Sunday, March 29, 2015

இணையதாதாக்கள்

 ஷர்மிளா செய்யத் ஜெயபாலன் ஶ்ரீலங்காவிலே விசாரிக்கப்பட்டபோது தேர்ந்தெடுத்துக் குறிப்பிட்ட புலம்பெயர் தமிழர்கள் குறித்து எழுதிய கருத்துகளிலே -அதன் பின்னான அவரது அரசியலிலே- மிகவும் கோபமும் மாற்றுநிலையும் உண்டு.


ஆனால், தொடர்ச்சியாக அவருக்கு எதிரானவர்கள் அவரை - சமூகவலைத்தளங்களிலும் நேரடியாகவும்- தாக்கும் விதம் வெறுப்புக்குரியதும் கோபமூட்டுவதுமாகும்.

பெண்கள் குறித்து அவர் கருத்துக்கு அவர் வாழுமிடத்திலே சில ஆண்டுகளுக்கு முன்னாலே அவர் பாதுகாப்பினைத் தேடவேண்டிய நிலை இருந்தது.

பின்னால், அண்மையிலே தமிழ்நாட்டு நகர்காவலர்தலைமை ஒருவரின் பாலியல்நிந்தனைப்பேச்சினைப் பதிவு செய்ததிலே, ஷர்மிளா செய்யத்தின் படத்தினை வேண்டுமென்றே வம்பர்கள் இணைத்ததினை நண்பர் ஒருவர் கண்டனம் செய்த சுவரிலே கண்டேன். இன்று 'முஸ்லிம் பெண் கொலை : ஏறாவூரில்பரபரப்பு....!! குற்றவாளிகளை கைது செய்யாதவரை உடலைபெற மாட்டோம்' என்று ஓர் இணையத்தளத்திலே செய்தி.

ஒருவரின் கருத்தினை அவர் சொல்லும் கருத்தாக எதிர்க்கமுடியாதவிடத்திலே இப்படியெல்லாம் செய்வது சொன்வன்முறையென்பது ஒரு பக்கம்; மேலாக, இப்படியாகச் செய்வதூடாக எவ்வித கருத்துமாற்றத்தை ஒருவரிலே பயத்தின் ஊடாக ஏற்படுத்தலாமென இப்படியானவர்கள் நம்புகின்றார்களெனத் தெரியவில்லை.

No comments: