
இங்கே துயரமான சூழ்நிலை என்னவென்றால், இப்படியான படங்களை வெளியிட்டு, இந்நிலைக்கு வர முற்றுமுழுதாக விடுதலைப்புலிகளே காரணம் என்று ஐக்கிய இலங்கை ஆலாபனை, அமார்க்சிச நிரவல், மனிதாபிமான நிறுவல் முயற்சித்து முடிக்கும் புலம்பெயர்ந்த தலித்-பெண்ணிய-மனிதவுரிமை-முற்போக்கு-வயிற்றுப்போக்கு ஆசாமிகளும் அவர்களின் இணையத்தளங்களிலேகூட வெளிப்படையாக மாற்றுக்கருத்தினைத் தெரிவிக்கமுடியாத தன்மையும் இவ்வகைத்தளங்களையும் இந்த ஆசாமிகளையும் ஈழத்தமிழர்களின் புரட்சிகரமாற்றுச்சக்திகளின் பற்றவைத்த வெடிகுண்டுத்திரிகள் என்று இந்தியக்குரங்காட்டி வித்தைக்காரர்கள் முன்வைப்பதுமே.
அண்மையிலே தேசம் இணையத்தளத்திலே வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றுக்கு மாற்றான கருத்துகளைச் சொந்தப்பெயரிலில்லாமல் பின்னூட்டமாகத் தெரிவித்திருந்தேன். ஓரிரண்டு வரவேயில்லை. அதுகூடப் பரவாயில்லை. ஆனால், ஒரு பின்னூட்டம் கருத்து மாறாட்டம் தரும் வகையிலே வெட்டப்பட்டிருந்தது. இத்தனைக்கும் இப்பின்னூட்டம், அரசியல் குறித்ததேயல்ல. இன்னொரு பின்னூட்டம் அப்படியே நீக்கப்பட்டு, ஆனால், எனது பின்னூட்டப்பெயரிலேயே என் கருத்துக்கு முற்றிலும் மாறாக ஒரு வரியிலே சொல்லப்பட்ட கட்டுரைக்கு ஆதரவானதுபோல ஒரு வரிக்கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது. இதுதான் இவர்களின் மாற்றுக்கருத்தினையும் கேட்கும் சுதந்திரம். இதனைக் கேள்வி கேட்பது சிக்கலான காரியமல்ல. ஆனாலும், என்ன பயன்? இவர்களுக்கு, செல்வி, சிவரமணி தொடக்கம் செல்லடித்துச் சாகும் சிறு குழந்தைகள்வரை வெறுமனே விடுதலைப்புலிகளைத் திருவிழாக்காலத்திலே வறுத்துக்கொட்டி விற்பனைக்கும் விளம்பரத்துக்கும் விட உதவும் வெந்தணல் குந்திய தாய்ச்சிச்சட்டிமட்டுமே. விடுதலைப்புலிகளுக்குக் காசு சேர்ப்பது பற்றி பக்கம் பக்கமாக "புல்லன் ஆய்வு" செய்து ஒட்டிக்கொள்ளும் இப்படியான இணையத்தளங்களின் முழுநேரச்செய்திபரப்பாய்வாளத்தொண்டர்களும் இலங்கை+இந்திய அடிக்கடி_திக்விஜயர்களும் எட்டுத்திக்கும் கொட்டிமுழக்கும் வானொலி அண்ணா, மாமா, ஐயாக்களும் அகில இலங்கை அந்நியோன்ய சனநாயகப்பேரவை அமைப்பாளர்களும் எங்கிருந்து தாம் சங்கநிதி, பதுமநிதி பெற்றுக்கொள்கின்றனரென்று ஒருபோதுமே சொல்வதில்லை. தமக்குத்தாமே தலித்தியப்புயல், பெண்ணியக்கயல், பின்நவீனவயல், அமார்க்ஸியமயில், மனிதநேய ஒயில் என்றெல்லாம் பட்டம் சூடிக்கொள்ளும் புரட்டுகரச்சகதிகளிடம் நாமும் கேட்கமுடியாதல்லவா? நம்மைப்போலக் கேள்வி கேட்பனவெல்லாம், கேள்வி கேட்ட கணத்திலிருந்து ஆறுநாள் யாழ்ப்பாணிப்பாசிசத்திலே ஆழ ஊறவைத்துச் செய்யப்பட்ட வன்னிப்புளிப்பயற்றம்பணியாரங்களல்லவா?

நிற்க; இப்படியான படங்களினை வெளியிட்டு வேதனையை இணையத்திலே புலம்புவதுமட்டும் எதையும் சாதித்துவிடப்போவதில்லை. தம்பதிவிலே குசேலனுக்கும் தசாவதாரத்துக்குமிடையிலே இரண்டு வரி ஒப்பாரி வைக்கும் பெரும்பான்மையான இந்தியத்தமிழர்கள் எதையுமே ஈழத்தமிழருக்காகக் கிழித்துவிடப்போவதில்லை. தமிழகத்திலே ஒரு குருவிக்குஞ்சின் ஈனக்குரலிலேகூட ஈழத்தமிழர்நிலை குறித்து ஒலி எழுப்பாத இவர்களா ஏதேனும் நீங்கள் எழுதுவதை, போடும் படத்தினை வாசித்து, பார்த்துவிட்டு உணர்ச்சி வந்து இணையத்துக்கு அப்பாலே நடைமுறைக்குச் செயல்வினையாக ஏதேனும் கிழித்துக்கொட்டிவிடப்போகின்றார்கள்? நேரடியான எதிர்ப்புச்சக்திகளான இந்து ராம், சோ ராமசாமி போன்றவர்களை விட்டுவிடலாம். தமது தலைவன் கருநாநிதியின் வெளிப்படையான அண்மைக்கால ஈழத்தமிழர்எதிர்நிலையைக்கூட இல்லையென்று நியாயப்படுத்தவே குத்தி முறிந்து கரணம் போடும் தொண்டரடிப்பொடிகள்தான் தமிழகத்திலே ஈழத்தமிழர்களின் நண்பர்களென்றால், எதற்கு யாரிடம் இதையெல்லாம் சொல்லிப் புலம்புகின்றீர்கள்? இணையத்திலே வடிகட்டியெடுத்து, எண்ணி விடக்கூடிய தமிழக நண்பர்களே ஈழத்தமிழர்களின்மீது, போகிற போக்கிலே இரண்டுவரி ஒப்பாரிப்பின்னூட்டமிடுவதற்கு அப்பாலும், மிகக் கரிசனையோடு -நடிகர்களை வரவேற்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் பெருமடங்கு மேலாக- சிறப்புடன் செவ்வனே செயற்படுகின்றார்கள். அப்படியான மெய்யான கரிசனை கொண்டவர்களிலே பெரும்பான்மையோர் இப்போது தமிழகத்திலே வாழவில்லை என்பது எமது அவநிலை. மிகுதியாக, தமிழகத்திலே வாழ்ந்த தமிழ்நதி போன்றவர்கள் அவர்களது தமிழக நண்பர்களிலே ஒருவரையேனும், ஈழத்தமிழருக்காக இணையத்து இருசொட்டு ஈரப்பின்னூட்டத்துக்கு அப்பாலும் இரங்கி, தமிழக மண்ணிலே இறங்கிக் குரல் எழுப்பினாரென்று காட்டிவிட்டு, இதுபோன்ற அடுத்த இடுகையைப் பதிவு செய்ய வேண்டும். அல்லாவிடின், இணையத்தின் வெற்று -"கடமுடா"- ஓசைகளையே உயிர்த்துடிப்பு என்றெண்ணி, உண்மையாகவே ஈழத்தமிழர்களின் குரலுக்குப் பலம் சேர்க்கும் சுருதிப்பெட்டிகளாக எண்ணிக்கொண்டு பதிவிடுவது, எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது மட்டுமே.
தமிழகத்திலே தமக்கான எதிரிகள் ஈழத்தமிழருக்கு ஆதரவோ எதிர்ப்போ கொண்டவர்கள் என்ற எண்பதாம் ஆண்டுகளின் எண்ணச்சிந்தையின்படி, ஈழத்தமிழர்கள் பற்றி இணையத்திலே எதிர்ப்பு/ஆதரவுப்பின்னூட்டமிடும் இந்தியா வாழும் இந்தியத்தமிழப்பதிவர்களிடையே ஈழத்திலே குழந்தை குண்டு விழுந்து சாவதைப் பற்றியோ, உயிரஞ்சி ஓடிக் காடுறைவது பற்றியோ பேசி எவ்விதமான பயனுமில்லை - எமது நேரத்தினை அவமே செலவழிப்பது தவிர. இணையத்தின் இருவரி காலம் மாற்றாத அச்சொட்டு ஆறுதல் வார்த்தைகளுக்கு அப்பால், தாம் காலூன்றியிருக்கும் மண்ணிலே எதையும் செய்ய முடியாத/முயலாத இவர்களிடம் என்னத்தினை எதிர்பார்த்து இப்படியான இடுகைகளைப் பதிவு செய்கின்றீர்கள்? ஈழத்தமிழர் என்று வரும்போது, குரல் எழுப்புவதிலே, சோ ராமசாமி, இந்து ராம், வாஸந்தி, மாலன் தீவிர பாரம்பரிய வாஸகர்களுக்கும் கருநாநிதி, அ. மார்க்ஸ் அடிப்பொடிகளுக்கும் நடைமுறைச்செயற்பாட்டிலே பெரிய வித்தியாசமில்லை; குறைந்த பட்சம் முன்னையவர்கள் நேரடியாகவேனும், எதிர்ப்பினைக் காட்டுகின்றார்கள் அல்லது குதறப் பதுங்கிச் சமயம் பார்த்திருப்பார்கள்; அவர்களை எமக்கு அடையாளம் கண்டுகொள்ள இலகுவாகவிருக்கின்றது. மற்றையவர்களை, பம்மாத்தா, பத்தரை மாற்றா என்று நாம் இனம் காண முன்னால், ஊரிலே பாதிச்சனம் மேலே போய்ச் சேர்ந்துவிடும் என்றே படுகிறது. அண்மைய நெடுமாறன்~கருநாநிதி விவகாரத்திலே, ஈழத்தமிழர்கள் ஆதரவுத் திமுகத்தொண்டுப்பதிவாளர்கள் போட்டிருக்கும் இடுகையும் பின்னூட்டங்களும் வலைக்குரலுக்கு அப்பால், நடைமுறையிலே இவர்கள் எவ்விடத்திலே எங்கே நிற்பார்கள் என்று நான் அண்மைக்காலத்திலே உணர்ந்து கொண்டதைத் தெளிவாக்கியிருக்கின்றது. அவர்களின் நிலை எனக்குப் புரிகின்றது. சோ+ராம்+மாலன்+வாஸந்தி குழாம் வாஸகவிமர்ஷகர்களின் ஈழநோக்கு கொடுவிடத்தன்மையோடு பார்க்கும்போது, இந்நண்பர்களின் சாரைப்பாம்புச்சரசரப்போட்டம் அத்துணை கெடுதலானதல்லத்தான். ஆனால், நெடுமாறன் பிரச்சனைக்கு அப்பாலே, கருநாநிதியின் ஈழத்தமிழர்கள் குறித்த இன்றைய செயற்பாடுகள் எதையுமே இவர்கள் பேசுவதில்லை - அவர்களுக்கு அது குறித்த அக்கறை உண்டென்று கொண்டாலுங்கூட.
தமிழ்நதிக்கும் போல்வார்க்கும்: வேண்டுமானால், ஈழம் குறித்து இனியும் கவிதை எழுதுங்கள்; தோழர்கள் கையைத் தட்டுவார்கள். ஆனால், நீங்கள் கொஞ்சம் நிதானித்து, உங்கள் கவிதையை நீங்களே இரண்டு நாட்களின் பின்னாலே வாசித்துப் பாருங்கள்; எண்பதுகளிலே வைத்த ஓலத்திலிருந்து, இன்றைக்கான எமது ஒப்பாரி (கவிதை என்று வாசிக்கவும்) எத்துணை மாறுபட்டிருக்கின்றதென்பதை; எண்ணிக்கைக்கு உதவும்; ஆனால், என்னத்தினைச் சாதிக்க உதவும்?

மர்மயோகியின் கதையென்ன? ட்ரெய்லர் வந்துவிட்டதா? ஐயோ! அக்குழந்தையின் முகம் மனதைப் பிழிகிறது. செல்வகணபதி இருக்கிறாரே.... ரித்திஷா? சாம் அண்டர்சனா? நல்லூர்க்கோவிலின் நாலாம் தெருவிலா!!
பிகு:
1. இவ்விடுகைக்கு, "ஓமோம்", "ஆமாம்" போட்டு, அதே பாத்தியிலே தண்ணீர் பாய்ச்சவிரும்புகின்றவர்கள், சக்தியையும் நேரத்தினையும் சேமித்துக்கொள்ளுங்கள். நமக்குள்ளே பழங்கதைகள் பேசி என்ன பயன்? 'நானும் நீங்களும் குந்தியிருந்து கட்டியணைத்து கந்தகநாசியர்க்கும் அந்தகக்குருடருக்கும் நிந்தகச்செவியருக்கும் வலைக்கூத்துக் காட்டுவதுபோல ஒப்பாரி வைப்பதினால் எப்பயனுமில்லை' என்பதுதான் இவ்விடுகையின் நீதி.
2. மேலே எழுதியதை வைத்துக்கொண்டு இந்தியத்தமிழர்களிடம் ஈழம் குறித்துக் குரல் எழுப்ப இரந்து கேட்கிறேன் என்று எண்ணிக்கொள்ளும் ஜர்னலிஸ்ட்ஜீக்களுக்கு, "அகதியாக இப்படியான ஈழத்தமிழர்கள் பற்றிய காழ்ப்புப்பதிவர்களும் பொழுதுபோக்குப்பதிவர்களும் குறிப்பிடத்தக்களவு வாழும் இந்தியா ஓடுவதிலும் அடிபட்டுத் தெருநாய்களாக என்னைச் சேர்ந்தவர்கள் இலங்கையிலே சாவதே மேல்" என்பதை அடிக்கடி உறுதியாகக் கூறும் என் பழைய ஜாங்கிரி இடுகைகளை டவுசர்களைப் பிய்த்துக்கொள்ளாமலும் தேசியக்கொடிச்சக்கரத்துக்குக் கீழே அகப்பட்டுக்கொள்ளாமலுமிருந்து வாசிக்கக்கேட்டுக்கொள்கிறேன்.
3. "நீயென்ன செய்து கிழித்தாய்?" என்று பதிலாகக் கேட்பவர்களுக்கு, "ஒன்றுமில்லை; ஆனால், நான்தான் போலி என்று ஊருக்கே தெரியுமே" என்றோ, "சக்தி, நேரம் சேர்ந்துக் கிழித்தும் பயனில்லாத எதையும் கிழிக்கப்புகாததே ஒரு பெருங்கிழிப்பு" என்றோ சொல்லிக் கொள்கிறேன்.
படமூலம்: தமிழ்நெற்.கொம் தளம், இந்திய அரசுத்தளம், ஓல்ற்றநெற் தளம்