கிரிக்கெட்டில்
ஆர்வமிருந்ததில்லை; ஆனால், நாடுகளுக்கிடையேயான
கிரிக்கெட்டு ஆட்டங்களை நம் அரசியல்நிலைக்கான உணர்வைவெளிப்படுத்தும் மாற்றுவழிவடிகாலாகக்
கண்டு, இந்தியக் கிரிக்கெட் அணியை ஆட்ட நியதிகள் தெரியாமலே ஆதரித்த பதின்மத்தின் பின்னரை
எனது. முரளிதரன் குறித்து அவரின் எறிபந்து-நிறம் குறித்த சர்ச்சையால் மட்டுமே கடலூழி
2004 இலே வருமட்டும் தெரிந்திருந்தது. 2009 இன் பின்னால், அவரின் விளையாட்டு அரசியலான
பின்பு, அதன் கோணலான தன்மைகுறித்து விமர்சனம் உண்டு. இது பற்றி 2013 இலே பிரித்தானியப்பிரதமர்
கமரூன் இலங்கை வந்தபோது, முரளிதரன் போரிலே காணாமற்போனவர்களின் தாய்மார்கள் பற்றிக்
குறிப்பிட்ட கருத்தினையிட்டு எழுதிய குறிப்பு இங்கே உண்டு: கண்ணியமற்ற
கிரிக்கெட் கனவான் https://wandererwaves.blogspot.com/2013/11/blog-post_622.html
படம் பார்ப்பதற்குப்
பதிலாகப் புத்தகம் வாசிப்பது பிடிக்கும் எனும் ஓரிரு விடாக்கண்ட நண்பர்கள் இருக்கக்கூடும்.
அவர்களைவிட்டுவிடலாம். மீதிப்படி எவர்க்குத்தான் திரைப்படங்களிலே ஆர்வமிருந்ததில்லை?
எனக்கும் திரைப்படங்களிலே என்றும் ஆர்வமுண்டு; ஆனால், திரைப்படங்களிலே நடிகர் விசுவாசங்களிருந்ததில்லை;
அசல் பசுச்சாணி படவிளம்பரச்சுவரிலெறியும் காலத்திலுமிருந்ததில்லை; ‘ஈ’ச்சாணி சமூகவலைத்தளங்களிலே
சாத்தும் இக்காலத்திலுமிருந்ததில்லை; ஆனால், நடிகர்கள் திரைக்கப்பால், தம் விலாசத்தினை
எப்படியாகச் சமூகத்துக்கு மடைமாற்றுகின்றார்கள் என்பதிலும் தமது படங்களிலே தாம் சார்ந்த
சமூகத்தின் நலத்தினையும் மேம்படுத்துதலையும் எப்படியாகத் தெறிக்கும்வகையிலே கருத்தினை
ஊடகமூடாகப் பார்வையாளர் உணர்வுக்குக் கடத்துகின்றார்கள் என்பதிலும் அவதானமிருக்கின்றது.
அவ்வகையிலே நடிகர்களுக்கு - நடிகர்களுக்கென்றில்லை, பொதுவிலேயே தமக்கான விசிறிகளையும்
காவோலை குருத்தோலைகளையும் கொண்டிருக்கும் கலைஞர்களுக்கும்
படைப்பாளிகளுக்கும், ஏன் விளையாட்டுவீரர்களுக்கும் – ஒரு தார்மீகப்பொறுப்புண்டு என
நம்புகிறேன். தான் நம்புகின்றதையே கலையாகவும் படைப்பாகவும் தெறிக்கும் அடிப்படை நியாயத்தளமொன்று
அவர்களுக்கு இருந்தேயாகவேண்டும்; ஓர் அரசியல்வாதிக்கும் அவர் கட்சிக்கும் எய்குறிக்கோளை
அடைவதற்காக நெறிப்படுத்தவும் நடத்தவும் ஒரு தத்துவ அடிப்படையிருக்கவேண்டியதுபோல, மதநிறுவனங்களுக்கு
வழிப்படுத்தும் நெறிக்கோவையிருப்பதுபோல, கலைஞருக்கும் தாம் சார்ந்த சமூகத்தின் நலன்,மேம்பாடு,
ஈடேற்றம் குறித்து இருந்தேயாகவேண்டும்; கலை கலைக்காகவே என்பதும் அழகுணர்வும் நடிப்புத்திறனுமே
கலையையும் படைப்பினையும் உச்சப்படுத்தி மதிப்பீடு செய்ய உதவுகின்றதென்பது அவர்களுக்கும்
அவர்தம் ஆதரவாளர்களுக்கும் தப்பிக்கும் வெற்றுத்தி மட்டுமே என்பேன். அவர்கள் அவர்களின் நிலைப்பாட்டுடன் மற்றவர்கள் ஒத்துப்போகின்றார்களா
இல்லையென்பதுகூட இரண்டாம் நிலையே. அவர்க்குக் கலைஞருக்கான ஒரு தார்மீகப்பொறுப்பிருக்கின்றதென்பதை
உணர்தலும் அதைக் கைக்கொண்டு படைப்பினையும் நடிப்பினையும் தேர்தலும் வெளிக்காட்டுவதும்
முக்கியமானவை.
ஆக, “நான் வெறும்
படைப்பாளிதான்”, “நான் பாத்திரத்தினை வெளிக்கொணரும் வெறும் நடிகன்தான்” என்பதெல்லாம்
பொருளையீட்டிக்கொண்டு சமூகப்பொறுப்பின்றி தப்பிக்கும் உத்திமட்டுமே! குறைந்தளவு, “நான் எழுதுவதை நான் கொண்ட புரிதலின் அடிப்படையிலே
எழுதுகிறேன்”, “நான் இப்பாத்திர அமைப்பு நான் கொண்ட புரிதலின் அடிப்படையிலே ஒரு சரியான
செய்தியைக் கொண்டு செல்லும்” என்ற வகையிலே திடமாகச் சொல்லக்கூடிய தன்மையையேனும் படைப்பாளியும்
கலைஞனும் கொண்டிருக்கவேண்டும். அந்நேர்மையற்று விமர்சனங்களைத் தவிர்ப்பவும் கேள்விகளை
மறுத்தோடுவதும் ‘நான் வருவாய்க்காய் ஈடுபடுகிறேன்’ என்றோ ‘படைப்பைப் படைப்பாய்ப் பாருங்கள்’ என்பதும்
தம் பார்வையாளர்களைமட்டுமல்ல தம்மைத்தாமுமே ஏமாற்றிக்கொள்ளும் கழுவிலேறிக் குந்தமுன்னால்
எண்ணக்கூடிய தந்திரம்மட்டுமே!
மிகுதிப்படி,
“இதன் காரணமாக நீங்கள் ஈடுபடக்கூடாது” என்ற பின்னாலும் காரணங்களைச் செவிமடுக்காதோ அல்லது
கேட்டும் கேட்காததுபோலத் தமக்காக முடிவெடுத்துக்கொண்டவரிடம் “எழுதாதே!”, “நடிக்காதே!”
என்பதுபோல அறைகூவுவதும் பட்டங்களைச் சூட்டுவதும் பயனில்லை என்பதிலும்விட மற்றோர் செய்யும்
முறையற்ற செயல்கள்தாமென்பேன். பொதுவாக, “துரோகி”, “எட்டப்பன்”, “காக்கைவன்னியன்”, “பாசிஸ்ட்”
போன்ற பட்டங்களோடு எனக்கு உடன்பாடில்லை. முடிந்தளவு மாற்றுநிலைப்பாட்டினைக் கொள்வாரை,
அவர்களின் கருத்தளவிலே வெல்ல முயற்சிப்பதிலேயும் அவர்களின் இரட்டைநிலைப்பாடு, பொய்மைத்தனங்களைச்
சுட்டுவதிலும் தயக்கமேதுமிருக்கக்கூடாது; ஆனால், பட்டங்களைச் சூட்டுவதாலே மட்டும் அடிப்படைத்தர்க்கமுமின்றிக்
கூச்சலாலே வென்றேதுமாகப்போவதில்லை. கீறிட்ட இடங்களையும் கோஷங்களையும் வைத்துக்கொண்டு
அச்சுறுத்தி வாயைமூடவைக்கலாமேயொழிய, கருத்தினை மாற்றவைக்கவோ நாம் சரியென நிறுவவோமுடியாதென்பது
என் நம்பிக்கை.
அடுத்தபடியாக,
ஒரு படைப்பாளியோ கலைஞரோ தனக்கான நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டாரெனக் கொள்வோம்; அதன்பின்னால்,
காலத்தின் இறகெழுதும் அவர்குறிப்புக்கு அவரே பொறுப்பு. காலம் எடுத்த நிலைப்பாட்டுகளுக்காகப்
பின்னால் எரிப்பதும் குளிப்பாட்டுவதும் நிகழலாம். ஹிட்லரின் படப்பிடிப்பாளர் இலெனிஇரெய்பென்சாலும் ‘த பேர்த் ஒப் எ நேஷன்’ டி டபிள்யூ கிரிபித்தும் மக்கார்த்தியின் ‘சிவப்பச்சத்தின்
விளைவான அமெரிக்காவுக்கானதல்லாச் செயற்பாடு’களுக்கு மசிந்துபோன எலியா காஸனும் எடுத்துக்கொண்ட
நிலைப்பாட்டுக்காக இற்றைவரைக்கும் சுடப்பட்டுகிறார்கள்; ‘தி க்ரேட் டிக்டேட்டர்’ இற்காக
சப்ளின் பாராட்டப்படுகிறார். செவ்விந்தியப்பெண்ணினைத்தனக்கான பரிசு வாங்க அனுப்பின மார்லன் ப்ராண்டோ பாராட்டப்படுகிறார். இங்கு எவர் கலைஞர்
என்பதுமட்டும் காலத்திலே நிலைப்பதில்லை; அவர்களிலே எவர் மனிதரென்பதும் என்ன செய்தாரென்பதும்
சேர்ந்தே நிற்கப்போகிறது.
சமூகப்பொறுப்புணர்வுகொண்டவரென அவரின் முன்னைய செயற்பாடுகளினை வைத்து ஒரு மரியாதையினை கொண்டிருந்த விஜய் சேதுபதியின் தேர்ச்சில் நிலத்தைத் தொட்டிருக்கின்றது. ஆனால், அஃது அவரின் தேர்வு, இளமைக்கால முரளிதரனாக நடிக்கமாட்டேனென்ற நடிகருக்கிருக்கும் தேர்வினைப்போல. அப்படத்துக்கான தயாரிப்பாளர், நடிகர்களின் வியாக்கியனங்கள் வேடிக்கையானவையும் சப்பைத்தனமானவையுமெனத்தான் எனக்குத் தோன்றுகின்றன; “இது முரளிதரனின் அரசியலைச் சொல்லாத விளையாட்டைமட்டுமே சொல்லும் படம்மட்டுமே” என்பதே அழுக்குச்சுவருக்குக் காவிசுற்றும் அரசியலின் உச்சமே! அரசியல்நீக்கம் என்பதைவிட அரசியலுச்சமான செயற்பாடென்பதேதுமில்லை; ஒரு தனிமனிதனின் வாழ்க்கையென்பது நீரும் எண்ணெயுமானதல்ல, அடர்த்தியை வைத்துப் புனலிலே மிதக்கும் எண்ணெயை மட்டும் பிரித்துக்காட்டுவதற்கு. வெறும் திருநிலைப்படுத்தலாலே எதனைச் சாதிக்கப்போகிறோம்? அட்டன்பரோவின் ‘காந்தி’, நவாசுதீன் சித்தீக் நடித்த ‘பால் தாக்கரே’ எதனைச் சாதித்தன என்பதைப் பார்த்தவர்களே சொல்லட்டும்.
முரளிதரன் படமாகி
வந்தால் நான் பார்க்கப்போவதில்லை; கிரிக்கெட்டிலே எனக்கு ஆர்வமிருந்ததில்லை; டோனி கூடப்பார்க்கவில்லை;
கடைசியிலே தேடிப்போய்ப் பார்த்த விளையாட்டு சம்பந்தமான படம் டேர்பி டஸ் டலாஸ்;
அதுகூட வேறுவிளையாட்டுப்படமென்பதாலே, 1982 இலே J ஆனால், கிரிக்கெட் இல்லாமல், இலக்கியவாதியின்
வாழ்க்கைப்படமென்றாலும் பார்க்கப்போவதில்லை.
பெரும்பாலான தமிழகப்படங்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் காசுகாட்டக்கூடாதெனக் காந்தி
கண்ணதாசன் புத்தகக்கண்காட்சிக்கால பபாசிக்கூடாகவும் சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர்
படத்தணிக்கைச்சபையூடாகவும் என்றோ எனக்கு உணர்த்தியிருக்கின்றார்கள். அதனால் ஏதும் விஜய்
சேதுபதிக்குக் காசுக்குறையொன்றுமில்லை மறைமுத்தையா முரளிதரா!
No comments:
Post a Comment