முந்தநாளிரவு
ஆர்டிக்கள் 15 (Article 15) படம்; இந்தியச்சட்டம் குறித்த புரிதல் எனக்கில்லை. மதம்,
பால், இனம், சாதி, பிறப்பு அடிப்படையிலே வேறுபாடு குடிமக்களுக்கிடையே காட்டப்படக்கூடாது
என்றதைச் சொல்வது இந்தியச்சட்டத்தின் 15 ஆம் சட்டமூலவிதி என்று புரிந்துகொள்கிறேன்.
அதற்குமாறாக, சட்டமே சாதியோடு சேர்ந்தோடுவதையும் சாதிகள்கூட்டாவதையும் நகரிலிருந்து
கிராமத்துக்குப் போகவைக்கப்பட்ட, ‘உயர்சாதி’ சுதந்திரசிந்தனைகொண்ட காவற்றுறை அதிகாரி
எப்படியாகக் கையாள்கின்றார் என்பதான படம். ஆரம்பத்திலே நடைமுறையின் கொடுமையைக் காட்டிக்கொண்டிருந்தது,
முடியப் பதினைந்து நிமிடங்களேயிருக்கையிலே திடீர்த்திருப்பம், நாயகனின் சாகசம், எல்லாச்சாதிகளிலும்
நல்லவருளர் என்பவைபோலவும், நேரே கை-பூ கட்சிகள் எனப் பிரசாரத்தன்மையோடும் படம் கலையொடுங்கிச்
சப்பெனச் செத்துப்போனது.
படத்தின் ஆரம்பத்திலே, கிராமத்தின் கோரம் துலங்கத்தொடங்கமுன்னால்,
வண்டியிலே வரும் வெளிநாட்டிலே வளர்ந்த நாயகன் கேட்கும் பாடல், பொப் இடைல்யானினது. இடைல்யான்,
அமெரிக்க (நவீன)நாட்டுப்பாடலசைக்கும் உரொக்கிசைக்குமிடையிலே கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள்
குறுக்கும்நெடுக்கும் தடைதாண்டியோட்டம் ஓடிக்கொண்டிருப்பவர். அறுபதுகளின் சமூகக்கட்டுப்பாட்டுகளுக்கெதிராக
உடைத்துப்பாடியவர், 2000 களிலே சொகுசுவாழ்க்கையிலே தொலைந்துபோனாரென வேரோடின நாட்டுப்பாடலிசைக்காரர்களாலே
ஏளனம் செய்யப்படுகின்றவர். (பாடகர் ஆர்லோ கூத்ரி, ‘பொப் இடால்யனின் பாடல்களினை பொப்
இடால்யனிலும்விட மூலம் கெடாது பாடுகின்றவர் தானென அண்மையிலே ஒரு மேடையிலே நக்கல் செய்திருந்தார்). நாட்டுப்பாடல்களின் வேரோடாத மினசோட்டா மாநிலத்திலே
அமெரிக்கவேரிசையின் பெருங்கூறாயிராத உயூதப்பின்புலத்திலிருந்து வந்தவர். பாடகரென்ற அளவிலே பிடித்தவரல்லர்; குரல், தூறல்மழையிலே
நனைந்த அடுத்தநாள் மூக்காலே பாடுவதுபோன்ற குரல்; அவரைப்போலவே பாடலுமெழுதி இசையுமமைத்து
மூக்காலே பாடும் அண்ணன் தம்பி இரண்டுபேர் எனக்குத்
தெரிந்திருக்கின்றார்கள். இசைக்காக அவர்களைப் பொறுத்துக்கொள்வதுபோல, எழுதும் பாடல்
வரிகளுக்காக இடால்யனைப் பொறுத்துக்கொள்ளலாம். 2016 இலே இலக்கியத்துக்கு அவரின் பாட்லகளுக்காக
நோபல் பரிசு கொடுத்தபோது, மனுசனுக்கே போய்வாங்கச் சங்கடமாயிருந்ததோ என்னமோ மேடையிலே
வாங்காமல், பிறகு தனியே போய் வாங்கினார். அத்துணை அவரின் பாடல்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன
எனலாம். பயன்படும் இசைக்கருவிகள், இசையமைந்த நுட்பம் இவற்றிலே கவனம் செலுத்தவேண்டிய
இயல்பற்றவகையிலே எனக்கு இவர் மவுத்ஓகர்ன், கிற்றார் இவையிரண்டையும் வைத்துக்கொண்டு
பாடும் பல்திறனை மட்டும் விதந்துவிட்டு இவரின் பாடல் வரிகளிலே கவனம்போய்விடும். ஆர்ட்டிக்கள் 15 இலே ஒலித்த இப்பாடல், I Pity
the Poor Immigrant ஆகியவை பிடித்துக்கொண்டவை.
நமது கட்சிப்பாடகர்களான
பீற் ஸீகர், ஆர்லோ கூத்ரி, ஜோன்–போல்-மேரி போன்று பாடிய பாடல்கள் அனைத்தும்
வரிகளுக்காக பொப் இடால்யனைப் பிடித்துக் கவனப்படுத்திக் கேட்க இல்லாதபோதுங்கூட, இப்பாடலை முதலிலே கேட்ட 2004 ஆண்டளவிலிருந்து அவ்வப்போது
தேவைப்பட்ட தவனத்தருணங்களிலே கேட்டிருக்கின்றேன்.
2009 இன்பின்னான
காலத்திலே அவ்வப்போது, தட்டிக் கேட்க விழையும் அரசியல்சார்ந்த பாடல்கள் மூன்று; இரண்டாவது,
பீற் ஸீகரின் we shall overcome, மூன்றாவது இது. 1962 இலே அமெரிக்க (நவீன)நாட்டுப்பாடல்
வகையிலே போருக்கெதிரானவகையிலே, கேள்விகளாகவே தொகுத்ததுமாதிரியான பாடல் இது. இப்பாடலை
அதை எழுதிப் பாடியபின்னால், பிரபலயமான பல பாடகர்கள் – மார்லின் இடைரிட்ச், ஜோன் பேய்ஷ்,
பீஜீ, ஆர்லோ கூத்ரி, ஜோன்-போல்-மேரி, ச்ரீவ் உவொண்டர், ஜோனி காஷ், ப்ரூஸ் ஸ்ப்ரீங்ரன்.உடொலி
பாட்ரன், ஜோன் இடென்வர்- இப்பாடலுக்கு வாயசைத்திருக்கின்றார்கள். ஸ் ரீவ் உவொண்டர்
தொண்ணூறுகளிலே இடைல்யானின் முப்பதாண்டு இசையுலகைக் குறித்துப் பேசும்போது, “இப்பாடல், அறுபதுகளிலே அமெரிக்கக்குடிசாருரிமைக்காகப் பேசியது;
எழுபதுகளிலே (தென் ஆபிரிக்க) ச்ரீவ் பிக்கோவுக்காகப் பேசியது; எண்பதுகளிலே தென்னாபிரிக்காவின்
நிறவெறிக்கெதிராக, (எதியோப்பியாவின்) பட்டினிக்காகப் பாடப்பட்டதுபோன்றிருந்தது; தொண்ணூறுகளிலே யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்பதைச் சுட்டவும் பயன்படுவதுபோலுள்ளது; இப்பாடலின் எப்போதுக்குமாகப் பொருந்துநிலை துயரமுமானது;
துயரமானது ஏனெனில், அப்படியாகப் பொருந்துமளவுக்குத் துயர்நிலை மாறாதிருப்பதாலே ’ என்றார்.
அவர் தொண்ணூறுகளில் வேண்டிய கிளிண்டன் அரசியலும் பெரிதும் போர்முடித்த அரசியலல்ல; அதுவும்
பிறநாடுகளிலே போர் முடிந்த அரசியலே என்பது ஒரு புறமிருக்கட்டும். ஆனால், 2010 களிலே இன்னமும் நான் நோக்குமிடத்துக்கெல்லாம்
பொருந்துவதுபோலத்தானிருக்கின்றது.
ஓரிடத்திலே
அடாவடித்தனமான சவ எரிப்பு சூழ நெடுங்காலம் நிலம்பட வாழ்வாரின் உரிமைகளையும் நீதியையும்
புறங்கையொட்டிய காய்சேற்றுப்பருக்கையைச் சுண்டுவதாய் அலட்சியப்படுத்திச் சட்டத்தின்
துணையோடு நிகழ்கையிலே, இப்பாடலிலே வரும் இடைல்யானின்,
‘Yes, and how many years can some people exist
Before
they're allowed to be free?”
வரிகள் ஞாபகத்திலே
வந்தால், அதற்கு இரு மணிநேரப்பயணத்தூரத்திலே கூடி, அப்படியான போர்முடியா நிலையிருப்பதையே அறியாததுபோலப் பேசவேண்டுபொருளைப்
பேச மறுத்து, போர்மறுபடைப்புத் தோன்றாத்துயர்தோய்வாய்ப் பாவனைபேசுங்கிளிகளைச் சுட்டி,
‘Yes, and how many times can a man turn his head
And
pretend that he just doesn't see?”
வரிகள் காலத்தோடு
நமக்கும் பொருந்திவருகின்றதாய்த் தோன்றுகிறது.
வரும்போரை எதிர்த்தல்
என்பதைப் போன கொடும்போரை மறைத்தல், நிகழ் மறைபோரை மறுத்தல் என்பதாகத் தம்மரசியலின்பொருட்டுச்
சுட்டிக்கொண்டேயிருப்பார்க்கு,
“ The answer, my friend, is blowing in the wind
The answer is blowing in the wind!’
என்பதைச் சுட்டினாலும்
ஏறாதென்றே தோன்றுகின்றது.
‘Yes, and how many ears must one man have
Before he can hear people cry?’
தேர்ந்தெடுத்துக் கேளாச்செவியர்க்கு முடிவிலி + ஒன்று!
No comments:
Post a Comment