Saturday, June 03, 2017

94

எண்பதுகளிலே ஒரு பலமான தமிழ்நாட்டு எல்லைக்குமப்பாலுமான தமிழ்த்தலைவராகக் கண்டபோதும், இன்றைய கருணாநிதியிலே எனக்கு எதுவித கருணையுமில்லை. 2009 இலே அவர் காட்டிய பாதிநாள் தின்னாநோன்பு நாடகம் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பாலிருப்பவர்களுக்குமானதுமல்ல.



2009 இன் முள்ளிவாய்க்கால் முடிவுக்குக் காரணம் கருணாநிதியுமல்ல; பிரபாகரனுமல்ல; இவர்களுக்குமப்பாலுமான பெருங்காரணிகளும் காரணர்களுமிருந்தார்களென்றே நம்புகிறேன். 1989 இலிருந்து 2009 வரை தமிழ்த்தேசியம் பேரிலே அந்தப்புறம் இந்தியாவும் இந்தப்புறம் ஶ்ரீலங்காவும் என்ற அமுக்கும் இரு பாண்துண்டுகளிடையே வதக்கிய இறைச்சியாய் ஓரமைப்பு நின்று இருபதாண்டு நின்று பிடித்ததற்கு அதன் அடித்தளத்தினைத் தமிழ்நாட்டின் அரசியல்மாற்றங்களோடு அப்படியே தங்கவிட்டுப்போகவிடாததிலேதான். இவ்விடத்திலே 2009 இன் வாய்க்கால்முடிவுக்குக் கருணாநிதியினைத் திட்டித் தொலைப்பதும் பிரபாகரனை பேசித் தள்ளுவதும் அவரவர் அகவெப்பத்தைக் கொட்டித்தள்ள வழிப்படுத்துமேயொழிய நிதானமான கருத்தாகா.

எத்துணை மோசமான தேச இராணுவத்தினை அனுப்பி வைத்தாளென்றாலுங்கூட, அவ்விராணுவத்தின் செயற்பாடுகளுக்காக நேர்மையான தலைவராகப் பொறுப்பெடுக்க மறுத்தாலுங்கூட, அரசியல்வாதி ராஜீவ் காந்தியின் கொலை எவ்வகையிலே பார்க்கும்போதும் அநாவசியமானது; அதனாலே, கருணாநிதியும் பிரபாகரனும் பாதிக்கப்பட்டார்கள் என்றே நம்புகிறேன். ஆனால், கருணாநிதி தமிழ்த்தலைவரென்ற தட்டிலிருந்து வீழ்ந்ததுக்கும் பிரபாகரன் முள்ளிவாய்க்காலிலே முடிவினைக் கண்டதுக்கும் ராஜீவ் காந்தியின் முடிவு எவ்வகையிலும் காரணமில்லை. அதன் பிறகும் இவ்விருவரும் ஆட்சியிலே இருந்த காலமுண்டு. கருணாநிதிக்கும் காங்கிரஸோடும் பாஜகவோடும் கூட்டணி கொள்ளவும் முடிந்ததும் ஆண்டதும் இப்பிற்காலத்திலேதான். அதனாலே, இராஜீவ் கொலையாலேதான் கருணாநிதியின் அரசியல் பாதிக்கப்பட்டது என்று திமுக இணைய உடன்பிறப்புகள் -வைகோ, சீமான், நெடுமாறன் தொண்டர்கள் மேலான கோபத்திலே- புலம்புவது ஒவ்வாது. அதுபோலவே, கருணாநிதியின் தின்னாநோன்புதான் முள்ளிவாய்க்காலுக்கு முடிவு என்பதுபோல, கருணாநிதியினை ஈழத்தமிழர்களிலே சிலர் இன்று அவரின் பிறந்த நாளிலுங்கூட தரக்குறைவாகத் திட்டுவதும் ஏற்புடைத்ததல்ல.


ஈழத்தமிழரைப் பொறுத்தமட்டிலே இன்றைக்கும் ஜெயலலிதாவைவிடக் கருணாநிதி கவனத்தினை வைத்தவர் என்றே திடமாக நம்புகிறேன். கருணாநிதியினைத் திட்டுகின்றவர்கள் ஜெயலலிதாவைத் திட்டாததற்குக் காரணங்கூட, அவர்களுள்ளே கருணாநிதியிடமிருந்த தமிழர்நலன் குறித்த எதிர்பார்ப்பு ஜெயலலிதாவிடமிருக்குமென்று எண்ணாததுதான் என்றுதான் படுகின்றது. ஆனால், அவரின் - சொல்லப்போனால், அவரின் பிள்ளைகளின் - அரசியல் இருப்பும் தக்கவைத்துக்கொள்ளலும் அகவை நொய்யவைத்தவருக்குத் தேவையாகிப் போனதென எண்ணுகிறேன். என்றாலும், 2009 வைகாசி வீழ்ச்சியினை சுற்றிய காலத்திலும் அதற்குப் பின்னாலான காலத்திலும் முத்துக்குமரன் மரணம், மகிந்த ராஜபக்‌ஷவைச் சந்திக்கக் கனிமொழி+பாலுவை அனுப்பியது, இழப்பின் ஈரம் காயமுன்னாலே உலகத்தமிழ்மகாநாட்டிலே தனக்குத் தமிழ்த்தலைவனாக (||மீண்டும்||) முடிசூடிக்கொண்டது இவை அவர்மீதிருந்த எஞ்சிய மரியாதையையும் நிதானமான தமிழ்ப்பார்வையாளர்களுக்கும் துடைத்தெறிந்துவிட்டது.
அவரவர் தனியாள் அரசியலைப் பொறுத்தவரையிலே கருணாநிதிக்கும் பிரபாகரனுக்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடுண்டு. பிள்ளைகளாலே கருணாநிதி முடிந்துபோனார். பிரபாகரனாலே பிள்ளைகள் முடிந்துபோயினர்.

போராட்டத்தின் தேவையையும் வந்த, நில், செல் திசைகளையும் முறைகளையும் கவனம் கொள்ளாது பிரபாகரனுக்குத் தம்மரசியலுக்காகப் (சாணிச்சுவர், இணையச்சுவர்) போஸ்ரர் அடித்துப் பிறந்தநாள் கொண்டாடுகின்றதுமட்டுமே போராட்டமென்பதானவர்களிலிருந்து விலகி நிற்கத்தான் முடிகிறது. அதுபோலவே, கிஞ்சித்த அக்கறையும் இன்றைக்கு எனக்கில்லாத கருணாநிதியின் பிறந்தநாளன்றின்போது, அவரின் மீது தரக்குறைவாகக் கருத்துகளை நிதானம் தவறிக் கொட்டுகின்றவர்கள்மீது, அவர்கள் தமிழ்த்தேசியத்திலே நம்பிக்கை கொண்டவர்களாகவிருக்கின்றபோதுங்கூட, எட்டி நிற்கவே விழைவுகொள்கிறேன். குறைந்தளவு கருணாநிதியின் அரசியல், அவரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருப்புகளைக் கவனத்திலே கொண்டு தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட விளைவுகளை மையப்படுத்தியது என்பதை இப்படியாகத் திட்டித்தொலைக்கின்றவர்கள் புரிந்தால் தெளியும். வாழ்த்த விருப்பமில்லாவிட்டாலுங்கூட, திட்டாமலிருப்பதுதான் பண்பு.


கடைசியாக, கருணாநிதியை திட்டுவதாலோ பிரபாகரனைத் திட்டுவதாலோ நிகழ்|செல்லரசியலிலே ஏதும் நமக்காக மாற்றம் நிகழ்ந்துவிடாது என்பதை எரிச்சலைத் தீர்த்துக்கொள்தலுக்குமப்பால் நாம் புரிந்து கொள்ளாதவரையிலே ஈடேற்றம் நமக்காக ஒரு நனோமீற்றர் நகர்வையும் காணாது.

No comments: