாவ வேண்டுமா?

இ. உங்களுக்கும் ஸ்ரீலங்கா கடவுச்சீட்டிலே போகின்ற ஈழத்தமிழர் எனும் பத்திரிகையாளருக்கும் ஈன அகதிக்கழுவிநாயே என்கிற மூர்த்திக்கும் என்ன வித்தியாசமிருப்பதாகக் கருதுகின்றீர்கள்?

2. ஈழத்தமிழர்கள் வேறு என்று சொல்கின்ற புதுவை(க்கு)த் (திரும்பவிருப்பதாகச் சொல்லும்) தமிழர் நீங்கள் எதற்காக, ஈழத்தமிழர்களின் ஆடம்பரக்கோயில்களின் கூத்துகளிலே "துண்டுப்பிரசுரக்கலகம்" செய்யப்போகின்றீர்கள்? பரிசிலே வாழும் புதுவைத்தமிழர்கள் அப்படியாக ஆடம்பர அலங்கோல அலங்காரம் செய்பவர்களில்லை என்றால், என்னை மன்னிக்கவேண்டும்.

3. தமிழச்சிக்குத் தொலைபேசித்திட்டியவர் நிச்சயமாக ஈழத்தமிழரென்று உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவிலே/தமிழ்நாட்டிலிருந்தும் யாரோ திட்டினார்கள் என்கிறார். அவர்களுக்கும் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்த ஈழத்தமிழர்களாக இருக்குமோ?

4. எப்போதோ கேட்கவேண்டுமென்று வைத்திருந்த கேள்வி; இப்போதுதான் வசதிப்பட்டது; ஸ்பெஷல்-ஆப்பு.கொம்மிலே ஒரு முறை மூர்த்தி யாரைப் பற்றியோ வழக்கமான அன்புததும்பும் உடற்கூற்றியல் மொழியிலே பார்ப்பன்னர் என்று திட்டியபோது, எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று வியந்து, வேறு ஒருவரின் பதிவு முகவரி கொடுத்து, அவரைப் பற்றியும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்போடு என்று அன்போடு கேட்ட உங்களுக்கு எப்படியாக சென்ற மாதம், மூர்த்தியினை இந்த மாதிரியாகக் கடிந்துகொள்ளும் நெஞ்சிலுரமும் நேர்மைத்திறனும் வீரத்துணிவும் பிறந்தது? (இப்போது, அந்த ஸ்பெஷல்-ஆப்பு பதிவு இல்லாததால், உங்களுக்கு இப்போதைக்கு அப்படியாகச் சொல்லவில்லை என்று மறுக்கும் வாய்ப்பு உள்ளது - என்னுடைய கணணியிலே அவ்விடுகையும் பின்னூட்டங்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று இப்போதைக்கு வைத்துக்கொள்வோம்)




இவற்றுக்கெல்லாம் எவருமே பதில்களை, அவரவரது புரட்சி, கலக நேரங்களை வீணாகச் செலவு செய்து தரத்தேவையில்லை என்பதையும் அப்படியாகத் தராமல் நீங்கள் பயன்படுத்தும் நேரத்தினைப் உங்கள் புரட்சிக்கான/கலகத்துக்கான என் பங்களிப்பாகக் கொள்ளவேண்டுமென்றும் அன்புடனும் தோழமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்


"எம்மிடம் கேள்விகள் மட்டுமேயுள்ளன; பதில்களைத் தாருங்கள்" - யாரோ புலம்பெயர் ஈழத்தமிழ்ப்பின்-நவீனத்துவஇலக்கியவாதப்புரட்சியாளர் சொன்னதாக என் நண்பரொருவர் சொன்னது. மெய் பொய் தெரியாது. ஆனால், இங்கே என் நிலைக்கு இக்கோள் பொருந்துவதாலே எடுத்துப் போட்டிருக்கிறேன்.


இவ்வண் இவன்,
பாசிசப்புலிப்பினாமிபோபியாக்களின்கண்ணிடைமாபியா