Showing posts with label வத்திக்குச்சி. Show all posts
Showing posts with label வத்திக்குச்சி. Show all posts

Sunday, October 14, 2007

Gimpel the Fool

அரைகுறை

Gimpel the Fool
"I am Gimpel the fool. I don't think myself a fool. On the contrary. But
that's what folks call me. They gave me the name while I was still in school. I
had seven names in all: imbecile, donkey, flax-head, dope, flump, ninny, and
fool. The last name stuck. What did my foolishness consist of? I was easy to
take in. ...."
- IBS

இலங்கைத்தமிழர்களின் சாதியமைப்பினைக் குறித்துப் பேசுவதற்கு நான் எத்துணை பொருத்தமானவனெனத் தெரியாது; தாய்வழியிலே யாழ்க்குடாவின் வடமராட்சியினையும் தந்தை வழியிலே வன்னியை முக்கியமாகவும் கொண்டிருந்தாலுங்கூட, கிழக்கின் மக்கள் கலந்த பட்டினத்திலே பதினாறாண்டுகள் வாழ்ந்து கண்டியின் செயற்கைக்கலப்பான பல்கலைக்கழக அமைப்பிலே இலங்கையை விட்டு நீங்கமுன்னான ஒன்பது ஆண்டுகளைக் கழித்திருக்கிறேன். யாழ்நகரின் சுற்றுப்புறத்திலே வாழ்ந்தது, ஆக ஈராண்டுகள். இப்படியான அமைப்பின்கீழே, இலங்கைத்தமிழரின் சாதியம் குறித்த அனுபவங்களை நேரடியாக நான் காண வாய்ப்பு மிகவும் குறைவாகவேயிருந்தது; ஓரிரு சந்தர்ப்பங்கள். சாதியமைப்பினாலே பாதிக்கப்படவோ பாதிக்கவோ செய்யும்வகையிலே என் 'சாதி' எதுவென்றும் அறிந்துகொள்ளவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டதில்லை. இவ்வகையிலே, இரயாகரன், ஸ்ரீரங்கன், தலித் மகாநாடு நடத்துகின்றவர்கள் ஆகியோருக்கு இருந்திருக்கக்கூடிய, உணர்ந்திருக்கக்கூடிய பட்டறிவு எனக்கு இல்லை. ஆனால், இயலுமானவரை அதன் அழுத்தம், வரலாறு பற்றி நிறைய வாசித்திருக்கின்றேன். கீழே வரும் இரயாகரன், ஸ்ரீரங்கன் இவர்களுக்கான அவர்களின் கூற்றுகளின் மேலான சுருக்கமான பதில்களுக்கு, இந்த வாசிப்பும் வாழ்ந்த சூழலின்மீதான கவனிப்பும் போதுமானதென்று நம்புகிறேன்.

ஈழத்தின் ஐந்துவயதுக்குழந்தைக்கும் தெரியும் ரிவோல்வருக்கும் பிஸ்டலுக்குமே இன்றுவரை வித்தியாசம் தெரியாத நான், இயக்க ரீதியிலும் தத்துவ ரீதியிலும் நிறையச் செயலாற்றி, (புலம்பெயர்ந்து) ஒதுங்கியிருக்கும் பதிவர்கள், பதியாதவர்கள்மத்தியிலே இவற்றினைப் பற்றி எழுதுவதிலேயிருக்கும் தயக்கம் நிறைய. ஆனாலும், இரயாகரன், ஸ்ரீரங்கன், ஷோபா சக்தி, சுகன், அவர்களைப் போன்ற போராடியும் இன்னும் ஓயாத சிலரின் அளவு விரிந்த பெரும்பார்வையின் இடையே விழக்கூடிய நடைமுறைவிரிசல்களைக் காலத்தின் நலன் கருதிச் சுட்டவேண்டிய முரண்படவேண்டிய அவசியமிருக்கின்றது. இதனால், அவர்களின் மீதான என் மதிப்பு அதற்கான தேவைகளிலே குறையாததென்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்து இராம் போன்றவர்களினை ஒத்த இணையபிம்பங்களின் முன்னாலே இப்படியாக வாதம் செய்வது எனதும் (இங்கே எதிர்த்துப் பேசுகின்றவர்களினதும்) நலன்களுக்கு ஊறு விளைவிக்குமென்பதையும் இப்படியான இணையபிம்பங்கள் தமது நலன்களை முற்கொண்டு செல்ல வசதியாகப்போகும் என்றளவிலே, இயன்றவரை இத்தனைநாட்கள்போல, இனிவருநாட்களிலும் வேண்டாவாதங்களைத் தவிர்க்கமுயல்வேன். ஆனாலும், எனதும் என்னைப் போன்ற ஈழத்தார் நலன்களையும் பாதுகாத்துக்கொள்ளச் சில சந்தர்ப்பங்களிலே இரயாகரன், ஸ்ரீரங்கன், விபு போன்றோருடனான வாதங்களும் தவிர்க்கமுடியாதவை. அதன்வழியே இவ்விடுகை.

==========================

இராயகரன்

இராயகரன் தனது புலிகளும் சாதீயமும் என்ற இடுகையின் இடுகை முன்பதிவாகவும் பின்னூட்டங்களாகவும் நிறைய அல்லது நிறைத்து எழுதியிருக்கின்றார். முன்னூட்டத்தைப் பொறுமையுடன் வாசித்து ஒரு பதிலிட்டேன். அதற்கு இன்னொரு பின்னூட்டம் இட்டார். அதற்கு ஒரு பதிலிட்டேன். விவாதத்துக்கு வெளியேயான பின்னூட்டமும் உள்ளடங்கியதாக அனுமதித்த பின்னூட்டத்தினை அகற்றிவிட்டார். அதன் பின்னால், பின்னூட்டங்களாக நுரைக்க நுரைக்க முன்னூட்டத்தினையும் என் பின்னூட்டத்துக்குப் பதிலென்றும் கருதிக்கொண்டு நிறைத்திருக்கின்றார். அதற்கு நன்றி தெரிவிக்கபோதிலே அவருடைய பதிவின் தலைப்புக்கும் முன்னூட்டம் & பின்னூட்டங்களுக்கு என்ன தொடர்பு என்று விளக்க மறந்திருக்கின்றார். இவ்விடுகையிலும் பின்னூட்டங்களிலும் அவருடைய கட்டுரைகள் எல்லாம் இருபடிச்செயன்முறையானவையாக இருக்கின்றன.

முதற்படி: "புலிகள் உயர்சாதியத்தின் நலன்களைப் பேணுகின்றார்கள்" என்று திரும்பத் திரும்ப எடுகோளாகச் சொல்தல்

இரண்டாம்படி: யாழ்மேலாதிக்கத்தின் கெடுதல்கள் என்று நிறைய எழுதுதல்

மூன்றாம்படி: புலிகள் தாங்கள் சாதியத்தினை மறுப்பவர்களென்று சொல்லியிருந்தாலோ அல்லது அதனுள்ளிருக்கும் ஒடுக்கியசாதி எனக் கருதப்படும் அங்கத்தவர் எனக் கருதப்படும் ஒருவர் சாதியமறுப்பினைச் செய்தால், அவரை அக்கருத்துக்காக கடிதல்

நான்காம்படி: புலிகள் இரயாகரனின் தத்துவத்தின்படி இயங்கவில்லை என்பதற்காக ஏகாதிபத்தியம் போன்ற இன்னோரன்னவற்றின் எடுபிடிகளாகி, தத்துவவெறுமைக்காகத் திட்டுதல்

ஐந்தாம்படி: இத்தனையின் காரணமாக, "புலிகள் உயர்சாதியத்தின் நலன்களைப் பேணுகின்றார்கள்" என்று 'நிறுவுகின்றாராம்'

அதாவது, என்ன செய்கின்றாரென்றால், புலிகளின் சாதியம் தொடர்பான தனது கருத்தை எடுகோளாகச் சொல்கிறார். பின்னர், யாழ்மேலாதிக்கத்தைப் பற்றிப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து புலிகளின் வேறு விவாதத்துக்குரிய செயற்பாடுகளைப் பட்டியலிட்டு (இரத்தினதுரை புலம்பெயர்ந்தவர்களைக் கடிந்தது & புலிகளின் மற்றைய இயக்கங்கள்மீதான எதிர்வுகொள்ளல்கள்) அல்லது புலிகளின் சாதியமறுப்புக்கருத்துகளையே கிண்டல் செய்து (பாலசிங்கத்தின் கருத்து, இரத்தினதுரையின் கருத்து) எழுதுகிறார். பிறகு, புலிகள் மார்க்சிய தத்துவத்தின்படி நடக்கவில்லையென்பதைப் பெரிதாக விளக்குகின்றார் ("புலிகள் உயர்சாதிய யாழ் இயக்கம் தான் என்பதும், வலதுசாரி அரசியலால் தன்னை உலகமயமாக்குகின்ற ஒரு அமைப்புதான் என்பதற்கு யாரும் மறுப்புக் கூற முடியாது. இந்த இயக்கம் சாதியத்தை ஒரு நாளும் ஒழிக்காது. சாதியத்தை பாதுகாத்து, அதன் அடித்தளத்தில் உருவான படிமுறையான அடுக்குகளின் உதவியுடன் தான் மக்களைச் சுரண்டி ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் இயக்கம் தான்."). இறுதியிலே யாழ்மேலாதிக்கம், புலிகளின் இன்ன பிற செயற்பாடு & சாதிமறுப்புக்கூற்றுகள், மார்க்ஸியதத்துவத்தினை இரயாகரன் எதிர்பார்க்காதவிதத்திலே பயன்படுத்துதல் இவையனைத்தும் எதுவித தர்க்கக்கோவையோ வருவிப்போ தொடர்போ இன்றி இரயாகரனின் எடுகோளான "புலிகள் உயர்சாதியத்தின் நலன்களைப் பேணுகின்றார்கள்" என்பதாக ஆகிவிடுகின்றது.

வாசிப்பவர்களின் (அல்லது எழுதியவரின்) புத்திசாலிதனத்தினையும் தொடர்பாக்கிப் பேசுதிறனையும் கேலிக்கும் கேள்விக்குமுள்ளாக்கும் கட்டுரைகளின் தொகுதி இரயாகரனின் முன்னூட்டமும் பின்னூட்டங்களும். முப்பதினாயிரம் சொற்களிலே அவர் வளர்த்துவிட்ட வசனவெளியிலே கொண்டுவந்து புலியை மேயக் கட்டுகிறார்.

அதைத்தான் நான் என் இரண்டு பின்னூட்டங்களிலும் சுட்டிக் கேட்டிருந்தேன். கொஞ்சம் பொறுமையோடு அவருடைய கட்டுரையிலிருந்து வழக்கமான சொற்பதங்களைப் பிரித்து வாசிக்க முடியாதவர்களுக்கு நான் கீழே அவரின் கட்டுரைகளிலிருந்து மூன்று பந்திகளைப் பிரித்துத் தந்திருக்கின்றேன். அவற்றின்மூலம் அவர் என்ன சொல்ல வருகின்றாரென்று அவருக்குத்தான் வெளிச்சம்.

/யாழ் மேலாதிக்கம் என்பது யாழ் மக்களை பிரதிபலிப்பதில்லை. யாழ் மேலாதிக்கம் மிக குறுகிய ஒரு பிரிவை அடிப்படையாக கொண்டது. இது யாழ் பிரதேசத்தை சேர்ந்தவராகத் தான் இருக்க வேணடு;மென்பதல்ல. சிங்கள இனத்தில் பிறந்த ஒருவன் கூட யாழ் மேலாதிக்கத்தைக் கொண்டு இருக்கமுடியும். இது பிறப்புக்குள் உட்படுவதில்லை. ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் கிழக்கைச் சேர்ந்தவன் ஒரு முஸ்லீம் கூட யாழ் மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவம் செய்யமுடியும்./

என்ன சொல்கிறாரென்று யாரேனும் அவரிடம் கேட்டுச் சொல்லமுடியுமா? அப்படியானால், 'யாழ் மேலாதிக்கம்' என்றால் என்னதான்? இவ்விடத்திலே 'யாழ்' என்பதற்குப் பதிலாக 'பாழ்', 'தாழ்', 'சால்', 'பால்', 'குழல்', 'பறை', 'வீணை', 'பூனை', 'யானை' எதைப்போட்டாலும் மேலாதிக்கக்குழப்பமே வருகின்றது.

/"சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த வெப்பிராயம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்குகள் நடத்தி இருக்கிறேன் தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாராக இல்லை"/

இதைத்தானே முட்டி முட்டி நானும் வேறு சிலரும் சொல்கிறோம். இதை நாங்கள் சொன்னால், பாசிசப்புலிப்பினாமிமாபியா, இரயாகரன் சொன்னால், புரட்சிக்கருத்தா? ("With us or with Terrorists" என்ற புஷ்வகை "detailed dialectic :-)" அராஜகம்) இதனால் என்ன சொல்ல வருகின்றாரென்றால், யாழ்சாதியமேலாதிக்கம் உச்சம் பெற்றிருந்த புலிகள் அதிகாரத்தைக் கொண்டிராத காலத்திலேயிருந்த நிலைமையிலும்விட இப்போது புலிகளின் அதிகாரமுள்ள காலத்திலே நிலைமை மேன்மைபெற்றிருக்கின்றது என்பதாகத்தான் எனக்குப் புரிகின்றது. பிறகு எதற்காக, யாழ்மேலாதிக்கத்தினைப் புலிகள் விதைத்து உரம்போட்டு உற்பத்தி செய்து விற்பனைக்குச் சந்தைப்படுத்துகின்றார்கள் என்ற பாங்கிலே என்று எழுதுகின்றார் என்று சொல்வாரா? பாலசிங்கம் "ஒரு காலத்திலே இவை ஒழியும், ஒழிப்போம்" என்று சொன்னதை வைத்துக் கிண்டல் செய்கின்றவர், சாதியத்தின் இத்தேய்நிலையைக் கருத்திலே கொண்டால், பாலசிங்கத்தின் கருத்தினை ஒரு முகப்பெறுதிக்காகவேனும் ஏற்றுக்கொள்ளலாமே?

இப்படியாக, முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடும் நிறுவல் செய்யும் அவர், கடைசியிலே "இஃதென்ன தர்க்கம் பிறழ்ந்த நிறுவல்?" என்று கேட்டால், /"புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம் இல்லை என்று நிறுவ வேண்டியது உங்கள் கடமை" / என்ற குதர்க்கக்கருத்தினை முன்வைக்கின்றார். இவரோ எங்கும் "புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம்" என்று நிறுவவில்லை; செய்ததெல்லாம் " புலிகள் யாழ் மேலாதிக்க நலனை முன்னெடுக்கின்றது" என்ற அறிவிப்போடு தொடங்கியதும் பிறகு இரண்டாம்படி தொடக்கம் ஐந்தாம்படிவரை அவருடைய யாழ்மேலாதிக்கம், இரயாகரனின் மார்க்ஸியமற்ற புலிகள் என்பனவற்றைப் பேசியதும் கடைசியிலே மீண்டும் " புலிகள் யாழ் மேலாதிக்க நலனை முன்னெடுக்கின்றது" என்ற அறிவிப்போடு முடித்ததுமே. எடுகோளுக்கும் நிறுவப்பட்டதற்கும் இதுவரைக்கும் அவருக்கு வித்தியாசம் தெரிந்ததாக எமக்குத் தெரியவில்லை. இத்தனைக்குள் நிறுவப்படாத கருத்தை மறுத்து, "புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம் இல்லை என்று நிறுவ வேண்டியது எங்கள் கடமை" என்று செய்ய என்ன தேவை இருக்கின்றது?

ஒன்றை ஒருவர் நிறுவின பின்னாலேதானே, தகர்க்கவேண்டியவர்கள் இல்லையென்று நிறுவமுடியும்? இங்கே நான் நிறுவுதல் என்பது சாதி என்பது குறித்துப் புலிகளைச் சம்பந்தப்படுத்திப் பேசும்போது, சாதி என்பதை முன்னிறுத்தி அதை வளர்க்கப் புலிகள் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதைச் சுட்டி வாதத்தை எடுத்துச் செல்வதே.

ஆனால் இரயாகரனின் பதிவோ, பின்னூட்டங்களோ அப்படியான வாதத்தைச் செய்வதில்லை. (முரண்நகையாக) சோ ராமசாமி என்ற அதிதீவிரவலதுசாரி ஆசாமி முகமது பின் துக்ளக் நாடகத்திலே,கம்யூனிஸ்டுகட்சி ஆசாமிப்பாத்திரமொன்றினூடாக நக்கல் செய்யும், "மார்க்ஸ் என்ன சொன்னார்? லெனின் என்ன சொன்னார்? துக்ளக்குக்கு வோட்டு போடாதீர்கள்" எனும் வகையிலேதான் வாதம் செய்கின்றார். இப்படியாக, "புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம் இல்லை என்று நிறுவ வேண்டியது உங்கள் கடமை" என்று வேறு கேட்கும் இரயாகரனுக்கு, "சப்பையைத் தவிர்த்துவிட்டு, நெல்லைக் காட்டுங்கள்; அரிசியையும் உமியையும் பிரித்துத்தருகிறோம்." என்று சொல்வதைத் தவிர வேறேதும் பதில் அவசியமில்லை.

இலங்கைத்தமிழரிடையேயிலேயிருக்கும் பிரதேசவாதம், சாதியம் என்பனவற்றினை மறுக்கவில்லை. ஆனால், அவற்றின் வடிவத்தினையும் அளவினையும் திரிப்பதினையும் மாற்றுவதையும் பின்னால், சம்பந்தப்படாத கொழுக்கியிலே கொண்டுபோய்க் காயவிடுவதையும் இரயாகரன் செய்வதுதான் தவறென்று சொல்கிறேன். புலிகள் மீது விமர்சனங்கள் சில விடயங்களிலே எனக்குமுள்ளது; ஆனால், சாதியத்தினை அவர்கள் வளர்க்கின்றார்களென்பது அதிலொன்றில்லை. அக்கருத்தினை மாற்றிக்கொள்ள, இரயாகரனின் தர்க்கம் கெட்ட குதர்க்கவாதம் பயனாகவில்லை.

==========================
ஸ்ரீரங்கன்

ஸ்ரீரங்கன் தன் "சாதியமைப்பும் தேசியவிடுதலைப் போராட்ட அவநம்பிக்கைகளும்,தலித்துக்களும் " பதிவில் இரண்டு 'அற்புதமான' கருத்துகளைச் சுட்டியிருக்கின்றார். [இவருடைய அகதி பதிவிலே வந்து புலம்பெயர்ந்த வெண்சட்டைப்போராளி மாசிலாமணி பின்னூட்டமிட்டிருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. சென்ற வாரத்தின் இரயாகரனின் இடுகைப்பின்னூட்டத்தோடு, காணாமற்போனவர், ஸ்ரீரங்கன், இரயாகரன் இப்படியான அகதிவழிப்புலம்பெயர்ந்தவர்கள் குறித்து என்ன கருத்தினைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை உத்தேசமாக நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், இப்போது மிகவும் தந்திரத்தோடு ஈழத்தின் தலித் ஒடுக்குமுறைக்காகக் கண்டனம் தெரிவிக்கின்றாராம். வாழும் நாட்டிலே பெயர்ந்திருப்பவனையே தன் பெயர் கெடுக்கும் அகதித்தமிழன் என்று சொல்லி ஒதுக்கும் இவர் கண்காணாத்தேசத்திலிருக்கும் தலித்துகளுக்காக இன்று மீண்டு கண்கலங்குவது வியப்புக்குரியதல்ல]

/இது சாரம்சத்தில் தமிழ் நாட்டு அரசியல் பொருளியற் சூழ் நிலைகளை வலிந்து இலங்கைத் தேசத்துகுள் திணிப்பதற்கான முதற்காரணமே இலங்கைத தமிழ்ச் சமுதாயத்துக்குள் நிலவும் வேளாள மேலாதிக்கத்தின்மீதான அவநம்பிக்கையே!/

இலங்கைத்தமிழ்வேளாளசமுதாயத்தின் திமிரினை ஆறுமுகநாவலர் தொட்டு, இராமநாதன் ஊடாக இன்று வரை வாசித்துவருகிறோம். முன்னைக்கு இற்றை தேயும் தன்மை தெரிந்தாலுங்கூட, இன்னுமிருக்கின்றதென்பதை ஆங்காங்கு இணையத்திலேகூடக் காணக்கூடியதாகவிருக்கின்றது. ஆனால், இப்படியான அவநம்பிக்கை தரும் வேளாளர்குடிவந்தவர்களின் ஒரு பகுதியினரே தலித்துகளின் பிரதிநிதிகளாகத் தம்மை நிறுத்திக்கொண்டு, தமிழ்நாட்டிலிருந்து அங்கு தலித்துகளின் பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளும் இடைநிலைச்சாதியினரூடாக ஈழத்தின் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தமிழ்நாட்டின் அரசியல், பொருளியற்சூழ்நிலைகளை கனடா/ஐரோப்பாவிலிருந்து விற்கும்போது இந்த வேளாளமேலாதிக்கத்தின்மீது என்ன நம்பிக்கையை ஈழத்தின் ஒடுக்கப்பட்டவர்கள் கொண்டிருக்கவேண்டுமென ஸ்ரீரங்கன் எதிர்பார்க்கின்றார்? தன்னுடைய ஓர் இடுகையிலே தானே வேளாளர் என்பதை மறுத்தாலும் தலித் என்ற ஒடுக்கப்பட்டவர்களுக்காகத் தான் பேசமுடியாது என்று சுட்டியவர், இங்கே கனடா/ஐரோப்பாவிலிருந்து ஒடுக்கப்பட்ட ஈழத்தவருக்காக தம் சாதியை மறுக்கும் வேளாளசக்திகள் போராடுவதை ஒடுக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளலாமென்று நம்புவது எவ்விதம்?

இதன் வழியிலேயே நான் கேட்ட, "எந்த நம்பிக்கையிலை திருமாவளவனையும் கிருஷ்ணசாமியையும் விட்டிப்போட்டு அ. மார்க்ஸை பிரதிநிதியா கொண்டு வந்து சுகனும் ஷோபாவும் கற்சுறாவும் ஸ்டாலினும் யாழ்ப்பாண தலித்துக்குத் தருகினம் எண்டும் ஏட்டுச் சொல்லுங்கோவன்" இற்கு, ஸ்ரீரங்கன் சொல்லும் பதில் மறைமுகமாகத் திறந்த வாயை மூடாமல் வைத்திருக்கச் செய்கிறது (இரயாகரன் என்றால், நேரடியாகவே, "வாயைப் பொத்திக்கொண்டுபோ; நான் சொல்லும் புரட்சிக்கொட்டாவிதான் சரியான போராட்டம்" என்றே சொல்லியிருப்பார்):

/அ.மார்க்ஸ் தமிழ்ச்சமூகத்தில் மிக முக்கியமான சமூகவியலாளர்.அவரை சாதிரீதியாக எவரும் பார்ப்பதற்குப் பதிலாக ஒடுக்கப்படும் மனிதர்களுக்குத் தோழமையாகப் பார்க்கலாமே?அடுத்து திருமாவளவன்...இவர் ஓட்டுக்கட்சி அரசியல் மாயைக்குள் இருப்பவர்களுக்குப் பிதாவாக இருக்கலாம்.நமக்கல்ல./

ஸ்ரீரங்கன், அ. மார்க்ஸ், திருமாவளவனிலும்விடத் தமிழகத்தலித்துகளுக்குச் சிறந்தவர் என்று சொல்கிறார். அவரின் சாதியையும் பார்க்கவேண்டாமென்று சொல்கிறார். தமிழகத்தின் தலித்துகள் அல்லவா, அவர்களுக்கு சமூகவறிஞர் (சமூக + அறிஞர்) மார்க்ஸ் முக்கியமா, கூட்டுக்கட்சி மாறினாலும் தலித் நலனைப் பிரதிபலிக்கக்கூடிய (பிரதிபலித்த) திருமாவளவன் முக்கியமா என்று தீர்மானிக்கவேண்டும். ஈழத்து வேளாள அடையாளத்தை மறுத்துத் தலித்தின் தலைமையைத் தலித்தே கொள்ளவேண்டுமென்று சொல்லும் ஸ்ரீரங்கன் சொல்லமுடியாதல்லவா? இப்படியான குழப்பங்களே ஸ்ரீரங்கனின் பதிவுகளிலே மாறிமாறிவரும். குறைந்தபட்சம், ஸ்ரீரங்கன் இரயாகரன் மாதிரி தொடர்ச்சியாக அரூபக்கருத்தாக்கங்களிலே தனது விருப்பஎதிரிகளையே எப்போதும் கைவசமிருக்கும் சுட்டுச்சொற்களோடு திட்டிக்கொண்டிருப்பதில்லை என்பது ஆறுதலான விடயம்.

=====================