Saturday, October 24, 2020

திரும்பவும் திரும்பி...

/தமிழ்தேசியமே அனைத்திற்கும் காரணம் என்று நான் குறிப்பிட வில்லை.

சமீபத்தில் பல தமிழ் தேசியவாதிகள் மாடு அறுப்பதை தடை செய்ததை கொண்டாடினார்கள்.

அவர்கள் எப்படி இந்துத்துவாவிற்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்பதையும் குறுந்தேசியவாதம் பேசி இனப்பகைமையை வளர்க்கும் தீவிர தமிழ் தேசிய கட்சிகள் எப்படி உழைக்கும் மக்கள் நலனிற்கு எதிராக இருக்கின்றன என்பதையும் பேசத்தானே வேண்டும்./


நிச்சயமாக அப்படியாகவிருப்பவர்களை தயைதாட்சண்யமின்றி ஆதாரம், செய்கை, விளைவு இவற்றினை முன்வைத்து விமர்சிக்கவே வேண்டும். இதிலே மாற்றுக்கருத்தேதுமில்லை. ஆனால், நான் மேலே சுட்டியதை மீண்டும் சுட்ட விரும்புகிறேன்; கடந்த முப்பத்தைந்தாண்டு சித்தாந்தரீதியிலே நான் நம்பிக்கொண்டு, நடைமுறையிலே எங்கிருந்தாலும் இயன்றவரை தனிமனிதனாகவேனும் கைக்கொள்ள முயற்சிக்கின்றவன் என்றளவிலே சுட்டவிழைகிறேன். தமிழ்த்தேசியமென்பது தனியே வலதுசாரித்தனமான ஒற்றைக்கோடல்ல; சாதி, வர்க்கம் மட்டுமே இலங்கையின் இரட்டைத்தேசியப்பிரச்சனைகளென்று கூறிக்கொண்டு, கண்முன்னே இனம்-மொழி சார இருக்கும் நடைமுறைப்பிரச்சனையை உள்ளடக்காமலே தவிர்த்துப்போகின்றவர்களுக்கு வலதுசாரித்தனமான சிவசேனைத்தமிழர்களும் இலங்கையிலே முஸ்லிம்|சிங்களவர்களுக்கு எதிரான, இந்தியாவிலே தெலுங்கர்களுக்கு|கன்னடர்க்கு|மலையாளிகளுக்கு எதிரான தமிழர்களும் தமக்கான கருத்தினை முன்வைக்கத் தேர்ந்தெடுக்க வசதிப்படலாம். ஆனால், எதற்காக தமிழ்த்தேசியத்தின் இடதுசாரி|மார்க்சியச்சிந்தனைப்போக்குகளை மறுதலிக்கின்றீர்கள் அல்லது மறைக்கப்பார்க்கின்றீர்கள்? 80 களின் ஜேவிபி, ஹிட்லரின் கட்சி (National Socialist German Workers' Party) எல்லாமே சோசலிசம் என்ற சொல்லைக் கட்சிக்குள்ளே வைத்திருந்ததால், சோசலிசம் எல்லாமே இனவாதஅடிப்படையென்றால், நமக்கு எப்படியிருக்கும்? தனியே புலியெதிர்ப்பின் அடிப்படையிலேயே முப்பதாண்டுகள்முன்னால் தாங்கள் மார்க்சியத்தமிழ்த்தேசியமென்று மலையகத்தையும் உள்ளடக்கித் தலையிலே வைத்துக்கூத்தாடிவிட்டு இப்போது தமிழ்த்தேசியமே துன்பங்களுக்கான மூலகாரணமென்று படம் காட்டி, புத்தகம் எழுதி  மறுதலிக்கும் புதியவன்களையும் இராசையாக்களினையும் புரிந்துகொள்ளமுடிகின்றது. ஆனால், இதே போக்கிலேயே அவர்களாலே ஏன் வியட்நாமின் மாற்றத்தினையும் நிக்கராக்குவா மாற்றத்தையும் ஏன் சீனா, ரஷியாவின் வலதுசாரித்தனமான உருமாற்றத்தையும் எதிர்கொள்ளமுடியாது, இன்னமும் புகழ்ந்துகொண்டு நடைமுறையை நிராகரித்துக்கொண்டு தாமிருக்கும் மேற்குநாடுகளை விமர்சித்துக்கொண்டிருக்கும் இரட்டைநிலையைக் கொள்ளமுடிகின்றது?

இப்படியான நிலையிலே தமிழ்த்தேசியத்தைத் தனியே வலதுசாரித்தனமென இரண்டு தேர்ந்தெடுத்த எடுத்துக்காட்டுகளோடு  புள்ளிவிபரவியலைக் கேலி செய்வதுபோலக் காட்டிவிட்டுப்போகக்கூடாது. முஸ்லீம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியபோது, காத்தான்குடியிலே கொலைநிகழ்ந்தபோது, அனுராதபுரத்திலே சுட்டபோது, சகோதர அமைப்புகளையும் அமைப்புகளுள்ளேயும் ஒடுக்கினபோது இஸ்ரேலை முனைப்பாக எதிர்க்கின்றபோது, காஷ்மீரம், அப்பாஸ் ஶ்ரீலங்காவின் 2009 பெருங்கொலைகளுக்காக ஐநாவிலே வாக்கு வந்தபோது, வியட்நாம், கியூபா, வெனிசூலா இவற்றுடன் சேர்ந்து ஶ்ரீலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்தபோதும் பாலஸ்தினத்தினை முழுதான ஆதரிப்பதாக இப்படியாக இருக்கும் தமிழ்த்தேசியத்தினை மறுதலிப்பது எப்படி? உங்களினைப்போன்றவர்கள் மற|றைப்பதெப்படி? ஆக, தமிழ்த்தேசியம் ஒற்றப்படையானதல்ல; மார்க்சியப்பார்வை கொண்ட சாதி, பால், பாலுணர்வு, மொழி, வர்க்கம், மதம் இவை குறித்த விடுதலைப்பார்வைகளினையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை வாய்ந்தது என்பதை ஒத்துக்கொள்வதிலே ஏன் தயக்கம்? வர்க்கப்பிரச்சனைமட்டுமே ஆக ஒரே பிரச்சனை என்ற வகையிலேமட்டுமே மார்க்சியவழிப்பட்ட அனைத்துக்கட்சிகளுமிருக்கின்றன? ஜேவிபியினை வைத்து மார்க்சியவாதிகள் இனப்படுகொலையிலே கைநனைக்கின்றவர்கள் என்றுயாரும் சொன்னால் விட்டுவிடுவோமா?  


/சாதிவெறி , ஆணாதிக்கம் போன்ற அழுக்குகளைக் களைய விரும்பாத தமிழ் தேசியம் இதைப்பற்றி பேசினாலே இடதுசாரிகளை எதிராயாகப் பார்க்கிறது./


இங்குத்தான் மீண்டும் கிளிப்பேச்சுக்கீறல்கொண்ட தட்டாய்ப் பேசுகின்றீர்களெனப்படுகிறது. சாதிவெறியையும் ஆணாதிக்கத்தையும் களையத் தமிழ்த்தேசியம் மறுக்கின்றதென எத்தமிழ்த்தேசியத்தை வைத்துச் சொல்கின்றீர்கள்? இடதுசாரிகளுக்கு எதிராகத் தமிழ்த்தேசியம் நிற்கின்றதென்று எத்தமிழ்த்தேசியத்தை வைத்துச்சொல்கிறீர்கள்? உங்களைப்போன்றவர்களும் புலியெதிர்ப்புப்பழையதமிழ்ப்போராளிகளுக்குமான பிரச்சனை மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவதோ எனப்படுகின்றது. எனக்கு மனிதனாக முற்றிலும் பிடிக்காத, ஆனால், நக்கல் எழுத்தாளனாய் வாசிக்கும் சோ.ராமசாமி முகமது பின் துக்ளக் நாடகத்திலே தமிழ்நாட்டின் பாராளுமன்றத்துக்குப் போகும் இடதுசாரிக்கட்சிப்பேச்சாளர் ஒருவர் பேசுவதுபோல ஒரு வரியிட்டிருப்பார்; “மார்க்ஸ் என்ன சொன்னார்? லெனின் என்ன சொன்னார்? துக்ளக்குக்கு வாக்கு போடாதீர்கள்!” நீங்கள் மேலே எழுதியிருப்பதை வாசிக்கும்போது, இவ்வரிகள் “மாற்றான் தோட்டத்து மல்லிகையாக” நாசியிலே மணப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.  தமிழர்களிடையே சாதியம், ஆணாதிக்கமிருந்தால், அவை தமிழ்த்தேசியத்தின் முழுக்குற்றங்களாகிவிடுகிறனவா? அப்படியான கீழ்மைக்கூறுகளினை முற்காட்டுகின்றவர்கள் ‘நாம் தமிழ்த்தேசியத்தின் பேரிலே சாதியை வரவேற்கின்றோம்! ஆணாதிக்கத்தை உள்வாங்குகின்றோம்!’ என்று எங்கேனும் அறிக்கை விட்டுவிட்டா செய்கின்றார்கள்? இல்லாவிட்டால், என்ன ஆதாரத்தினைவைத்து, அறிவியல்பூர்வமாக இப்படியான கோர்ப்புகளையும் தொடர்புபடுத்தலையும் செய்கின்றீர்கள்?  கிளிநொச்சியிலே கோவிலிலே சகலகலாவல்லிமாலை பாடவிடவில்லையா? உடனே இச்சாதியத்துக்குத் தமிழ்த்தேசியமே காரணம். கிழக்கிலே முஸ்லீம்மாணவி தமிழ்ப்பாடசாலையிலே அபாயா அணியமுடியவில்லையா? தமிழ்த்தேசியமே காரணம். மலையகத்திலே, வன்னியிலே  தமிழ்க்குடும்பங்களிரண்டு வாழ்நிலையாதாரமின்றி வாடுகின்றார்களா? தமிழ்த்தேசியர்கள் இதற்கு என்ன செய்தார்கள்? கிளிநொச்சியிலே அதிபர் இடமாற்றமா?  இக்கேள்விகளை நீங்கள் சார்ந்த அமைப்புகளின் கடந்தகாலச்செயற்பாடுகளை வைத்து, அவற்றின் கடந்தகால விதானையார்களை, செயலதிபர்களை, மச்சான் எம்பிகளை, முதலமைச்சுப்பொம்மைகளை வைத்து, நல்லாட்சி, மாவோவாட்சி, ஶ்ரீமாவரிசிக்கூப்பனாட்சி, ஜேஆர் அமெரிக்க ஆட்சி எனத் தொடரும் பேரரசுகளுடனான நெடுங்கால மென்னுறவாடல்களைவைத்து என்ன செய்தீர்களென எவராவது கேட்கமுடியாதா? எவ்வகைப்பொத்தல் நியாயபலூன்களை ஊதிக்கொண்டு பறக்கவிடமுயற்சிக்கின்றோம் நாம்?


பிரபாகரனின் கூற்றுகளை மாவோவின் கூற்றுகளைப்போலச் சமூக ஊடகங்களிலே தொங்கவிடும் தமிழ்த்தேசியவாதிகள் இப்படியாக, வலதுசாரித்தமிழ்த்தேசியத்தின் பேரிலேதான் சாதியம், ஆணாதிக்கம் இவற்றினை ஆதரிக்கின்றோம் எனக்  கூறத்தான் கண்டோமா? (சொல்லப்போனால், அப்படியாக புலியாதரவுத்தமிழ்த்தேசியவாதிகள் திட்டமாகச் சாதியம், ஆணாதிக்கத்தினைத் அவர்களின் ‘தமிழ்த்தேசியத்தலைவர்’  பெயரிலே எதிர்த்துத்தான் போடக்கண்டிருக்கின்றோம். சாத்தானாயினும் அதற்கான நியாயத்தினை வழங்குவதுதான் முறை) 




நிற்க! நீங்கள் அத்தமிழ்க்குமுகாயத்திலே அங்கமில்லையா? உங்களை ஆதரிப்பவர்களும் உங்களைப் போன்றவர்களும் பிறப்பாலே தமிழர்கள் இல்லையா? ஆக, இக்கீழ்மைத்தனத்துக்கான குற்றங்களை உங்களிலும் சுமத்திவிட்டுப் போக, ஒரு வலதுசாரித்தமிழ்த்தேசியவாதிக்குக்கூட இத்தகு ஏரணம் வழிசமைக்காதா?   அப்படியான அடிப்படைக்கூற்றினை வைத்தும் நீங்கள் வர்க்கப்போராட்டத்தினைப் பேசும் மார்க்சியத்தினை நம்புகின்றவரென்பதையும் வைத்து, வர்க்கப்போராட்ட மார்க்சியவாதிகள் சாதியம், ஆணாக்கவாதிகள் எனப் போகிறபோக்கிலே எவராவது எழுதிவிடமுடியாதா? சொல்லப்போனால், நிலவிலே நின்று பேசுவோம் காலம் முதல் செத்த அருளரிலே சாதிக்கோளாறு சுட்டின காலம்வரை, வீட்டிலே மனைவியை நடத்தும்  கலையெடுப்பு முறைகள்வரை மார்க்சியத்தின்பேரிலே நடக்கும் சாதியம், ஆணாதிக்கம்வரை சுட்டமுடியும். தனியாட்களின் வாழ்க்கைகளை சவப்பரிசோதனை மேசையிலே வைப்பது என் கொள்கையல்ல. இன்னமும் அப்பட்டமான வலதுசாரித்தமிழ்த்தேசியம் முஸ்லீம்மக்களுக்கெதிராகக் கிழக்கிலே பேசுகின்ற பழைய புலிகளின் ஆலோசகர்களுக்கு உற்ற தோழர்களெல்லாம் அது பற்றிப்பேசாது பம்பி தமிழ்த்தேசியத்தின் வலதுசாரியத்தனம் பற்றிமட்டும் தலைபின்னே ஒளிவட்டம் சுழல வகுப்பெடுக்கும் சுகப்ரம்மரிஷிகளின் கூத்துகளெல்லாம் கண்டுகொண்டிருக்கின்ற நிலையிலே சிரிப்புத்தான் இங்கே வருகின்றது.


ஆனால், இங்கு உங்களிடமொரு கேள்வி. சாதியம், ஆண



இப்போதைக்கு இத்தோடு இங்கு நிறுத்துகிறேன்.


/தனித்தமிழீழம் பேசும் புலம்பெயர் தேசியவாதிகள் இங்குள்ள கட்சிகளை வளர்த்து விடுகிறார்கள்.

இலங்கையில் இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது எந்தக் குறுந்தேசியவாத கட்சியால் சாத்தியப்படும்?

காற்றிலே கம்பு சுற்றுவதால் என்ன பயன்?

பேரினவாத அரசை உழைக்கும் மக்கள் தூக்கியெறியாமல் இனங்களின் உரிமையை வென்றெடுக்க முடியும் என நினைக்கிறீர்களா?/


ஏற்கனவே பதில் நீண்டுவிட்டதால், இன்னொரு திசைபற்றிக் கிளைபிரியும் இவ்விடத்திலே நீட்டவில்லை; வேறிடத்திலே விரித்துப்பேசலாம்.  ஆனால், சுருக்கமாக சில கேள்விகள்:


1. தனித்தமிழீழம் பேசும் புலம்பெயர்வாதிகள்மட்டுமேதானா இலங்கையிலே கட்சிகளை வளர்த்துவிடுகின்றார்கள்? அரசுமெல்லாதரவு, வாசுதேவநாணயகாரவை வரவேற்று நன்றி சொல்லு, நல்லாட்சி நூறுநாட்களுக்கு ஆதரவு கேட்டு வாக்களிக்க வேண்டு, பிள்ளையான்களைப் பெருமானாக்கு, சீனமழைக்கு இன்னமும் குடைப்பிடிக்கு, ஐரோப்பிய, அவுஸ்ரேலிய, கனடியப்பூமிகளிலே குந்திக்கொண்டு அன்ஸாலி, நடேச சுதாகரத்தனமாக மஹிந்த பிரச்சாரவாய்பெருக்கு, இலக்கியச்சந்திப்பரசியல்நடத்து, பி எம் ஐ சி எச்சிலேமேட்டுக்குடிகளோடு மேட்டுக்குடி பூர்ஷுவா புத்திசீவிகளின் இழப்புகளுக்கு நினைவுப்பேருரைநிகழ்த்துக்குட்டிக்குழுகளையெல்லாம் தவிர்த்துவிட்டுப்பேசுவது தேர்ந்தெடுத்து வாதம் வைத்தலின் உச்சமில்லையா?   சரி! அதுதான் கிடக்கட்டும்! தமிழ்த்தேசியமென்பது தனித்தமிழீழம்மட்டுமே ஓரே தீர்வாக வைக்கின்றதென எதைவைத்து அறுதியாகப்பேசுகின்றீர்கள்? சுயநிர்ணய, மொழிசார், இனஞ்சார் தனித்துவத்தினைச் சக இனங்களுக்கு ஈடான சமநிலையிலே வைத்துப்பேசவிடாதநிலையிலே சுயநிர்ணய உரிமையைக் கோரிப் பிரிந்துபோகக் கேட்டலை முன்வைக்கும் வலதுசாரிகளல்லாத்தமிழ்த்தேசியர்களும் புலம்பெயர்ந்து நிறையவேயிருக்கின்றனர். நிச்சயமாக, கருத்தளவிலே அப்படியாக சமவுரிமையோடு தொடரும் ஶ்ரீலங்கா அரசுகள் நடத்தாமல், 13 ஆம் திருத்தம், இருபதாம் திருத்தம் எனத் திருந்தாமலே கட்டிக்கொண்டுபோனால், தீர்வின் அதியுச்சக்கருத்தாக்கமே தனிநாடு என்பதாகும். அதுகூட, தமிழீழம் என்பதாக இருக்கவேண்டியதில்லை; உள்ளடங்கக்கூடிய அனைவரின் நலன்களையும் சமநிலையிலே வைத்துத்தெறிக்கும் தமிழினைப் பெயரிலே பொறிக்காத ஈழம் என்பதாகக் கருத்தளவிலே இருக்கலாம்.


2. குறுந்தேசியவாதம் என்பது பற்றி மீண்டும் பேசுகின்றீர்கள். குறுக்கம், அகண்டது பற்றி வரையறுங்கள் எனக் கேட்கிறேன். பதில் சொல்கின்றீர்களில்லை.  இங்கு குறுக்கம், விரிவு என்பவை ஒன்றையொன்று பக்கத்திலேயிருத்திச்  சார்ந்து பேசவேண்டிய பண்பானவையல்லன; தம்மளவிலே வரையறைசெய்து கணியப்படுத்தப்படவேண்டியவை. இப்போது சொல்லுங்கள்! குறுந்தேசியவாதம் என்பது என்ன? நூறாண்டுக்குமுன்னாலே லெனினிலிருந்து அப்படியே கக்காமல், நாம் சார்ந்த காலத்து, நம் சூழல்,பின்புலத்தின் வழிக்கு அது குறித்துப்பேசுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் சார்ந்த கட்சியின் கொள்கையை ஒடுங்குமார்க்சியவாதம் என வேறு யாரேனும் போகிறபோக்கிலே சொல்லிவிட்டுப்போகலாமில்லையா? வெறும் வார்த்தைகளைமட்டும், அதுவும் காலத்தோடு பொருள் மாறும் பதங்களைமட்டும் வைத்து வாதங்களைச் செய்து முடிவுக்குவரமுடியாது. ஆக, அவை கோஷங்களுக்கும் அச்சொற்களின் சுவைகட்குமான ஆதரவாளர், எதிராளிகளைக் கூட்டம் கூட்டமட்டுமே உதவும்.


3. உழைக்கும் மக்கள் தூக்கியெறியாமல் இனங்களின் உரிமையை வென்றெடுக்க முடியும் என நினைக்கிறீர்களா என்றுகேட்கிறபோது, இனம்சார்ந்த பிரச்சனை இலங்கையிலே இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா எனக் கேட்கத் தோன்றுகிறது. சிங்கள உழைக்கும் மக்களினதும் தமிழ்ப்பேசு உழைக்கும்மக்களினதும் பிரச்சனைகள் ஒன்றேதானா? அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் எவ்வகையான உழைக்கும் மக்களின் வாழ்வாதரங்களையும் வாழ்விடங்களையும் பறித்திருக்கின்றன? தொடர்ந்து பறிக்கின்றன? எடுத்துக்காட்டுக்கு, கடந்த அறுபதாண்டுகளாக, கிழக்கின் மேற்பகுதியிலே தமிழர்களின் விவசாயநிலம், மீன்பிடி இவை எப்படியாகத் பேரரசுகள் திட்டமிட்டவகையிலே  பறிக்கப்பட்டு இனஞ்சார்விகிதாசாரம் இம்மாவட்டங்களிலே மாற்றப்பட்டிருக்கின்றன என்பதைப் பேசாமல், பொதுப்படையாக, யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய சாதியத்தினையும் வடக்குமலையகத்தினை மையப்படுத்திய வர்க்கத்தினையும் மட்டுமே பேசுவது தெளிவின்மையென செந்திவேலின் கட்சியிலே திருகோணமலை சார்ந்த இருவர் மும்முரமாயிருப்பது தெரிந்தும் நான் சொல்லமாட்டேன். ஆனால், இதனை வசதியாகவிட்டுவிட்டு, கேட்பவரைப் புலம்பெயர்தமிழ்க்குறுந்தேசியவாதி என்றுவிட்டுப்போவது சுலபமென அறிவேன். நிற்க; வர்க்கப்போராட்டம் முடிந்தபின்னால், இனப்போராட்டத்தைப் பார்ப்போம் அல்லது வர்க்கப்போராட்டம் தீர்கையிலே இனப்போராட்டம் தானாய் ஓய்ந்துவிடும் என்பது, முன்னிலைச்சோசலிஷக்கட்சியின் சில ஆண்டுகள்முன்னான  கோஷங்களை ஞாபகப்படுத்தியது; கூடவே குமார் குணரட்டினமும் அவர் அண்ணன் ரஞ்சிதன் குணரட்டினமும் பேராதனையிலே  எண்பதுகளிலே வர்க்கப்போராட்டத்தினை இனப்போராட்டமாகக்காட்டி வன்முறை செய்த காலத்தினையுங்கூட.


சொற்கள் வரையறுக்கப்படாதவரைக்கும் வெறும் சத்தங்களுக்கான கோஷங்கள்மட்டுமே!


No comments: