Friday, February 21, 2014

வரலாற்றுக்கு வாய்பிளத்தலும் வீணீர் வடித்தலும்

அடிப்படைப்படம்: ஹப்ஃஃபிங்டன் போஸ்ற்
வரலாற்றோடு மல்கம் எக்ஸினையும் பிடல் காஸ்ரோவினையும் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியையும் ஏர்னெஸ்ரோ 'சே' குவேராவினையும் சாவேஸினையும் மாவோவினையும் மார்க்ஸினையும் ஸ்டாலினையும் ஹோசிமினையும் அபு நிடாலினையும் நெல்சன் மண்டேலாவினையும் ஏன் கடாபி, சதாமினைக்கூட விமர்சனமின்றி கோஷங்களின் நாயகர்களாக, எமக்குள்ளேயான எதிர்ப்புணர்வின் அடையாளங்களாக விலங்கோ வில்லங்கமோவின்றி விடுதலை செய்யும் நமக்குங்கூட நம்காலத்தின் நடத்திக்காட்டிகளை விருப்புவெறுப்பின்றி விமர்சிக்கக்கூடமுடியவில்லை. கோஷங்களுக்காவும் கையிற் பிடித்திருக்கும் சட்டத்தின் விளிம்புவெள்ளிமுலாம் உள்ளத்துக்குப் பிடித்திருக்கின்றதென்பதற்காகவும் அவற்றுள்ளே பொருந்துகின்றவைமட்டுமே சரியானவை என்று கொள்ளும் தன்மை, தேக்கமும் புதியனவற்றை உள்வாங்கி இருப்பதோடு பொருத்தமாகக் கலந்துண்டு செரிப்பதற்கான பெரும்பயமுமின்றி வேறென்ன?

அண்மையிலே ஒரு தொலைக்காட்சி விவரணம்; "Dear Mandel
a" தென்னாபிரிக்கத்தேசியக்காங்கிரசின் குண்டர்படை "சிவப்பு எறும்புகள்" எப்படியாக சேரியிலே வாழுகின்றவர்களின் அபாலாலி இயக்கத்தினை வாழிடமின்றி நெடுங்காலமாக நெல்சன் மண்டேலா வாழுங்காலத்திலிருந்தே நசுக்குகின்றார்கள் என்பது பற்றியது.

விமர்சனமின்றி எல்லோரும் போன மண்டேலாவுக்காக (தசாப்தங்களாக அடைத்துவைத்திருந்த எதிரிகளை மன்னித்த அவர் தனிப்பட எப்படியாக வின்னி மண்டேலாவை மன்னிக்கவேயில்லை என்பதும் தற்போது பேசப்படும் ஒருவிடயமானாலுங்கூட, அஃது அவரின் தனிவாழ்க்கையென விட்டுவிடலாம்) அழுது தொலைத்த நாம், இவற்றினை விமர்சிக்கவோ, ஆபிரிக்கக்காங்கிரசின் எட்ஸ் இல்லையென்று தம்போ பிடித்த பிடியினை விமர்சிக்கவோ முயலவில்லை. ஏன், சிறிலங்கா அரசுக்கு மீண்டும் ஜெனீவாவிலே மனித உரிமையினை நிலைநாட்டுவதின்பேரிலே கியூபா உதவப்போகின்றது என்பதைக்கூட நாம் விமர்சிக்கத் தயாரில்லை. "சே" குவேராவின் ஒரேபாலீர்ப்பாளர்கள்மீதான வெறுப்பினையும் விமர்சிக்கத்தயாரில்லை. பாளம்பாளமாய் பாகம்பாகமாய் வரிவிமர்சனமின்றியே கார்ல் மார்க்ஸ், ஜென்னி மார்க்ஸ், ரோஸா லக்ஸம்பேர்க் புகழ் கக்கவும் மறுப்பில்லை. ஆனால், நாம் சார்ந்த எல்லாவற்றையுமே நாமே தவறு செய்தோம் என்பதாக சுயகாழ்ப்பிலும் அவமானத்திலும் குன்றிக் காறித்துப்பித் துடைத்து மீண்டும் காறிக் கொண்டேயிருக்கின்றோம்.

கடந்த காலத்தின் அரசியல்களையும் புரட்சிகளையும் காலம் புள்ளடி போட்டு நொய்யவைத்த கொள்கைகளையும் வெறுமனே பெருங்காதல்மயக்கத்திலே முயங்கிக் காமுற்று என்ன பயன்?

மல்கம் எக்ஸ் மடிந்தது அமெரிக்காவின் கறுப்பினத்தவர் சார்ந்த போட்டி இஸ்லாம் தழுவியவர்களின் அமைப்புகளிடையே நிகழ்ந்த சகோதரப்படுகொலையிலே; வெள்ளையினவெறியிலேயல்ல. இதை வெளிப்படையாக விமர்சிக்கத்தயங்கியபடி, "சகோதரத்துவத்தினை முன்னிலைப்படுத்தும் இஸ்லாத்திலே சேர்ந்தார்" என்று அவரினை மேன்மைப்படுத்துவதாக எண்ணி எழுதும்போது, அவரையும் மிதவாதஇஸ்லாத்தினையும் வாசிக்கின்றவர்களின் கிரகிக்கும் ஆற்றலையும் ஒன்று சேரப் பகிடிபண்ணுவதுபோலத்தான் தோன்றுகின்றது.

தூரத்திலிருந்து பார்க்கும்போதும் தாம் சம்பந்தப்படாத காலத்திலிருந்து பெருங்காதல்கொள்கின்றபோதும், புரட்சிகளும் பெருந்தலைவர்களும் அளவுக்குமீறின அண்டப்பிளவுப்பெருநிகழ்வுகளாகவும் விண்+பூமி+பாதாளம் விரிந்த வாமனர்களாகவுமே தோன்றுகின்றனர். எனக்கென்னவோ நாம் வாழும் சூழலுக்கு, மல்கம் எக்ஸின் இராமாயணங்களைவிட எம். ஆர். ராதா எத்தனையோ கீமாயணங்களைச் சாதித்துக்காட்டியிருக்கின்றாரெனத் தோன்றுகின்றது.



No comments: