ஹொங்ஹொங்குக்குப் போய்ச் சேரும்வரை நான்
பார்த்த எம்ஜிஆரின் படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். திருகோணமலை சரஸ்வதி திரையரங்கிலே பார்த்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’, இராஜி திரையரங்கிலே பார்த்த ‘எங்க வீட்டுப்பிள்ளை’, பேராதனை துஷிதாவிலே பார்த்த ‘தாய்க்குத் தலைமகன்’, கட்டுகஸ்தோட்டை சிகிரி திரையரங்கிலே பார்த்த ஹிச்ஹொக்கின்
Vertigo இனை ஒற்றியெடுத்த ‘கலங்கை விளக்கம்’. எம்ஜிஆரின் அரசியலை எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தொடர்ந்து கவனித்த அளவுக்கு அவரின் திரைப்படங்களைப்
பார்த்ததில்லை. அப்போதுகூட, மு. கருணாநிதியின் சார்பேயிருந்தது.
எண்பத்தேழிலே ஒருநாள் படித்த பல்கலைக்கழகத்தை மீண்டுமொரு முறை ஜேவிபி – அரசு இடையேயான
வன்முறையால் மூடி அத்தனை மாணவர்களையும் ஒரு விடிகாலையிலே பேராதனைப்புகையிரத
நிலையத்திலே ஊருக்குக் கழுத்தைப் பிடித்துத்தள்ளாக்குறையாக அனுப்பிவைத்தார்கள். மாஹோ சந்தியிலோ பொல்காவல சந்தியிலோ இறங்கி
இணைப்புப்புகையிரதத்துக்கு நின்றபோது, தேநீரருந்த வெளிக்கடைக்குப் போய்வந்த நண்பனொருவன், ‘எம்ஜிஆர் போய்விட்டார்’ என்றான். ஒரு நடிகர்
போய்விட்டாரென்றுமட்டும் தோன்ற வைத்த அந்நேரத்திலுங்கூட, எம்ஜிஆரின் திரைப்படத்துறையினைத் தனக்கான அரசியலுக்கும் தான் இலக்குவைத்த மக்களைச் சேரத் திட்டமிட்டுப் பயன்படுத்திய வகையும் புரிந்தாயிருக்கவில்லை. அவர் எனக்குத் தெரிய உச்சத்திலிருந்த 70 களிலே எனைச்
சூழுலகம், “சிவாஜி அற்புத நடிகர்; எம்ஜிஆர் சண்டைக்காட்சிக்கானவர்” என்பதான சட்டகச்சூத்திரத்தைத் தந்திருந்ததிலே வளர்வினையது.
ஹொங்கொங்கிலே வார இறுதிகளிலே சுங்கின் மென்ஷனிலே சாப்பிடப்போகும் கீழைக்கரைக்காரரின் கடைக்குப் பக்கத்துக்கடையிலே
கறுப்புவெள்ளைப்படங்களை நாடாவிழியங்களாக மலிவுவிலைக்கு அள்ளிவரமுடிந்தது. கீழைக்கரைக்காரர் அப்போதுங்கூட ராணி, அலிபாபா சஞ்சிகைகளுக்கு
‘ஹாங்காங் துணுக்கு’ அனுப்பிக்கொண்டிருந்தார். என் ‘அந்தக்கால எழுபதுகளைப்’ பேச ஹொங்ஹொங்கிலே அகப்பட்ட
ஒரே பரிதாப ஆத்மா. பக்கத்துக்கடையிலே எவருக்குத் தள்ளுவதென்று
தெரியாவகையிலே போனாற்போதுமெனப் பெட்டிகளுக்குள்ளே அடுக்கி வைத்திருக்கும் கறுப்புவெள்ளைப்படங்களைக் கொண்டு வந்து சண்டைக்காட்சிகளும் அழுகைக்காட்சிகளும் விரைந்தோட விட்டு, பாட்டுக்காட்சிகளும் நகைச்சுவைக்காட்சிகளும் நகர்ந்திருக்கப்
பார்ப்பேன்.
அப்போதுதான், எம் ஜி ஆரின் மக்கள்மயப்பட்ட ‘பாட்டாளி’+’திராவிட’ + ‘தனியாட்கவர்ச்சி’ மூலதனமிட்டுத்
தன்னை மையப்படுத்திய அரசியலைத் திட்டமிட்டுக் கட்டமைத்த தன்மை புரிந்தது. தொழிலாளி, படகோட்டி, விவசாயி, நாடோடி, நாடோடிமன்னன், திருடாதே என்ற
வரிசைப்படங்கள் அமைந்தவிதமும், பகுத்தறிவுப்பாசறையிலேயே
நின்றுகொண்டு முருகபக்தர் சாண்டோ சின்னப்பா தேவரினை “ஆண்டவரே!” என்று அழைத்துப்
படம் தனக்குத் தயாரிக்கச் செய்யவைத்த சாமர்த்தியமும் புரிந்தது. மு.க. முத்துவை வைத்தோ அமிர்தத்தின் இயக்கத்திலே ஜெயசங்கரை வண்டிக்காரன் மகனாக்கி வைத்தோ திமுக வெல்லமுடியாத அளவுக்கு, “என் பிள்ளைகளே!” என்று
தன் விசிறிகளை முதலாக்கி, வி கே ராமசாமி, சுந்தரராஜனைக் கட்டிக்கொண்டு இந்திரா காங்கிரசிலிருந்து பிரிந்த சிவாஜி நிமிரவோ முடியாதுபோன நிலைக்கு முற்றிலுமெதிராக எம் ஜி ஆர் தொடர்ந்து நிலைத்து வென்றதற்கு, திரைப்படத்தினை அமைப்பதிலே பட நாயகன் என்பதற்கப்பால், அவர் எத்துணை கவனமெடுத்துக்கொண்டாரென்பதற்கு இப்பாடல் ஓர் எடுத்துக்காட்டு.
ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளுவை ஒரு நடிகன் எப்படி ஆட்டிப்படைத்தான் என்பதற்கு வெறும் ‘தளதள, பளபள வெள்ளி
ஜிகினாத்துகள்’ மட்டுமே காரணமாகக் கொள்ளமுடியாது. தங்கப்பதக்கத்திலே அரசியல்வாதி சோ நக்கல் செய்துவிட்டுப்போனாலுங்கூட, நடைமுறையிலே தாய்க்குலத்தையும் நாட்கூலியையும் கட்டிப்போட்டு வைக்க, பெரும் கட்டமைப்பு, எம்ஜிஆர் நடிக்கும் படக்காட்சிகளின், பாடல்களின், கதையமைப்பின் ஒவ்வொரு சலனத்துண்டிலுமிருந்திருக்கின்றது. எம் ஜி ஆரின் அரசியல் எனக்கு
ஒப்புதலானதல்ல; ஆனால், அதன்பின்னான கட்டியெழுப்புதலும் அதைத் தக்கவைத்துக்கொள்வதற்காகக் கணமும் தொப்பியையும் கண்ணாடியையும் சரியவிடாத எச்சரிக்கையுடன்கூடிய அவரின்
உழைப்பும் பிரமிப்புக்கானவை.
இப்பாடல், வடக்கின் வன்னிய வாக்குவங்கியை நம்பிய திமுகவிலேயிருந்து பிரிந்து மத்தி,
தெற்கின் தேவர் சமூக வாக்குவங்கியை நம்பி அதிமுகவின்
முதலாம்வெற்றிக்காக மாயத்தேவரை நிறுத்தி வென்றதற்கான விளம்பரமாகமட்டுமல்ல, பாடலூடாக திமுகவை விமர்சிப்பதுமாகச் சேரவேண்டிய இடத்தைப் போய்ச் சேர்கின்றது. (மாயத்தேவர்
1997 இலே திமுகவிலே நின்று திரும்ப வென்றது காலத்தின் கோலம்) கட்சியின்
உறுப்பினர்களான லதா, ஐசரிவேலனும் இக்காட்சியிலே உண்டு. இன்றைக்குங்கூட, இப்பாடல் எழுதப்பட்ட காலத்திலே எண்ணிப்பார்க்கவே தோன்றாத இலக்கிய அரசியல் உட்பட எத்தனையோ வகை அரசியல்களைச் சுட்ட அச்சொட்டாகப் பொருந்துகின்றது.
குடிசைப்பகுதியிலே அள்ளின குப்பையைத் திரும்பக் கொட்டி வாரிக் கூட்டிக் கூடைக்குள்ளே போட வெளியிலிருந்து ஆள் கூட்டிக் கூடப் படம் பிடிக்க ஒரு கூட்டம். பாடல்முடிந்த பின், குடிசைப்பகுதி சுத்தமாகிவிடுமென்று எண்ணுவதுகூட தவறானது. சுத்தமானால், வந்துகூடிக் கூட்டியள்ளியதைக் கொட்டிக் கூட்டிப்போகும் அடுத்த தடவைக்கான காட்சியின் அடையாளமும் பதிவும் விளம்பரமும் அற்றுப்போகாதா என்ன?
எப்போதும் இப்பாடலைக் கேட்டு முடிக்கையிலே எம் ஜி ஆரின் இன்னுமிரு படப்பாடல்வரிகளும் தம்பாட்டிலே ஞாபகத்திலே கேட்டவினையின் தொடர்ச்சியாய் வந்து போகும்:
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?”
“திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது!”
No comments:
Post a Comment