Friday, March 10, 2006

அள்ளல் - 2என்று

"உங்கள் இலக்கிய எழவெடுப்பு
எப்படி இருக்கு?" என்று
கவிஞரைக் கேட்டேன்.
அவர் சொன்னார்:
"எப்படி எழுதிப்பேர்த்தும்
வரவில்லை வரவில்லை
வரவே இல்லை
என் கவிதையில் கவிதை.
எனவே வருவது வரட்டும் என்று
நடத்திக் கொண்டிருக்கிறேன்
கவிதைக்கு என்று
ஒரு சிறு பத்திரிகை"

"உங்கள் விமர்சனக்கழுத்தறுப்பு
எப்படிப் போகுது?" என்று
விமர்சகரைக் கேட்டேன்.
"எப்படி எழுதிப் பார்த்தும்
வரவில்லை வரவில்லை
வரவே இல்லை
என் விமர்சனத்தில் விமர்சனம்.
எனவே வருவது வரட்டும் என்று
எழுதிக் கொண்டிருக்கிறேன்
ஸ்ட்ரக்சுரலிஸத்துக்கு
விளக்கம்"


பிரசுரம்

விலை ரூபாய் 30.
வெளிநாட்டுக்கார
முகமூடி எழுதியது.
உள்நாட்டில் தலை
இல்லாமல் அலையும்
முண்டத்தின் மொழிபெயர்ப்பு.
நூலின் பெயர்:
"இருப்பின் அமைப்பு முதல்
தலையின் இன்மை வரை"


இண்டியன் ரைட்டர் பேட்டி

"இந்தியாவுக்கு இன்று
எது தேவை?
ஹிந்து மதத்தின்
ஜாதீயக் கட்டமைப்பா?
ஜாதியத்தை உதறி
மனிதாயத்தை உயர்த்தும்
அரசியல் சாசன
மதச்சர்பின்மைப்
பிரக்ஞையின் வளர்ச்சியா?
அதுவும் க்ஷீணித்து
உப்புச் சப்பற்ற
லௌகீகம் ஆகிவிடும்
ஆத்மீக ஆபத்தா?
மனசின் மர்மத்தை
ஆராயும் புத்தரின்
பேராழம் போன்று
ஒரு புதுமுக அகமுக
விஞ்ஞான நோக்கா?
எது?" இதைக் கேட்டு
அக்கமும் பக்கமும்
பார்த்து விட்டு
நடுங்கும் குரலில்
பதிலைச் சொன்னார்
இண்டியன் ரைட்டர்:

"எனது தத்துவம்
என்ன என்கிறீர்கள்?
குதிரை கனைக்கிறது
கொசு ங்ய் என்கிறது
மோட்டெருமை போடுகிறது
முக்காரம் இதில்
சத்தம் எது
புத்தம் எது என்று
மண்டையைக் குழப்பாமல்
ஒவ்வொன்றாய் டேப் பண்ணி
ஒழுங்காய் விற்றால் நல்ல
யாவாரம்!"


வைரவர்

இடம் போவதா இந்த நாய்க்கு வலம் போவதா என்று
சகுனம் பார்த்த சில பழைய சாமிகளின்
கெண்டைக் கால்களை கிழித்தது நாய்.
கண்டார் இதனை ஒரு புதிய ஆசாமியார்.
நமக்கேற்ற நாயென்று தமது முன்றலில்
நாயைக் கட்டிப்போட மந்திர தந்திர
வசிய முறைகளைப் பிரயோகிக்கலானார்.
"சுபமங்கொழகொழா" உச்சாடனம் எடுத்தார்.
"பாய்ந்து அதன் பேட்டைத் தொட்டிலே
விழுவிழு" என்றார். நாய் அசையவில்லை.
"ஹிந்து வாராந்தரிக்கு ஆள் புடிப்பவன் நான்
எழுதெழுது" என்றார். உசும்பலை நாய்.
லைட்ரீடிங் லெவலைவிட்டுக் கிளம்பாத இந்த
சைட்பிஸினஸ் பத்திரிகை சண்டே இதழெல்லாம்
நாய்ப்பல்லுக்குதவாத வரட்டு வெள்ளெழும்புத்
துண்டே என அறியா மண்டை அவருக்கு.
எதுகைமோனையிலே நாயைப் புகழ்ந்து
எடுத்துக்கட்டி முடித்தார் ஒரு வெண்பா.
ருசிபார்த்துக் கறி தின்னும் நாய்க்குதவாத
வரட்டு வைக்கோல் கட்டு அது.
மசியாதோ இந்த நாய் ஆசுகவிக்குக்
கூட என்று ஆசாமிப் பெருமகனார்
யோசித்துப் பின்பு பொறுமை கடைப்பிடித்து
தமிழை விடுத்து இங்க்லீஷுக்குள் இறங்கி
"விளடீமர் நபக்கவுக்கு ஆங்கிலம் தெரியாது" என்றார்.
"அப்டைக் சுமார்" என்று சொடுக்கு விட்டார்.
"எப்பேர்ப்பட்ட கிரிட்டிக் நான் நாயே
உனக்கு நானே எஜமான், கமான்" என்றார்.

தெருப்புழுதியிலே அசுவராஸ்யமாய்
அரைத்தூக்கத்தில் கிடந்த நாய் சிலிர்த்து
எழுந்து உறுமியது. உடனே ஆ சாமியார்
வேட்டியை உதறித் தூக்கிமடித்துக்கட்டி
அகலக் கால்வைத்து ஆராய்ச்சித்தொடை தட்டி
"இருள்" என்றார் "ஒளி" என்றார்
ஜபர்தஸ்தாய் இதற்கெல்லாம்
அரிச்சுவடிப் பொருள் சொன்னார்
பொல்லென்றார் பொல்லனொரு பொலன் என்றார்
தமிழின் ஆன்மீகப் பொருளில் பதில் தந்து
"வள்" என்றது நாய். "வள்" எனில் குரைப்பல்ல.

"இந்த நாய் 'வள்' எனில் சிந்தனை கண்டுகொள்
இந்த நாய் வள்ளு என்றபோ தெல்லாம்
உம்முடையோர்க்கு வாயிலே இருந்து
வடிந்தது ஜொள்ளு இந்த நாய் எந்த நாய்?
இந்தியா சிந்துவாய் ஆரிய திராவிடப்
பிரிவினைகளுக்கெல்லாம் முந்திய ஒன்றதாய்
நின்ற காலத்து நாய். இந்த வாய் எந்த வாய்?
பன்றிகளுக்கிடும் முன்றிலின் வேலிகள்
என்றெதும் இல்லதாய் எங்கணும் யாவரும்
வாங்கி உயிர்க்கும் காற்றை விரிக்கும்
பிராண சக்தியின் அக்ஷரம் சுழல்கிற
அச்சடா இந்தவாய்!" என்றது நாய்.

இது கேட்டு "ஆ ஊ! அடாவாம் புடாவாம்
அன்னிக்குக்கூட அவாளைப் பார்த்து
அடா இன்னுப்புட்டான்!" என்றெடுத்தார் ஆசாமி
அவருக்கே பொருந்தாத ஜெண்டில்மேன் ஒப்பாரி!
"அடி" என்று தன்னை விளித்த கம்பனை
"ஆரைஅடா சொன்னாய் அது?" என்றாள் ஔவை.
கம்பனின் கதையே அப்படி என்றால்
அறிஞன் ஒருவனை அடிமை பிடிக்கவரும்
மடையனைப் பார்த்து 'அடா' என்று விளிப்பது
மரியாதை என்றே கருதிட வேண்டும்.
ஆசாமி உடனே மந்திரம் தந்திரம்
இங்கிலீஷ் எஜமான் வேலை எல்லாம்
விடுத்து எடுத்தார் கடவுள் வடிவம்.
"நீ நாய் நான் யார்? கடுகடு வடுக வைரவனார்
நாய் என் வாகனம் உன் இடம் எனக்குப்
பின்புறம் முன்புறம் வந்தாய் என்றால்
கிடைக்கும் உனக்குக் கல்லெறி எனவே
கம் கம்" என்றபடி தம்பின் புறத்தை
நாய்க்குக் காட்டினார். தெருநாய்க்குப் பின்புறப்
பொறியைக் காட்டும் இப் புதுமாடல் வைரவர்
சரியான இடியட் என்று சும்மா நின்ற நாய்
எகிறிப் பாய்ந்து இழுத்தது எட்டி
உரிந்தது வைரவ சாமியின் வேட்டி.
அதுசரி அம்மணம் இல்லாமல் என்ன வைரவ வேஷம்?
அம்பலம் ஆயின அவாளுக்கும் இவாளுக்கும்
ஏற்றபடி பேசும் ஆசாமியின் டபுள்
மர்ம விபரங்கள், மறைமுக ரோகங்கள்
வைரவர் வாய்தனில் இருந்து எழுந்தது
வாள்வாள் சப்தம், கண்டது ரத்தம்-
அன்று அவாளுக்குக் கெண்டைச்சதையில்
இன்று இவாளுக்குக் குண்டிச்சதையில்


-பிரமிள் (1939-1997)


பிரமிள் கவிதைகள்
தொகுப்பு: கால சுப்ரமணியம்
லயம் வெளியீடு
அக்டோபர், 1998
327 பக்கங்கள்


8 comments:

இளங்கோ-டிசே said...

பிரமீளின் கவிதைகளுக்கு நன்றி. ஏன் பிரமீளின் கவிதை எதுவும் Lutesong and Lament தொகுப்பில் சேர்க்கப்படவில்லை என்று புரியவில்லை. யாராவது காரணம் கூறினால் கேட்க ஆவல்.

-/பெயரிலி. said...

தளையசிங்கத்தின் "ஏழாண்டுக்கால இலக்கியவளர்ச்சியிலே நூலிலே கிடைக்கின்ற தடயத்தின் அதே காரணமோ என்னவோ? (தளையசிங்கம் சொன்னால், ஜெயமோகன் அவர் சகாயர்கள் எதிர்க்கமாட்டார்கள் என்ற துணிவிலேதான் சுட்டுகிறேன் ;-)):

"ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் தருமு சிவராமுவுக்கு உ¡¢ய இடம் ஒர் emigre என்ற காரணத்தால்தான். அது ஒரு தனி ஓட்டம். அதனால்தான் இங்கு அவரைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். "

இளங்கோ-டிசே said...

அப்படியென்றால் சேரனும், வ.ஜ.ச.ஜெயபாலனும் சேர்க்கப்பட்டிருக்கிறதே?

எனக்கென்னவோ அந்த மனுசனையும் தொகுப்பில் சேர்த்திருக்கவேண்டும் போலத்தான் தோன்றுகின்றது. சேரன் போன்ற பெருங்கவிகள், பிரமீள் - புலி புலி என்று கத்திக்கொண்டிருக்கின்றாரே தவிர பிரமீளின் கவிதைகள் குறித்து எதுவும் மூச்சு விட்டதாய் நினைவு இல்லை (யாராவது உசாத்துணை தந்தால் நம்புவதை மாற்றிக்கொள்கின்றேன்). சிலவேளை சேரன் போன்ற ஆக்கள் இப்படி ஒரு விசயத்தை மட்டும் திருப்பத் திருப்பக் கூறி மூக்கால் அழுவதற்கு தங்களது 'கவி இளவரச பீடங்கள்' போய்விடுமோ என்ற பயமோ தெரியவில்லை :-).

-/பெயரிலி. said...

டிசே

ஒரு விதத்திலே சேரன் போன்றோர் பின்னால், (அரசியற்காரணங்களை முன்னிறுத்திப்) புலம் பெயர்ந்தாலுங்கூட, அவர்களின் படைப்புகளும் ஆக்கங்களும் அடையாளம் காணப்பட்டதும் இலங்கையிலே. பகைப்புலம் பொதுவிலே மையம் கொண்டிருந்ததும் இலங்கையிலே.

ஆனால், சிவராமன் தமிழகத்துக்குப் பெயர்ந்தது தானே விழைந்து 'எழுத்து'இனை முன்னிறுத்தி. அடையாளம் காணப்பட்டதும் அப்பகைப்புலத்திலே மையங்கொண்ட படைப்புகளினாலேதான். (அவருடைய இறுதிக்காலகட்டத்திலே ஈழ அரசியற்சூழல் காரணமாகக் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிந்ததாக வாசித்தவற்றினை வைத்து எனக்குத் தோன்றியதெனினும்)

வ.ஐ.ச. ஜெயபாலன் பற்றி நான் ஒரு கருத்தும் சொல்ல மாட்டேன் ராசா. கும்பிட்டன் என்னை விடும். ;-)

ஆனால், நான் சொல்வதுதான் குழற்பாடல்களும் ஒப்பாரிகளுக்குமான தேர்வுகளுக்கும் காரணமா என்றால், எனக்குத் தெரியாது. உம்முடைய ஊர்தானே? எட்டிப் போட்டவைக்கு ஒரு போன் எடும் தம்பி ;-)

கொழுவி said...

அதென்ன? கவிதைகள் உங்களுக்காகவே எழுதியிருக்கிற மாதிரிக் கிடக்கு? அதாவது நீங்கள் எழுத வேண்டியவைகளாக.

-/பெயரிலி. said...

கொழுவி,
ஒரு ரோட்டுக்காரர் எண்டதால், பின்னாலை பிறக்கப்போற இன்னொரு குஞ்சும் தன்னோட முறுகுப்பட்ட எழக்கியமெடுப்பான்களோட சிஷ்யகேடிகளோட கொழுவினால், ஏன் தானே எழுதிக் கஷ்டப்படவேணுமெண்டு முதலிலையே எழுதிப்போட்டாரோ என்னவோ? ;-)

நீதி: எழக்கியவாலியாவதற்கு முதற்படி லிற்றரரி ரெக்கமெண்டேசன் இல்லாட்டிலும் ரெபரன்ஸை நாமே 'இப்படியான மரத்திலேதான் அப்படியான பசுவைக் கட்டுவார்கள்' என்ற ரீதியிலே ஏற்படுத்திக்கொள்வது

இளங்கோ-டிசே said...

//ஒரு ரோட்டுக்காரர் எண்டதால், பின்னாலை பிறக்கப்போற இன்னொரு குஞ்சும் ..//
போனமுறை இலங்கை போனபோதும் நானும் நாலைந்துமுறை அந்த ரோட்டிலை குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து திரிந்து பார்த்தனான். ஆனால் கவித்துவத்துக்குப் பதிலாய் பத்திரகாளி அம்மன் கோயிலுக்குப் போன பொம்பிளைப்பிள்ளையள்தான் எனக்கு மகத்தான படைப்பாய் தெரிந்தவையள்.

ஆனால்,மேலே இருக்கிற வைரவர் கவிதையை வாசிக்கையில், 1st year froshweek partyயில் ஒரு பொம்பிளைப்பிள்ளை என்னைப் பார்த்து,
'நான் வைரவர்
நீ நாய்
என்ன சொன்னாலும் வாலாட்டுவாய்'
என்று 'புகழ்ந்து' கூறியதுதான் நினைவுக்கு வருகிறது.

பத்திரகாளியம்மன் தெருவா அல்லது froshweek partyயா, எது காட்சிப்பிழை/சரி என்று இன்றும் புரியவில்லை.

கொழுவி said...

//சுபமங்கொழகொழா" உச்சாடனம் எடுத்தார்//

அங்க கதிர் (ஏதோ நிர்மாணக் கொமிட்டியில இருக்கிறாராம்) எண்டொருத்தர் நீர்மட்டும்தான் 'வழவழா கொழகொழா' எண்டு எழுதிறனீர் எண்டு அடிச்சுக்கொண்டிருக்கிறார். பிரமிள்கூட கிட்டத்தட்ட அதைமாதிரி சத்தம் வாற சொல்லை எழுதியிருக்கிறார் எண்டு அவருக்கொரு பின்னூட்டம் போட முடிவு.

கீழே பிரமிள் எழுதியது என்பதைக் காணும்வரை இப்போது நடப்பவற்றோடு பொருத்தி வாசித்து வந்தேன். குறிப்பாக வைரவர் கவிதை அருமை.