Tuesday, March 25, 2014

கல்யாண்ஜியின் அப்பா

   இலக்கியத் திறனாய்வாளர் தி.க.சி. காலமானார்

அடிப்படைப்படங்களுக்கு நன்றி

சாயல் 

என் சின்ன வயதில்
சட்டையில்லாத அப்பா
எப்படியோ இருப்பார்.
அவருடைய தளர்ந்த இந்த வயதில்
சட்டை போட்டால் அப்பா
எப்படியோ இருக்கிறார்.
அப்படியே இல்லாமல் இருப்பதுதான்
அவருடைய சாயல் போல.
-கல்யாண்ஜி

தமிழிலே கட்சிசார் கலை இலக்கிய சஞ்சிகைகளின் படைப்புகள், திறனாய்வுகளின் கறுப்பு ஆழத்திலும் வெளுப்பு விரிவிலும் நம்பிக்கை இருந்தகாலமும் உண்டு; அறியாக்காலம். கைலாசபதி, சிவத்தம்பியின் வெளிக்கட்சி இலக்கியம் போற்றும் வக்கினைத் தூற்றும் ஜெயமோகன், வேதசகாயகுமாரின் உட்கட்சி இலக்கியத்திறனாய்வின் அரசியலும் தலைகீழும் புரியாக்காலம்; தாமரைகளும் எதிர்ச்செந்தாமரைகளும். ஒற்றைப்படி ஆத்மீகதரிசனத்துக்கும் தட்டையான பொதுவுடமைப்பரப்புரைக்கும் அகப்படாது அப்பாற்பட்டுத் தானாய் நிற்பது அசல் இலக்கியம்.

தி.க. சிவசங்கரன் எப்போதுமே அவரின் கட்சிசார்ந்த எழுத்துச்சேவைக்கும் படைப்பாளியை ஊக்குவிக்கும் அன்பான மொழிக்குமாக விதந்துபோற்றப்படுகின்றவர். ஆனால், படைப்பாளியை நோக்கிய அன்பான மொழியும் ஊக்குவிப்பும் ஒரு மனிதரின் தனிப்பட்ட நற்பண்பைக் காட்டலாம்; ஆனால், சரியான திறனாய்வாகுமெனச் சொல்லமுடியவில்லை. ஆனாலும், நுண்ணிய பார்வையையும் மென்மையான சொற்களையும் திகட்டாமல் ஒரு காலத்திலே கொண்டிருந்த கல்யாணசுந்தரம் என்ற நல்ல படைப்பினைத் தந்தவராகச் சிவசங்கரனை வியந்து நினைவுகூரமுடிகின்றது.

தந்தையின் இறப்பினைக்கூட எரித்தபின்னரே அறிந்துகொண்டவன், தாயினை பதினைந்தாண்டுகளாகக் காணாமலேயிருக்கின்றவன் என்றளவிலே, வண்ணதாசன் தந்தையோடு இருப்பதற்காகவே திருநெல்வேலிக்கு மாற்றலாகிப் போனார் என்று முன்னொருமுறை போகின்றபோக்கிலே வாசித்தது பதிந்துபோயிருக்கின்றது. மரத்திலே கிளைநிறைந்து சொரிவதாய் எத்தனையோ குருவிகளும் கிளிகளும் வன்னப்பறவைகளுமிருக்கும்போதுங்கூட, அவற்றின் வண்ணம், விரிந்த சிறகு, கூவும் கீதம் இவை கொண்ட பறவைகளிலும்விட, எனக்கு வாய்க்கா வகையிலே கழுத்தைவெட்டிச் சொடுக்கும் நளினம் வாய்த்த ஒரு பறவை ஈர்த்துவிடுகின்றதைக் கண்டிருக்கின்றேன்; அப்பறவையின் நிறங்களின்கூட்டமைதி, எழுப்பும் இசைந்த குரல், சிறகு விரிந்தெழும் ஒய்யாரம் எல்லாமே இச்சின்ன கழுத்துவெட்டுப்பார்வை முன்னாலே தொலைந்துபோவதை உணர்ந்திருக்கின்றேன். இதுபோலத்தான்,  சொற்செட்டு, நுண்ணுணர்வு செறிந்த கல்யாண்ஜியின் கவிதைகளிலும்விட, அவரின் "அப்பாவோடு இருப்பதற்காகத் திருநெல்வேலி மாறிப்போனேன்" என்ற ஒரு வரி நினைவிலே நின்றுபோயிருக்கின்றதென எண்ணுகிறேன்.

எதற்கும் பொருள் ஈட்டும் தேவை, இருப்பின் வாழ்க்கையிலே சுகம் கண்ட தன்மை இவற்றினை மழைக்காலத்தின் தேயிலைச்செடியிலிருந்து காலிலே ஒட்டி உதிரத்தை உறுஞ்சும் அட்டையென்று பிய்த்துப்போட்டுவிட்டுப் போய் பெற்றவரோடு இருக்கமுடியாத, குறைந்தளவு கண்டுவரவேனும் செய்யும் உளநிலை -நாட்டுநிலைக்கப்பாலுங்கூட- வாய்க்காத நிலையிலே கல்யாண்ஜி உள, வாழ்புலநிலையிலே கொடுத்துவைத்தவர். பெற்றோர்கள் இல்லாதுபோங்காலத்திலே, மிகுந்த தன் காலம் நெடுக்க குற்றவுணர்வினாலே குமையவேண்டிய கொடுமை அவருக்கில்லை.

No comments: