Sunday, April 21, 2013

வீதியே வீதியே என்சாய் ...

நேற்று நூலொன்றைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.

அச்சுக்கோப்பாளர் பசியிலிருந்திருக்கிறார் போலும்:
"....நெடுநல்வடை ..... என்னும் பத்துப்பாட்டுகளுண்டு."

"பத்தியச்சாப்பாடுகளுண்டு" என்று முடித்தடிக்காத எம்மான் வாழ்க நீர்; வளர்க நும் உணவு.நண்பரொருவர் பேஸ்புக்கிலே, 'நெடுநாள்வடை' என்று குறிப்பிடாததற்கு நாம் மகிழ்வாயிருக்கவேண்டுமென்ற வகையிலே சொல்ல, சிரித்தோம்.


 தமிழ் அச்சகங்களிலே தமிழினை ஒரு பாடமாகக் (படமாக அல்ல) கற்றிருக்கின்றார்களா என்பதையும் அறிந்து வேலைக்கு எடுக்கின்றார்களாவென்பது ஐயத்துக்கிடமாகின்றது. தமிழ்த்தாளிகைகள், நூல்களைக் கையிலெடுத்தால், எழுத்துத்தட்டான்களும் இலக்கணவழுக்களுமின்றி ஒரு பந்தியினைத் தாண்டிச் செல்லமுடிவதில்லை. முறைதவறிய புணர்ச்சிவிதிகள்; முச்சந்திப்பிழைகள்; சுட்டமுற்பட்டால், உன் தமிழ் கொடுந்தமிழ் என்ற வகையிலே கிண்டலும் கேலியும் பகிடியுமாக, சுட்டுகின்றவர் விரலை அவரின் கண்ணுக்குள்ளேயே குத்தவைத்துவிட்டுத் தப்பியோடும் தமிழ்மந்தைகள். தாளாக்கொடுமை. 'பிரபல எழுத்தாளர்களே, தகர/டகர டப்பாங்குத்து தமிழிலே ஆட்டிக்கொண்டு, இலக்கணம் என்பதே அநாவசியமென்று மின்னஞ்சல் இலக்கியம் படைக்கையிலே ஓ! விந்தா! எதுக்கப்பனே அச்சச்சோகக்கோப்பாளர்களை யாம் நொந்து'' என்று தோன்றியது.

"விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை!!" என்று சொல்லிவிட்டு மேலே போகவெண்ணினால்,   இதைவேறு, "வீதியே வீதியே என்சாய் ..." என்று அச்சுப்பிச்சு வா கனம் ஏற்றிவிடுவார்களோவென்ற அச்சமேதான் முன்வந்து தாண்டவமாடியது.

2 comments:

இரா. செல்வராசு (R. Selvaraj) said...

ஆனாலும், இதனை யாரேனும் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டுமே இரமணீ... இல்லையெனில் இருக்கும் கொஞ்ச நஞ்சமும் தொலைந்து தானே போகும்?

-/பெயரிலி. said...

செல்வா,
உண்மைதான். ஆனால், இப்படியாக இலக்கணவழுப்படுதலினையே மொழியை மக்கள்மயப்படுத்தல் என்பதாகத் திரிக்கின்ற கூட்டம் பெரிது. அதனோடு முட்டிமோதுதலென்பது சோர்வினைத்தான் தருகின்றது