கோடம்பாக்கநடிகர்சங்கத்தேர்தலிலே இருபக்கத்தாரினதும் விழியங்களை உயூரியூப்பிலே இன்று தொடர்ந்து பார்த்தேன்.
தமிழ்ப்படங்களிலே கதாநாயகனின் தொந்தி, கதாநாயகியின் புடவைக்கட்டு, அப்பா
பாத்திரத்தின் அரைப்பூசணிக்காய்த்தலை, அடைப்படைக்கதை லொஜிக் என்ற
இறங்குவரிசையிலே எது சரிந்தாலும், எப்போதுமே நகைச்சுவை சரிவதேயில்லை
என்பது பேஸ்புக் மீமீக்களிலேயே வழக்கமாக நமக்குத் தெட்டத்தெளிவு.
இந்நடிகர்சங்கத்தின் தேர்தற்போட்டிப்பேச்சு, "எங்களுடன் நின்று கட்டிடம் கட்டினாயா? கிரிக்கெட்
விளையாடினாயா? மாமனா? மச்சானா? உனக்கு எதற்கு வேண்டும் நாங்களே இன்றுவரை
கண்டுகொள்ளாத நாடகநடிகர் வாக்கு? பாதுகாப்பு?" வகை அனல் பறக்கும் புனல்
பொங்கும் விழியங்களிலே விழுந்து செவியிற் கலப்பது தமிழ்த்திரைப்படங்களின்
உணர்வில் நிலைத்த நகைச்சுவைத்தரத்தினை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
ஆனால்,இந்த ரியலிட்டி ஸோவிலே அடியோடி ஒட்டிக்கொண்டிருக்கும்
இரத்தமுறுஞ்சும் அட்டைகளாய் உறுத்திக்கொண்டிருப்பவை நிறைய இருக்கின்றன;
கதாநாயகர்-நாயகி, நகைச்சுவை நடிகர்-நடிகை, வில்லர்-வில்லி,
துணைநடிகர்-நடிகை, தொலைந்துபோனநடிகர், திடீரென நடிகராகத் தோன்றும் மனிதர்
அத்தனை பேரும் அவர்கள் நடிக்கும் படவில்லர்களாகவே சொல்லுக்குச் சொல்
பேசுகின்றார்கள்; தோன்றுகின்றார்கள். இத்தனை சாதியாக, பிரதேசமாக, மதமாக,
"ஒண்டிக்கொண்டி ஆம்பிளையோடு மோதுடா; பொம்பளைகளோட மோதாதடா" ஆளுகளாய்
வெளிவந்தவர்கள் அடுத்தடுத்த படங்களிலே எப்படியாக முகங்களை இத்தனையையும்
எதிர்க்கும் ஆட்களாக அரிதாரத்தின் பின்னாலும் கேக்கின் பின்னாலும்
மூடிமறைத்து வேஷம் கட்டப்போகின்றார்கள் என்பதுதான் வியப்பாகவிருக்கின்றது.
இத்தனைக்குப் பின்னும் நம்பிக் காசையும் கட் அவுட்டையும் பாலையும்
கோயிலையும் அங்கப்ப்ரதட்சணத்தையும் செய்யும் விசிறிகளின்
பனைமட்டைவிசுவாசத்தின்மீது இவர்களுக்கு அத்தனை
நம்பிக்கையிருக்கின்றதுமட்டும் தெளிவாகத் தெரிகின்றது.
"நடிகர்
சங்கக்கட்டடத்தைக் காணோம்" வடிவேலு நகைச்சுவையை இன்னமும் எடுத்து
விட்டாலும், அஃது அதைவிடவும் ஆழமாக ஷியாம் பெனகலின் Well Done Abba
கிணற்றுக்கதையாக ஆகிவிடுகின்றது. ஆளுக்காள், "கட்டிடத்தைக் காணோம்"
என்பதும் "அந்தக்கட்டடம்தாங்க இந்தக்கட்டடம்" என்று வாழைப்படக்கதை
சொல்வதும் கட்டித்தருவோம் என்பதும் கோடி உழைக்கின்றவர்கள் "வியர்வை சிந்தி
நடித்துக் கடன் அடைக்க ஆயிரம் தருவோம்" என்பதும் "நைஜீரியன் இளவரசியின்
சொந்தாக ஆபிரிக்க வங்கியொன்றிலே இருக்கும் ஐநூறு மில்லியனை எடுக்க, நூறு
டொலர் அனுப்பி உதவினால், ஐநூறு மில்லியன் கைக்குவந்ததும் ஐந்துவீதம்
உங்களுக்கு" என்ற அளவுக்குக் கீச்சுக்கீச்சு மூட்டுகின்றது.
இவ்வகையிலே பார்த்தால், இவர்கள் அன்றைக்குப் படம் பார்க்கக்கொடுத்த
காசுக்கு இன்றைக்காச்சும் நடிக்கின்றார்கள். ஆனால், நடிக்கவே வராத புலி,
வேதாளம் வி..லா...ங்குகள்; மேடைக்கே வராமல் இன்னமும் வழுக்கிக்கொண்டே
ஓடுகிறன.
இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு
கவலையில்லை! நாளாந்த சூழ்நிலையிலே இருக்கின்ற அழுத்தத்தினைக் குறைத்துச் சிரிக்க உதவுகின்றதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், திருட்டுவிழியமாக ஏற்றப்படாமலே, ஆலிவுட்டு,
ஈரான்புட்டு, கொரியன் உட்டு என்று ஆரும் காணாத நேரத்திலே அரைக்கிலோ கதை,
காட்சி மூலத்திலிருந்து அள்ளிப்போடாமல், இலவசமாக இப்படியோர் அசல் கதைவசனம்
இயக்கத்திலே வாரநீள அனைத்துநடிகர் சீரியல், பான்கேக்,, தோசை கணமும்
மொறுமொறுவென்று எண்ணெய் ஒழுக ஒட்டத் தொய்யாமலே தருவது இன்னும் இரண்டு நாட்களிலே இல்லாமலே போகப்போகின்றது
என்பதிலே மிகவும் வருத்தமே!.
ஆனாலும், அதுவரை கண்டு க..............ழி........ப்போமே!
பிகு: அஹேம்! எல்லாம் அந்த ஶ்ரீலங்கா தமிழருக்காக ஆறுமணிநேர அரிதார
உண்ணாவிரதம் இருக்கப்போகையிலே கண்ட காணாமற்போன கட்டடப்பிரச்சனைதான் என்பது
நினைவிருக்கட்டும். ஆக்காங்! அப்பப்ப அப்படியொரு சிரங்கு, படைப்பிரச்சனை
இருந்ததை ஞாபகம் கொள்றோம்பா! விஷால் ரொட்டி சார், கருணாஸ் டேவர் ஸார்,
சரத்குமார் நடுவார் ஸார், ராதாரவி நாய்த்ரீ ஸார், கார்த்தி கவுண்ட் ஸார்,
நாஸர் காக்கா ஸார், ஆர்ய சேகர் ஸார், மன்சூரு வென்னீரு ஸார், ஊர்வசி சாட்சி மேடம்
அப்புடியே ஒங்களோட இம்மாம்பெர்ய ப்ராப்ளத்தை வெறும் நொறுக்கு அம்மாமி
அப்ளாமாய் ரெண்டு விசிட்டுல நொருக்கி அமுக்கிவிட நீங்கள் நாடவேண்டிய ஒரேயொரு நம்பிக்கைக்குரிய வேறெங்கும் கிளைகளில்லாத் தனியாள் ஸ்தாபனம் எங்கடை அப்புக்காத்து
சுமந்தி.... .:-)
No comments:
Post a Comment