Monday, September 07, 2015

பதி/தைப்பு

சுன்னாகச்சந்தை வாழைக்குலை மாதிரியாய் அள்ளிக்கொட்டி ஏனோ தானோவென்று பதிக்கும் இந்தியப்பதிப்பகங்களுக்கு பதிகூலி, விளம்பரக்கூலி, பண்டக்குதக்கூலி, பத்திரமாய்த்திருப்பியனுப்புகூலி என்பதாக அனைத்துக்கறப்புகளிலும் அப்பணம் போய்ச்சேருமென்றால், புத்தகத்துக்குக் காசுவிடாச்சிக்கனம் அவசியமே!

அந்நிலையில் தமிழ்நாட்டுப்பதிப்பகங்களிலே தன் விலாசவிசாலத்துக்குப் புத்தகம் போடும் பணத்தினை வன்னி, வாகரை, அம்பன், விடத்தல்தீவு, இறக்கக்கண்டி, குமுளமுனை, கோளாவில் கொட்டில்களுக்குள் எப்படியாகவேனும் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்று எண்ணுவது மேல். 

அக்கரையிலே சனம் சாகும்போது காந்தி கண்ணதாசன் என்று உள்ளூர் உளூந்துகளுக்கே பயந்து இக்கரைப்பொந்துக்குட் பதுங்கிக்கொண்டு தம்நாட்டுத்தேசியக்கொடிகளைக் கோவணவிடுக்குகளால் வீசிக் கோடி காட்டியவர்கள் வெள்ளம் செத்து ஆறு வற்றி செத்த கதைகளை செத்தவீட்டு எட்டுச்செலவிலேயே சீமான்களும் சீமாட்டிகளும் டிகாஸன் காப்பியோடு வாசிக்கப்போடு இலக்கியநயம் கண்டு நொய்ந்துருகிக் கண்ணீர்வடிக்கும் மாய்மாலத்துக்குக் காசை விட்டு என்ன பயன்?

சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் கொடுத்தனுப்பிய லேனா, மாவன்னா கும்பலின் காலிலேயே சாகமுன்னால், உலக இலக்கியத்தின்பேரிலே எஸ்பொவும் விழுந்த அழுக்கையும் கண்டோம். வெக்கங்கெட்ட மனுசன்! எவரின் திமிர்ச்சட்டைக்கோ இன்னொரு மெடல் குத்தக்குடுத்துப்போட்டுப் போய்ச்சேர்ந்தது.
 
சிதம்பரம்பிள்ளை மட்டும் சுயராஜ்யத்துக்கென்றொரு கப்பல் கட்டலாம்; ஆனால், நாங்கள் இன்னமும் அங்கேதான் போய் அச்சுப் போடப் பிச்சுப்போட்டுக் கொட்டக்கிடக்கு. இப்பிடி வரும் இலக்கியம் இருந்தென்ன? இறந்தென்ன? ஆண்டைகளின் வீட்டுக்கூழுக்கான உள்ளீடு மாண்டாரும் மறந்தாரும்? தாயை வைச்சுக் காப்பாதமுடியாதவனெல்லாம் செத்தவீட்டுக்கு ஸ்பீக்கர்கட்டிச் செலவழிக்கிற விளையாட்டுத்தான் சிக்கனம் விட்டுத் தமிழ்நாட்டுப்பதிப்பகங்கள் போடும் புத்தகங்களுக்கு விடும் காசு!
இப்படியாகப் புத்தகம் போடும் காசை ரெண்டு கான் பியருக்கு விடலாம், வாழ இடத்தைக் குடுத்த நாட்டுக்கு வரியாச்சும் போகுதெண்டு - புரட்சிகரமாய் பேஸ்புக்போட்டோவுக்குப் போஸ்குடுத்தபடி குடிக்கிறவை; குடிச்சால் இலக்கியம் பிறக்கும். குடிக்காத எங்களைப்போல ஆக்கள்,,,,, அதுதான் இலக்கியம் படைக்கிறேல்லை; படைக்கிறாக்களிலை பொறாமையிலை இப்படியா எப்பவும் எதிர்மறையாத் திட்டுறது , காசை விடோம்! காசாலேசா!

------------------------------------------

 தமிழகத்திலே ஈழத்தவர் பதிக்கும் விடயத்திலே நான் சொல்வது/சொல்லவருவது பற்றித் தவறான புரிதல் சிலவற்றினை நண்பர்களிடையே காண்கிறேன். அவற்றினைத் தனியே விளக்கமுயல்வேன்.

1. என் கருத்து எவ்விடத்திலும் தமிழ்நாடு.எதிர்.ஈழம் என்ற வைத்தலிலிருந்து புறப்படுவதுமில்லை; புறப்படவுமில்லை.

2. இது தமிழ்நாட்டின் பதிப்பகங்கள் ||அனைத்தினையும்|| போட்டுத் தாக்குவதும் தமிழ்நாட்டிலே பதிக்கும் ஈழத்தவரைப் போட்டடிப்பதுமாகக் கொள்ளக்கூடாது.

3. ஈழப்பதிப்பகங்களின் குறைகள் தனியே பார்க்கப்படவேண்டியவை.

பதித்தல் தொடர்பாக என் அடிப்படையான கருத்துகள் மூன்று:

1. தாயும் சேயுமானாலும் வாயும் வயிறும் வேறு; நமக்கென்ற தொழில்நுட்பத்தினையும் கருவிகளையும் நாம் கொண்டிருக்கவேண்டும் (ஜெயமோகன், வ. அ. இராசரத்தினம் இறந்தபோது, அவரை நினைவுகூர்கிறேன் பேர்வழி என்று இலங்கையிலே ஶ்ரீமாவோ காலத்திலே இந்தியப்பதிப்புகளை இறக்குவதிலிருந்த தடையினைத் திட்டித்தள்ளினார்; ஆனால், இதுவரை, ஈழத்திலோ பிறநாட்டிலே பதிக்கும் தமிழ்நூல்களிலே எத்தனையை இந்திய/தமிழ்நாட்டின் கண்காட்சிகளிலே, கடைகளிலே இறக்குமதி செய்து விற்பனையாக்க இந்திய அரசும் தமிழக நூலங்காடிவியாபாரிகளூம் முறையே அனுமதி தரவும் விற்கவும் தயாராக இருக்கிறார்கள் என்று தமிழகத்திலிருந்து எவரும் பேசி நான் காணவில்லை. (தாம்போட்ட ஈழம் தொடர்பான நூல்களையே காந்தி கண்ணதாசன் என்ற ஆள் "பயங்கரவாதச்சட்டம்" என்ற கோலைக் காட்டக் கண்காட்சியிலே ஒளித்த வீரப்பத்ரிகையாளர்கள் பதிப்பாளர்கள் இவர்கள்))

2. பதிப்பாளர்கள் எழுதுகிறவருக்கும் வாசிக்கின்றவர்களுக்குமிடையேயான "அமேசன்" இடைத்தரகர்களாகத் தம்மைக் கருதாமல், படைப்புகளின் தரம், உள்ளடக்கம், அதை வெளிக்கொணரும் வகை என்பவற்றிலே மெய்யான கரிசனை எடுக்கவேண்டும். எழுத்துரு, மெய்ப்புப்பார்ப்பு, சீர்படுத்தல், பதிகாகிதம், அச்சுக்கோர்ப்பு இவையெல்லாவற்றினையும் சிறப்பாகப் பொறுப்பெடுத்து மேற்பார்வை செய்ய வேண்டிய கடன் அவர்களது. அத்தகுநிலை பிறந்து, புத்தகம் போடுதலை ஒரு கழிந்தபண்டத்துக்கான தர்ப்பைப்பிண்டம்போலக் கருதுதல் எரிச்சலூட்டுவது.

3. சமூகம் குறித்த ஒரு கரிசனையுள்ள பதிப்பாளரை ஈழம் குறித்த எழுத்தாளர்கள் அணுகவேண்டுமென்பதை இன்றைக்கும் விரும்புகிறேன். துயர்நிகழும்போது குரலையே எழுப்பாது பதுங்கிவிட்டு, எல்லாம் முடிந்தபின்னர், அத்துயரை எழுத்தாக்கி விற்றால், சந்தைப்படுத்தலாம் என்ற அளவிலே அலையும் உலுத்தர்களைப் புறம் தள்ளவேண்டும்; அவர்கள் ஈழத்திலிருந்து இவ்விற்பனையைக் கண்கொண்டு புறப்பட்ட புதுப்பதிப்பாளர்களாகவிருந்தாலுங்கூட.




நான் அடிப்படையிலே படைப்பாளியுமல்லன்; பதிப்பாளனுமல்லன்; வாசிப்பானுமல்லன்; வாங்குவோமல்லன். ஆனாலும், படைப்புலக அரசியலை, படைப்பாளி-பதிப்பாளி-வாசிப்பாள்-விமர்சகர்-விருதாளி Pentagon விளையாட்டினைச் சுவராசியமாகப் பொழுதுபோகப் பார்த்துக்கொண்டிருப்பவன். அவ்வளவுக்குள் கண்டதை அடிப்படையாகக் கொண்டு சொன்னதே என் கருத்து. தவறிருக்கலாம்


தவறாகச் சொல்லியிருப்பின், அல்லது எவரதும் உள்ளத்தைப் புண்படுத்தியிருப்பின் மன்னிக்கவேண்டும். அதுவல்ல என் நோக்கம்.

No comments: