முத்துலிங்கத்தின்
இயக்கங்கள் மீதான நக்கலிலே இது மூன்றாம் கதை என்று எண்ணுகிறேன். பத்தாண்டுகளுக்கு முன்னாலே கேர்ணல் கிட்டுவின் குரங்கு என்று பிராண்டியிருந்தார். அப்போதே எரிச்சல் வந்தது. இப்போது, ஈழமக்கள்புரட்சிகரமுன்னணி
இயக்கத்தின் மகளிர் அணியிலே கையை வைக்கிறார்.
முத்துலிங்கம்மீது
எழும் எரிச்சல் தனியொரு விடுதலைப்புலிப் பெண்போராளியையோ குழுவான ஈழமக்கள்புரட்சிகரமுன்னணி இயக்க
ஆண்போராளிகளோ எனக் குறிப்பிட்ட இயக்கங்களாகப் பார்த்துக் கொச்சைப்படுத்துகிறார் என்பதாலல்ல. அத்துணை பேரழிவு பற்றியும்
இத்தனைநாள் ஒரு சொல் அவர்
எழுத்திலோ அதற்கப்பாலான பேச்சிலோ சொன்னதாகத் தெரியவில்லை. அரசியல் அறுத்த எழுத்தே அவர்
அரசியல். அதற்கு அவர் இப்படியான பேரழிவுகள் சிறுபொட்டாகவே எழ முன்னாடியே நாட்டினைவிட்டு
நீங்கின சேய்மையும் காரணமாகவிருக்கலாம். ஆனால்,
இப்படியாக விடுதலைப்போராட்டத்தின் கூறுகளையே
- எந்த இயக்கமாகத்தான் இருக்கட்டும் - இழிவு
செய்கின்றார் என்பதே எரிச்சலடையச் செய்யும் காரணமாகத் தோன்றுகின்றது.
இந்தியாவின்
குறிப்பிட்ட நிலை வாசகர்களாலே
படிக்கப்படும் சஞ்சிகைகளிலே இப்படியாக மெய்யான பாத்திரங்களைத் தன் நச்சுநாடகமேடையிலே
நிறுத்திக் கொச்சைப்படுத்தும் கொச்சைத்தனம்,
இயல் விருதை உலோகம் எழுதின
பயங்கரவாதி ஜெயமோகனுக்குக் கொடுத்த அரசியலின் அடுத்த
புகையிரதப்பெட்டிதான்.
எந்த இயக்கமென்றில்லாமல், இயக்கக்கதைக்கு இன்றைக்கு நானே அதிகாரி என்பது
மாதிரியாகத் தமிழக வாசகர்களைக் குறிவைத்து
எழுதும் எல்லா ஈழ, புலம்பெயர்
எழுத்தாளர்களும் முத்துலிங்கத்தினைவிட மோசமாகவே இயக்கங்களின் கச்சைகளைப் புத்தகக்கண்காட்சிகளிலே அவிழ்த்து "இவ்வளவுதான் இயக்கம் இவ்வளவுதான்" என்று
உப்பு, புளி, கொத்தமல்லி வறுத்துச்சேர்த்தரைத்த
கொச்சிக்காய்த்தூள் எல்லாம் சேர்த்து விரித்துவைத்திருக்கின்றார்கள்.
எனினும், அவர்களையெல்லாம்
கொத்தாமல், அ. முட்டுலிங்கத்தைப் பலர் கொட்டக் காரணம், அவர் "ஏழாமடுக்கிலிருந்து இறங்கி வந்து உங்களோடெல்லாம்
சமூகவலைத்தளங்களிலே சட்டையைப் பிடித்துச் சேற்றிலே உருண்டு சண்டைபிடிக்கும் தேவை
எனக்கில்லை. அந்நேரத்துக்கு 'தமிழீழமக்கள்விடுதலையியக்கம் பெரியய்யாவின் பொம்பிளைகள்' என்றொரு கதை எழுதிவிடுவேன்
அல்லது ஜெயமோகனோடு ஆழமும் அகலமும் அகமும்
புறமும் விருதாய் விருதாவாய்த் தேடிக்கொண்டிருப்பேன்" என்ற மேட்டிமைத்தனம் மிக்கவராக
அவரினைக் கருதியதாகவிருக்கலாம். அந்த
அலட்சியமே ஆத்திரத்தைப் பலருக்குக் கொடுத்துவிடுகின்றது. இது அவருக்கும் அவரின் தமிழகவாசகர்களுக்கும் இவர்கள் இலவச
விளம்பரம் தருவதாகத் துள்ளுகின்றதைப் பார்த்துக் கொடுப்புக்குள்ளே சிரிக்கும் ஓசிப்பரவசத்தைக்கூட ஏற்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஆனால், இவ்வெழுத்தாளர்கள்
எனக்கு விடுதலை இயக்கங்களை, அவை சம்பந்தப்பட்ட சூழல்களை,
வாழ்ந்த வாநிலைகளைக் கடும்விமர்சனமாகவோ, நகைச்சுவையாகவே (ஈழத்தமிழ்/புலம்பெயர்
எழுத்தாளர்களிலே,
தமிழ்க்கவி,
குணா
கவியழகன்
தவிர்ந்த
ஏனையவர்கள்
ஒரு
குத்தும்
நக்கலாகவே)
முத்துலிங்கத்திலும்விடத் தூக்கலாகப்
பேசிப்போனாலுங்கூட குண்டும் புகையும் சதையும் நிணமும் சேர்ந்து
சனம் நொந்திருந்த காலகட்டங்களிலேயும் அவற்றினைப் பற்றியே ஏதோ வகையிலே
பேசிக்கொண்டிருந்தவர்கள்; எதிரோ ஒத்தோ எழுத்திலோ செயலிலோ அம்மக்களை மையப்படுத்தியும் ஓரத்திலே
நின்றோகூட ஏதோ செய்துகொண்டிருந்தவர்கள்.
ஆனால், அப்போதெல்லாம், முத்துலிங்கம் எனப்படுகின்றவர் ஆபிரிக்க முண்டாவினையினையோ ஆப்கானிஸ்த ஆட்டினையோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் - பத்மினி ஏன்
சிவாஜியினைக் கல்யாணம் செய்யவில்லை என்று கவலைப்படாதவிடத்தே! இன்றைக்கு
ஆபிரிக்க, ஆப்கான் சரக்குகள் அவரின்
வாசகர்களுக்குச் சலித்துப்போன இடத்திலே எவரினதோ பட்டறிவினைப் பெற்று
இயக்கக்கடைக்கதை எள்ளலிலே பொரித்து
விரித்திருக்கின்றார்.
ஓர் எழுத்தாளன் என்றளவிலே எதையும் எழுதலாம் என்ற
உரிமை அவருக்கு இருக்கின்றது; எழுதிவிட்டுப்போகட்டும்; ஆனால், இன்றைய டக்ளஸ் தேவானந்தாவிலே, இந்திய அமைதிப்படைக்கால
பத்மநாபாவிலே எத்துணை கருத்து முரண்பாடிருப்பினுங்கூட
அலன் தம்பதியினர் கடத்தப்பட்டகாலத்தின் தேவானந்தா, பத்மநாபாவினை முத்துலிங்கம் வரலாற்றிலே
திரித்துக் நகைச்சித்திரங்களாகக் குறுக்குதல் நியாயமற்றதல்ல. புனைவுக்கும் நிகழ்வுக்கும்
பேதமில்லாமல் கிட்டுவின் குரங்கு முதல் ஈபியின்
மகளிர்முன்னணி வரை பேசும் இவரை
இன்னொரு பெருமாள் முருகனாகவும் எதிர்ப்பவர்களைத் திருச்செங்கோட்டர்களாகவும் காலச்சுவடும் அவரிடமும் ஜெயமோகனிடமுமிருந்தும் ஈழவிடுதலை இயக்கங்களின் கதை படிக்கின்ற தமிழர்களும்
காட்டாதவரைக்கும் சரிதான்.
எத்துணை வல்ல எழுத்தாளராகினும்,
இப்படியாக நிகழ்விலே நச்சூட்டிப் புனைவாக்கும் ஒருவரின் ஒருவரிகூட, புலி மாலதி என்றாலென்ன, ஈபி
சோபா என்றாலென்ன, அந்த மகளிரணிப்பெண்களின் உதிர்ந்த
ஒரு முடிக்கும் ஒப்பீடாகாது.
ஆனால், இதையெல்லாம்,
முத்துலிங்கம் எண்ணிப்பார்ப்பார் என்று தோன்றவில்லை. அவர் மையமான வட்டம் வேறு தளத்திலே சக்கரமாய்ச் சுற்றுவது; ஈழவிடுதலை குறித்து எதிரும் புதிருமாகக் குத்திக்கொள்ளும் கொல்லும் எம்மைப்
போன்ற எவருமே அச்சக்ரதாயின் சுழல்வட்டத்துள்ளே அடங்கோம்; அவருக்கு அதைப் பற்றிய கவலையுமில்லை.
சலசலப்புத் தோன்றியதாக ஏவலாட்கள் எடுத்துச் சொன்னால், நாளைக்கே ஈழவிடுதலை இயக்கங்களுக்கெதிரான
முத்துபண்டா, முதுமெனிக்கேயின் இராணுவத்தைக் கிண்டல் செய்து ஒரு கதைவிட்டு, எங்களிடமும்
தன் வட்டத்திடமும் கைத்தட்டையும் சிரக்கம்பத்தையும் வாங்கிக்கொண்டு, அடுத்த கதைக்கு நகர்ந்துவிடுவார். அவ்வளவுதான்.
ஆனால், "இப்படியாக உண்மைக்குப் புறம்பான கதைகளை (உண்மைக்குப் புறம்பென்றாலே கதைதானே! இத்தமிழ்க்கொலைக்கூத்துக்கு 'உண்மைக்கதை' என்று எழுதி, புஷ்பா தங்கத்துரை கதைபோட்டவர்களைப் போட்டடிக்கவேண்டும்) எழுதிக் காசு சம்பாதிக்கும் முத்துலிங்கத்தை அம்பலப்படுத்துவோம்..." என்று வரும் காரப்பதில்களைப் பார்த்தால், நிலைமை மறந்து சிரிப்புத்தான் வருகிறாது. இரண்டு கதை எழுதிச் சீவனசம்பாத்தியம் பண்ணும் சீர்கெட்ட நிலையிலா முத்துலிங்கம் இருக்கிறார்? சம்பாத்தியம் கண்டு ஓய்வானபின்னரே அவர் எழுதுகிறார். காசுவிலே எழுதுகிறதுக்குக் காசு வாங்குவாரோ என்றே தெரியவில்லை. மேலும், அவரின் கதையெதலுக்கு நிகர்த்த அரசியல், யாழ்ப்பாண வெள்ளாள சாதியத்தாலேதான் ஈழமக்கள்புரட்சிகரமுன்னணியை
அடித்தால் என்பதுமாகும். இப்படியாகப் பார்த்தால், விடுதலைப்புலிகளை மையப்படுத்தி “எல்லாம் வெல்லும்” என்று எழுதின ஆனந்தவிகடன் கதையை வைத்து அவரை
எப்படியாக விமர்சிப்பது? (அதை அப்போது விமர்சிக்காமலே
விட்டவர்களைத்தான் கேட்கிறேன்; அதாவது, இப்போது இதையிட்டு
யாழ்ப்பாணவெள்ளாளசாதியம் என்று விமர்சிக்கின்றவர்களைத்தான் கேட்கிறேன்) உடலிற் கல்லெங்கே பட்டாலும் காலைத் தூக்கினால், என்ன நியாயம் நண்பர்களே?
No comments:
Post a Comment