Thursday, July 07, 2005

துத்தம் - 6



முதலிரண்டு பகுதிகளினை நான் எழுத முயலவில்லை; நான் ஆரம்பத்திலே குறிக்க எண்ணியதெல்லாம் எனக்குப் பிடித்த சில ஈழத்துப்பாடல்கள் ஏற்படுத்திய தவனத்தினைத்தான். பரராஜசிங்கம்-குலசீலநாதன் இருவரும் கூடிப்பாடிய "சந்தனமேடை எம் இதயத்திலே உன் சலங்கையின் நாதந்தான் கேட்குதடி" என்ற பாடலும் "அழகான ஒரு சோடி கண்கள்" பாடலும் "குளிரும் நிலவினிலே" பாடலும் நெடுங்காலத்தவனம் தந்தவை. எம். ஏ. குலசீலநாதனே இசையமைத்த "சந்தனமேடை எம் இதயத்திலே" ஆரம்பத்திலே ஒரு காதற்பாட்டு என்பதாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்; பின்னர், பல்கலைக்கழகக்காலத்திலே நண்பன் ஒருவன் சுட்டிக்காட்டியபின்னாலேதான் அது சரஸ்வதி குறித்த பாடலென்று புலனானது. எம். ஏ. குலசீலநாதன், எஸ். கே. பரராஜசிங்கம் இருவருமே மரபுவழிச்சங்கீதப்பரீட்சயம் உள்ளவர்களென்று நினைக்கிறேன். குலசீலநாதன் சென்ற ஆண்டு பரிஸிலே மறைந்துவிட்டார். அதுபோல, "அழகான ஒரு சோடி கண்கள்" பாடசாலையிலே (சக மாணவி)கண்(/காதல்) வசப்படும் ஒரு மாணவன் அவள் கண்களைச் சுட்டும் வார்த்தைகளாக விழுவன. ஒவ்வொரு பாடநேரத்திலும் படும் இவன் துடிப்பினைச் சுட்டும் பாடல். மிகவும் அழகான சொல்லமைவும் இன்றைய காதற்பாடல்களிலே காணமுடியாத நாகரீகமும் நிறைந்த பாடல்.

"குளிரும் நிலவினிலே" என்னைப் பிடித்துக்கொண்டதன் காரணம் அந்தப்பாடலுக்குரிய கனத்தினையும் மெலிதான கரகரப்பினையும் கொடுக்கும் பரராஜசிங்கத்தின் குரல். சில பாடல்களைக் கேட்கும்போது, சில இடங்களும் காலமும் ஞாபகத்துக்கு வருவதுண்டு; பல சமயங்களிலே அந்நிலை ஏன் என்று தெரிவதில்லை; அப்படியான விசித்திரமான உணர்வினைத் தரும் பாடல்களிலே இதுவுமொன்று. திருகோணமலை - தொண்டமானாறு பேரூந்திலே இரவு ஏழு-ஏழரை அளவிலே பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை முடிந்து ஆனையிறவு உப்பளம் தொடங்கும் இடத்திலே பயணிக்கும் சூழலும் வழித்தடத்திலே சுற்றி வீடுகளிலே தெரியும் மங்கலான விளக்குவெளிச்சமும் பனையோலைகள் உராயும் சத்தமும் இந்தப்பாடலைக்கேட்கும்போதெல்லாம் எனக்கு உணர்வாகும். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், இலங்கையிலிருந்து சீனா நான் பயணமாகும்போது, ஒரு மாலைநேரம் இசைநாடாவொன்றிலே நானும் தங்கையும் இப்பாடலின் கூறொன்றை இலங்கைவானொலியிலிருந்து கௌவிப்பிடித்தோம். வெகுகாலம் வீட்டுநினைவிலே சீனாவிலே இப்பாட்டின் ஒரு நிமிட இரைச்சலுடனான பதிவினைக் கேட்டிருக்கிறேன்.

சில ஆண்டுகளின் முன்னால், கனடாவின் அருவி வெளியீட்டகம், எஸ். கே. பரராஜசிங்கத்தின் பாடல்களை "குளிரும் நிலவு" இசைவட்டாக வெளியிட்டதினை அருவியின் தளத்திலே கண்டிருந்தேன். அந்நேரத்தில், வாங்கக்கூடிய சந்தர்ப்பம் கிட்டவில்லை. பின்னால், அவர்களின் தளமும் அற்றுப்போய்விட்டது. ரொரொண்டோ போய்வந்த/வசிக்கும் நண்பர்களிடம் "ஈழத்துப்பாடல்கள்" பற்றிச் சொல்லிவிட்டபோது, அவர்களால், பொப்பிசைப்பாடல்களையே பெறமுடிந்தது. ஈழத்துப்பாடல்கள் என்ற வகைப்பட்ட இந்தப்பாடல்கள் கிட்டவில்லை. அண்மையிலே மேற்படி தவனம் பற்றிய முதலிரு குறிப்புகள் எழுதியதின்பின்னால், பத்மநாப ஐயர் கனடாவிலிருந்து அமெரிக்கா வந்தபோது, கொண்டு வந்த இசைவட்டுகளிலே "குளிரும் நிலவு" கிடைத்தது. "காஞ்ச மாடு கம்பில விழுந்ததுமாதிரி" போட்டுக்கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

மேற்கூறிய மூன்று பாடல்கள் தவிர்ந்த மேலும் ஒன்பது பரராஜசிங்கம் இசைத்த பாடல்களை அருவி இத்தட்டிலே சகாப்தனின் எஸ். கே. பரராஜசிங்கம் குறித்த அறிமுகத்துடன் தந்திருக்கின்றது.



1. அறிமுகம் - சகாப்தன்
2. தென்னை மரத்து - நாட்டார் பாடல்; இசை: எம். கே. ரொக்சாமி
3. சந்தனமேடை - எம். ஏ. குலசீலநாதனுடன்; பாடல்: என். சண்முகலிங்கம் & இசை: எம். ஏ. குலசீலநாதன்
4. வெள்ளிதழ் மல்லிகை - பாடல்: என். சண்முகலிங்கம்; இசை: கண்ணன் - நேசம்
5. குளிரும் நிலவில் - பாடல்: என். சண்முகலிங்கம் & இசை: சொலையில் ரானா
6. அழகான ஒரு சோடி - பாடல்: பாவலர் பாசில் காரியப்பர்; இசை: எம். கே. ரொக்சாமி
7. நெஞ்சினில் ஊறும் - கோகிலா சிவராஜாவுடன்; பாடல்: கே. கே. மதிவதனன் & இசை: எம். கே. ரொக்சாமி
8. கிண்ணி போல் - நாட்டார் பாடல்; இசை: எம். கே. ரொக்சாமி
9. பாலைவெளி - பாடல்: என். சண்முகலிங்கம்; இசை: கண்ணன் - நேசம்
10. கண்ணனின் கோயிலிலே - பாடல்: என். சண்முகலிங்கம்; இசை: கண்ணன் - நேசம்
11. கங்கையாளே - கோகிலா சிவராஜாவுடன்; பாடல்: இ. முருகையன்; இசை: எம். கே. ரொக்சாமி
12. மணிக்குரல் - பாடல்: அங்கையன் கைலாசநாதன்; இசை: சிட்டிபாபு
13. உழைக்கும் கரங்கள்- பாடல்- ரி. பரமலிங்கம்; இசை: ரி. வி. பிச்சையப்பா

இவர்களிலே, எம். கே. ரொக்சாமி தமிழிலும் சிங்களத்திலும் கோலோச்சிய இசையமைப்பாளர். கண்ணன் - நேசம் இரட்டையர் யாழ்ப்பாணத்திலே மிகவும் அறியப்பட்ட இசையமைப்பாளர்கள். கண்ணன் இன்னமும் ஈழத்தமிழிசைக்குத் தன் பங்களிப்பினைத் தந்துகொண்டிருப்பவர். ரி. வி. பிச்சையப்பா, ஸ்ரீதர் பிச்சையப்பா என்று தொண்ணூறுகளிலே தென்னிந்தியத்திரைப்படப்பாடற்பாணியிலேயே இலங்கையிலே பாடியவரின் தந்தை. (திருத்தம்: கீழே காண்க; நன்றி: வதிரி இரவீந்திரன்)  "கங்கையாளே" என்று மகாவலிகங்கை குறித்த பாடல் எழுதிய முருகையன், மஹாகவி உருத்திரமூர்த்தியின் சமகாலமொத்த ஈழத்தின் மூத்த கவிஞர். கைலாசபதியுடன் "கவிதைநயம்" நூல் எழுதியவர். "பதினொரு ஈழத்துக்கவிஞர்கள்", "மரணத்துள் வாழ்வோம்" இவற்றிலே இவரின் கவிதைகளைக் காணலாம்.

அருவி போன்ற வெளியீட்டகங்களின் இப்படியான பாடல் வெளியீடுகள், ஈழத்தின் பண்பாட்டுக்கூறுகளை ஆவணப்படுத்தவும் எதிர்காலத்துக்குத் தன்னியல்போடு வேற்று நல்லியல்புகளையும் உள்வாங்கி நடக்க உதவுமென்பது என் நம்பிக்கை.

உதாரணச்சுவைக்காக இவ்விசைத்தட்டின் ஒவ்வொரு பாடலினதும் மிகச்சிறிய துண்டத்தினை இணைத்திருக்கிறேன். அதிலே அருவி வெளியீட்டகத்துக்கு மறுப்பிருக்குமானால், உடனடியாக நீக்கிவிடுவேன்.

அறிமுகம் & முதல் நான்கு பாடல்கள்
அடுத்த நான்கு பாடல்கள்
கடைசி நான்கு பாடல்கள்

'05 ஜூலை, 07 வியா. 18:35 கிநிநே.

"குளிரும் நிலவு"
வெளியீடு: அருவி வெளியீட்டகம்
வெளியீட்டு ஆண்டு: 1999
தொடர்பு முகவரி: 75 Brimley Road, Scarborough, Ontario, Canada
தொடர்பு தொலைபேசி: (416) 269-1701


3 comments:

SnackDragon said...

/சில பாடல்களைக் கேட்கும்போது, சில இடங்களும் காலமும் ஞாபகத்துக்கு வருவதுண்டு; பல சமயங்களிலே அந்நிலை ஏன் என்று தெரிவதில்லை; அப்படியான விசித்திரமான உணர்வினைத் தரும் பாடல்களிலே இதுவுமொன்று./
உண்மை உண்மை. சில் நேரங்களில் பழைய காதலிகளையும். :-)

பெயரிலி உங்கள் சந்தனமேடை-1 -ல் நிறைய இணைப்புகள் வேலைசெய்யவில்லை. பார்க்கவும்.

-/பெயரிலி. said...

செர்ரீ, எந்த இணைப்பு? இணைத்துப்பார்த்தேன். எல்லாஅமே செயற்படுகின்றனவே!

sinnathambi raveendran said...

நண்பரே
ரி.வி. பிச்சயப்பா என்பவர் வயலின் வித்துவான்.வானொலிகலைஞர். சங்கீத கச்சேரிகளின் பக்கவாத்தியகார்ர்.மெல்லிசைபாடல்களுக்கும் இசையமைத்துள்ளார் இவரும் காலமாகிவிட்டார்.இவரது மகன் ஞானவரதன் வெளிநாட்டில் வாழ்கிறார்.இசைக்கலைஞராவார்.
ஸ்ரீதர் பிச்சையப்பா என்பவர் பாடகர்,நடிகர்,ஓவியர்,நகைச்சுவைமிக்கவர்.இவரும்
மெல்லிசைபாடல்கள் பாடியுள்ளார்.இவரும் கடந்த வருடம் காலமாகிவிட்டார்.
இவரது தந்தை வானொலி மேடைநடிகர் பிச்சையப்பா என்பவராகும்.

வதிரிசி.ரவீந்திரன்.