Tuesday, February 18, 2014

நீதியின் தீர்ப்பேயொழிய நீதிபதியின் நேயர்விருப்பல்ல

எல்லாம் மகிழ்ச்சிக்குரியதுதான் - சில வரலாறு காணாத....... இல்லை! இல்லை! வார வாரக் கண்ட நகைச்சுவைநிலைத்தகவல் உட்பட.

 எல்லாவற்றுக்கும்மேலாக, இத்தீர்ப்பு, எப்படியாக, சிதறியிருக்கும் தமிழர்நலன்கருதிய அமைப்புகள் கவனத்தை ஒருங்குகுவித்து, ஓரளவேனும் தனியரசியலைப் புறம் தள்ளிக்கூட்டாகச் செயற்பட்டால், சாதிக்கமுடியும் என்பதையும் காட்டியிருக்கின்றது என்பதையும் ஒரு பாடமாகக் கொள்ளவேண்டும்.

ஆனால், ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி, தன்னை வழிநடத்தும் சட்டத்துக்குப்பாற்பட்டு (அதன் கோரமும் ஓட்டைகளும் இருக்கட்டும்), ஒரு தீர்ப்பினை வழங்கும்போது, "தமிழன் நீதிமன்றம் பொறுப்பேற்றான்", "முகர்ஜிகளும் பட்டீல்களும் செய்யமறுத்ததை இன்று சூத்திரன் செய்துகாட்டினான்" என்று அறிக்கைகளை உணர்ச்சிப்பெருக்கிலே விடுவது, வழங்கப்பட்ட நீதியைக் கேலி செய்வதாகவும் அதற்குப் பங்கம் விளைவிப்பதாகவும் இந்நீதியை அரசியலுக்காகவே அன்றிலிருந்து மறுத்துக்கொண்டிருக்கும் சாமிகள், ஆசாமிகள் பலருக்கும் வாய்க்கு மெல்ல வடகம் கொடுப்பதாகவுமே அமையப்போகின்றது.

இப்படியாக, நீதிபதி சதாசிவத்தின் சட்டம்சார்ந்த தீர்ப்பினை, அவரின் தனிப்பட்ட தன்விருப்பின்பாலமைந்த முடிவென்பதுபோலக் காட்டும் நிலைத்தகவல், அறிக்கைகள் வருதல் வருங்காலநியாயத்துக்கே கேடாகலாம். ஆயுட்தண்டனை என்பதைத் தமிழ்நாட்டு அரசாங்கம் (எவர் ஆட்சிக்கு வந்தாலுங்கூட)  விடுதலை செய்யும்வரைக்குமான இடைநிலை என்பதாகமட்டுமே கொள்ளவேண்டும்.

அம்மாகூட்டு, அய்யாகூட்டு என்ற தேர்தலின்கூட்டுகளின் கூறுகள் சில, அவ்விடுதலையைத் தடுக்கவே முடிவானமுடிவான முயலும். பாகஜ சுசுவாமியும் காங்கிரஸ் ஞானதேசிகனுமே இச்சாம்பார்களிலிருக்கும் இரு பருப்புகளாக உதாரணம்.

ஆகவே, இப்படியாக நீதியைத் தனியே நீதிபதியின் விருப்பத்தேர்வாகக் காட்டும் நேயர்நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது அறிவுபூர்வமானதும் முறையானதுமாகும்.

 

No comments: